அநாமிகா
பாகம் 1

    கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
    டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee


                'அநாமிகா' என்றாலேயே 'பெயரில்லாதது' என்பதுதான் வடமொழியில் பொருள்.
                தமிழிலே 'பெயரில்லாப் பூச்சி' என்றதொரு சொல் இருக்கிறது. அந்தப் பூச்சியின் பெயர் என்ன? அதற்குப் பெயர் கிடையாது. ஆகவே அது பெயரில்லாப் பூச்சி.
                ஆனால் 'பெயரில்லாப்பூச்சி' என்பதே அந்தப் பூச்சியின் பெயராகி விட்டதே, பார்த்தீர்களா.
                பிரான்மலையில் ஒரு பெரிய கோயில் complex இருக்கிறது. மலையின் அடிவாரத்திலும், குன்றின் உச்சியிலும், குன்றைக் குடைந்தும் பல கட்டங்களாக அமைந்திருக்கும் அற்புதப் படைப்பு அது. அதில் உள்ள பல அதிசயங்களில் ஒன்று, அந்தக் கோயிலின் தலவிருட்சம்.
                அதன் பெயர், 'பேர் சொல்லா மரம்்'.
                நூற்றாண்டுகள் காலமாக அது இருந்துவருகிறது.
                எத்தனை நூற்றாண்டுகள்?
                தெரியாது.
                ஆகவே அந்த மரத்தை இன்றுவரை 'பேர் சொல்லா மரம்்' என்றே அழைத்து வருகிறோம். அதுவே அதன் பெயராக ஆகிவிட்டது. அதைத் தவிர வேறு எந்த மரத்துக்கும் 'பேர் சொல்லா மரம்்' என்ற பெயர் அங்கு இல்லையாதலின் அந்தப் பெயருக்கே ஒரு specificity ஏற்பட்டுவிட்டது.
             
                ஒரு ஊரில் ஒரு ஏழைப் பெண் இருந்தாள்.
                அவளை ஒரு ராஜகுமாரன் காதலித்தான். ஆனால் அவனுடைய தாயாகிய ராணியம்மாளுக்கு இவளைப் பிடிக்கவில்லை.
                ஆகவே அவளுக்கு ஒரு சோதனை வைத்தாள்.
                ஒரு பண்ணைவீடு நிறைய வைக்கோலை நிறைத்து, அவற்றை வைத்து பொன்மயமான நூல்களை நூற்கவேண்டும். அதையும் ஒரே இரவுக்குள் செய்துவிடவேண்டும். உள்ளே வைத்துப் பூட்டிவிட்டார்கள்.
                இதை நினைத்து அந்தப் பெண் வருந்திக்கொண்டிருக்கும்போது நடுச்சாமத்தில் ஒரு குட்டிசாத்தான் வந்தது.
                அது தன்னுடைய சக்தியால் பொன்மயமான நூலை நூற்பதாகச் சொன்னது.
                ஆனால் ஒரே ஒரு நிபந்தனை.
                அவளுக்குப் பிறக்கும் முதற் குழந்தையை அதனிடம் கொடுத்துவிடவேண்டும்.
                அவளும் அதற்குச் சம்மதித்தாள்.
                உடனே அங்கே தங்க நூல்கள் நிரம்பின.
                குட்டிசாத்தான் மறைந்தது.
                அடுத்தநாள் காலையில் போட்டியில் வென்ற அந்தப் பெண் அந்த ராஜகுமாரனை மணந்தாள்.
                அடுத்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
                ஒருநாள் அந்தக் குட்டிசாத்தான் தோன்றியது. பிள்ளையைக் கேட்டது. அந்தப் பெண் - இப்போது இளவரசி - குழந்தையைக் கொடுக்க மறுத்தாள். கெஞ்சினாள்.
                குட்டிசாத்தான் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு, "அப்படியானால் சரி. என்னுடைய பெயர் என்ன என்பதை நீ சொல்லவேண்டும். சரியாகச் சொல்லவில்லையென்றால் பிள்ளையை எடுத்துக்கொள்வேன்", என்றது.
                இளவரசி ரொம்ப நேரம் குழம்பிப் போய் கடைசி பட்சமாக வேறு வழியே இல்லை என்ற நிலை வந்த போது, 'வந்தது வரட்டும், போனது போகட்டும்;, என்ற விரக்தி நிலையை அடைந்து ஏதோ வாய்க்கு வந்ததைச் சொன்னாள்.
                "ரும்ப்பெல்ஸ்டில்ட்கின்!"
                "ஓஓஓஓஓ.....! என்ற பேரலறலோடு அந்தக் குட்டிசாத்தான் மறைந்தது.
                ஆம்.
                அதுதான் அதன் பெயர்.

                மருத்துவத்தில் Rumpelstiltkin Syndrome என்று ஒன்று உண்டு.
                பலர் தங்களுக்குச் சில நோய்க் குணங்கள் இருப்பதாக எப்போதும் சொல்லி  குறைபட்டுக் கொண்டேயிருப்பார்கள். பரிசோதித்துப் பார்த்தாலும் ஒன்றையும் கண்டறியமுடியாது. ஆனால் கஷ்டப்பட்டுக்கொண்டேயிருப்பார்கள். "என்னதான் செய்கிறது என்றே தெரியவில்லை", என்று பிரலாபித்துக் கொண்டேயிருப்பார்கள்.
                அவர்களுக்குச் சில பரிசோதனைகளைச் செய்து "உனக்கு இன்ன வியாதி இருக்கிறது" என்று வியாதியின் பெயராக எதையாவது சொல்லி வைத்து, "அதைக் கண்டு பிடித்துவிட்டேன். அதற்கு இன்ன இன்ன குணம் இருக்கும்" என்றும் அந்த நோயாளி எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் கோளாறுகளை நாமாகவே சொல்லி, ஏதாவது சிவப்பு நிற மாத்திரையைக் கொடுத்தால் அவர்களுக்குக் குணமாகிவிட்டதாக உணர்வார்கள்.
                இந்த ரும்ப்பெல்ஸ்டில்ட்கின் ஸிண்ட்ரோம் எனக்கு ஒரு சமயத்தில் கைகொடுத்திருக்கிறது. அதை விஸ்வாக்காம்ப்லெக்ஸில் இன்னொரு கட்டுரையில் காணலாம்.
                இறைவனுக்கு 'அனந்தகோடி நாமதேயன்' என்ற பெயர். 'எண்ணமுடியாத - முடிவே இல்லாத கோடிகள் பெயர்களைக் கொண்டவன் என்று அர்த்தம்.    
                அதே சமயத்தில் அவனுக்கு அநாமதேயன் என்றும் பெயர். பெயரே இல்லாதவன்.
                லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமமந்திரம் வருகிறது. 'நாமரூபவிவர்ஜிதா'என்பது அது. 'உருவ வடிவுக்கும் பெயருக்கும் அப்பாற்பட்டவள்' என்பது அந்த மந்திரத்தின் பொருள். அம்பிகையின் ஆயிரம் திருப்பெயர்களில் அதுவும் ஒரு பெயராக விளங்குகிறது.

                இதுவரைக்கும் வெளிவந்த science fiction கதைகளிலேயே மிகச்சிறந்தவற்றில் ஒன்றாகக் கருதப்படுவது, 'Nine Billion Names of God'. எழுதியவர் Arthur C. Clarke.
                அதையும் அடுத்தாற்போல சொல்கிறேன்.

                'அநாமிகா'வை இன்னும் கொஞ்சம் தொடவேண்டியுள்ளது.....


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

NEXT

RETURN TO MAIN MENU