பின்னங்களின் பின்னல் பாட்டு

கடாரத் தமிழ்
ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee


                பழந்தமிழ்ப்பாடல்களில் பலவகையான சித்துவிளையாட்டுக்களை புரிந்திருக்கிறார்கள் நம் புலவர்கள். உலகில் உள்ள மொழிகளில் வேறெந்த மொழியிலும் இந்த அளவுக்குச் சித்து விளையாடமுடியுமா என்பது சந்தேகமே.
                தமிழில் மேல்வாய் இலக்கம் கீழ்வாய் இலக்கம் என்று எண்களின் வரிசையில் வரும். இவை பின்னங்கள் எனப்படும் Fractions சம்பந்தப்பட்டவை. கால், அரை, முக்கால் போன்றவை.
                இவற்றை வைத்துப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். பார்க்கும்போது ஏதோ அர்த்தமில்லாமல் பின்னங்களை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டு எதையோ யாப்பு அமைத்துப் பாடல்களைப் போல் செய்திருக்கிறார்கள் என்று தோன்றும். ஆனால் அவற்றை உடைத்துப்பார்க்கும்போது அவற்றின் உள்ளர்த்தம் புரியும்.

                தமிழ் எண்களையும் பின்னங்களையும் விஸ்வாக்காம்ப்லெக்ஸில் இன்னொரு கட்டுரையில் காணவும்.

                இப்போது சில பாடல்களைப் பார்ப்போம்.

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது

                இது காளமேகப் புலவரின் பாடல்.
   
முக்காலுக் கேகாமுன் = முக்காலுக்கு ஏகா முன் = பிறவியில் தோன்றிய
இரண்டு கால்கள் வலுவிழந்து, இடுப்பும் பலமற்று, முதுகும் கூனிப்போய்
இரண்டுகால்களுக்குத் துணையாக மூன்றாவது காலாகக் கோல் ஒன்றை
ஊன்றும்வண்ணம் முதுமை ஏற்படுவதற்குமுன்னர்

முன்னரையில் வீழாமுன் = அதற்கு முன் நரை ஏற்படுமுன்பாக

அக்காலரைக்கால்கண்டஞ்சாமுன்= அந்தக் காலர்களாகிய எமதூதுவரைக்கண்டு அஞ்சி கால்கள் நடுநடுங்குமுன்பாக

விக்கி இருமாமுன் = உயிர் பிரியுமுன்னர் விக்கிக்கொண்டு இருமல் ஏற்படுமுன்னர்

மாகாணிக் கேகாமுன்= சுடுகாட்டுக்கு ஏகாமுன்

கச்சி = காஞ்சிபுரத்தில் உள்ள

ஒரு மாவின் = தல விருட்சமாகிய ஒரு மாமரத்தின்

கீழரை = கீழ் இருக்ககூடியவரை

இன்று ஓது = இன்றைக்கே துதி செய்

                இதில் வரக்கூடிய சொற்கள், பின்னங்களைப்(fractions) போல் தோன்றும் சொற்கள்.
அவை எந்த பின்னங்களைக் குறிக்கின்றன என்பதை ்சொல்ல முயல்கிறேன்.

முக்கால் = 3/4
முன்-னரை = 1/2
அக்-காலரைக்கால் = 3/8   
இருமா = 1/10
மாகாணி = 1/16; வீசம் என்று சொல்வார்கள்
ஒரு மா = 1/20
கீழரை = 'கீழ்வாய் இலக்கம்' என்றொருபிரிவு பின்ன வரிசையில் இருக்கிறது.
மேலரை என்பது 1/2 ; கீழரை என்பது கீழ்வாயிலக்க வரிசையில் வரும்.
இன்னும் மிகச் சிறியது. அதனுடைய மதிப்பு என்ன என்பது மறந்துவிட்டது.
கல்வெட்டுக்களை ஆராய்ந்துகொண்டிருந்தபோது இதெல்லாம் அத்துப்படி.

அடுத்த பாட்டை அடுத்துப் பார்ப்போம்.....

