ஆயங் கொக்கரக்கோ

A STUDY IN PIDGINISATION


கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

                 முன்னர் ஒருமுறை Pidginisation என்னும் மொழிக் கலப்படம் பற்றி எழுதியிருந்தேன்.    

                நான் இருக்கும் ஊரில் அவசரத்து சில்லறைச் சாமான்களை
                ஒரு காக்கா கடையில் வாங்குவது வழக்கம். கேரளத்து முஸ்லிம்களை
                இங்கு 'காக்கா' என்று அழைப்பது வழக்கம். அந்தக் 'காக்கா',  மலாய்க்காரப் பெண்மணியை மணந்தவர். மலையாள வாடையுடன் தமிழைப் பேசுவார். அவருடைய மகனுக்குத் தமிழில் பல சொற்கள் தெரியும். ஆனால் தமிழில் பேச வராது.
                தமிழர்களுடன் பேசும்போது தமிழ்ச்சொற்கள் விரவிய பஸார் மலாய் எனப்படும் கலப்படக் கொச்சை மலாயில்தான் பேசுவார்.
                அந்தக் கலப்பட மலாய் ஒவ்வொரு இனத்திடமும் இருக்கிறது.  சீனர்களிடம் சீனம் கலந்த மலாய்.
                மலாய்க்காரர்கள் பேசுவதில் ஆங்காங்கு ஆங்கிலச்சொற்கள்  இருக்கும். அவர்களுக்கு அது மிகவும் இயல்பானது. ஏனெனில் தற்சமயம் அதிகாரத்துவ மொழியாக உள்ள பஹாஸா மலாயுவில் ஏராளமான ஆங்கிலாசொற்கள் கலக்கப்பட்டுள்ளன. Hospital, Pos, Telekom, Telefon, Bas Ekspres, Kelinik, Operasi, Reformasi, Korrupsi, Nepotisma, Lif, Motorsikal, Komputer, Televisyan, Buku, Sekolah, Universiti, Kolej, Kelas என்று பலசொற்கள் ஏற்கனவே அதிகாரபூர்வமாக மலேயைஸேஷன் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அவற்றுடன் சில ஒரிஜினல் ஆங்கிலச் சொற்களைக் கலந்துபேசுவதில் அவர்களுக்கு விருப்பம் அதிகம். அது ஒருவகையான கௌரவமாக அவர்கள் நினைக்கிறார்கள்.
                என்னவோ, இந்த கலப்பட மொழியில் கடை, மார்க்கெட் போன்ற  இடங்களில் பேசுவதே மக்களுக்குச் சுலபமாகப் புரிகிறது. எளிதாகவும் இருக்கிறது.

                அதான் ஒருநாள் அந்த காக்கா மகனிடம், "ஆலாகப்பா    பூஞ்யா ரவை அடாக்கா?", என்று கேட்டேன்.
                உடனேயே அழகப்பா கம்பெனி ரவை மாவு பாக்கெட் எடுத்துக் கொடுத்தார்.    
                அடுத்தாற்போல, "தேங்காப் பூஞ்யா குடுமி அடாக்கா", என்று கேட்டேன்.
                உடனேயே புரிந்துகொண்டு, "அதையெல்லாம் எறிந்துவிடுவோம். ஏன்? வெங்கலச்சாமான் பாலிஷ் போடவேண்டுமா? இனிமேல் சேர்த்துவைத்து அடுத்தமுறை வீட்டுப்பக்கம் வரும்போது வீட்டில் கொடுத்துவிடுகிறேன்?" என்றார்.

                சுத்தமான செம்மலாயில் பேசியிருந்தால் புரிந்திருக்குமா என்பது  சந்தேகம்தான்.              
               
               இவ்வாறு கலந்துபேசும் வழக்கம் மிகப்பழமையானது.

            20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பினாங்கு போன்ற பெரிய ஊர்களில் செட்டிநாட்டுப ்பக்கத்திலிருந்து வந்த தமிழர்கள் நிறையப்பேர் வணிகம்புரிந்து வந்தனர்.அவர்கள் பெரும்பாலும் அந்தந்த ஊர்களில் குறிப்பிட்ட சில வீதிகளில்மட்டுமே குடியிருப்பார்கள்.
                அவர்களுக்கென்று உள்ள வணிக நிறுவனங்களை 'கிட்டங்கி' என்று  அழைப்பார்கள்.

                பினாங்கில் அவ்வாறு சில வீதிகள் இருந்தன. அவற்றில் பினாங்கு ஸ்ட்ரீட் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதனை அக்காலத்தில் 'செட்டி தெரு' என்றே அழைப்பார்கள். கோலாலம்பூரில் உள்ள அம்ப்பாங்க் ஸ்ட்ரீட், புக்கிட் மெர்த்தாஜத்தின் க்ராஸ் ஸ்ட்ரீட்(இப்போது அது, வள்ளலாகக் கொடிகட்டி வாழ்ந்த திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளையின் பெயரால் அழைக்கப்படுகிறது), சுங்கை பட்டாணியின் ஜாலன் இப்ராஹிம், அலோர் ஸ்டாரின் பெக்கான் சீனா என்பவை இந்த அந்தஸ்து பெற்றவை.
                இப்போதும்கூட பினாங்கு மாநகரின் 'லிட்டில் இண்டியா' என்று செல்லமாக அழைக்கப்படும் பகுதியின் முக்கிய அங்கமாக பினாங்கு ஸ்ட்ரீட் விளங்குகிறது. இதே போன்ற செட்டிதெருக்கள் பர்மாவின் ரங்கூன், மோல்மீன், ஈன்தடா, இந்தோனீசியா மீடான் , கொழும்பு, சைகோன் ஆகிய இடங்களில் இருந்தன.

                பினாங்கு ஸ்ட்ரீட்டின் மிக அருகில்தான் கார்ன்வால்லிஸ் கோட்டைஇருக்கிறது. 1784-ஆம் ஆண்டில் பினாங்குத்தீவு கடார சுல்த்தானால் ஆங்கிலேயர்களிடம் கொடுக்கப்பட்டது. அதற்கு Prince of Wales Island என்ற பெயரை இட்டு, அதில் Georgetown என்னும் அழகிய ஊரையும் ஆங்கிலேயர்கள் நிர்மாணித்துக ்கொண்டனர்.
                அங்கு ஒரு கோட்டையையும் கட்டிக்கொண்டனர். அமெரிக்காவின் விடுதலைப் போரில் தோலியுற்று ஜார்ஜ் வாஷிங்ட்டனிடம் சரணடைந்த  கார்ன்வாலிஸ் பிரபு, பின்னர் இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனி நன்கு கால்களைப் பதித்துக்கொள்வதில் வெற்றிபெற்றார் என்பதால் அவருடைய  பெயரையே அந்தக் கோட்டைக்கு வைத்துவிட்டார்கள். அதன் அருகில் ஒரு பெரிய அழகிய மணிக்கூண்டு இருக்கிறது.

                விக்டோரியா பேரரசியின் ஆட்சியின் மணிவிழாவை முன்னிட்டு 1900ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 1916ஆம் ஆண்டில் எம்டன்கப்பல் போட்ட குண்டு இதன் அருகில்தான்
விழுந்ததாகச் சொல்வார்கள்.(ஆம். அதே
எம்டன் தான்). உச்சியில் நான்கு பக்கங்களிலும் பெரிய கடிகார முகங்களைக் கொண்டது. கால்மணி நேரத்துக்கு ஒரு முறை மிக அழகாக மணியடிக்கும். அந்த மணியோசை சற்று மென்மையாக இருக்கும்.
                ஆனால் மணிக்கு மணி அடிக்கும் மணியோசை பலமாக இருக்கும். அந்த கால்மணியோசையில் ஏதோ ஒரு சோகம்கலந்த இசை இருக்கும்.(ஒருவேளை இழந்துபோன இனிமையான இளமைக்காலத்தின் nostalgiaவினால் அப்படி எனக்குப்படுகிறதோ?
தெரியவில்லை.)   


                அந்த மணிக்கூண்டை அறுபதாண்டுகளுக்கு முன்னர் 'கோட்டை மணி' என்று அங்குள்ள செட்டிதெரு ஆட்கள் அழைத்திருக்கின்றனர்.

                இன்னொரு விஷயம். செட்டிதெருவில் இருந்த தமிழர்கள் மலாய்மொழியைக் கற்றதில்லை. ஏதோ அன்றாடம் அவர்களுக்குப் பயன்படக்கூடிய சில சொற்களைமட்டுமே அறிந்திருந்தார்கள்.
                பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தமிழில் சில மலாய்ச்சொற்களை கலந்து அடித்து எப்படியோ சமாளிப்பார்கள்.
               எங்கள் சமையற்காரர் சேவுகக்கோனார் சீன வங்குசாக்கடையில் - பலசரக்குக் கடையில் பேரம் பேசி சாமான் வாங்குவது ஒரு தனி அலாதிதான். தமிழ்க் கெட்டவார்த்தைகள் சரளமாகப் புழங்கும். சீனக ்கடைகாரனும் தமிழ்க் கெட்டவார்த்தைகளை அவனுக்கே உரிய கொச்சை உச்சரிப்புடன் சொல்வது இன்னும் விசேஷமாக இருக்கும்.
                பினாங்கில் தண்ணீர்மலை என்றொரு இடம் இருக்கிறது. இங்கு இப்போது மூன்று கோயில்கள் இருக்கின்றன. இரண்டு முருகன் கோயில்களும் ஒரு மீனாட்சியம்மன் கோயிலும் உண்டு. குன்றின்மேல் ஒரு முருகன் கோயில் இருக்கிறது. குன்றின் அடிவாரத்துக்குச் சற்றுத்தொலைவில் இன்னொரு முருகன் கோயில். இது நகரத்தார்களுக்கு உரியது. இதைச் செட்டியார் கோயில் என்று குறிப்பிடுவார்கள்.
                 பினாங்கில் இருக்கும் நகரத்தார்கள் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி செல்வார்கள். பினாங்கு ஸ்டிரீட்டிலிருந்து தண்ணீர்மலை நெடுந்தொலைவில் இருக்கிறது. அந்தக் காலத்தில் டிராம்
வண்டி, சிறிய பஸ்கள் முதலியவை குறைவாகவே இருந்தன. அவ்வளவு தூரத்துக்கு டிரைஷா என்னும் முன்று சக்கர சைக்கிள் ரிக்ஷா வரமாட்டாது. வெள்ளென எழுந்து தண்ணீர்மலைக்குச் சென்றுவிட்டு வருவதற்கே காலை நேரம் முழுதும் பிடித்துவிடும்.


                ஒரு முறை அழகப்பச் செட்டியார் என்பவரைத் தேடி ஒரு கிட்டங்கிக்கு ஒரு மலாய்க்காரர் வந்தார். அங்கிருந்த இன்னொரு செட்டியாரிடம், 'அழகப்பர் எங்கு போயிருக்கிறார்', என்று விசாரித்தார்.

                'ஐயா! காப்பா பெர்கி மானா?'

                அதற்கு அந்த செட்டியார் சொன்னது:

                'ஆயங ்கொக்கரக்கோ,
                அளகப்பா பீக்கி தண்ணிமலை.
                கோட்டை மணி டொங்க்,
                டியா குடுகுடு லக்காஸ் மரி!'

                அதிகாலையில் கோழிகூவும்போதே அழகப்பா தண்ணீர்மலையில் இருக்கும் தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்றுவிட்டார். கோட்டை மணி (டொங்கென்று ஒருமுறை) அடித்தவுடன் இன்னும் சற்று நேரத்தில் (ஒருமணிக்கெல்லாம்) அவர் குடுகுடுவென்று வேகமாக வந்துவிடுவார்.

                இதுதான் பொருள்.

அன்புடன்
ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$




RETURN TO MAIN MENU