பிரிட்டிஷார் ஏற்படுத்திய வங்காளப் பஞ்சம்
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee




இந்தியா
யுத்தத்துக்கு முன்

                    வங்காளம் இந்தியாவின் மற்ற மாநிலங்களைபோல அல்ல. பெரும் பெரும் ஆறுகள் கடலில் சங்கமிக்கும் இடம். பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பரப்பளவு உள்ள பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான கிளைநதிகளும் ஆயிரக்கணக்கான கால்வாய்களும் நிறைந்த இடம். அங்கு விளைச்சலே இல்லாமற்போனாலும்கூட அங்கு கிடைக்கும் மீன்வளம் மக்களுடைய உணவுத்தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்தி செய்யும். வங்காளம் இந்தியாவின் களஞ்சியம் என்று பெயர் பெற்றது.
                    இருப்பினும் அந்த மாநிலத்தில் பஞ்சமேற்பட்டது.
                    பிரிட்டிஷாரே இதற்குக் காரணம்.
   
                    1942-இலிருந்து 1945 வரைக்கும் இடையே உள்ள காலகட்டத்திற்குள் நாற்பது லட்சம் பேர் பஞ்சத்தால் இறந்துபோயினர். இது பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த விபரம். ஆனால் அதற்குமேல் அதிகமாகத்தான் நிச்சயம் இருந்திருக்கும்.

                1942-ஆம் ஆண்டு ஜப்பானியர் பர்மாவைப் பிடித்துவிட்டனர். பர்மாவிலிருந்து அரிசி முதலிய உணவுப்பொருள்களின் வரத்து அறவே நின்றுவிட்டது. இந்திய தெசிய ராணுவமும் ஜப்பானிய ராணுவமும் எந்த நேரத்திலும் வங்களத்திற்குள் பாய்ந்து கல்கத்தாவைப் பிடித்துவிடும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.
                ஆகவே Scorched Earth Policy என்னும் அழிவைச்செய்தனர். எதிரிகள் தம் நாட்டிற்குள் நுழையுமுன்னர் அவர்களுக்கு உணவு நீர் முதலியவை கிடைக்கக்கூடது என்பதற்காக நீர்நிலைகளை உடைத்துவிட்டு, நஞ்சு கலந்துவிடுவார்கள். பயிர்பச்சைகளை அழித்துவிடுவார்கள்.
                அதே காரணத்தால் ஜப்பானியர்களுக்கு வங்களத்தின் வளம் பயன்படக்கூடாது என்ற நோக்கத்தோடு அழித்துவிட்டார்கள். அத்துடன் இன்னொன்றும் உண்டு. வங்காளத்தின் மக்கள் இயற்கையிலேயே ரொம்பவும் சுதந்திர உணர்வு படைத்தவர்கள்; அறிவுஜீவிகளும் சிந்தனையாளர்களும் கவிஞர்களும் ஏராளமாக இருந்தனர். விரைவில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மேலும் வங்காளியாகிய சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை நடத்திக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைய வங்காளத்தின் எல்லையின் அருகில் வந்துவிட்டார்.
                அவருக்கு ஆதரவாக வங்காளம் கொதித்தெழுந்து புரட்சி செய்தால் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தால் ஜப்பானியருடன் போரிடவும் முடியாது; வங்காளப் புரட்சியை அடக்கவும் முடியாது.
                ஆகவே ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்த மாதிரி அழிவுவேலையைச்செய்தனர்.
     
                பஞ்சத்தை ஏற்படுத்தி பட்டினி போட்டு அவர்களின் உணர்வுகளை மழுங்கச்செய்யவேண்டும் என்ற குறிக்கோள் இதன் அடிப்படை.   
                இத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் பஞ்சத்தைக் கடுமைப்படுத்த இன்னும் சில காரியங்களையும் நிறைவேற்றினர்
                இந்த லட்சணத்தில் உற்பத்தியாகிய உணவுப்பொருள்களையும் ஏற்றுமதி செய்தனர்.
  
                பர்மாவிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் வங்காளத்துக்கு வந்து சேர்ந்தனர். பிரிட்டிஷாரின் விவரப்படி ஐந்து லட்சம் பேர் வந்தனர். ஆகவே அதைவிடக்கூடுதலாகத்தான் இருக்கும்.
                பலவகைகளில் அடக்குமுறையைத் திணித்தனர்.
                பத்துப்பேருக்கு மேல் ஏறக்கூடிய படகுகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். எழுபதினாயிரம் படகுகளும் சிறு கப்பல்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டன. இதனால் நதிகளும் ஆறுகளும் நிறைந்த வங்காளத்தின் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தானியங்கள் உணவுப்பொருள்கள், சணல் போன்ற உற்பத்திப்பொருள்கள் எதையுமே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லமுடியவில்லை. மேலும் மீன் பிடிப்பும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 

                ராணுவத்தின் தேவைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அரண்கள் நிறுவுவதற்காகவும் ஏராளமான நிலத்தைப் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் இரண்டு லட்சம் பேர் பரதேசிகளாகினர்.
 
                வேற்றிடங்களிலிருந்து அரிசியை வரவழைப்பதற்கு தடை விதித்தார்கள். அரிசியை வாங்குவதற்குக்கூட தடை ஏற்படுத்தினார்கள். ஜப்பானிய ஏஜெண்டுகள் அரிசியை வாங்கி ஜப்பானியருக்குக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்காக இது. இருக்கும் அரிசியையும் பிரிட்டிஷ் அரசாங்கமே வாங்கிக்கொண்டுவிட்டது. அரசாங்கக் களஞ்சியங்கள் சேமிக்கப்பட்டது.
 
                இந்த மாதிரியான கட்டுப்பாட்டால் கள்ளமார்க்கெட்டும் விலைவாசி ஏற்றமும் ஏற்பட்டன. பணவீக்கமும் ஏற்பட்டது.   

                அரசாங்கத்தின் பணதேவைக்காகவும் தாராளமாக பணப்புழக்கம் இருக்கவேண்டும் என்பதற்காகவும் மக்களை இதன்மூலம் மயக்கி ஏமாற்றுவதற்காகவும் ஏராளமான கரன்ஸி நோட்டுக்களை அச்சடித்துவ் வெளியிட்டனர்.
  
                பஞ்சத்துக்கென்று அவசரகாலச்சட்டம், நிவாரணம் போன்ற சமாச்சாரங்களை எந்த அரசாங்கமும் போட்டு முடுக்கிவிடும். ஆனால் ப்ரிட்டிஷ் அரசாங்கமோ இவற்றில் எதையுமே செய்யவில்லை.

                 வங்காளத்திலிருந்த மோசமான நிலைமை பிரிட்டிஷ் பார்லிமென்த்தில் விவாதிக்கப்பட்டது. மொத்த உறுப்பினர்களில் பத்து பெர்ஸெந்த்கூட வரவில்லை. நாற்பது கோடிப்பேர் வசிக்கும் இந்தியாவின் தேவைகளுக்கு ஐந்து லட்சம் டன் தானியங்கள் மட்டுமே இரண்டு ஆண்டுகளுக்குச்சேர்த்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் ஐந்து கோடிப்பேர் மட்டுமே வசிக்கும் பிரிட்டனுக்கு ஒரு கோடி டன் ஹானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. இவ்வளவிற்கும் பிரிட்டனுக்காக இருபத்தைந்து லட்சம் இந்தியர்கள் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

                மவுண்பாட்டன், வேவல், சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களுடைய வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன.
                இரண்டாண்டுகள் இவ்வாறு மக்கள் பஞ்சத்தில் அழிவதைப்பார்த்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்ட், பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கண்டித்து உடனடியாக உணவு அனுப்புமாறு கூறினார். இருப்பினும் சர்ச்சில் பிரிட்டிஷ் துருப்புகளுக்கு உணவுத்தேவையைப் பூர்த்தி செய்வதே முதன்மையானது என்று அடித்துக்கூறிவிட்டார். பிறகு ராணுவத்துக்கு அனுப்பப்பட்ட உணவை வேவலும் மவுண்ட்பாட்டனுமாகச் சேர்ந்து மக்களுக்குக் கிடைக்குமாறு செய்தனர்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU