கண்டசுத்தி #1

கொங்கு தேர் வாழ்க்கை

பாகம் 1

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


        இன்னொருவர் பார்த்த காட்சியை அல்லது அனுபவித்த விஷயத்தை ஆனால் தான் பாராத அதனை அப்படியே விவரித்துப் பாடும் அபூர்வ ஆற்றல் படைத்தவர்கள் இருந்தனர்.                                            
        அனுபவித்தவர்களின் மனதின் ஆழத்தை தோண்டித்துருவிப்பார்த்து அந்த விஷயத்தை
அப்படியே பாடலாகச் சொல்லிவிடுவார்கள்.

        இதைக் கண்டசுத்தி என்று சொல்வார்கள். சிந்தாசமுத்தி என்றும் சொல்லப்படும்.

         திருவிளையாடல் புராணத்தில் கண்டசுத்தி சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்று உண்டு.
        தருமிக்குப் பொற்கிழியளித்த படலம் என்று ஒரு படலம் இருக்கிறது.

        இந்தச் சம்பவம் மிகப் பழங்காலத்திலேயே பேசப்பட்டிருக்கிறது. இது எக்காலத்தில் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. அதில் பங்கு பெரும் நக்கீரனார் முதலியோர் கடைச்சங்க காலத்தவர்கள். இறையனார் களவியல் என்னும் நூல் நக்கீரரால் இயற்றப்பட்ட நூல். அதுவும் கிபி மூன்றாம் நூற்றாண்டு போல வழங்கி யிருக்கக்கூடும். திருமுறை ஆசிரியர்களில் பழைமையானவர்களில் நக்கீரனாரும் ஒருவர். சங்கப் பாடல்களில் சில அவரால் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டில் முக்கியமான பாடலாக விளங்கும் திருமுருகாற்றுப்படை அவரால் இயற்றப்பட்டது.

        அப்பர் பெருமானார் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இருந்தவர்.
        அவர் ஒருமுறை பாண்டிநாட்டுக்கு வந்திருந்தபோது திருப்புத்தூர்  என்னும் தலத்துக்கும் வந்திருந்தார். அவர் அங்கு பாடிய திருத்தாண்டகத்தில் அவர் இவ்வாறு பாடியுள்ளார்:

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும்
    விருப்பவன்காண் பொருப்புவலிச்சிலைக்கையோன் காண்
நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
    நற்கனகக் கிழிதருமிக் கருளினோன் காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
    புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு,
தென்காட்டுஞ் செழும்புறவில் திருப்புத்தூரில்
    திருத்தளியான் காண் அவனென் சிந்தையானே

        அப்படியென்னும்போது அப்பர் காலத்துக்கும் பல காலம்  முன்னால் தருமிக்குப் பொற்கிழி அளித்த சம்பவம் நிகழ்ந்திருக்கவேண்டும். அந்த நிகழ்ச்சி பலருக்கு பரிச்சயமானதாகவே இருந்திருக்கவேண்டும்.

    திருவிளையாடல் படத்தில் இந்தப் படலம் இடம் பெறுகிறது. ஆனால் அந்தந்த பாத்திரங்களில் நடித்த நடிகர்களுக்கேற்ற வகையில் நிகழ்ச்சிகள் வசனங்கள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன.


        திருவிளையாடல் புராணத்தில் கண்ட படலத்தில் உள்ளது சற்று வித்தியாசமானது.

        வங்கிய சூடாமணிப் பாண்டியன் என்பவர் ஆண்ட காலம்  அது. மதுரையில் நடந்த கதையாகத் தோன்றுகிறது.
         வங்கிய சூடாமணிப் பாண்டியனுக்கு மலர்கள், செடிகொடிகள்  என்றால் மிகவும் விருப்பம். வாசம் மிகுந்த அனைத்து மலர்களையும் கொண்ட அழகிய நந்தவனங்களை அவர் ஏராளமாக வைத்திருந்தார்.
        சோமசுந்தரக் கடவுளருக்குப் பலவகையான மலர்களால் பலவகையான மாலைகள்
தொடுத்து எப்போதும் அலங்கரிப்பதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆகவே காலை,
பகல், மாலை இரவு என்று அந்தந்த நேரங்களில் பூக்கும் மலர்களைப் பல நந்தவனங்களில் வைத்திருந்தார்.

        அத்துடன் சண்பக மலருக்கென்று ஒரு பெரும் நந்தவனத்தையும் அமைத்தார்.

        அவருக்குப் பிடித்த மலர் சண்பகம். பொன் நிறத்தில் அமைந்த நறுமணம் மிகுந்த சண்பக மலரைக் கொண்டு இண்டை, கொடை,  தொங்கல், தாமம், கண்ணி எனப்படும் வகைவகையான மாலைகளைத் தொடுத்து சொக்கேசரின் மேனி முழுவதிலும் சார்த்தி அழகு பார்த்தார். அப்போது வியந்துபோய், "சண்பகசுந்தரர் போலும் இவர்" என்று கூறினார். அதை சொக்கேசருக்குப் பெயராகவும் சூட்டினார்.

        சண்பக மலர்களால் இறைவனை சோடிக்கும் விருப்பின் காரணமாகவும் சண்பக மலரின்
மீதிருந்த விருப்பத்தினாலும் வங்கிய சூடாமணிப் பாண்டியருக்கு சண்பக மாறன் என்றும்
சண்பகப் பாண்டியன் என்றும் பெயர் ஏற்பட்டது.


        ஒருமுறை இளவேனிற் காலத்தில் காந்தக்குன்று என்னும் இடத்தில் உள்ள மண்டபத்தில் மனவியோடு சென்று தங்கினார்.
        அங்குள்ள சண்பக வனத்தில் அவர்கள் இருந்தனர்.

இவ்விளவேனிற் காலத்தின்னுயிர்த் துணைவி யோடும்
செவ்விய செங்கோல் நேமிச் செண்பகமாறன் ஓர்நாள்
கைவினை வல்லோன் செய்த கதிர்விடு காந்தக்குன்றில்
வெவ்விய வேடை நீப்பானிருந்தனன் வேறு வைகி

       அங்கு பல மலர்களின் வாசம் வந்துகொண்டிருந்தது.   இளவேனில் என்பதால் தென்றலும்
வீசிக ்கொண்டிருந்தது.


மாந்தளிர் ஈன்று கோங்கு வண்டன வரும்பித் தண்டேங்
காந்தள் செங்கமலம் ஆம்பல் சண்பகம் கழுநீர் பூத்துச்
சாய்ந்தமென் கொடியுந் தானும்  தனியிடத்திருப்பா னேரே
வாய்ந்ததோர் நாற்றந்தன்ற வசைந்தது வசந்தத் தென்றல்

        அப்போது  ஒருவகையான நறுமணம் வந்தது. சுற்றிலும் உள்ள செடிகொடிகள் மலர்களிலிருந்து வந்த வாசமுமில்லை.  தென்றல் வேற்றிடத்திலிருந்து  கொண்டுவந்த வாசமுமில்லை.  தென்றலுக்கும் இயற்கையான வாசம் கிடையாது.

வெவ்விய வேலான் வீசும் வாசமோந்து 'ஈது வேறு
திவ்விய வாசமாக விருந்தது; தென்றல் காவில்
வௌவிய வாசமன்று; காலுக்கும் வாசமில்லை
எவ்வியல் வாசமேயோ இது?' வென எண்ணங்கொண்டான்

        "இது திவ்வியமான நவகந்தம்; நந்தவனத்திலுள்ள மணமுமல்ல. காற்றுக்கு இயற்கையாக
எந்த மணமும் கிடையாது. இந்த வாசனை எங்கிருந்து எதிலிருந்து எவ்வாறு வீசுகிறதோ?"
என்று வியந்தா
்.

திரும்பித்தன் தேவி தன்னை நோக்கினான் தேவி ஐம்பால்
இரும்பித்தை வாசமாகி இருந்தது கண்டு 'இவ்வாசம்
சுரும்பிற்குத் தெரியா தென்னாச் சூழ்ந்திறும் பூது கொண்டு ஈது
அரும்பித்தைக்கு இயம்போ செய்கையோ?" என ஐயங்கொண்டான்

        வியந்தவண்ணம் தன் தேவியை நோக்கித் திரும்பினார்.  அவருடைய மனைவி ஐம்பால்
என்னும் வகையில் கூந்தலங்காரம் செய்திருந்தாள். அவளுடைய கூந்தலின் அருகேயிருந்து
வந்தது நன்றாக உணரமுடிந்தது.        


        "ஆனாலும் இந்த நறுமணம் இவளின் கூந்தலிலிருந்து வருகிறதே. இதுவும் தனித்தன்மை பொருந்தியதாக இருக்கிறதே. எந்த வகையான சுரும்பு - தும்பிக்கும் தெரியாத வாசமாக இருக்கும்போலும். அப்படியானால் கூந்தலுக்கும் நறுமணம் இருக்குமோ?" என்றவாறு
சிந்தித்தார்.


ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்து பாடல்
செய்யுநர் அவர்க்கே யின்ன வாயிரஞ் செம்பொனென்றக்
கையுறை வேலா நீந்த பொற்கிழி கைக்கொண்டேகி
மெய்யுணர் புலவர் முன்னாத் தூக்கினர் வினைசெய்மாக்கள்

        அத்துடன் தன்னுடைய அரண்மனைக்கு திரும்பி அவைக் களத்தைக் கூட்டி தன் மனதிற்குள் தாம் கொண்டிருந்த சந்தேகக் கருத்தை அறிந்து அதைப் பாடலாகச் சொல்லிவிட்டால் அவர்களுக்கு ஆயிரம் பொன் என்று அறிவிக்கச்செய்தார்.
        ஆயிரம் பொன்னை ஒரு கிழி என்னும் பையில் போட்டுத் தொங்கவிடச்செய்தார்.

வங்கத்தார் பொருள்போல் வேறு வகையமை கேள்வி நோக்கிக்
சங்கத்தாரெல்லாம் தம்மில் தனித்தனி தேர்ந்து தேர்ந்து
துங்கத்தார் வேம்பனுள்ளம் சூழ்பொருள் துழாவியுற்ற
பங்கத்தாராகி யெய்த்துப் படருறு மனத்தரானார்

        மன்னருடைய மனக்கருத்தை அறிந்துகொள்ளமுடியாத  புலவர்கள் தங்களுக்குள் பல வகையாகவும் யோசித்துப் பார்த்து பதில் அறியமுடியாமல் மயங்கினர்.

GO TO பாகம் 2........

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU