கலைச்சி
வசையும் வாழ்த்தும்

தமிழடியார் சீர் பரவுவார்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


    கலைச்சி சமாசாரம் என்ன என்று இப்போது யோசிப்பீர்கள்.
    நீங்கள் கேட்பதற்கு முன்னாலேயே அந்த வசைப்பாடலையும்  எழுதிவிடுகிறேன்.

    பாடல்களில் வசைப்பாடல், வஞ்சப்புகழ்ச்சிப்பாடல், நையாண்டிப்பாடல் போன்றவை இருப்பது பலருக்குத் தெரியும். அறம் பாடுதல், வாழ்த்திப்பாடுதலும் கேள்விப்பட்ட விஷயங்கள்தாம். ஒரு பாடலைப் பாடியபின்னர் அதனை வெட்டிப்பாடுதல் பற்றியும் கேள்விப்பட்ட விஷயம்தான்.
    அதற்கு ஓர் நல்ல உதாரணம் 'கலைச்சி சமாசாரம்'.

    காளமேகப்புலவர் இஞ்சிகுடி என்னும் ஊருக்குச் சென்றிருந்தார். அக்காலத்தில் அந்த வட்டாரத்திலேயே மிகப ்பிரபலமானதொரு தாசி அவ்வூரில் இருந்தாள். கலைச்சி என்னும் பெயர் படைத்த அவளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பி , காளமேகம் அவளுடைய வீட்டிற்குச் சென்றார். ஆனால் அவளோ அவரை அலட்சியப்படுத்திவிட்டார் ஆகவே அவள்மீது வசை கவி பாடிவிட்டார்.

ஏய்ந்த தனங்கள் இரண்டும்இரு பாகற்காய்
வாய்ந்தஇ டை செக்குலக்கை மாத்திரமே - தேய்ந்தகுழல்
முக்கலச்சிக் கும்பிடிக்கும் மூதேவியாள் கமலை
குக்கலிச்சிக் கும்கலைச் சிக்கு.

    முதல் அடிக்கு விளக்கம் தேவையில்லை. பாகற்காய் சிறு சிறு முடிச்சுகளுடன் இமேடு பள்ளமாய் பல மேடு பள்ளங்களுடன் இருக்கும். அவற்றை அவளுடைய மார்பகங்களுக்கு உவமையாகச் சொல்கிறார்.
டையை உடுக்குக்கு உவமை சேர்ப்பது வழக்கம். அது நடுவில் சிறுத்தும், மேலும் கீழும் பெருத்தும் இருக்கும்.
ஆனால் செக்கின் உலக்கையோ அடியும் முடியும் சிறுத்து, நடுவில் பெருத்திருக்கும்.
இருப்பதோ குறைவான கூந்தல்; அதிலும் மூன்று கலம் சிக்குப் பிடித்திருக்கிறது. கலம் என்பது ஒரு அளவை. படியைவிடப் பெரியது.
மூதேவியாகிய கலைச்சி இத்தகைய தன்மைகளையுடையள்.
அவளை யார்தான் விரும்புவார்கள்?
திருவாரூரில்  உள்ள பெரிய தெப்பக்குளமாகிய கமலாலயத்தின் கரையில் சுற்றித் திரியும்  நாய்தான் விரும்பும். குக்கல் என்றால் நாய்.


    அம்பிகையின் அருளால் ஆசுகவியாக விளங்கும் காளமேகத்திடம் இப்படிப்பட்ட சாபத்தைப் பெற்ற கலைச்சி, அவரிடம் பெரிதும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். அவருக்கும் இணங்கினாள்.
    
    பின்னர் தாம் முதலில் பாடியதை வெட்டிப்பாடிவிட்டார்.

நஞ்சுகுடி கொண்டகணை நாலுந் தெரிந்துமதன்
இஞ்சிகுடி தன்னினும்வந்து எய்வானோ - விஞ்சு
முலைச்சிகரத் தால்அழுத்தி முத்தமிட்டுச் சற்றே
கலைச்சிகரத் தால்அணைத்தக் கால்.

மன்மதன் நால்வகையான விஷம் கலந்த பாணங்களையும் வைத்திருக்கிறான்.  
அவற்றுள் தகுந்தவையாக அவன் தேர்ந்தெடுத்து இஞ்சிகுடி
என்னும் இந்த ஊருக்கும் வந்து எய்துவிடுவானோ? எய்யமாட்டான்.
அவற்றிற்குத் தேவையேயில்லை. காமச்சுவையின் உச்சத்தை அடைய
அவையெல்லாம் வேண்டியதில்லை. தன்னுடைய மலையை ஒத்த பருத்த
மார்பகங்களை வைத்து அழுத்திக்கொண்டு, கைகளால் அணைத்து,
கலைச்சி முத்தமிட்டாலேயே போதுமே.மாறனின் கணைகளும் தோற்றுப்
போய்விடும்.

    பார்த்தீர்களா! பாகற்காய் மலையாகி விட்டது.

அன்புடன்
ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU