தெற்கு பசிபிக் மாக்கடலின் ஒரு கோடியில் ஒரு சிறிய தீவு இருக்கிறது.
அந்தத் தீவு எந்தவொரு கப்பல்பாதையையும் விட்டு விலகியே இருக்கிறது.
விமானங்கள் அந்தப் பக்கத்தில்கூட பறப்பது கிடையாது. அங்கு அந்தத் தீவின் ஆதிவாசிகளான மெலனீசியர்கள் இருக்கின்றனர்.
1930-ஆம் ஆண்டு அந்தத் தீவுக்கு ஒரு அமெரிக்கர் தனியாக விமானமொன்றை இயக்கிக்கொண்டு வந்தார். அவருடைய பெயர் ஜான் ·ப்ரம். அந்தத் தீவின் பழங்குடியினரை ஆராய்வதற்காகத்தான் அவர் அங்கு வர நேரிட்டது.
சில காலம் அவர்களோடு இருந்தார். மிகவும் அன்பாக இருந்தார்; மருந்துகள்கொடுத்து பிணிகளைப் போக்கினார்; புதியவகைத் தின்பண்டங்களைக் கொடுத்தார்.
திரும்பிச் செல்லும்போது அவருடைய புகைப் படத்தையும் கொடுத்து பல பொருள்களைஅவர்களுடன் அங்கேயே விட்டுச் சென்றார்.
அவரை ஒரு தேவனாக அந்த ஆதிவாசிகள் கருதினர்.
1942 ஆண்டில் இரண்டாம் உலக யுத்தத்தின் உச்ச கட்டத்தில் ஜப்பானிய சாம்ராஜ்யம்
பசிபிக் தீவுகளிலும் பரவியது. அங்கிருந்து ஜப்பானியர் அமெரிக்காவை எட்டிப் பிடித்து விடக்கூடாது என்பதற்காக பசிபிக் மாக்கடலின் பல தீவுகளில் இராணுவத் தளங்களை அமெரிக்கர்கள் ஏற்படுத்தினர்.
அந்தக் குட்டித்தீவுக்கும் இராணுவம் வந்திறங்கியது. அந்தப் போர்வீரர்களிடமிருந்த பலவகையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் ரேடியோவையும் ஜீப்பு வண்டியையும் கண்டு ஆதிவாசிகள் வியந்தனர்.
விமானங்கள் ஆகாயத்திலிருந்து இறங்கிவந்தன. பெரும்பெரும் கப்பல்கள் வந்து அணைந்தன. அவற்றின் உள்ளிருந்து உணவும், மருந்தும், மனிதர்களும், ஜீப்புகளும், ஆயுதங்களும் வருவதைக் கண்டார்கள். இவற்றையெல்லாம் தேவலோகத்திலிருந்து
ஜான் ·ப்ரம் தேவனே அனுப்பியிருப்பதாக அவர்கள் மனப்பூர்வமாக நம்பினர்.
அமெரிக்காவை தேவலோகமென்று எண்ணினர். அந்தத் தீவினரின் ஆதரவைப்
பெறவேண்டி, அமெரிக்க இராணுவத்தினர் அவர்களின் அந்த நம்பிக்கைகளை ஆழமாக வலுப்படுத்தினர்.
விரைவில் யுத்தம் முடிந்தது.
"வாராது வந்த தேவன் விண்ணிலிருந்து வந்தான் காண்; வந்ததுபோல் போயினான்
காண்", என்று எங்கோ எப்போதோ புதுமைப் பித்தன் எழுதியதுபோல இராணுவம் அந்தத்
தீவை விட்டு நீங்கிச் சென்றது.
ஜான் ·ப்ரம் தேவன் மீண்டும் வருவார் என்று பழங்குடியினர் முழுமையாக நம்பினர்.
அதன் பின்னர் தோன்றிய இரண்டு தலைமுறைகளில் அவர்களின் அந்த நம்பிக்கை மேலும் ஆழமாகியது.
ஜான் ·ப்ரமைக் கடவுளாகவே கருத ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொருஆண்டும் திருவிழாக்களைக் கொண்டாடினர். அப்போது விமானத்தைப் போன்றும் கப்பலைப் போன்றும் மூங்கிலாலும் இலை தழைகளாலும் செய்து வைத்துக் கொண்டு பூஜை செய்து சாமியாடுவார்கள்.
ஜான் ·ப்ரம் மீண்டும் வரும்போது மலைகளெல்லாம் இடிந்து, பொடிப்பொடியாகி நதிகளில் வீழ்ந்துவிடுமாம். நிலமெல்லாம் பசுமையாகிவிடுமாம். மக்களெல்லாம் சுபிட்சமாகயிருப்பார்களாம்.
இப்படியாக அந்தப் பழங்குடி மக்கள் நம்பி வருகின்றனர்.
இவ்வாறு வேறு சில இடங்களிலும் நடந்திருக்கிறது. பாப்புவா/நியூ கினீ தீவின் சில ஆதிவாசிகளிடையேயும் இதே போன்ற காரணங்களால் இதே போன்ற நம்பிக்கைகளும் வழிபாடுகளும் காணப்படுகின்றன.
இந்த மாதிரியான நம்பிக்கை/வழிபாட்டை "Cargo Cults" என்று கூறுவார்கள்.
ஜான் ·ப்ரமின் புகைப்படத்தை அந்தத் தீவின் ஆதிவாசிகள் பயபக்தியுடனும் அன்புடனும் பார்த்துக்கொண்டிருப்பதை மேலே காணும் படம் காட்டுகிறது.
'கார்கோக் கல்ட்' பற்றிய சித்தாந்தம் ஒன்று இருக்கிறது.
இவற்றின் அடிப்படையில் நம் சிந்தனையைத் திருப்பிப்பார்க்கவேண்டும்.
நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கிற சில வர்ணனைகளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
அவ்வாறு செய்யும்போது நமக்கே பல விஷயங்களை "ஏன் அப்படியெல்லாம் இருக்கக ்கூடாது?" என்று ஆய்ந்து பார்க்கத்தோன்றும்.
இதன் தொடர்பாக உள்ள விஷயங்களை வேறொரு கட்டுரையில் காணலாம். விரைவில் விஸ்வாக்காம்ப்லெக்ஸில் வலையேற்றம் காணும்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$