இந்தப் பாடலை பாருங்கள்:

காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே

இந்தப்பாடலின் அர்த்தம் என்ன?
            தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யர் தம்முடைய ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விடுகவியை யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்த விடுகவிக்கு யாராலும் ரொம்ப காலமாகப் விளக்கம் சொல்லமுடியவில்லை. அந்தவாறே அது பலகாலமாக உலவிக்கொண்டு வந்திருக்கிறது. எத்தனை நூற்றாண்டுகள் ஆயினவோ தெரியவில்லை.
                இந்தப் பாடலை பிள்ளையவர்களிடம் சொல்லிப் பொருள் கேட்டபோது மிக விரைவாக அநாயாசமாக எளிதாகப் பொருள் சொல்லிவிட்டார்.
                இந்த நிகழ்ச்சியை ஐயரவர்கள் தம் ஆசிரியரைப் பற்றி எழுதியுள்ள வரலாற்று நூலில் காணலாம்.
                அந்த நூலில் பிள்ளையவர்கள் கூறிய பதில் மட்டும்தான் இருக்கிறது.
                அது எப்படி என்று விளக்கப்படவில்லை.
                அக்காலத்தில் காணி, மாகாணி போன்ற பின்னங்கள் வழக்கில் இருந்தன. ஆகையால் அந்தக் கணக்கெல்லாம் அவரவர் ஊகித்து அறிந்துகொள்ளமுடிந்திருக்கும். ஆகவே ஐயரவர்கள்
அந்தக் கணக்கை விளக்காமல் விட்டிருப்பார் போலும்.
   
                பிள்ளையவர்கள் கூறிய பொருளை வைத்து நானே கணக்குப் போட்டு கீழே விளக்கியிருக்கிறேன்..
......

                ஒன்றில் எண்பதில் ஒரு பங்கு 1/80 'காணி' எனப்படும்.
                மேற்கூறிய பாடலில் இருபது முறை 'காணி' வருகிறது. 
                எப்படி என்று பார்ப்போம்......
                ஒவ்வொரு அடியாகக் கணக்கிடுவோம்......

1/80 + 1/80 + 1/80 + 1/80 + 1/80 + (கால்காணி) 1/320 +
1/80 + 1/80 + 1/80 + 1/80 + (முக்கால்காணி) 3/320 +
1/80 + 1/80 + 1/80 + 1/80 + (நாற்காணி) 1/80 + 1/80 + 1/80 + 1/80 +
1/80 + 1/80

20 X 1/80 = 1/4

                கால்!
                கால் காட்டும் கழுக்குன்றமே.
                மோட்ச கதியை அடைவதற்குத் திருக்கழுக்குன்றம் தன்னுடைய காலை அடைக்கலமாகக் காட்டும்.

                இன்னும் கொஞ்சம் இந்த கணக்குப் பண்ணுகிற சமாசாரங்களைப் பார்ப்போம்.

                எண்களின் தமிழ் வடிவங்களை வைத்து சங்கேதச்சொற்களைப்  புனைவதுண்டு.
                சில வசவுச்சொற்கள் அவ்வகையில் உள்ளன.
                'ஏழு அஞ்சு மையன்னா' என்றும் 'ஒண்ணேமுக்கால் தையன்னா'
என்றும் சிறுவர்களின் வசவு சங்கேதச் சொற்கள் இரண்டு இருக்கின்றன.

ஏழுக்குரிய தமிழ் வடிவம் = எ
அஞ்சு = ரு
ஏழு ஐந்து = எரு + மையன்னா - எருமை

ஒன்று = க
முக்கால் = 'ழு' வை ஒத்திருக்கும் வடிவம்

ஒண்ணேமுக்கால் = கழு + தையன்னா - கழுதை   

                இதைப்போன்றே ஔவையார் பாடல் ஒன்று இருக்கிறது.

                கம்பர் ஔவையாரிடம் ஒரு விடுகவி சொல்லி நையாண்டி செய்யப்போய், அந்த அம்மாள் அவரை நோக்கிப்பாடிய வசைக்கவி, அது.

    'ஆரை' என்னும் கீரையை அடக்கி,

    'ஒரு காலடி,
    நாலிலைப் பந்தலடி'

    என்று விடுத்த விடுகவி.

                அதில் வரும் 'அடி' என்னும் சொல்லை இடக்கராக வைத்துக் கூறினார்.
                ஔவையாரிடமா ஜம்பம் சாயும்?

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, - முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

எட்டு = 'அ'
கால் = 'வ'
எட்டேகால் லட்சணம் - அவலட்சணம்
எமன் ஏறும் பரி = எருமைக்கடா
மட்டில் பெரியம்மை - ஜேஷ்டா தேவி என்னும் மூத்த தேவி
வாகனம் - கழுதை
மேல் கூரையில்லா வீடு - குட்டிச்சுவர்
குலராமன் தூதுவன் - குரங்கு

                அந்தக் கடைசி அடியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் உண்டு.

                நீ ஆரைக் கீரையைத்தாண்டா சொன்னாய் அடா!
                'சொன்னாயில்' கடைசி இரு அட்சரங்களை அழுத்தினால் நாயையும் குறிக்கும்.
                'யாரைப் பார்த்துச் சொன்னாய்?', என்ற கேள்வியாகவும் அமையும்.

                'எட்டொருமா எண்காணி மீதிலேறி' செய்யுளுக்கும் சில அகத்திய அன்பர்கள் பொருள் சொல்லச் சொன்னார்கள்.
>>>>>>>>>

எட்டொருமா எண்காணி மீதே இருந்தகலைப்
பட்டொருமா நான்மாவிற் பாய்ந்ததே - சிட்டர்தொழும்
தேவாதி தேவன் திருவத்தியூர் வரதன்
மாவேறி வீதிவரக் கண்டு

                இது கொஞ்சம் கிளுகிளுப்பான சமாசாரம்.

    கொஞ்சம் கணக்குப்போட்டே இதில் உள்ள முடிச்சை விடுக்கவேண்டும்.
    இதனை வடமொழிவல்லார் 'குட்டு' என்று சொல்வார்கள். 'குட்டு உடைப்பது' என்பது இதைத்தான்.

    மல்லுக்கட்டிப் பார்க்கிறேன்.

                முதலில் இதைப் பிடித்துவைத்துக்கொள்ளுங்கள்:

மா = 1/20
காணி = 1/80

எட்டொருமா
8 X 1 X 1/20 = 8/20 அல்லது 2/5

எண்காணி
8 X 1/80 = 8/80 = 1/10 = 2/20

எட்டொருமா எண்காணி
8/20 + 2/20 = 10/20 = 1/2 அதாவது அரை

அடுத்ததுக்கு வருவோம்

பட்டொருமா நான்மா
ஒருமா = 1/20
நான்மா = 4/20

ஆகவே,

1/20 + 4/20 = 5/20 = 1/4 அதாவது கால்

இப்போது பார்ப்போம்...

            சிட்டர்களாகிய பக்தர்களால் தொழப்படும் தேவாதிதேவனாகிய திருவத்தியூர் - திரு + அத்தி + ஊர் - காஞ்சிபுரத்தில் உள்ள அத்திகிரி என்னும் திருப்பதியில் குடிகொண்ட வரதராசப் பெருமாள்(of கஞ்சி வரதப்பா fame) மா ஏறி - யானையின்மீது(மா என்பது யானையையும் குறிக்கும்) வீதியில் உலா வருகின்றான்.
            அப்போது அக்காட்சியைக் கண்ட இளம்பெண்ணொருத்திக்குக் காதல் மேலிட்டு, 'அவள் அரையில் உடுத்தியிருந்த ஆடை நழுவி காலடிக்கு 'டொபுக்'கென்று வந்துவிட்டதே' என்று அங்கலாய்க்கிறார் காளமேகப் புலவர்.

அன்புடன்

ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU