கேட்டால் தருவான்/ள்
பாகம் 2
சாக்தஸ்ரீ
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
"அடடா....சின்னப்பிள்ளை....அழுகிறானே,
உமையே! அழும் அந்தப் பிள்ளைக்கு பால் ஊட்டிவிடு. பாவம் சிறுபிள்ளை.....!"
"அடடா......கையால்
தாளம் போடுகிறானே....கை நோகாமல் இருக்க பொன்னால் ஆகிய தாளம் கொடுப்போம்".
"அடடா...வெய்யிலில்
அல்லவா நடந்து போகின்றான். ஏ பூதங்களே....அவனுக்கு பட்டு விதானம் பிடித்துக்கொண்டு
வாருங்கள்...."
கேட்காமலேயே
கொடுத்துக்கொண்டிருந்தவர் சிவபெருமான்.
வாங்கிக்கொண்டிருந்தவர்
திருஞான சம்பந்தர்.
அவரே தம் தேவைக்குக் கேட்டிருக்கிறார்........
அவருடைய தந்தையார் யாகங்கள் செய்வதற்குப் பொருள் தேவைப ்பட்டிருக்கிறது. ஆகவே
இறைவனிடம் கேட்கிறார்.......
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு...?
ஈவது ஒன்று எமக்கிலையேல்
அதுவோ உனது இன்னருள்?
ஆவடுதுறை அரனே!
"இதுதான் என்னய ஆளுற லட்சணமாக்கும்.... எனக்குக் குடுக்குறதுக்கு
ஒனக்கு ஒன்னுமில்லைன்னாக்க.....அதான் ஒன் இனிமையான அருளாக்கும்?
சர்த்தான் ஆவடுதுறை அரனே சர்த்தான்....."
இன்னொரு சமயம் சிவன் தந்த படிக்காசு கலப்படமான பொற்காசாக இருந்தது.
பிடித்துக்கொண்டார்........
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசலில்லையே
"கலப்படமில்லாத காசாகக் குடுய்யா....மாசு இல்லாத மிழலை ஈசரே! ஊரில்
மாசு இல்லை. காசில்தான் மாசு. இது ஒன்றும் ஏசலில்லை. சும்மாதான் கேட்கிறேன்".
ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தியின் அமசம் என்று சொல்வார்கள். அதவைதத்தைப் பூரணமாக
உணர்ந்தவர். பிரம்மத்தில் இருக்கும் நிர்க்குணபிரம்மம், சகுண பிரம்மத்தில்
'சகுணபிரம்மம்' என்பதெல்லாம் மாயை என்று நன்கு உணர்ந்தவர் அவர்.
அத்வைத ஆச்சார்யர்களிலேயே முதன்மை ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கப்படுபவர் அவர்.
இருப்பினும் பாருங்கள்...என்ன செய்திருக்கிறார்?
சகுணப்பிரம்மத்தின் கூறுகளாக விளங்கும் தெய்வங்களின் பேரில் பல துதிகளை இயற்றியிருக்கிறார்.
'Like nobody's business' என்பார்கள் அல்லவா? அந்த
மாதிரி.
'அரி ஓம்' என்று கோவிந்தாஷ்டகம், கனகதாராவிலிருந்து தொடங்கி வரிசையாக யமுனாஷ்டகம்,
கணேச பஞ்சரத்னம், சிவாநந்த லஹரி, சௌந்தர்யலஹரி, காமாட்சியஷ்டகம், மீனாட்சி
பஞ்சரத்னம், லக்ஷ்மிந்ருசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம், You name them,
he sang them...அப்படி.
நிஷ்காம்யமாகப் பாடுவது ஒன்று. காம்யமாகப் பாடுவது இன்னொன்று.
எதுவுமே வேண்டாமல் God for God's sake என்றவாறு
பாடுவது நிஷ்காம்யம்.
ஏதாவது பலனை வேண்டி பாடுவது காம்யம்.
காம்யபலனுக்காகவும் பாடியிருக்கிறார்.
அவருடைய எதிரிகள் ஆபிசார பிரயோகம் செய்யவும், அவர் காலபைரவ அஷ்டகத்தைப்
பாடி பைரவரைத் துணையாக்கிக்கொள்கிறார். இப்போது அது மிகச் சிறந்த பிரயோக மந்திர
தோத்திரமாக விளங்குகிறது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் அவருடைய எதிரிகள் ஆபிசாரமுறைப்படி பிரயோகம் செய்ததால்
அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது அவர் திருச்செந்தூர் முருகனின் பேரில்
'சுப்ரமண்ய புஜங்கம்' பாடினார். அந்த வயிற்றுவலி மறைந்தது.
சரஸவாணியுடன் ஏற்பட்ட விவாதத்தை ஒட்டி அவர் அரசன் அமருகனின் உடலுக்குள் கூடு
விட்டுக ்கூடு பாய்ந்து சென்ற சமயத்தில் அமருகனின் ராணி ஆதிசங்கரரின் உடலை
எரித்துவிட ஆணையிட்டாள்.
அது நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்போது சிஷ்யர்கள் கூப்பிட்டவுடன் ஆதி சங்கரர்
தம்முடைய சொந்த உடலுக்குள் பிரவேசித்துக்கொண்டார். ஆனாலும் ஒரு கை கருகிவிட்டது.
அதை சொஸ்தப்படுத்துவதற்காக லக்ஷ்மிந்ருசிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரத்தைப்
பாடி கையை குணப்படுத்திக்கொண்டார்.
கனகதாரா ஸ்தோத்ரமும் காம்யபலனை முன்னிட்டுத்தானே நாம் பாடிக்கொண்டிருக்கிறோம்.
அபிராமி பட்டர் ஒரு பெரிய ஞானோபாசகர். 'ஸ்வாத்மாராமா' என்ற ஸ்ரீலலிதா சகஸ்ரநாம
மந்திரத்தின் அர்த்தமாக தமக்குள் தாமே ரமித்துக்கொள்பவர். 'சந்த்ரமண்டல
மத்யகா' என்னும் மந்திரத்தின் உள்ளர்த்தப்படி தமக்குள்
பூரணசந்திரபிம்பத்துக்குள் நடுநாயகமாக அம்பிகையை வைத்து யோக பூஜை செய்பவர்.
அவருக்கு லௌகீகமான பொருள்கள் எதற்கு?
இருப்பினும் கேட்டிருக்கிறார். அதுவும் பட்டியல் போட்டு.
"கலையாத கல்வியும் குறையாத செல்வமும் கபடுவராத நட்பும்............'என்று
ஆரம்பித்து "இதை யெல்லாம் தடையேதுமில்லாமல் எனக்குத் தருவாய் அபிராமியே" என்று
கேட்கிறார்.
"எலேய் பட்டா! இதுக்கெல்லாம் உனக்குக் கொடுப்பினை இல்லை. இந்த ஜன்மத்தில் கிடைக்காது.
சொம்மா கம்னு கெட நய்னா", என்று அபிராமி சொல்லவில்லை.
அவளுக்குப் பழைய கதையன்று தெரியும். வித்யாரண்யர் மகாலட்சுமியிடம் பொன் கேட்ட
கதை. பாய்க்குள் பாய்ந்தால் கோலத்துக்குள் பாய்ந்துவிடுவார்களே!
சுந்தரரும் அப்படித்தான். பட்டியலிட்டே சிவனிடம் வாங்கிவிடுவார்.
மண்ணுலகும் விண்ணுலகும் உன்னதே ஆட்சி
மலையரயன் பொற்பாவை சிறுவனையும் தேறேன்
எண்ணிலி உன் பெருவயிறன் கண்பதி ஒன்றறியான்
எம்பெருமான் இது தகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணென என் உடல்விருத்தி தாரீரேல் ஆகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்கவேண்டா
கடல்நாகைக்காரோணம் மேவ்யிருந்தீரே
"மண்ணும் விண்ணும் உன்னுடைய ஆட்சியில் உள்ளவை. ஆகவேதான் மலமகளின் மகனாகிய
முருகனையும் நான் வேண்ட வில்லை. எண்ணில் அடங்காமல் உண்ணும் பெருவயிறனாகிய
கணபதியோ ஒன்றும் அறியமாட்டான்".
"நீ ஒன்றும் எனக்குக்கொடுக்கவில்லையென்றால், இது தகுமோ? என் உடல் விருத்தி
அடையும்வண்ணம் எனக்கு வேண்டுவன தரவில்லையென்றால் உன்னுடைய திருமேனி வருந்தும்
அளவுக்கு உன்னைத் திருகி வளைத்துவிடுவேன். அப்புறம் நாளைக்கு நீ என்னை
"கண்ணறையன், கொடும்பாடன்" என்றெல்லாம் திட்டக் கூடாது. கடற்கரையிலுள்ள நாகைப்பட்டினத்தின்கண்
உள்ள திருநாகைக்காரோணத்து ஈசரே!"
மறிஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர்
மாநிதியம் தருவனென்று வல்லீராய் ஆண்டீர்
கிறிபேசிக்கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள்
கிறியும்மாற்படுவேனோ திருவாணை உண்டேல்
பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர்
பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருளவேண்டும்
கறிவிரவு நெய்ச்சோறு முப்போதும் வேண்டும்
கடல்நாகைக்காரோணம் மேவியிருந்தீரே
"பெரும் நிதிகளெல்லாம் தருவேன் என்றெல்லாம்
சொல்லி வலிந்து என்னை ஆட்கொண்டீரே> பொய்யைப்புரட்டைச்சொல்லி
கீழ்வேளூருக்குள் சென்று புகுந்துகொண்டீர். நீர் சொன்ன
பொய் பரட்டுக்கெல்லாம்
நான ஆட்படுவேனோ. நீர் மட்டும் ஆணையிட்டால் அருமையான
மேலாடைகள் சொர்ணபுஷ்பம் என்னும் பொற்பூ, ஆபரணங்கள், கறிவிரவிய
நெய்ச்சோறு மூன்றுவேளையும் எனக்கு வேண்டும். தருவீராக,
ஐயா நாகைப ்பட்டினத்துக் காரோணத்தாரே!
இல்லையென்றால் திட்டிவிடுவார். "மகத்துள் புக்கதோர் சனி",
"அது இது", "வாழ்ந்துபோதீரே" என்றெல்லாம் பாடிவிடுவார்.
வாங்கி வாங்கிப் பழக்கமாச்சா? அடுத்தவனையும்
அனுப்பிவிடுவார்.
"டோய், ஏண்டா கண்ட பயலிடமெல்லாம் போய் அது
இதுன்னு
கேட்கிறாய்? கொடுக்க மாட்டாத பயலயெல்லாம் போயி 'பாரி'ன்னு
சொன்னாலும் அவனுஹளெல்லாம் கொடுக்கப்போறதில்ல. கொடுக்கப்பொறதேயில்ல.
கொடுக்கமாட்டான். ஒனக்குக் கெடைக்காது. கெடைக்காது. கெடைக்கவேமாட்டாது.
மிடுக்கிலாதானை வீமனே விறல்
விசயனே வில்லுக்கிவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியே என்று
கூறினும் கொடுப்பாரி இலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணியன் புக
லூரைப் பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு
யாதும் ஐயறவில்லையே
கொடுக்கறவன் ஒத்தன் இருக்கான். தோ பாரு... அங்கால..... திருப்புகலூர்னுட்டு
கோயில்ல ஒர்த்தன் இருக்கான்ல... அவங்கிட்ட போயி கேளுபா. அவன் குடுப்பான்.
வாங்கிக்க".
தம்மையே புகழ்திச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்மையாளரைப் பாடாது எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயறவில்லையே
ஆகவே....'ஆதர்ச இந்து'க்களுக்குச் சற்றும்
பிடிக்காத -
ஆனால் எனக்கு மிகவும் பிடித்த ஓர் ஆசாமி சொன்னதைச் சொல்கிறேன்
-
"கேளுங்கள். கொடுக்கப்படும்".
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU