அண்மையில் வந்த Time சஞ்சிகையில் வயதாவதைப் பற்றி - அதாவது முதுமை - சில கட்டுரைகள் வெளிவந்திருந்தன.
இளமையில் வயதுக்கு வருகிறார்கள்.
முதுமையில் வயதாகிவிடுகிறார்கள்.
இதிலும் ஒரு சிறு நயமிருக்கிறது, பார்த்தீர்களா?
94 வயதாகும் ஜப்பானிய டாக்டர் ஒருவரைப் பற்றியும் ஒரு சிறு கட்டுரை வெளியாகியிருந்தது.
பெயர் டாக்டர் ஷிகெயாக்கி ஹினோஹாரா.
1970-ஆம் ஆண்டில், அவருடைய அறுபத்தொபதாவது வயதில் அவர் சென்ற விமானம் கடத்தலுக்குள்ளாகியது. அவரும் இன்னும் 140 பயணிகளும் சாவின் விளிம்பில் நான்கு நாட்கள் இருந்தனர். கடத்தியவர்கள் தம் கைகளில் சாமுராய் கத்திகளும் குண்டுகளும் வைத்துக்கொண்டு பயமுறுத்தியவாறிருந்தனர்.
கடைசியில் தென்கொரியாவில் சியோல் நகரில் இறக்கிவிட்டுவிட்டனர்.
இறப்பை எதிர்நோக்கியிருந்த ஹினோஹாரா தாம் உயிருடன் இருப்பதைஒரு கொடுப்பினையாகவும் அரிய பாக்கியமாகவும் கருத்துகிறார்.
அரிய வாய்ப்பாகவும் சந்தர்ப்பமாகவும் கருதுகிறார்.
ஆகவே தம்முடைய வாழ்க்கையைப் பிறருக்கே அர்ப்பணிப்பதாகத் தீர்மானித்துக்கொண்டார்.
ஜப்பானில் முதுமையால் சிரமப்படுபவர்களுக்கு வாழ்க்கையை எப்படி கூடுமானவரைக்கும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியுடையதாகவும் ஆக்கிக்கொள்வது என்பதைக் காட்டிக்கொடுப்பதில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார்.
'Healthy Ageing' - 'ஆரோக்கியமாக முதுமையடைவது' என்பது அவருடைய கோட்பாடு.
அவருடைய How to Live Well என்னும் புத்தகம் 12 லட்சம் காப்பிகள் விற்றுவிட்டது. முதலில் அதற்கு How to Die Well' என்று பெயரிட்டிருந்தார். பப்லிஷர்கள் சொன்னதன்பேரில் பெயரை மாற்றிக்கொண்டார்.
"If you keep working, if you keep learning something new, you will never get old" -
"எப்போதும் காரியம் ஆற்றிக்கொண்டேயிருந்துகொண்டு, ஏதாவது புதியதைக் கற்றுக்கொண்ட வண்ணமே யிருந்தால் முதுமையடையமாட்டீர்கள்".
இதுவும் ஒரு கீதோபதேசம்தான்.
சாக்ரட்டெஸின் ஞாபகம் வருகிறது.
விஷம் உண்டு இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இரவில் அவருடைய சிறைக்கூடத்தில் அடுத்த அறையில் இருந்த ஒருவன் Greek Sonnet என்பதைக் குழலில் வாசித்துக்கொண்டிருந்தான்.
அதைக் கேட்டுவிட்டுப் பாராட்டிய சாக்ரட்டெஸ், தமக்கும் குழல் வாசிக்கக் கற்றுத்தருமாறு கேட்டார். அடுத்த நாள் இறக்கப்போகும் சாக்ரட்டெஸ் இப்போது கற்று என்ன செய்யப்போகிறார்? அதையேதான் அந்த இசைஞனும் கேட்டான்.
"ஆயுள் முடியுமுன்னர் இன்னும் ஒன்றைக் கூடுதலாக அறிந்துகொண்டு சாவதும் ஒரு பேறுதானே!" என்று சாக்ரட்டெஸ் பதில் சொன்னார்.
டாக்டர் ஹினோஹாரா ஒரு கவிஞர், நாவல் எழுத்தாளர், இசையமைப்பாளர்.
1941-ஆம் ஆண்டில் டோக்யோவின் ஸெயிண்ட் ல்யூக் மருத்துவமனையில் வேலைக்குச்சேர்ந்து 1998-ஆம் ஆண்டுவரைக்கும் அவர் அங்கு முழுநேர ஊழியராக இருந்தார்.
அவர் டயட் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவதில்லை. கொஞ்சம் குறைவாகச் சாப்பிடுவார். குறைவாகத் தூங்குவார். குறைவாகத் தண்ணீர் குடிப்பார்.
அவர் முக்கியமாகக் கருதுவதெல்லாம் சரியான மனப்பான்மைதான். Attitude. தன்னால் எதையும் மாற்றமுடியாத நிலையில் அதைக் குறித்த நம்முடைய பார்வையை - attitude-ஐ மாற்றிக்கொள்ளலாம் என்று ப்லேட்டோ சொல்லியிருக்கிறாரே.
ஜப்பானியர்களுக்கு மகிழ்ச்சியாக முதுமையடையத் தெரிந்திருக்கிறது என்று ஹினோஹாரா கூறுகிறார். ஏனெனில் ஜப்பானில் நூறு வயதுக்கு மேற்பட்டவர்கள் இருபத்தையாயிரம் பேர்கள் இருக்கிறார்கள்.
வாழ்க்கையின் மூன்றாவது கட்டத்தில் எப்படி பயனுள்ள வகையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பதைத்தான் சொல்லிக்கொடுக்கவேண்டியிருக்கிறது என்கிறார்.
எழுபத்தைந்து வயதிலும் உடலிலும் மனதிலும் சக்தியிருக்கும்; சிந்தனையும் செயல்படும். அதை ஆராய்வதற்குரிய சுதந்திரம் இருக்கவேண்டும். புதிதாக எதையாவதைச் செய்யவேண்டும். அது இதுவரைக்கும் செய்யாததாக இருக்கவேண்டும்.
வாழ்க்கையின் பெரும்பகுதியில் வேலை, குடும்பப்பொறுப்பு என்றவாறு செலவிட்டுப்போய்விட்ட காலத்தையும் சுய அடையாளத்தையும் முதுமையில் பெறமுயலவேண்டும்.
இரண்டாவது நூலையும் வெளியிட்டுவிட்டு இன்னும் பல நூல்களை வெளியிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார். முதுமையடைவதைப்பற்றி உலகெங்கும் சென்று தொடர் சொற்பொழிவும் ஆற்றவிருக்கிறார்.
கொஞ்சம் Slow-down செய்யலாம் என்றும் நினைக்கிறார்.
தொண்ணூற்றைந்து வயதாகும்போது கோல்·ப் விளையாடப்போவதாகச் சொல்கிறார்.
இதுவரை செய்யாத ஒன்று.
"எனக்கு அப்போது அதற்குக் கொஞ்சம் நேரம் கிடைக்கும்".
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$