கேட்டால் தருவான்/ள்

பாகம் 1

சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


                ப்ரபத்தி மார்க்கம் எனப்படும் சரணாகதி வழிக்கு முரணாகக் கருதப்படுபவைதாம் எல்லாவகையான சோதிட முறைகளும்.
                அவ்வகையில் பார்க்கப்போனால் மணி மந்திர ஔஷதப் பிரயோகங்கள்கூட விதிக்குப் புறம்பான செயல்கள்தாம்.
                மூவகைக் கர்மாவால் பிறவியும் அதில் இழைந்தோடும் விதியும் நிர்ணயிக்கப் பட்டிருக்கின்றன என்று கொள்ளும்போது, மாற்றமுடியாததை, அசைக்கமுடியாததை ஏன் மாற்றவோ அசைக்கவோ முயலவேண்டும்?
                அதது அப்படி அப்படி அளக்கப்பட்டுவிட்டன என்று கொண்டு அப்படி அப்படியே அததை ஏற்றுக ்கொள்ளவேண்டியதுதானே?
                'சிவனே சரணம் ' என்றோ 'அருகனே காவாய்' என்று கேட்பதுகூட அபசாரமாகி விடுமே. ஏனெனில் 'அதது அவ்வளவுதான்; அப்படி அப்படித்தான்'என்றபின் எது நடந்தாலும் 'அது அப்படித்தான்' என்று எடுத்துக்கொள்ளவேண்டியதுதான் நியதி. அதுதான் உண்மையான பிரபத்தியாகும்.

            'அன்றே என்றன் ஆவியுடன் உடலும் உடைமை எல்லாமும்
            குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ?
            இன்றோர் இடையூறு எனக்குண்டோ? எண்டோள் முக்கண் எம்மானே!
            நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!'

                "என்னை நீ முன்னமேயே ஆட்கொண்டுவிட்டாய். ஆட்கொண்ட அன்றே நீ என்னுடைய ஆவி, உடல், உடமை எல்லாவற்றையும் உனக்கே சொந்தமாக்கிக ்கொண்டுவிட்டாயல்லவா? இன்று எனக்கு ஓர் இடையூறு இருக்கலாமா? எட்டுத் தோள்களை உடைய எம்பிரானே! நான் என்ன செய்வேன்? என் கையில் என்ன
இருக்கிறது? நீ நன்றே செய்தாலும் சரி; பிழைய் செய்தாலும் சரி. நானோ இதற்
கெல்லாம் அதிகாரி?"


               இந்தப் பாடல் பிரபத்தி மார்க்கத்துக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இதே போல அப்பர் பெருமானும் சரணாகதித் தத்துவத்தில் ஆழ்ந்துபோய்ப் பாடியிருக்கிறார்.
ஆனால் அதே சமயம், 'அஞ்சேல் என்னாய்!" என்றும்
தமக்குத் தைரியம் கொடுக்கு
மாறு கேட்டிருப்பார்.


               அனன்யபாவம் எனப்படும் தன்மையை அடையவேண்டியது நியதி. அந்த பரிபக்குவத்தன்மையை அடைவது அரிது. ஆனால் அதுதான் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதை அடையும் வரைக்கும்....?
                'மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்', என்பார்கள்.
                ஆனால் அந்த மனம் செம்மையாகும்வரைக்கும் மந்திரம் செபிக்கத்தானே வேண்டியிருக்கிறது?
                மனம் செம்மையாவதற்காகவும்கூட மந்திரம் செபிக்கவேண்டியிருக்கிறதே!

            திருவாவடுதுறையின் திருத்தாண்டகம் ஒன்று இருக்கிறது. மிகவும் அற்புதமான பாடல்.   அதன்  முதல் பாடல் இது:

            திருவே! என் செல்வமே! தேனே! வானோர்
                செழுஞ்சுடரே! செழுஞ்சுடர் நற்சோதீ! மிக்க
            உருவே! என் உறவே! என் ஊனே! ஊனின்
                உள்ளமே! உள்ளத்தின் உள்ளே நின்ற
            கருவே! என் கற்பகமே! கண்ணே! கண்ணிற்
                கருமணியே! மணியாடு பாவாய்! காவாய்!
            அருவாய வல்வினை நோய் அடையாவண்ணம்
                ஆவடுதண்துறையுறையும் அமரர் ஏறே!

                'அதுவே இதுவே', 'அவனே இவனே' என்று புகழ்ந்துவிட்டு "அருவாய வல்வினை நோய் அடையா வண்ணம் காப்பாற்றுவாயாக" என்று கேட்டுக்கொள்கிறார்.

                இரண்டாவது பாடலில் நேரடியாகவே "ஆற்றேன்; அடியேனை 'அஞ்சேல்' என்னாய்!" கேட்கிறார்.

            மாற்றேன் எழுத்தஞ்சும் என்றன் நாவின்
               மறவேன் திருவருள்கள் வஞ்சநெஞ்சின்
            ஏற்றேன் பிறதெய்வம் எண்ணா நாயேன்    
                எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
            மேற்றான் நீ செய்வனகள் செய்யக்கண்டு
                வேதனைக்கே இடம் கொடுத்து நாளும் நாளும்
            ஆற்றேன் அடியேனை அஞ்சேலென்னாய்
                ஆவடுதண் துறையுறையும் அமரர் ஏறே!

            "உன்னுடைய பஞ்சாட்சரத்தை நான் என் நாவிலிருந்து மாற்றமாட்டேன்; உன் திருவருள்களை மறக்கமாட்டேன்; என் வஞ்சநெஞ்சில் பிற தெய்வங்களை ஏற்றிவைத்துக்கொள்ளமாட்டேன்; உன்னுடைய திருவடிகளை எண்ணுவது அல்லாமல் வேறெதையும் செய்யாத எனக்கு நீ செய்வனவற்றைக் கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து ஒவ்வொரு நாளும் ஆற்றமாட்டாமல் இருக்கும் என்னை 'அஞ்சேல்' என்று சொல்லமாட்டாயா? ஆவடு தண் துறையிலிருக்கும் தேவதேவா!"

                இவ்வாறு இரண்டாம் பாடலிலிருந்து பத்தாம் பாடல் வரைக்கும், 'அஞ்சேலென்னாய், ஆவடுதண் துறையுறையும் அமரர் ஏறே!' என்றே சொல்லிமுடித்திருப்பார்.

                அவருடைய திருத்தாண்டகப் பாடல்களில் மிகவும் அதிகமாகப் புழங்கும் பாடல், 'அரியானை, அந்தணர்தம் சிந்தையானை...' என்னும் 'கோயில் பெரிய திருத்தாண்டக'த்தின் முதல் பாடல். அந்தத் திருத்தாண்டகத்தின் அத்தனை பாடல்களையும் 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே' என்று முடித்திருப்பார்.
                'திருவே என் செல்வமே' திருத்தாண்டகத்தின் பத்தாவது பாடலிலும் அப்பர் பெருமானார்,

            "பிறந்தேன் நின் திருவருளைப் பேசின் அல்லால்
                பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!"

என்று ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.

                அப்பர் பெருமானாரின் முதல் திருப்பதிகம் 'கூற்றாயினவாறு' அதில் ஒவ்வொரு பாடலிலும் 'ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே" என்றே இரைஞ்சுகிறார்.
                தம்முடைய சூலை நோயைத் தீர்த்துத் தம்மை ஆட்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்.
                தாம் இப்பிறவியில் மட்டுமல்லாமல் முற்பிறவியிலும் செய்தவற்றால் சூலை நோய் ஏற்பட்டது; அது வினைப்பயன், விதி என்று அவர் சிவனிடம் Unconditionla surrender செய்துவிடவில்லை.

            'ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்'

என்று கேட்கிறார்.

                இன்னும் கூட குறிப்பாக விஷயத்தை உடைத்துச் சொல்லியேயும் கேட்கவும் செய்கிறார்.

            முன்னம் அடியேன் அறியாமையினால்
                முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
            பின்னை அடியேன் உமக்காளும்பட்டேன்
                சுடுகின்றது சூலை; தவிர்த்தருளீர்!
            தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ
                தலையாயவர் தம்கடனாவதுதான்
            அன்னநடையார் அதிகைக் கெடில
                வீரட்டானத்துறை அம்மானே!

            சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
                தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
            நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
                உன்னாமம் எந்நாவில் மறந்தறியேன்!
            உலந்தார் தலையில் பலி கொண்டுழல்வாய்
                உடல் உள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
            அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில
                வீரட்டானத்துறை அம்மானே!

            உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
                ஒருவர் தலைகாவல் இலாமையினால்
            வயந்தே உமக்காட் செய்து வாழலுற்றால்
                வலிக்கின்றது சூலை தவிர்த்தருள்வீர்!
            பயந்தேயென் வயிற்றின் அகம்படியே
                 பறித்துப் புரட்டியறுத் தீர்த்திட நான்
            அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
                வீரட்டானத்துறை அம்மானே!

                முன்னாளில் என்னுடைய அறியாமை கண்டு கோபம் கொண்டு நான் நலிந்து முடங்கிப்போக, பின்னால் நான் உமக்கே ஆட்பட்டுவிட்டேன். சூலை நோஉ சுடுகின்றது; இதை நீர் இல்லாமல் செய்யும். தன்னை அடைந்தார் வினையைத் தீர்ப்பது அல்லவா உம்முடைய தலைமையான கடன்? அன்னங்கள் நடைபயிலும் அதிகைக் கெடில நதியின் வீரட்டானத்தில் வசிக்கும் தந்தையே!"

                நீர், மலர்கள், தூபம் ஆகியவற்றுடன் உன்னைப் பூசிக்க மறந்ததேயில்லை. தமிழோடு இசை பாடல்களால் உன்னை வழுத்துவதையும் மறந்ததேயில்லை. என்னுடைய நாவில் உன்னுடைய நாமத்தையே எப்போதும் சொன்னதன்றி அதை மறந்ததேயில்லை. காய்ந்த மணடையோட்டில் பிச்சை கொண்டு உழலும் பெருமானே! உடலுக்குள் இருக்கும் சூலை நோயைத் தவிர்த்தருள்வாயாக. தடுமாறித் தத்தளிக்கிறேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே!

                மனைவாழ்க்கையும் பொருளுமே உயர்ந்தவை என்று கொண்டேன். ஏனெனில் என்னைக்காவல் புரியும் தலைவன் இல்லாததால். இனி உமக்காகவே வாழ்கின்றேன். அப்படிச்செய்தால் வலித்துக்கொண்டிருக்கும் சூலை நோயைத் தவிர்த்தருளுவீராக. பயந்தேயென் வயிற்றின் உள்ளே பறித்துப் புரட்டியறுத் தீர்த்திட நான் அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை  அம்மானே!

            இந்தப் பாடல்களில் conditional surrender புலப்படுகிறது அல்லவா?

            நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
            தென்கடம்பைத் திருக்கரக்கோயிலான்
            தன் கடன் அடியேனையும் தாங்குதல்
            என் கடன் பணி செய்துகிடப்பதே!

                "முருகனைப் பெற்றவளாகிய அன்னை பராசக்தியைப் பாகமாகக்கொண்டவன்; தென் கடம்பையிலுள்ள திருக்கரக் கோயிலில் உள்ளவன். அவன் என்னைத் தாங்கி நிற்பதைக் கடமையாகக் கொண்டால் நான் பணி செய்வதையே என் கடனாகக் கொள்வேன்".

GO TO பாகம் 2

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU