2002-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எனக்குப் பதிவுத் தபாலில் நூல் ஒன்று,
கல்கத்தாவிலிருந்து வந்தது. <இப்போது எப்படிச்
சொல்கிறார்கள்? 'கோல்கோத்தா'வா?''>
'மாத்ருகா பேத தந்த்ரா'. A very curious book, indeed.
அதைவிட விந்தையானது அந்த நூல் எப்படி உருவாகியது என்பது.
அதைவிட விந்தையானவர் அதனை உருவாக்கியவர்.
அதைவிட விந்தையானது அவர் என்னைச் சந்தித்தது.
அதைவிட விந்தையானவை அதன்பின்னர் அவருக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்.
இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் நல்ல Non-Fiction-ஆக
மேற்கத்திக்காரர்கள் உருவாக்கி விடுகின்றனர்.
'In
Search of' என்னும் தொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஐம்பது
வயது ஆசாமிகள் கேள்விப் பட்டிருக்கமுடியும். நாற்பது வயதோ அல்லது அதைவிடக்
குறைவான வயதோ உள்ளவர்கள், அவர்களே ஒரு 'In Search
of' போட்டுத்தான் இந்த நூல்களைப் பார்க்கவோ, வாங்கவோ, படிக்கவோ
செய்திருக்கமுடியும்.
'In
Search of' என்னும் series, Alan Landsberg and Sally
Landsberg ஆகிய ஜோடி எழுதிய நூல்வரிசை. அவற்றைப் பற்றித் தனியே
சொல்கிறேன்.
தேடல்களில் பலவகைகள் இருக்கின்றன.
'A
Search in Secret India' என்பது பால் ப்ரண்டனின் தேடலைப் பற்றியது.
'Powers
of the Mind' என்னும் புத்தகமும் ஒரு தேடலைக் குறிப்பதுதான்.புகழ்வாய்ந்த
வால்ஸ்ட்ரீட் விற்பன்னரான Adam Smith எழுதியது.இது
அவருடைய புனைபெயர்தான்.
மாத்ருகா பேத தந்த்ரா நூலை அனுப்பியவர் பெயர் டாக்டர் சக்ரபொர்த்தி. வங்காளத்தைச்
சேர்ந்தவர்.
அவருடன் ஏற்பட்ட தொடர்பைச் சொல்கிறேன்.
இளைஞர்கள் கட்டாயம் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்.
1995-ஆம்
ஆண்டு ஆண்டுகளுக்கு முன்னர், மலாயா பல்கலைக்கழகத்தின இந்தியக்
கல்விப் பகுதியிலிருந்து ஒரு தொலைக்கூப்பாடு.
ஒரு பேராசிரியர் பேசினார்.
"கல்கத்தாவிலிருந்து ஒரு ப்ரொ·பெஸர் வந்திருக்கிறார். பெயர்
டாக்டர் பலராம் சக்கரவர்த்தி. அவர் புஜாங்க் பள்ளத்தாக்குக்கும் கெடா மலைக்கும்
செல்லவேண்டும் என்று இங்கு வந்திருக்கிறார். இந்தத் துறையில்
உங்களைவிட்டால் ஆளில்லை. ஆகவே உங்களிடம் அனுப்புகிறோம். பார்த்துக ்கொள்ளுங்கள்.
நாளை வருவார்".
புஜாங்க் பள்ளத்தாக்கு - சுங்கை புஜாங்க் Sungai
Bujang என்பது கெடா மலையிலிருந்து அருவியாகப் புறப்பட்டு
ஓடிவரும் சிற்றாறு. அது இருக்கும் பள்ளத்தாக்கை அந்த ஆற்றின் பெயராலேயே அழைப்பார்கள்.
'புஜங்கம்' என்னும் சமஸ்கிருதச்சொல் அது. நல்ல பாம்பைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பெரிய ஆறாக இருந்தது. அந்தப் பள்ளத்தாக்கில் பல கோயில்களின்
சிதைவுகள் இருக்கின்றன. பல பழம்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆகவே அந்த இடத்தில்
ஒரு மலைச்சரிவில் மியூஸியம் ஒன்றைக் கட்டி, அதில் நிறைய பழம்பொருள்களை வைத்திருக்கிறார்கள்.
கோயில்களின் சிதைவுகளையும் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறார்கள். மிகவும் அழகிய
இடம். இப்போது அதனை ஒரு பெரிய பார்க் ஆக உருவாக்கியிருக்கிறார்கள். காட்டுப்பாதையில்
mountain bike racing விடுகிறார்கள்.
அன்றிரவு விடியும் முன்னர் 4-00 மணிக்கு மருத்துவமனையிலிருந்து
ஒரு கூப்பாடு. டெலி·போன் ஆப்பரேட்டர். அகாலமாக மருத்துவமனையிலிருந்து
டெலி·போன் வருவதெல்லாம் மிகவும் சகஜம். அதெல்லாம் வராமல்
இருந்தால்தான் 'என்னமோ ஏதோ' என்று அச்சம் தோன்றும். ஏதாவது டெலி·போன்
எக்ஸ்சேஞ்ச் கோளாறோ?
"பாஸ், ஒரு வெளிநாட்டுக்காரர் வந்திருக்கிறார். உங்களைப்
பார்க்க வந்திருக்கிறார். நம்ம ஹாஸ்பிட்டல் முன்னாலேயே எக்ஸ்ப்ரெஸ் பஸ் அவரை
இறக்கிவிட்டுவிட்டுச் சென்றது. யாரோ பெரிய வீஐப்பி போல. நம்
'ப்ரோட்டோன்' கார் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. அவரை ஏற்றி வீட்டுக்கு
அனுப்பிவைக்கிறோம்".
"நானே நேரில் வருகிறேன்".
"வேண்டாம், பாஸ். இரண்டாவது தடவையாக இன்றிரவு கூப்பிட்டு
விட்டோம். ரெஸ்ட் எடுங்கள்".
"பரவாயில்லை. அவர் பெரிய மனுஷன். பெரிய படிப்பாளி. வந்து
கூட்டிச்செல்கிறேன்".
ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி முகப்பு.
ஆறடி உயரம். சரியான ஆகிருதி. வழுக்கைத்தலை. ஒரே ஒரு பை.
"Aiyaam
Chakroborththi, Balraam Chakroborththi. From West Bengal."
"சரிதான்; ஆசாமி பழைய ஆள் போலிருக்கு. வெஸ்ட் பெங்கால் என்கிறாரே."
என்று நினைத்துக ்கொண்டேன். காரில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.
புத்தக அறைகளில் ஒன்றில் படுக்கையெல்லாம் போட்டு வைத்திருப்பேன்.
முன்பு கணினியெல்லாம் கிடையாது. ஆகவே ஓரளவுக்கு அடசல் இல்லாமலிருந்தது.
அந்த அடசலில்தான் வாஸந்தியும் இந்திரா பார்த்தசாரதியும் இரண்டு மணி நேரம்
பேசிக் கொண்டிருந்தார்கள். "வாங்க. முன்னால சோ·பாவுல உக்காந்து பேசலாம்",
"வேணாம் வேணாம்.
இங்கதான் ரொம்ப நன்னாருக்கு. புஸ்தகத்தோட ஒண்ணாயிருக்கக் குடுத்து
வெச்சிருக்கணுமே" - இது இந்திரா பார்த்தசாரதி.
அந்த அறையில் சக்கரவர்த்தி தங்கிக்கொண்டார். எப்போதுமே
ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன். அனுட்டானங்கள் பூஜையெல்லாம் முடித்து
எட்டு மணிக்கெல்லாம் வேலையில் இருக்கவேண்டுமே. ஆகவே ஆறுமணி வரைக்கும் ரெண்டு
மூணு சூடான கா·பியுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
ரொம்பவும் விசித்திரமான பிரகிருதி.
அவர் பல விஷயங்களில் ஆராய்ச்சி செய்திருக்கிறார். பல புத்தகங்களும்
எழுதியிருந்தார். வேத காலத்து சமாச்சாரங்கள் பற்றி சில நூல்கள்.
