சிலசமயங்களில் சினிமாவுக்கு என சில விசேஷ மொழியைக் கண்டுபிடிப்பதும் உண்டு. சம்ஸ்கிருதம் போல் தோன்றும் ஒலிகளையும் சொற்களையும் போட்டு, அவ்வாறு தோன்றச் செய்யலாமே.
ரொம்ப காலத்துக்குமுன்னர் "பிழைக்கும்வழி" என்றொரு படம் வந்தது. அதில் டி.எஸ்.துரைராஜ்தான் கதாநாயகன். சரியான con-man ஆக இருப்பார்.
எம். ஆர். சாமிநாதன் என்றொரு நடிகர். இவர் ஒரு போலிசாமியாராக நடிப்பார்.
"ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி" என்னும் படத்தில் இவர்தான் மந்திரவாதியாக வந்து இளவரசி சிந்தாமணியிடம் சொல்லி, தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தலைகளை வாங்கச் செய்வார். "அந்த ஆயிரமாவது தலை என்னாயிற்று" என்று என்னிடம் கேட்காதீர்கள். ஆயிரத்தையும் வாங்கியிருந்தால், கதையே கிடையாதே? அப்புறம் எங்கே சினிமா எடுப்பது? அப்படியானால் "தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது தலை வாங்கிய" என்றல்லவா பெயர் வைத்திருக்கவேண்டும். கேட்பீர்கள். தெரியும். அதையும் கதையை சொன்ன அத்தை பாட்டிகளிடமும், அதை வைத்து படம் எடுத்த ஆசாமிகளையும்தான் கேட்கவேண்டும். ஏன் மந்திரவாதியும் சிந்தாமணியும் ஆயிரம் தலையை வாங்குகிறார்கள் என்றும் கேட்கத் தோன்றும். (தோன்றியிருக்காவிட்டால் இப்போ தோன்றியிருக்கவேண்டுமே?)
அது ஏதாவது மந்திர, ஆகம சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ஏதாவது வக்கரங்கள், சைக்காலஜி என்றோ இருக்கும். அல்லது இரண்டுமே சேர்ந்து ஆகமிக் சைக்கலஜியின் பண்டைய காலக் கலவையாகவும் இருக்கலாம்.
அல்லது இந்தக் காலத்து Horror Series படம் பார்க்கிற ஆசாமிகளாக இருந்தால் "சரிதான்..... அந்த அபூர்வ சிந்தாமணி ஏதோ அந்தக் காலத்து ஸீரியல் கில்லர்போல", என்று நினைத்துக்கொள்வார்கள்.
விஷயத்துக்கு வருவோம்.
"பிழைக்கும் வழி"யில் அந்த போலிசாமியாரிடம் நிறைய தங்கம் இருக்கும். அதனை அவர் தன்னுடைய யோகதண்டத்துக்குள் இருக்கும் ஒரு ரகசிய குழாயில் மறைத்து வைத்திருப்பார். இதனை அறிந்த டி.எஸ்.துரைராஜ் அதனை கிளப்பிக் கொண்டு போக நினைத்து அவரிடம் பவ்வியமாக வந்து சிஷ்யனாகி சரண் அடைவார். அப்போது அவருக்கு ஞானோபதேசமாக சாமிநாதன் சொல்வார்.
"அப்பனே! உனக்கு சம்ஸ்கிருதம் தெரியுமோ?"
"தெரியாது சுவாமி"
"இதைப்பற்றி ஒரு ஸம்ஸ்கிர்த சுலோகம் இருக்கிறது. அதாவது,
பலீன்சடுகுடு திடும்திடும் தடியடிப்ரயோக தலாங்க்ருதம்,
மக்கடாங்க டம்டம் மகரகுண்ட பத்ரம்
புளகாம்போஜ பூம்பூம் பரிமள சந்த்ரோதய ப்ரகாசம்
குஞ்சரம் கும்பேஸ்வரம் கும் அஷ்டகுலபர்வதம் சிஷ்யகுரு சிக்ஷகல்ப்பே!"
இதற்கு எம்.ஆர்.சாமிநாதன் அர்த்தமும் சொல்லிவிடுவார்.
"எவன் ஒருவன் தன் குருவாகப்பட்டவரின் பொருளுக்கு ஆசைப்படாமல்
அவருடைய அன்புக்கும் அருளுக்கும் மட்டுமே பாத்திரமாகிறானோ,
அவன் மலைகளைப்போல நிலைத்து நிற்பான். அத்துடன் அவனுடைய
புகழும் சந்திரோதயப் பிரகாசமாக விளங்கும்"
ஆனால் உற்றுப்பார்த்தால் சம்ஸ்கிருதம்போல் ஒலிக்கும் Gibberish என்பது புலப்படும்.
இதற்கும் இதைவிட சுவாரஸ்யமான sequelae இருக்கு, தெரியுமா!....................................
கெலாந்த்தான் என்னும் மாநிலத்திற்கு 1977-ஆம் ஆண்டில் அனுப்பப்பட்டேன்.
அதுவும் இன்னொரு ரொம்பவும் ஒதுக்குப்புறமான மாநிலம். அப்போதெல்லாம் கோலாலும்ப்பூரிலிருந்து புறப்பட்டால் காரில் வந்து சேர இரண்டுநாட்களாகும். குவாந்த்தான் என்னும் நகரில் இரவு தங்கவேண்டும். மலாயாவின் முதுகெலும்புபோல ஒரு மலைத்தொடர் இருக்கிறது. இதெல்லாம் ராவணனுடைய பழைய லங்கா ராஜ்யத்தைச் சேர்ந்தது என்பார்கள். அந்த மலையினூடே மிக வளைவான குறுகலான ரோடு செல்லும். 'The Bentong Curves' என்று கார் ஓட்டுபவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தும் பாதைகள் போன்றவை நிறைய உண்டு.
கெலந்த்தானின் 'சிந்த்தாமாணி' என்றும் 'சிந்த்தாவாஸெ' என்றும் இரண்டு மலைகள் இருக்கின்றன. அங்குதான் விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் தங்கியிருப்பதாகச் சொல்வார்கள். சிந்த்தாமணி மலையில் நின்றுகொண்டு நினைப்பதெல்லாம் மாயையாகத் தோன்றுமாம். ஏதோ பெரிய குபேர பட்டனத்தில் ஆளும் பேரும் விமானங்களுமாக மாடமாளிகைகளுமாக மிக அழகிய யட்சிணிகள் திரிவதுபோலவும் காட்சிகள் தோன்றுமாம். ஆனால் அதெல்லாமே மாயையான தோற்றங்கள்.
சிலசமயங்களில் காட்டுப்பக்கங்களில் லேண்ட் ரோவர் என்னும் வண்டியில் சென்று கால்நடையாகக் காட்டுப்புறங்களில் நடக்கும்போது பெண்களின் சிரிப்பொலியை நானே கேட்டிருக்கிறேன். புலிகளும் யானைகளும் காண்டாமிருகங்களும் இருக்கும் அந்த
வனாந்திரங்களில் பெண்களின் சிரிப்புப்போல் சிரிக்கும் மிருகங்களேது?
அந்த மாநிலத்தில் கோத்தா பாரு என்பது தலைநகரம். சுமாரான பெரிய ஊர்.
அந்த ஊரில் அப்போது கோயில் இல்லை. கோயில் பன்னிரண்டு மைல் தள்ளி தும்ப்பாட் என்னும் சிற்றூரில் இருந்தது. ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில்.
அந்தக் கோயிலுக்கு செட்டிநாட்டிலிலுள்ள தேனாச்சியம்மன் கோயிலிலிருந்து ஒரு பரம்பரை குருக்கள் பூஜகராக இருந்தார்.
அவருக்கு அம்மன் ஆவேசிப்பதுண்டு.
ஒவ்வொரு மாதமும் கோத்தாபாருவுக்கு வந்து அங்குள்ள இந்துக்களிடமிருந்து கோயில் சந்தா வசூலிப்பார்.
ஒருமுறை அவர் வந்தபோது, பரசுராமன் என்னும் இளைஞர் அருகில் இருந்தார். அவரிடம் இந்த 'திடும் திடும் தடியடி' கதையைச் சொல்லிவிட்டு, "அதை இவரிடம் சொல்வோம். கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்று பார்ப்போம்", என்று சொன்னேன்.
அவரை பஸ்ஸ்டாண்டில் கொண்டுபோய் விடும் வேளையில் காருக்குள் மேற்கூறிய 'திடும் திடும் தடியடிப்ரயோக' சுலோகத்தைச் சொன்னேன்.
"இதற்கு என்ன அர்த்தம்?" என்று கேட்டேன்.
ஆசாமி கொஞ்சமும் அசரவில்லை.
"இந்த இதுன்னா இது? வாஸ்து சாந்தி செய்யறபோது பேரிதாடனம் செய்வா. அப்போ இந்த மந்திரத்த சொல்வா. அர்த்தமெல்லாம் கேட்டேள்ன்னாக்க சொல்லமுடியாதுன்னா. நாங்க சொல்ற மந்த்ரத்துக்கெல்லாம் அர்த்தந் தெரிஞ்சுண்டா சொல்லிண்ட்ருக்கோம்? என்னத்தையோ சடங்கு சாடிக்கை சாங்கியத்த நல்ல விதமா யஜாமானா இருப்பட்டவா திருப்திப்படற மாதிரி செஞ்சுண்டே போயிண்ட்ருக்கறதுதானே முக்கியம்? இதுல அர்த்தம் கேட்டா எப்டி? ஆனா ஒண்ணு... இது அந்த மந்திரந்தான். பேரிதாடனத்துல சொல்ற மந்த்ரந்தான். அதுல சந்தேகமேயில்லைன்னா?" என்றார்.
நான் பரசுராமனைப் பார்த்தேன்.
அவர் அயர்ந்துபோய் பேச்சுமூச்சில்லாமல் இருந்தார்.
நான் சொன்னேன், "நீங்க லேசுப்பட்டவரில்லே, உண்மையிலேயே கைகாரர்".
அதற்கவர் சொன்னார், "அதான்னா. நாம என்னவெல்லாம் தெரிஞ்சுண்ட்ருக்கோம்ங்க்றத ரொம்பவும் காட்டிண்டு அலையப்படாது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில உண்டு. என்ன இருந்தாலும் கற்றது கைமண்ணளவோன்னோ?" என்றார்.
"வாஸ்தவமான பேச்சு. உங்களப்போல இன்னொரு ஆள் இருக்கவேமுடியாது. இந்த மந்திரத்துக்கே வியாக்கியானம் சொல்லிட்டீங்கண்ணாக்க உண்மையிலேயே நீங்க பெர்ர்ரீய்ய ஆள்தான் குருக்கள்வாள்!" என்றேன்.
"அதான் சொல்றென்னா. நாம் ரொம்பத் தெரிஞ்சிண்ட்ருக்கோம்ங்க்ற கர்வம் இருக்கப்படாதுன்னா!", என்றார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$