ரொம்பக் காலத்துக்கு முன்னர் அநாமதேயம் என்ற நாடு இருந்தது.
அதன் தலைநகரான அநாமிகாபுரத்தில் அதன் அரசனாகிய பெயரிலிப் பெருமாள் ஆண்டு
வந்தார்.
அவருடைய தாத்தா நீண்ட ஆயுளுடன் ரொம்ப காலம் ஆண்டுவந்தார். அறுபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு இறந்துபோனார். அவருடைய மகன் ஆட்சிக்கு வந்தார்.
ஆனால் அவர் ஆட்சிக்கு வரும்போதே ரொம்பவும் வயதானவராக இருந்தார். ஆகவே
ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளில் இறந்துபோனார். அவருடைய இளைய சகோதரர் ஆட்சிக்கு வந்தார். அவரும் இறந்து போனார். மூத்தவருடைய மகன் பட்டத்து இளவரசராக இருந்தார்.
ஆனால் அவரும் பட்டத்துக்கு வருமுன்னரே இறந்துபோனார். ஆகவே அவருடைய மகனாகிய பெயரிலிப்பெருமாள் பட்டத்துக்கு வந்தார். வயதில் மிகவும் இளைஞர். ஆரோக்கியமும் திடகாத்திரமும் உடல்வலுவும் சுறுசுறுப்பும் மிக்கவராக விளங்கினார்.
அவருக்கு நகர்வலம் வருவது மிகவும் பிடிக்கும். அடிக்கடி உயரமான தேர்த்தட்டில்
ஊர்வலமாக வருவார். சிலநாட்களில் யானையின்மீது அம்பாரியில் அமர்ந்துகொண்டு
வருவார். வேறு சில நாட்களில் நூற்றிருபது பேர் தூக்கும் பெரும்பல்லக்கின் மீது பவனி
வருவார்.
அவர் வரும்போது இருபக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர்களை வாரி இறைத்து,
"மன்னர் வாழ்க...நீடுழி வாழ்க....பல்லாண்டு வாழ்க......நூறாண்டு வாழ்க......ஜெயவிஜயீபவ......!"
என்று முழங்கினர். இவ்வளவு இளமையும் துடிப்பும் சுறுசுறுப்பும் மனமகிழ்வும் முகமலர்ச்சியும் கொண்ட இளமன்னனை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
பல ஆண்டுகளாகக் கிழட்டு மன்னர்களைக் - அவர்களும் உடல் தளர்ச்சியால் நகர்வலம் வந்ததுமில்லை - கொண்டிருந்தவர்களுக்குப் பெயரிலிப் பெருமாள் ஒரு பெரிய வரப்பிரசாதம்
போல் தோன்றினார்.
அந்த மக்கள் கூட்டத்தில் ஒரு மனிதன் நின்றுகொண்டிருப்பான்.
ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் ஸிஸரில் வருவானே கேஸியஸ்.........அவனைப் பார்த்துக்கூட மார்க்கஸ் அந்தோனியஸிடம் ஸீஸர் ஒரு சமயம் சொல்வாரே...."எப்போதுமே என்னைச்
சுற்றிலும் நான் மொக்கைப் பிச்சர்களையே வைத்திருக்குமாறு விடுங்கள். இரவுத் தூக்கம்
நன்கு தூங்கும் குழப்பமில்லா மூளையுடையவர்கள்.
அதோ இருக்கிறானே பார்.......கேஸியஸ். அவன ஒல்லியாகவும் பசியுடனும் காணப்
படுகிறான். அப்படிப்பட்டவர்கள் எப்போதுமே ஆபத்தானவர்கள்".
அந்தக் கேஸியஸைப் போன்ற உருவும் வாகுவும் படைத்தவன் அவன்.
ஆயிரக்கணக்கான மலர்ந்த மக்கள் முகங்களுக்கு நடுவில் அவன் தனியாகப் பளிச்
சென்று காணப்படுவான். ஒட்டிவதங்கிய உடலும் வாடிய முகமும்...
அதில் கடுகடுப்பும் எதையோ எதிர்பார்த்திருந்து ஏமாற்றம் தொனிக்கும் பார்வையும்.
அவனைப் பார்த்ததுமே 'மங்கையர் திலகம் படத்தில் பத்மினி பாடிய,
'நீலவண்ணக் கண்ணா வாடா' பாட்டில்
"கண்ணால் உன்னைக் கண்டால் போதும்...
கவலையெல்லாம் பறந்தே போகும்"
என்பதை சற்று மாற்றி,
"கண்ணால் உன்னைக்
கண்டால் போதும் மகிழ்ச்சியெல்லாம் பறந்தே போகும்"
என்று பாடுவதுபோல மன்னனுடைய மகிழ்ச்சி, கலகலப்பு, சுறுசுறுப்பு எல்லாமே மறைந்துபோய்விடும்.
அவனைப் பார்த்தவுடன் மன்னருக்கு வேறு நாட்டமேதும் இருக்காது.
உடனே அரண்மனைக்குத் திரும்பிவிடுவான். சாப்பிடப்பிடிக்காது. தூக்கம் இராது.
எதிலுமே நாட்டமிராது. தனிமையில் இனந்தெரியாத கவலையுடன் தனியாக இருப்பார்.
சிலநாட்கள் கழித்தே அவரால் தன்னுடைய இயல்பான பழைய நிலைக்கு வரமுடியும்.
இதனாலேயே அவருடைய நகர்வலத்தைக் குறைத்துக் கொண்டார்.
இதை அவருடைய அமைச்சராகிய தூண்டியூர் துருவிராயர் கவனித்தார்.
'அந்த கேஸியஸ் ஆசாமியைப் பார்த்தாலல்லவா மன்னர் இந்த மாதிரி மாறுகிறார்',
என்பதை ஊகித்துக்கொண்டார்.
உடனேயே அவர் மாறுவேடம் தாங்கி அந்தக் கேஸியஸைத் தேடிக்கொண்டு கிளம்பினார்.
விரைவிலேயே கண்டும்பிடித்துவிட்டார்.......
அந்த ஊரிலேயே பெரிய விறகு மண்டியை வைத்துக்கொண்டு பெருமளவில் விறகும்
மரமும் வியாபாரம் செய்துவந்தவன் அவன். மரக்கோட்டத்து மாசாத்துவான் என்னும்
அந்த விறகு வணிகனின் மூதாதையர் தலைமுறை தலைமுறையாக அதே வாணிபத்தைச் சிறப்பாகச் செய்தவர்கள்.
துருவிராயர் பார்க்கும்போது முகத்தைப் பாறாங்கல் மாதிரி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
துருவிராயர் மாசாத்துவானிடம் அவனிடம் "ஆத்திக் கட்டை இருக்கிறதா?" என்று
கேட்டார்.
அவன், "அத்திக்கட்டைதான் இருக்கிறது", என்றான்.
துருவிராயர், "பரவாயில்லை. ஒரு மாத்திரை கொஞ்சம் நீட்டிக் கொண்டால் போயிற்று.
பில்லைப் போடும்", என்று சொல்லிவிட்டு, காசுக் கிழியன்றை அவன் முன்னால் போட்டார்.
'காசை ஏன் கிழித்துப்போட்டார்?' என்ற சந்தேகம் ஏற்படும்.
'கிழி' என்பது ஒரு பை. பொற்காசுகள் வைக்கப்பட்ட பையைப் பொற்கிழி என்பார்கள்.
உலவாக்கிழி என்பது எடுக்க எடுக்கக் குறையாத பை. திருவிளையாடல் புராணத்தில் வரும். அகத்தியரின் பழைய மடல்களைப் பார்த்தால்தானே. ரொம்ப காலத்துக்கு முன்னர் அட்லாண்டா சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட இழையன்று ஓடிற்று.
கேஸியஸின் முகத்தில் லேசாக வெடிவு ஏற்பட்டதுபோல் தெரிந்தது.
ஒன்றுமில்லை. தன்னிடம் இல்லாத மரக்கட்டைக்கு விலையைப் பேரமே பேசாமல்
உடனேயே பில்லைப் போடச் சொல்லிய மாங்காய் மடையன் ஒருவனைப் பார்த்த
சந்தோஷம். லேசாகப் புன்னகை புரிந்திருக்கிறான். பாறை போன்ற முகம் என்று சொன்னேனல்லவா. பாறையில் வெடிவுதானே ஏற்படும்? புன்னகைதான் வெடிவு போலத் தோன்றியிருக்கிறது.
அவனுடைய §க்ஷமலாபங்களையெல்லாம் விசாரித்தார். வியாபாரத்தைப் பற்றி விசாரித்தார். அப்படியே தம்முடைய நாட்டைப் பற்றியும் அதன் அரசரைப் பற்றியும் விசாரித்தார்.
பாறை பெருமூச்சு விட்டது.
"இந்த அரசரின் முப்பாட்டன் முதலில் இறந்துபோனார். அவரைத் தகனம் பண்ண ஏராளமாகச் சந்தனக்கட்டைகளை வாங்கினார்கள். அதன் பின்னர் அவருடைய பாட்டனும் சின்னப்பாட்டனும் இறந்தார்கள். அவர்களுக்கு முன்னாலேயே அரசரின் தந்தையும் இறந்தார். எல்லாரையும்
தகனம் செய்யும்போது பெரிய அளவில் சந்தனக்கட்டைகளை வாங்கினார்கள்.
அரசர் அதன் பிறகு பட்டத்துக்கு வந்தார். அவரும் சீக்கிரமே இறந்துபோவார் என்று எண்ணி ஏராளமாக சந்தனக்கட்டைகளை ஆர்டர் செய்து வைத்தேன். டன் கணக்கில் சந்தனக்கட்டைகள் அப்படியே கூடாங்கில் கிடக்கின்றன.
சந்தன வீரப்பனுக்குக் கொடுக்கவேண்டிய தொகையும் பாக்கி விழுந்துகிடக்கிறது.
இந்த வருடப்பிறப்புக்கு ஒரு பார்ஸலை அனுப்பியிருந்தான். பெரிய பார்ஸல். உள்ளே
யானைக் காது. அத்துடன் ஒரு நோட் இருந்தது.
அதில், "இந்த வருடப்பிறப்புக்கு ஹெப்பி நியூ யியருக்கு இந்த யானைக்காதை
அனுப்புகிறேன். இப்ப ஒனக்கு காது இரு காது. அடுத்த வருசம் உனக்குக்
காது இருக்காது."
ஒவ்வொரு முறையும் அரசரைப் பார்க்கும்போதெல்லாம், "இவர் எப்பச் சாவார்? சந்தனக்கட்டையெல்லாம் விற்கணுமே", என்று எதிர்பார்ப்பேன்.
ஆனால் அரசரோ உடல் ஆரோக்கியத்தோடு திடகாத்திரமாக இருக்கிறார். பார்க்கும்போது
இன்னும் ரொம்ப காலத்துக்கு இருப்பார் போலத் தெரிகிறது. மக்கள் வேறு அவரை 'நீடூழி
வாழ்க, நூறாண்டு வாழ்க' என்று வாழ்த்துகிறார்கள். இந்த ஆள் எப்பச் சாவது? என் கடைச்
சந்தனக் கட்டைகளெல்லாம் எப்ப விற்றுத் தீர்வது. எப்ப வீரப்பன் பாக்கி ஸெட்டில் ஆவது? ஆகையால் அரசர் சீக்கிரம் இறப்பதற்காகப் பிரார்த்தனை செய்கிறேன்," என்று கூறி
நிறுத்தினான்.
அவனை செடீஷன் ஆக்டில் பிடித்துப்போட்டு கழுவிலேற்றலாம் என்று துருவிராயருக்கு
ஒரு கண நேரம் மின்னலடித்தாற்போல எண்ணம் தோன்றி, ஓடி மறைந்தது.
ஆனால் அப்படியேதும் செய்யவில்லை.
பில்லை செட்டில் செய்துவிட்டு நேரே அரண்மனைக்கு வந்தார்.
அரசரிடம் சென்றார்.
"அரசே, அடுத்த பிறந்த நாளைக்குக் குடிமக்கள் எல்லாரும் ஆளுக்கொரு சந்தனக
்கட்டை கொண்டுவரவேண்டும் என்றும் இனிமேல் அடுத்தடுத்த பிறந்த நாட்களுக்கும் சந்தனக்கட்டைகளைக் கொண்டுவரச் சொல்லி, உடனடியாகத் தண்டோரா போடச்
செய்யுங்கள்", என்றார்.
கோல்·ப் மட்டைகளைப் பையில் வைத்தவாறு அரண்மனைக்குப் பின்புறமிருந்த கோல்·ப் லிங்குக்குச்செல்லும் அவசரத்தில் இருந்த மன்னர்,
"ஏன் அதை நீரே செய்துவிடுமேன்? இந்த மாதிரி கிறுக்கதனமான தண்டோராவெல்லாம்
உம்முடைய செயலாகவே இருக்கட்டும். டைகர் வுட்ஸை முப்பத்தெட்டாம் நாழிகையில் வரச்சொல்லியிருக்கிறேன்", என்று சொல்லியவாறு கால்களில் குட்டிச்சாக்குகள் கட்டிய மட்டக்குதிரைகள் பூட்டிய சிறுவண்டியில் ஏறிகோண்டார்.
துருவிராயரும் தண்டோராவைப் போடச்செய்தார்.
அடுத்த பிறந்த நாள் வந்தது.
மன்னர் யானையின்மீது நகர்வலம் வந்தார்.
மரமண்டி மாசாத்துவான் பெரும் பெரும் வட்டில்களில் பாரசீக ரோஜாக்களை வைத்துக
்கொண்டு அரசர்மீது தூவினான்.
மகிழ்ச்சி பொங்கிய முகத்துடன் கத்திக்கொண்டிருந்தான்.....
"மன்னர் மன்னன் வாழ்க...பல்லாண்டு வாழ்க...பல்லாயிரத்தாண்டு வாழ்க....
பல்கோடிநூறாயிரம் ஆண்டு வாழ்க....!"
அதன்பின்னர் மன்னர் பெயரிலிப்பெருமாளுக்கு அவனைப் பார்த்தால் கவலையெல்லாம் பறந்தேபோயிற்று.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$