அவருடைய forte என்பார்களே, அது தென்னமெரிந்திய
நாகரிகங்களுடன் பாரதீய கலாச்சாரத ்தொடர்புகள். ரொம்பவும்
far-fetched- ஆக
இருக்கும். மாயா கலாச்சாரத்தை ஆராய்வதற்காக
Peru பெருவுக்குச் சென்று வந்தவர்.'
பெரு நாட்டுக்குச் சென்றவர்' என்று சொல்லவில்லை. அர்த்தம் வேறாகிவிடும். அவர்களின்
தேவனாகிய Viracochaவை வீரகூர்ச்சவர்மன் என்னும் பல்லவமன்னன்
என்று சொல்வார். லேசாக, பெயரில் கொஞ்சம் ஒலி ஒற்றுமை இருந்தாலும்போதும்.
எப்படியாவது படிப்படியாக word building exercise போட்டு,
மொட்டைத்தலையிலிருந்து முழங்காலுக்கு முடிச்சுப்போடுவார். இணையத்தில்
இந்த கைங்கரியத்தைச் சக்கரவர்த்தியைவிட இன்னும் ஜூட்டாக செய்யும் மகாமண்டலேசுவரர்கள்
இருக்கிறார்கள். மொட்டைத்தலையிலிருந்து சடைப் பின்னி அப்படியே
இழுத்து முழங்காலில் முடிச்சுப் போடும் லாகவம் இருக்கே.... சும்மா
சொல்லப்படாது.
உலகத்தை நான்கைந்து தடவை சுற்றி வந்தவர்.
அப்போது தமக்கு அறுபத்துநான்கு வயது என்றார்.
அவர் இப்போது இங்கு வந்ததன் காரணத்தைச் சொன்னார்.
பண்டைய காலத்தில் தென் கிழக்காசியாவில் இந்தியர்கள் குடியேற்றம் நடைபெற்றபோது
முதன்முதலில் தோன்றிய நாடுகளில் ஒன்று கடாரம் எனப்படுவது. அது பொன்விளையும்
பூமி. நல்ல செழிப்பும் வளமும் மிக்கது. விவசாயம், மலை, காடு ஆகியவற்றிலிருந்து
பொருட்கள் கிடைக்கும் . வெள்ளீயம், வெள்ளி, பொன் ஆகியவையும் ஏராளம். குறிப்பிட்ட
சில ஆறுகளில் அடித்துக்கொண்டு வரப்படும் மணல் தங்கமணலாக இருக்கும். சலித்து
எடுத்துக்கொள்வார்கள்.
இந்தியர்கள் மட்டுமின்றி, சீனர், அராபியர், ரோமர் ஆகியோரும் வரப்போக இருந்தனர்.
ஆகவே வர்த்தகமும் நிறைய நடைபெற்றது.
இப்போது கடாரம் மலாயா தீபகற்பத்தின் வடகோடியில் 'கெடாஹ்' என்னும் பெயரில்
திகழ்கிறது.
அதனை அணிசெய்யும் உயரமான மலை குனோங் ஜெராய் எனப்படும் கெடாஹ் மலையாகும்.
அவர் கல்கத்தா மியூஸீயத்துக்குச் சென்றிருக்கிறார். அங்கே
ஒரு கல்வெட்டு இருக்கிறது. அதனை 'மஹாநாவிக்கா புத்தகுப்தா கல்வெட்டு' என்றே
குறிப்பிடுவார்கள்.
அது கண்டுபிடிக்கப்பட்ட இடம் கெடா மலையின் அடிவாரத்தில்
உள்ள ஓர் இடம். கறுப்பு பாஸால்ட் கல்லில் அமைக்கப்பட்டிருக்கும்.
'ரக்த மிருக்திகா' என்னும் இடத்தைச் சேர்ந்த புத்தகுப்தா
என்பவர் ஒரு கடற்படைத் தளபதி. அதனால் அவரை 'மஹாநாவிக்கா' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அவரும் அவருடைய கப்பல்களும் வங்கக்கடல் தாண்டி அந்தமான்
கடலில் சென்று கொண்டிருக்கும்போது, கடுமையான புயல் அடித்திருக்கிறது.
வானம் எது, கடல் எது தெரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு எங்கும் மழைமூட்டமும்
பனிமண்டலமும் பெருமழையும். இவற்றுடன் இருட்டும் சேர்ந்துகொண்டது. அப்போது புத்தகுப்தர்
புத்தரை எண்ணித் துணைக்காகப் பிரார்த்தனை செய்திருக்கிறார். அப்போது வானின்
அடிப்பகுதியில் ஒரு புள்ளிபோல வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தில்
நட்சத்திரம் ஏதும் இல்லை. ஆகவே அந்த ஒளியை நோக்கிக் கப்பல்களைச் செலுத்தினார்.
சில மணி நேரத்தில் புயலும் ஓய்ந்தது. கப்பல்களும் 'கெடா மலை' அல்லது குனோங்
ஜெராய் (Kedah Peak, Gunong Jerai) எனபட்டும்
அந்த மலை இருந்த கரையை நோக்கிவந்துவிட்டன.
நன்றியுடைய புத்தகுப்தர், அங்கே புத்த ஸ்தூபிகளையும் சைத்தியங்களையும்
எழுப்பச்செய்தார். கெடா மலையின் உச்சியிலும் அவ்வாறே ஒரு சைத்தியத்தை எழுப்பினார்.
அங்கெல்லாம் கல்வெட்டுக்களை எழுதுவித்து நிறுவினார்.
அந்தக் கல்வெட்டு சற்றுச் சிதைந்து காணப்படுவது. முழுமையாகவும்
இல்லை. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எழுத்துக்கள் பல்லவ கிரந்தத்தில்
இருக்கின்றன.
கல்வெட்டின் வாசகத்தில் ஒரு பகுதி:
அஜ்ஞானாஞ் சீயதே கர்ம்ம ஜன்ம்மனா:
கர்ம்ம காரணம் ஜ்ஞானஜ்ஞ
சீயதே கர்ம்மபவஜ்ஞ ஜயதே
மஹாநாவிக்க புத்த குப்தஸ்ய
ஸர்வேன ப்ரகாரேன ஸர்வ்வஸ்மின்
ஸர்வதா ஸர்வ்வ ஸித்தயாத் ர: சந்து
அஞ்ஞானத்தால் கர்மா சேர்கிறது. பிறப்பின் காரணம் கர்மா.
கர்மா இல்லாமையால் மறுபடியும் பிறக்கமாட்டான். ரக்தமிருக்திகாவின்
வாசியான மஹாநாவிக்கன் புத்தகுப்தன் எல்லாவகைகளாலும் எல்லாவற்றிலும்
எல்லா வழிகளிலும் எல்லாரும் பயணத்தில் வெற்றி அடைவதாக.
அந்தக் கல்வெட்டுக்களில் ஒன்றுதான் கல்கத்தா மியூஸீயத்தில்
வைக்கப்பட்டிருக்கிறது.
அதைத்தான் பலராம் சக்கரவத்தி பார்த்திருக்கிறார்.
அந்தக் கல்வெட்டின் படத்தை இங்கே காணலாம்.
அவருடைய பெயர் புத்தகுப்தர் என்றிருப்பதிலிருந்து அவர் வைசிய மரபைச் சேர்ந்தவர்
என்பது தெரிகிறது. பெயரிலேயே 'புத்த' இருப்பதாலும் புத்தபகவானுக்கு ஸ்தூபி
எழுப்பியமையாலும் அவர் புத்தமதத்தினர் என்பது பெறப்படுகிறது.
Merchant Navy என்று இக்காலத்தில் அழைக்கிறோம்.
பல கப்பல்கள் சேர்ந்த கூட்டம். ஒன்றுக்கு ஒன்று பாதுகாப்பாகச் செல்லும்.
நிலத்தில் Caravan என்று சொல்கிறோமல்லவா. அதேபோல. அக்காலத்தில்
நிக்கோபாருக்கும் சுமாத்ராவுக்கும் மலாயாவுக்கும் இடைப்பட்ட
கடற்பகுதியில் கடற்கொள்ளைக்காரர்கள் மிகுதியாக இருந்தனர்.
இப்போதுகூட சுமாத்ராவுக்கும் மலாயாவுக்கும் இடைப்பட்ட மலாக்கா ஜலசந்தியில்தான்
உலகிலேயே அதிகமான கடற் கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில்
இன்னும் அதிகமாக இருந்தார்கள். அத்தகைய கொள்ளைக்காரர்கள்
தங்களுக்கென்று குட்டிக்குட்டி ராஜ்யங்கள்கூட நிறுவியிருந்தனர்.
சற்றுப் பெரிய நாடுகளில் சில, கொஞ்சம் கௌரவமான முறையில் கொள்ளையடித்தன.
அந்தப் பக்கம் போகும் கப்பல்கள் கட்டாயமாக அவர்கள் துறைமுகத்துக்கு வரவேண்டும்.அரசரை
அல்லது கவர்னரைப் பார்த்து கையுறைகள் கொடுக்கவேண்டும். அத்துடன் அரசரோ அவருடைய
அதிகாரிகளோ சரக்குகளைப் பார்வையிட்ட பின்னர் அவர்களுக்குப்
பிடித்த சரக்குகளை அவர்கள் கூறும் விலைக்குக் கொடுக்கவேண்டும். அல்லது துறைமுகக்கட்டணமாக
அந்தப் பொருட்களைக் கொடுக்கவேண்டும். போதாததற்கு அந்தத் துறைமுகத்திலிருந்து
சரக்கு எடுக்கவேண்டும். அவர்கள் சொல்லும் விலைக்கு. தேவையோ தேவையில்லையோ அது
அந்த வர்த்தகர்களின் பாடு.
சில இடங்களில் இப்படிப்பட்டவர்கள் இருக்கமாட்டார்கள். மிகவும் பாதுகாப்பான
துறைமுகங்களை வைத்துக்கொண்டு, பல வசதிகளையும் கொண்டதாகச் சில பட்டினங்கள்
விளங்கின. அத்தகைய இடங்களுக்கு வர்த்தகர்கள் விரும்பிச்சென்றதுண்டு.
ஆகவே வர்த்தகர்கள் கூட்டம் கூட்டமாகக் கப்பல்களைத் தக்க பாதுகாப்புக் கப்பல்களுடன்
அனுப்பினார்கள். இவ்வாறு செல்லக்கூடிய கப்பற்கூட்டத்துக்குத் தலைமையான பெரும்
வர்த்தகர் ஒருவர் இருப்பாரல்லவா? அவரே ஒரு திறமையான கடலோடியாகவும் இருப்பாரல்லவா?
அவரைத்தான் 'மஹாநாவிக்கா' என்று அழைத்தார்கள்.
நம்ம ஆட்கள் 'மாநாயக்கன்' என்று குறிப்பிட்டார்கள்.
அந்தக் கல்வெட்டு எங்கிருந்து வந்தது என்பதை அலசினார்.
இடத்தைக் கண்டுபிடித்துவிட்டார்.
அது தற்சமயம் எந்த பெயருடன் இந்த உலகத்தில் எந்த பாக்த்தில் இருக்கிறது?
அதையும் கண்டு பிடித்துவிட்டார். மலாயாவின் வடகோடியில் இருக்கும் கெடா என்னும்
மாநிலத்தின் மலைகளில் ஒன்றின்மீது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் பழைய கடாரம்
என்று வரலாற்றுப் புத்தகங்கள் கூறின. எப்படியாவது அந்த இடத்துக்குப்போய்ப்
பார்த்துவிடவேண்டும் என்ற அவியாத் தாபம் ஏற்பட்டது.
வங்காளத்து டாக்டர் சக்ரபொர்த்திக்கு ஏன் எப்படி கடாரத்துக்
கல்வெட்டின்மீது ஈடுபாடு ஏற்பட்டது?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$