அத்துவானக் காட்டில் மதுரை

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee

                    தமிழர்களில் எத்தனையோ மேதைகள், கண்டுபிடிப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள்.
                    ஆனால் பலரை அறிந்துகொள்ளமுடியாமலேயே போய் விடுகிறது.
                    தரமாகத் தொழில் செய்பவர்களும், சிறந்த பொருள்களை மலிவாகத் தயார் செய்பவர்களும் ஏராளமாகத் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
                    வேதனையாக இருக்கிறது.

    "கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே.....
    இங்கு வேரிற் பழுத்த பலா.....
    இங்கிவ்விதமாக இருக்குதண்ணே.....
    இதில் யாருக்கும் வெட்கமில்லை".

                    நான் 'குவாலா ப்ராங்க்'(Kuala Brang) என்னும் காட்டுப்பிரதேசத்து ஊரில் இருந்தபோது ஒரு டிரான்ஸிஸ்டர் அவசரமாகத் தேவைப்பட்டது. அந்தச் சமயத்தில் ஏதேனும் பெரிய ஊருக்குச் சென்று உருப்படியான branded ரேடியோ வாங்க இயலவில்லை.
                    ஏனெனில் எந்தப் பெரிய ஊருக்கும் போகமுடியவில்லை. டிசம்பர் மாதத்தின் பெருவெள்ளம். குவாலா பிராங்கின் மூன்று பெரிய ஆறுகளும் கரைகடந்து வெள்ளபெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தன. குவாலா பிராங், தென் சீனக்கடலின் ஒரு தீவாக விளங்கிக் கொண்டிருந்தது.
                    அது கடலிலிருந்து தூரத்தில்தான் இருக்கிறது. ஆனாலும் அந்தப் பெருவெள்ளத்தில் கடல் எது, ஆறு எது என்று அறிந்து கொள்ளமுடியாத நிலை.
                    அதுவும் மூடுபனி போர்த்திருந்தால் தண்ணீர், தரை, வானம் எல்லாமே ஒன்றாகக் கலந்து காட்சியளிக்கும். அந்தச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டால் ஏதோ அந்தரத்தில் கார் சென்றுகொண்டிருப்பது போலத் தோன்றும். பாதையில் கார் ஓடும். Visibility ஐந்தடிக்கும் குறைவாக இருக்கும். வானம் மூடியிருக்கும். அக்கம்பக்கம் எல்லாமே மூடியிருக்கும். தரையில் ஓடும் தண்ணீரும் பனியைப் போலவே தோற்றத்தில் இருக்கும்.

                    எனக்கு அந்த ரேடியோ ஏன் தேவைப்பட்டது?
 
                    நாங்களெல்லாம் எங்கெங்கு எப்படி எப்படி வெள்ளத்தில் அடிபட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அறிந்துகொள்ளத்தான்.

                    மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள ஆப்பரேஷன்ஸ் ரூமில் அந்த வட்டாரத்தின் வெள்ள நிலைமை., S.O.S. போன்றவையே வயர்லெஸில் கிடைக்கும்.
                    வீட்டில் இருக்கும்போது எங்களின் உண்மை நிலைமையை அறிந்துகொள்வதற்காக அந்த ரேடியோ தேவையாக இருந்தது.
                    ஆகவேதான் ஒரு டிரான்ஸிஸ்டர்(காதலிக்க நேரமில்லை - "யாரு ஸிஸ்டர்? - "டிரான்ஸிஸ்டர்") வாங்க நிச்சயித்தேன்.

                    குவாலா பிராங்கில் அப்துல் மஜீது என்பவர் பலகாலமாக இருந்தார். மலாய்க்காரப் பெண்மணிகளை மணந்துகொண்டு அங்கேயே குடியிருந்தார். அவரையும் சேர்த்து நான்கே நான்கு பேர்தான் தமிழர்கள். என்னோடு சேர்த்து ஐவரானோம் + என் குடும்பம்.

                    அவர் சொன்னார், "இங்க ஒர்ரு ந்நாட்டுக்கார்ரங் கட வச்சுர்ருக்கான். ர்ரேடியோவெல்லாம் ர்ரிப்பேர்ர் பண்ணுவான். அவங்கிட்ட எதுனாச்சியும் இர்ருந்தா இர்ருக்கும். எம்பழத்திர்ரண்டாந்நம்பர்ர் கட அவனுது".

                    அவர் எப்போது கொஞ்சம் அழுத்தந்திருத்தமாகத்தான் பேசுவார். ஊர் திருமலைராயன் பட்டினம்; காரைக்கால் பக்கம். அடிக்கடி 'க்ராந்த்ல் தே' என்று சொல்வார். Grand 'l De - God is Great - ·பிரெஞ்சுக் குடிமகன் அல்லவா? "இங்கில்லீஸ¤க்கார்ர்ரன் நீதி நேர்ர்ரு; ·பிரெஞ்சுக்கார்ரனோட வீதி நேர்ர்ரு" என்று காரைக்காலின் வீதிகளையும் தெருக்களையும் பூலவார்களையும் புகழ்வார். திருச்சிராப்பள்ளியில் 'மேலப்புலிவார்டு ரோடு' என்று ஒரு ரோட்டை அழைப்பார்கள்.  அது(Boulevard) 'West Bouleward' என்ற பெயரில் இருந்தது என்று பழையாட்கள், வயசாளிகள் சொல்வார்கள்.

                    ஆகவே அவர் சொன்ன கடைக்கு அவருடன் சென்றேன்.
 
                    ஓர் இளைஞனுடைய சிறிய சிறுகடை. Gerai என்னும் பெயரில் சிறு கடைகள் இருக்கின்றன. அந்த கெராயிலும் அவனுடையது சிறிய கெராய். அதில் சில ஷெல்·புக்கள். அவற்றில் சில ரேடியோக்கள். ஒரு மேஜை. அதில் குற்றுயிரும் குலையுயிருமாக சில ரேடியோ, டிரான்ஸிஸ்டர்கள் பிரிந்து கிடந்தன.
                    அவனிடம் குவாலா பிராங்கின் பிரதேச dialect மலாயில் டிரான்ஸிஸ்டர் இருக்கா என்று மஜீது கேட்டார்.
                    அவன் 'ada...ada. thunggu tuan", என்று சொல்லிவிட்டு கீழேயிருந்து ஒரு பெட்டியிலிருந்து ஒரு சிறிய வஸ்துவை எடுத்தான்.
                    சிறிய டிரான்ஸிஸ்டர். சிவப்பு நிறம். கொஜ புஜாவென்று ஒரு மாதிரியாக இருந்தது.
                    வேறு எதுவும் இருக்கா' என்று கேட்டதற்கு, அவன்,
   
                "நி பாஹாங்க் பாகுட்புஞ்யா, துவான். ஹாமாய் ஓஹாங் காப்போம் செம்வா பில்லி நி. நி புவாத்தான் நெகாஹா ஸெந்தீஹி துவான்" - (Ini barang bagus tuan. Ramai orang kampong beli ini. Ini buatan negara tuan sendiri) - அந்த dialectஇல் 'ர'வெல்லாம் 'ஹ'வாக மாறும். மூக்கடைத்துக்கொண்டு ஒரு மாதிரியாக இழுக்கும்.
                "இது நல்ல சரக்கு, ஐயா. கிராமத்து மக்களில் பலர் இதை வாங்குகிறார்கள். இது ஐயாவின் சொந்த நாட்டில் செய்தது."
                    தூக்கிவாரிப்போட்டது.
                    டிரான்ஸிஸ்டரின் பின்பக்கத்தை நன்றாக உற்றுப்பார்த்தேன்.
                    தூக்கிவாரிப்போட்டது.
                    'Made in India'.
                    கீழே சிறிய எழுத்தில் அது செய்யப்பட்ட கம்பெனி விலாசம். உற்றுப்பார்த்தேன்.
                    தூக்கிவாரிப்போட்டது.
                    ஏதோ கம்பெனி பெயர் போட்டு, 'Town Hall Road, Madurai" என்று எழுதியிருந்தது.
                    கடைக்காரன் தொடர்ந்தான், "துவான், இதை இருபது வெள்ளிக்கு விற்கிறேன். உங்கள் ஊர் சரக்கு என்பதாலும் நீங்கள் எங்களிடம் ரொம்பவும் அன்புகாட்டுகிறீர்கள் என்பதாலும் அசல் விலைக்குக் கொடுக்கிறேன். பதினைந்தே வெள்ளிதான்.
                    தூக்கிவாரிப்பொட்டது.
                    ஈராயிரம் மைல்களுக்கப்பால், வேறொரு நாட்டின் இன்னொரு மூலையில், காட்டுக்கு நடுவில், அத்துவானப் பிரதேசத்தில், வெள்ளத்தின் நடுவே, மதுரையில் செய்த டிரான்ஸிஸ்டர் ரேடியோவை இப்படித்தான் வாங்கினேன்.
                    அதுவும் பதினைந்தே வெள்ளிக்கு.
                    விசித்திரமானது.....
                    இந்த வாழ்க்கையின் நடப்பு.

அன்புடன்

ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$



RETURN TO MAIN MENU