இன்னொரு சம்பவத்தையும் எழுதவேண்டும்.
இது காளிதாசன் சம்பந்தப்பட்டது.
இதை எட்டாண்டுகளுக்கு முன்னர் தமிழ் டாட் நெட் என்னும் தமிழ் இணையத் தாய்க் குழுவில் எழுதினேன். அந்த மடலெல்லாம் தமிழ் டாட் நெட் ஆவணத்தில் இல்லை.
போஜமன்னன் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றபோது, ஒருவீட்டின் திண்ணையில் சிறார்களுக்கு ஒருவர் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.
அவர் அன்று சொல்லிக்கொடுத்தது நெடுங்கணக்கு எனப்படும் Alphabet.
சமஸ்கிருதத்தின் நெடுங்கணக்கில் வல்லின எழுத்துக்களில் நான்கு வர்க்கம் இருக்கும். ka, kha, ga, gha, pa, pha, ba, bha, என்றவாறு அமைந்திருக்கும்.
சிறார்கள் ஆசிரியர் சொல்லச் சொல்ல 'க'கர வர்க்கத்தைச் சொல்லிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னது போஜனின் மனதில் பதிந்துவிட்டது.
பல சமயங்களில் ஒரு குறிப்பிட்ட Rhythmic pattern- தாளக்கட்டு மனதில் ஏறிக்கொள்ளும்.
போஜனுக்கு அது ஒரு இனிமையான சந்தத்துடன் கூடிய ஒலிக் கோர்வையாகப் பதிந்துகொண்டது.
அந்த மட்டுக்கும் கொடுத்துவைத்தவன்தான்.
அப்படியே அரண்மனைக்கு வந்தான்.
வந்தவாக்கில் அவைப ்புலவர்களை அழைத்துவரச்செய்தான்.
"Ka, kha, ga, gha" இதை ஈற்றடியாக வைத்து ஒரு கவிதை பாடுங்கள்", என்றான்.
தமிழ் மரபுக்கவிதைகளில் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு - பாடலின் கடைசி அடி - அதில்தான் முக்கிய பொருள், வேண்டுகோள், வாழ்த்து, சாபம் போன்றவை பெரும்பாலும் பொருந்தப் பாடியிருப்பார்கள்.
புலவர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்தார்கள்.
மன்னன் ஏறிட்டு காளிதாசனைப் பார்த்தான்.
எதிர்பார்ப்பும், அடுத்து ஏளனமும், அடுத்து ஏமாற்றமும் அந்தப் பார்வையில் கெலெய்டோஸ்கோப் போன்று மாறி வந்தன.
"மன்னவா! கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். சொல்கிறேன்", என்று உத்தரவு வாங்கிக்கொண்டு திரும்பினான்.
தெருவில் யோசித்துக்கொண்டே நடந்துகொண்டே போனதில் மாலை நேரம் ஆகிவிட்டது.
தெருவில் எதிர்த்தாற்போல சிறுமி ஒருத்தி வந்தாள்.
மிக அழகிய சிறுமி. குறுகுறுத்த பார்வையும் துறுதுறுத்த செய்கையும் குறும்புச்சிரிப்பு குமிழும் உதடுகளும் துடிப்பான நடையுமாக அவள் சிட்டாக வந்தாள். அவை அவளுக்கே உரியவை. தனித்தன்மை பொருந்தியவை.
அவள் எப்போதும் அப்படித்தான் வருவாள். அந்தக் குறும்புச்சிரிப்பு, குமிழ்சிரிப்பு - அவளுடையது ஒரு தனித்தன்மை பொருந்தியது. அதுவும் அவளுக்கே அது உரியவது என்றேன் அல்லவா. அதை விவரிக்கவும் இயலாது. வார்த்தைகளுக்குள் அது கட்டுப்படவும் மாட்டாது. அவளே கட்டுப்படமாட்டாளே, அவள் சிரிப்பு என்னத்தை எங்கே கட்டுப்படப்போகிறது.
அதெல்லாம் பார்த்தும் கேட்டும் அனுபவித்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அல்லவா?
அவளைப் பார்த்தவுடன் அவளிடம் ஏதாவது பேசவேண்டும் என்று காளிதாசனுக்குத் தோன்றியது.
அவள் அருகில் நெருங்கி, குனிந்து காளிதாசன் கேட்டான்.....
"கா த்வம் பாலீ?"
(குழந்தை.....நீ யார்?)
'குலுக்'கென்ற சிரிப்பு.
"காஞ்சனமாலா".
"கஸ்யா புத்ரி?"
(யாருடய மகள்?)
"கனகலதா ய:"
(கனகலதா)
"ஹஸ்தே கிம்தே?"
(கையில் இருப்பது என்ன?)
"தாலீ பத்ரம்"
(பனை ஓலை)
"காயா லிக்தி?"
(என்ன எழுதியிருக்கிறது?)
களுக் என்ற சிரிப்பு
"Ka, kha, ga, gha!".
ஓடிவிட்டாள்.
காளிதாசன் வீட்டுக்குப்போகவில்லை.
நேரே அரண்மனை.
போஜனுக்கு முன்னே நின்றான்.
அவனுக்கும் அந்தச் சிறுமிக்கும் இடையே நடந்த உரையாடலை அப்படியே கூறினான்.
"காத்வம் பாலீ, காஞ்சனமாலா
கஸ்யா புத்ரி, கனகலதாய:
ஹஸ்தே கிம்தே, தாலீ பத்ரம்
காயா லிக்தி, Ka, kha, ga, gha!"
அதுவே ஒரு கவிதையாகவும் ஆயிற்று. அதில் போஜமன்னன் கொடுத்த ஈற்றடியும் அடங்கிவிட்டது.
அவள் எடுத்துக்கொடுக்கிறாள்...தொடுக்கத் தொடுக்க வருகிறது.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$