பலவீனம் என்று நாம் நினைக்கும் விஷயங்கள்தாம் உண்மையான பலமாகிவிடுவதும் உண்டு. இதனை எத்தனையோ முறைகள் நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அன்றும் சரி; இன்றும் சரி. அது அப்படித்தான். இணையத்திலும் அப்படித்தான்.
இருபதாண்டுகளுக்கு மேலாகின்றன. அப்போது நான் கோத்தா பாரு என்னும் நகரத்தில் அரசு மருத்துவனாக இருந்தேன். அங்கே பல சித்தாந்திகளையும் சந்திக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டது.
அவர்களில் ஒருவர் ஷாஓலின் என்னும் நுட்பப்போரியலில் பயிற்சியுடையவர்.
அவர்களுடைய மரபில் வழங்கும் சம்பவம் ஒன்றை ஒருமுறை சொன்னார்.
ஓர் இளைஞன். அவனுக்கு துவந்த நுட்பப் போர்முறையைக் கற்றுக்கொள்ள ஆசை. அதற்காக அவன் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று ஒருநாள் ஒரு விபத்தில் அவனுடைய இடதுகை துண்டாகிவிட்டது.
ஒற்றைக் கையை வைத்துக்கொண்டு எப்படி துவந்தப்போர் கற்றுக்கொள்வது? இருப்பினும் விடாமல் பல போராசிரியர்களைச் சென்று பார்த்தான்.
அவர்களில் ஒருவர் மட்டும் அவனுக்குப் பயிற்சி கொடுத்தார். ஒதுங்குவது, விலகுவது, இடறுவது, பாய்வது, பதுங்குவது, பின்னடைவது போன்றவற்றையெல்லாம் சொல்லிக்கொடுத்தார். ஆனால் பிடிகள் அடிகள் வகையில் ஒரே ஒரு முறையை மட்டுமே சொல்லிக்கொடுத்தார். அதனையே திருப்பித் திருப்பிச் செய்யச்சொன்னார்.
அந்த சீடன் பலமுறை ஆசிரியரிடம் கேட்டுவிட்டான். ஆனால் அந்த ஸின்ஸெ - அப்படித்தான் அந்த ஆசிரியர்கள் அழைக்கப்படுவார்கள் - வேறு பிடிகளோ அடிகளோ சொல்லிக்கொடுக்கவில்லை. அந்த ஒரே பிடியை மட்டுமே தினசரி பலமுறை பயிற்சி செய்யவைத்தார்.
சீடனுக்கு ஒரே வருத்தம்.
ஆனாலும் என்ன செய்வது?
வாத்தியார் சொல்லித்தந்தால்தானே கற்கலாம்?
ஏழாண்டுகள் அவ்வாறு பயிற்சி பெற்றான்.
பயிற்சியின் முடிவில் ஒரு பெரிய போட்டிக்கு சீடனை அழைத்துச்சென்றார் ஸின்ஸெ.
முதல் வட்டத்தில் நடந்த முதல் போட்டியில் ஒதுங்கியும் பதுங்கியும் பாய்ச்சல் காட்டியும் புள்ளிகள் கணக்கில் வென்றான்.
இரண்டாம் வட்டத்தில் ஒதுங்கல் பதுங்கல் பாய்ச்சலுடன் இடறிவிட்டு எதிரியை வீழ்த்தி வென்றான்.
கடைசி வட்டத்துக்கு வந்துவிட்டான்.
அவனுடன் மோதவிருந்தவன் பயங்கர ஆகிருதியுடன் இருந்தான். அடித்தால் குறி தவறாது. பலமான அடி. அவனிடம் அடி வாங்கியவன் யாரும் எழுந்திருக்கமுடியவில்லை. அப்படிப்பட்டவன்.
போட்டியின் நடுவர் இதனைப் பார்த்துவிட்டு, அந்த பயங்கரனுடன் ஒற்றைக்கரனை மோதவிடக்கூடாது என்று எண்ணி, போட்டியை நிறுத்த முயன்றார்.
ஆனால் ஸின்ஸெயோ போட்டி நடந்தாகத்தான்வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
ஒற்றைக்கையன் போட்டி வட்டத்திற்குள் சென்று நின்றான். எதிரியும் வந்து நின்றான்.
ஒருவருக்கொருவர் குனிந்து வணங்கிவிட்டு போட்டியை ஆரம்பித்தனர்.
என்ன முயன்றும் பயங்கரனால் ஒற்றைக்கரனை அடிக்கவே முடியவில்லை. அத்தனை அடிகளிலிருந்தும் ஒதுங்கிக்கொண்டேயிருந்தான். எந்த எற்றலும் உதையும் வேலை செய்யவில்லை.
கடைசியில் எதிரி மிகவும் களைத்துப்போனான்.
அப்போது ஸின்ஸெ சற்று ஜாடை காட்டினார். உடனே சீடன் ஸின்ஸெ தனக்குக் கற்றுக்கொடுத்தருந்த அந்த ஒரே பிடியைப் போட்டுவிட்டான்.
எதிரி சற்று குழப்பமுடன் விதிர்விதிர்த்து நின்றான். அப்போது அந்தப் பிடியை இறுக்கிவிட்டு, எதிரியை இடறி வீழ்த்தினான்.
ஜெயித்துவிட்டான்.
அந்தப் போரியல் போட்டியின் பெருவீரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்த சமயம் ஸின்ஸெயிடம், தான் வெற்றி பெற்றது எப்படி என்று கேட்டான். அதே சமயம் ஏன் மற்ற பிடிகளும் அடிகளும் சொல்லிக்கொடுக்கவில்லை என்றும் கேட்டான்.
ஸின்ஸெ சொன்னார், "எந்தப் பிடிக்கும் அடிக்கும் மாற்று அடியும் பிடியும் உண்டு. ஆனால் நான் உனக்குச் சொல்லிக்கொடுத்த பிடியைத் தடுக்க ஒரே ஒரு வழிதான் உண்டு.
அதற்கு எதிரி உன்னுடைய இடது கையை பிடித்து மாற்றுப்பிடி போடவேண்டும்".
சீடன் அதிர்ந்துபோய் ஸின்ஸெயைப் பார்த்தான்.
ஸின்ஸெ மென்மையாகப் புன்னகைத்துக்கொண்டிருந்தார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$