பழைய தமிழ் மரபு ஒன்று இருக்கிறது. அதன்படி மாதமொருமுறை பேதிக்கு மருந்துண்பார்கள். அப்போது கோரோசனை மாத்திரை, சஞ்சீவி மாத்திரை என்று இரண்டு
வித மாத்திரைகளைக் கொடுத்தார்கள். பிறந்ததிலிருந்து 14 வயதுவரை அடிக்கடி இந்த மாத்திரகளைச் சாப்பிட்டுவந்ததால், அந்த மாத்திரைகளின் பேரில் அத்தனை வெறுப்பு ஏற்பட்டிருந்தது.
இந்தோனீசியாவிலும் மலாயாவிலும் அந்த அம்மருந்துகளுக்கு எங்கள் கடைகளே வினியோக நிலையங்களாக இருந்தன. சுமாத்ரா சாம்பிராணி, லவங்கப் பட்டை, சம்பாரப்
பொருள்கள் போன்றவை அருகிலேயே மூட்டையாக இருந்தாலும்கூட அந்த மருந்துகள் இருந்த அலமாரி அதையெல்லாம் மீறிக்கொண்டு வாசம் அடிக்கும்.
பின்னரே அந்த மருந்துகள், அவற்றைத் தயாரிப்பவர் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டேன். அறிந்து கொண்டபின்னரே அந்த வெறுப்பு மாறியது.
தஞ்சாவூரில் கருணாநிதி வைத்தியசாலை என்று ஒரு பெயர் பெற்ற வைத்திய நிலையம் இருந்தது.
அதனை நடத்திவந்தவரின் பெயர் அபிரகாம் பண்டிதர். மதுரை மாவட்டத்தில் வைகையாறு பிறக்கும் இடமாகிய சுருளி என்னும் மலையில் கருணானந்த ரிஷி என்பவர் இருந்து வந்தார்.
அங்கு மூலிகைகள் தேடப்போன இடத்தில் பண்டிதர் ரிஷியைப் பார்த்திருக்கிறார்.
1877ஆம் ஆண்டு, பலதரப்பட்ட மருந்துகள் செய்யும் விதத்தை பண்டிதருக்கு
கருணானந்தர் சொல்லிக்கொடுத்தார்.
பல ஆண்டுகள் அந்த மருந்துகளைப் பரிசோதனை செய்துவிட்டு, மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்கும் வண்ணம் அந்த மருந்துகளைச் செய்து விற்கலானார் பண்டிதர்.
ஒன்றிருக்க ஒன்று செய்தல், பத்தியம் பிசகிடில் மோசஞ்செய்தல், நம்பிக்கையின்மை
என்னும் மருத்துவ முத்தோஷங்களுமின்றி நன்மையே செய்யக்கூடியவை அம்மருந்துகள்
என்றும் அறியப்பட்டது.
இவற்றில் முக்கிய மாத்திரைகளாக சஞ்சீவி மாத்திரை, மஹாகோரோசனை மாத்திரை,
சமய சஞ்சீவி, ஆக்ராண சஞ்சீவி, சாரீர சஞ்சீவி ஆகிய மாத்திரைகளும் சஞ்சீவி தைலம் என்னும் தைலமும், ஜீவாதார சஞ்சீவி, அமிர்த சஞ்சீவி ஆகிய லேகியங்களும் முக்கியமானவை. ஜீவாதார சஞ்சீவி, அமிர்த சஞ்சீவி என்பவை நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஆற்றலை உடலுக்கு ஏற்படுத்துமாம். நீண்ட ஆயு¨ளைத் தருவது அமிர்த சஞ்சீவி.சைரண்டுமே சில குறிப்பிட்ட நோய்களுக்குக் கொடுக்கப்படக்கூடியவை.
தாது புஷ்டி லேகியம் என்பது ஆண்மை விருத்திக்காக. ஸ்தம்பன மெழுகு என்பது புணர்ச்சிக்குப் பயன்படக் கூடியது. மேகரணக்களிம்பு என்பது மேகநோயால் ஏற்படும்
கட்டிகள், புண்களுக்கானது.
தீபன சஞ்சீவி லேகியம் பசியை ஏற்படுத்தி ஜீரணத்தைச் சீர் செய்யும். வாயுத் தொந்தரவுகளை நீக்கும். தீபன சஞ்சீவியைப்போட்டுக்கொண்டால் கப கபவென உடனேயே பசி எடுத்துவிடும். சாதாப்பசியல்ல; அசுரப்பசி.
காரமாத்திரை என்பது வாய்க்கசப்பு, ஜீரணத்தொல்லைகளுக்கு.
சாரீர சஞ்சீவி மாத்திரை இசைக்கலைஞர்களுக்கும், நீண்ட நேரம் பேசுபவர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஏற்ற மாத்திரையாகும்.
தந்த சஞ்சீவி சூரணம் என்னும் பல்மருந்தும் இருந்தது. பற்பொடியாகவும் பயன்படுத்தலாம்.
அந்தக்காலத்தில் பயத்தை ஏற்படுத்தும் பயங்கர நோயாகிய பியூபானிக் ப்ளேக் நோய்க்குக்கூட சிறப்பு மருந்து ஒன்றை வைத்திருந்தார்கள். அதன் பெயர் செந்தூர சஞ்சீவி மாத்திரை.
ஜீவாதார சஞ்சீவி செந்தூரம் என்னும் பொடி மிகவும் வீரியமானது. இதனை லேகியங்களில் நடுவில் வைத்து சாப்பிடுவார்கள்.
இதில் மிக பிரபலமான சஞ்சீவி மாத்திரை, காந்தம், அயம், வெள்ளி ஆகிய உலோகங்களின் செந்தூரங்களும் வெடியுப்பு, நவச்சாரம், கற்பூரம் என்னும் உப்புக்களிலிருந்து செய்யப்பட்ட சுண்ணங்களும், நாற்பத்தைந்து வகையான மூலிகைகளின் சத்துக்களும் சேர்க்கப்பட்டு செய்யப்படுவது.
மருந்துகளுடன் ஒரு கையேடும் கொடுப்பார்கள். குழந்தைகள், சிறார், பெரியவர்,
முதியவர் ஆகியோருக்கு ஏற்படும் பல நோய்களுக்கும் எப்படி எப்படி எந்தெந்த மாத்திரைகள், லேகியங்களுடன் கலந்து எவ்வளவு கொடுக்கவேண்டும் என்று விளக்கமாகச ்சொல்லப் பட்டிருக்கும். அனுபானமாக எந்தெந்த சரக்குகளை அரைத்துச் சாறாக்கி அதில் மாத்திரையை உரசிக்கொடுக்கவேண்டும் என்றும் விபரம் காணப்படும். இஞ்சிசாற்றில் கொடுக்கும் நோய்கள் வேறு. வெற்றிலைச்சாறோ துளசிச்சாறோ சேர்த்துக்கொடுக்கும் நோய்கள் வேறு. அனுபானங்களின்பட்டியலே நிறைய இருக்கிறது.
காதில் சீழ் வடிதலுக்குச் சொல்கிறார்: ஒரு பலம் வேப்பேண்ணெயில் 2 மாத்திரையும்,
20 மிளகும், மிளகளவு வசம்பும், 5 மாவிலிங்க இலைகளும் போட்டு பொன்னிறமாய்க் காய்ச்சி,
ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, 4 துளி காதுக்குள் விட்டு வரவேண்டும்.
விஷங்களுக்குக்கூட பயன்படுத்தலாம்.
அந்தக்காலத்தில் இந்த மருந்டுகள் பிரபலமாக இருந்திருக்கின்றன.
இதனைத் தயாரித்த அபிரகாம் பண்டிதர் ஒரு மேம்பட்ட வைத்தியர் மட்டுமல்ல.
அவரின் மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது................
அவர் ஓர் இசைப் பேரறிஞர்.
அவர் எழுதிய 'கருணாமிர்த சாகரம்' மாதிரியான நூல் இன்னொன்று வெளியாகவில்லை
என்று சொல்வார்கள்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$