கண்டசுத்தி -#3

காளிதாசனின்

'குலுகுக் குலுகுக் குலு


கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


    காளிதாசனுடைய வரலாற்றில் இன்னும் இரண்டு பாடல்கள் இதுபோலவே உண்டு. 'குலுகுக் குலுகுக் குலு" ,"பளபப் பளபப் பள' என்பன அவற்றின் ஈற்றடியாக வரும்.

    ஒருநாள் போஜ மன்னன் அவனுடைய உத்தியாவனத்திலிருக்கும் நந்தவனத்துக்குச் சென்றான். அந்த நந்தவனத்தில் அழகிய தடாகம் ஒன்று இருந்தது. அதன் நீர் எப்போது நிர்மலமாக அலைகளின்றி சலசலப்பின்றி விளங்கும்.
    போகும் வழியில் ஒரு புளியமரம் இருந்தது. அந்த மரத்தில் ஏராளமான புளியம்பழங்கள். நன்றாக முற்றிவிட்டிருந்தன.
    ஒரு மனிதன் அந்த மரத்தின் மேலேறிக்கொண்டு கிளைகளைக் குலுக்கிவிட்டுக்கொண்டிருந்தான். மரத்திலிருந்த புளியம்பழங்கள் தரையில் விழுந்தன. அவை தரையில் விழும்போது ஒருவித ஓசையுடன் விழுந்தன. பொலபொலவென்று விழுந்திருக்கின்றன. அந்த ஓசை போஜனுடைய காதுகளுக்கு 'பளபப் பளபப் பள'  என்று கேட்டிருக்கிறது.
    அந்த ஓசை எப்படியோ அவனுடைய மனதில் ஒட்டிக் கொண்டுவிட்டது.
    பின்னர் அவன் தடாகத்தை அடைந்தான்.
    அங்கு அவன் சிந்தியாமலும் சிந்தித்துக்கொண்டும் இருக்கும் ஒரு வகையான அந்திசந்தி மனோமயக்கத்தில் இருந்தான். ஆங்கிலத்தில் சொல்கிறோமில்லையா - Pensive Mood, அதுபோல.
    அப்போது அந்தத் தடாகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். தடாகத்தின் கரையில் ஒரு பெரிய மரம். அது ஒரு நாவல்மரம். அது தடாகத்தை நோக்கிச் சாய்ந்து வளர்ந்திருந்தது. அதன் கிளைகள் தடாகத்தின்மீது விதானம் கட்டியதுபோலப் படர்ந்திருந்தன.     
    அந்த நாவல் மரத்தில் நாவற்பழங்கள் பழுத்துக்கிடந்தன.
    சில குரங்குகள் அந்த நாவல் மரத்தின் கிளைகளை உலுப்பிக்கொண்டிருந்தன. முற்றிய, பழுத்த நாவல் பழங்கள் தரையில் விழுந்தன. அவற்றைக் குரங்குகள் எடுத்துப் புசித்தன. சில பழங்கள் தடாகத்தில் விழுந்தன. சலசலப்பற்ற நிர்மலமான தடாகமல்லவா. ஆகவே பழங்கள் தண்ணீருக்குள் விழும்போதும் ஒரு வித ஓசையை எழுப்பின. அது போஜனுடைய காதுகளுக்கு 'குலுகுக் குலுகுக் குலு' என்று கேட்டிருக்கிறது.
    இந்த ஓசையும்கூட அவன் மனதில் ஒட்டிக்கொண்டுவிட்டது.  
    அத்துடன் அவன் அரண்மனைக்கு வந்தான்.
    வந்தவன் தன்னுடைய அவைக்களப் புலவர்களை அழைத்தான்.
    "பளபப் பளபப் பள
    குலுகுக் குலுகுக் குலு"
என்று ஓசையை மட்டும் சொன்னான்.
    எல்லா புலவர்களும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர்.
    காளிதாசனுக்கு மகாசியாமளாவின் அருளினால் மனக்கண் முன்னால் காட்சிகள் விரிந்தன.
    புளியமரமும் அதன் பழுத்த பழங்களும் மனித உதவியால் அவை விழுவதும் தெரிந்தன. ஓசையும் கேட்டது. புளியமரம் மறைந்தது. அதுபோலவே தடாகம் காட்சியளித்தது. குரங்குகள் கிளைகளை உலுப்பிக் கொண்டிருக்கும் காட்சி தோன்றியது. ஓசையும் கேட்டது.
    உடனேயே சொற்கள் கோர்வையாக வெளிவந்தன.......

    திம்த்ரிணீ பலாநி பக்வாநி
    தந்தி கடினஸ்தலே
    நர கம்பித ஸாகாயாம்
    பளபப் பளபப் பள

    ஜம்பூ பலாநி பக்வானி
    தந்தி விமலே ஜலே
    கபி கம்பித ஸாகாயாம்
    குலுகுக் குலுகுக் குலு

    "புளியம்பழங்கள் முற்றிப் பழுத்திருந்தன. அவை கடினமான தரையில் விழுந்தன. அவை விழுவதற்கு மனிதன் கிளைகளை அசைத்து உதவினான். அவை விழும் ஓசை......... 'பளபப் பளபப் பள'".
    "நாவல்பழங்கள் முற்றிப் பழுத்திருந்தன. அவை நிர்மலமான தண்ணீரில் விழுந்தன. குரங்குகள் கிளைகளை அசைத்து அவை விழுவதற்கு உதவின. அவை விழுந்த ஓசை......'குலுகுக் குலுகுக் குலு'".

GO TO மூங்கில் இலைமேலே......

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU