அற்பனுக்கு வாழ்வு வந்தால்.....

கடாரத் தமிழ்ப் போரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee


                     'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பான்'  என்றொரு முதுமொழி இருக்கிறது.
                     அதைப் பற்றியதொரு அழகிய பாடலை குமரேச சதகத்தில் காணலாம்.

அற்பர்க்கு வாழ்வு சற்றதிகமானால் விழிக்கு
    யாவருருவும் தோற்றிடா
   தண்டிநின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும்
    அவர் செவிக்கு ஏறிடாது

முற்பட்சம் ஆனபேர் வருகினும் 'வாரும்'என
    மொழியவும் வாய்வராது
   மோதியே வாதப்பிடிப்பு வந்ததுபோல
    முன்காலை அகல வைப்பார்

விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும்
    வெடுவெடுத்தேசி நிற்பார்
   "விருதா மகத்துவப் பேய்அது; சவுக்கடி
    விழும்போது தீரும்" என்பார்

மற்புயந்தனில் நீபமாலை அணி லோலனே
    மார்பனே வடிவேலவா
   மலையேறி விளையாடு குகனே புல்வயல்நீடு
    மலைமேவு குமரேசனே

    'அற்பருக்கு வாழ்வு வந்தால் செல்வாக்கு மிகுதியினால்
யாருடைய உருவமும் அவர்களின் கண்ணுக்குத் தெரியாது;
அருகில் சென்று நல்ல வார்த்தைகள் சொன்னாலும் அவர்களுடைய
காதுகளில் ஏறமாட்டாது; முன்னாட்களில் நெருக்கமாக
இருந்தவர்கள் வந்தாலும் 'வாருங்கள்' என்று உபசரிக்க வாய் வராது.
வாதநோய் வந்ததுபோல முன்காலை முன்னால் நன்றாக நீட்டி நீட்டி
அகலக்கால் வைத்து இறுமாப்புடன் நடப்பார்கள். அறிவு சார்ந்த
பெரியோர்கள் ஏதாவது சொன்னாலும் கடுகடுப்பாக ஏசுவார்கள்.  
"அந்த வீண்பெருமை தருக்கு செருக்கு என்னும் பேயை சவுக்கால்
அடித்தாலேயே நீங்கிப்போகும்", என்று பெரியோர்கள் கூறுவார்கள்.
வேறெதற்கும் பயப்படமாட்டார்கள்'.

                    ரொம்பவும் யதார்த்தமான சொற்கள்.
                    இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிக்கலாம்.....

                    ராமச்சந்திரக்கவிராயர் என்றொருவர் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தார்.
                    அவர் ஒரு யதார்த்தாவாதி. நல்ல ரசனையும் நகைச்சுவையும் உடையவர்.
                    ரொம்பவும் அடிபட்டவர். நொந்துபோய்ச் சில பாடல்களைப் பாடியிருக்கிறார்.
                    அவற்றில் ஒரு பாடல்:

வணக்கம் வரும் சிலநேரம்; குமரகண்ட
    வலிப்பி வரும் சிலநேரம்; வலியச்செய்யக்
கணக்குவரும் சிலநேரம்; வேட்டைநாய்ப்போற்
    கடிக்கவரும் சிலநேரம்; கயவர்க்கெல்லாம்
இணக்கவரும்படித் தமிழைப் பாடிப்பாடி
    எத்தனை நாள் திரிந்து உழல்வேனையா?
குணக்கடலே அருட்கடலே அசுரரான
    குரைகடலை வென்ற பரங்குன்றுளானே!

பணம் படைத்த, தமிழார்வம் இல்லாத, லோபிக்குணம் படைத்த
பணக்காரக் கயவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சில
சமயங்களில் வணக்கம் செய்யும் மனப்போக்கு வரும்போது
வணங்குவார்கள்; அந்தக் குணம் திடீரென்று மாறிப்போய்
குமரகண்ட வலிப்பு வந்ததால் கழுத்தைத் திருப்பவோ தலையை
அசைக்கவோ முடியாதவர்கள் போல் தோன்றுவார்கள்.
அவர்களைப் பார்ப்பதற்காக நாம் காத்துக்கிடக்கும்போது அப்போதுதான்
கணக்கு குறுக்கேவந்து நிற்கும். சில சமயங்களில் உதவி கேட்டு
வருபவரைக் கண்டு வேட்டை நாய் போலக் குரைத்து விழுந்து
கடிக்கும் குணமுண்டாகியிருக்கும்.
எப்போது இவர்கள் எந்தக் குணத்தில் இருப்பார்கள் என்பதும் தெரியாது.
இப்படிப்பட்ட கயவர்களுக்கும் இணக்கம் வரும்படியாகத் தமிழைப்
பாடிப் பாடி எத்தனை நாட்களுக்குத்தான் திரிந்து உழல்வேனையா?

நற்குணக் கடலே! அருட்கடலே கடல்போல எழுந்துவந்த அசுரர்
கூட்டத்தை வென்றவனே! திருப்பரங்குன்றில் உறைபவனே!

                    இதைப் பற்றி ராமச்சந்திர கவிராயரின் இன்னொரு பாடலையும் பார்க்கலாம்.
    
புல்லுக்கட்டும் விறகும் சுமந்த பேர்
    பூர்வ காலத்துப் புண்ய வசத்தினால்
நெல்லுக்கட்டும் பணக்கட்டும் கண்டபின்
    நீலக்கல்லில் கடுக்கனும் போடுவார்;
சொல்லுக்கட்டும் புலவரைக் கண்டக்கால்
    தூறிப்பாய்ந்து கதவையடைத்து
மல்லுக்கட்டும் மடையரைப் பாடவோ
    மலயச்சாரலில் வாழ்பெரியம்மையே!

                    இந்தப் பாடல் மிகவும் எளிமையாக இருக்கிறது.
ஒரு காலத்தில் புல்லுக்கட்டும் விறகுக்கட்டும் சுமந்து அவற்றை விற்றோ அல்லது கூலியைப் பெற்றோ வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்திருப்பார்கள். அவர்கள் பூர்வ புண்ணியவசத்தால்
திடீர்ப் பணக்காரர்களாகிவிடுவார்கள். அவ்வாறு நெல்லுக் கட்டும் பணக்கட்டும் கொண்டபின்னர் நீலக்கல்லால் ஆன கடுக்கன் அணிந்துகொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாகரிகம், பண்பாடு, மரியாதை என்பனவெல்லாம் அறவே இருக்கமாட்டாது. படிப்பும் இருக்கமாட்டாது. ஆகவே கவிதைகளை ரசிக்கமாட்டார்கள். புலவர்களின் அருமையும் அதனால் தெரியமாட்டாது. சொல்லுக்கட்டும் புலவர்களைக் கண்டால் ஆவேசமுடன் பாய்ந்து வந்து கதவை அடைத்து விடுவார்கள். அப்பால் நின்றுகொண்டிருந்தாலும் மல்லுக்கட்டி விரட்டிக்கொண்டுபோய்
வெளியில் விடுவார்கள். இப்படிப்பட்ட மடையர்களைப் பாடவோ? மலயச்சாரலில் வாழ்
பெரியம்மை தெய்வமே!

                    மலயம் என்பது பொதியமலை.
                    பிரகதாம்பாள் என்ற பெயரில் பல ஊர்களில் அம்பிகை  விளங்குகிறாள். புதுக்கோட்டையில் அவள்தான் முக்கிய தெய்வம். புதுக்கோட்டைத் தொண்டைமான்களுக்கு அவள்தான் குலதெய்வம். அவர்கள் தங்களை 'பிரகதாம்பாள்தாச' என்று அழைத்துக்கொள்வார்கள்.
                    'ப்ருஹத்' என்பது 'பெரிய' என்னும் பொருளைக் கொண்டது.
                    ப்ருஹதாம்பாளைத் தமிழில் பெரிய நாச்சி, பெரியநாயகி, பெரியம்மை, பெருந்தேவி, பெரியாச்சி என்றெல்லாம் சொல்வார்கள்.
                    பெரியநாச்சி கோயில் என்றொரு புராதனமான கோயில் இருக்கிறது. அதை இப்போது பெரிச்சிகோயில் என்று சொல்கிறார்கள்.
                    ராமச்சந்திர கவிராயர் மலயச் சாரலில் இருக்கும் அந்தப் பெருந்தேவியை நினைத்து
 மனம் வெம்பி வருந்தி அவளிடம் சலுகை சொல்கிறார்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU