பேரறிஞர் அண்ணா ஒருமுறை வதந்திகள் எப்படி உருவாகின்றன, செய்திகள் எப்படி உருமாறிப் போகின்றன என்பதைப் பற்றி ஒரு கூட்டத்தில் விளக்கினார்.
அதுதான் 'கந்தசாமி காக்காய் காக்காயாய் வாந்தியெடுத்த கதை'.
கந்த சாமி ஒரு வீஐப்பி.
ஒருநாள் கொஞ்சம் புளிச்ச ஏப்பம் விட்டிருக்கிறார்.
உடனே அங்கிருந்த அணுக்கத்தொண்டர்கள் அனைவரும் பதறிப் போய்விட்டனர்.
செய்தி உடனே பரவலாயிற்று.
முதலாவது ஆசாமி இன்னொருவரிடம், "நம்ம கந்தசாமியண்ணன் இன்னைக்கு எதுக்களிச்சுக்கிட்டிருந்தார். என்னத்தைச் சாப்பிட்டாரோ என்னமோ?"
அதைக் கேட்டவர் வேறொருவரிடம், "கந்தசாமியண்ணனுக்கு முடியல போல. அவுஹ வந்தியெடுத்துப்பிட்டாஹ"
அந்த வேறொருவர் மற்றொருவரிடம்,"எலெ, ஒனக்கு வெசயந் தெரியுமாலெ. நம்ம கந்தசாமியண்ணன் இருக்காஹள்ல. அவுஹ இன்னிக்கு வாந்தியெடுத்தாஹளாம். கறுப்புக ்கறுப்பா இருந்துச்சாம்ல".
மற்றொருவர் அடுத்தவரிடம், "ஏங்கிறேன்? வெசயம் ஒண்ணு தெரியுமாங்கறேன். அம்ம கந்தசாமியண்ணே காக்கா மாதிரி கறுப்பா வாந்தியெடுத்தாங்களாம்".
அடுத்தவர் பக்கத்திலுள்ளவரிடம் சொன்னார், "ஏடோ, சேதி கேட்டோ! நம்ம சேட்டன் கந்தசாமி பத்தின சேதி கேட்டோ! ஆயாள் காக்காய் காக்காயா வாந்தியெடுத்தல்லோ!"
கடைசியில் கந்தசாமி காக்காய் காக்காயாக வாந்தியெடுப்பதில் முடிந்தது.
Chinese Whisper என்றொரு சங்கதி இருக்கிறது. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சரி.......அதையும் சொல்லிவிடுகிறேன்.
சீனத்துக் கிசுகிசுப்பு
இதை ஆங்கிலத்தில் 'The Chinese Whisper Phenomenon' என்று குறிப்பிடுவார்கள்.
இது ஒரு விளையாட்டு.
பெரியவர்கள் பார்ட்டிகளில் விளையாடுவதுண்டு.
இதை நிர்வாகவியல் பயிற்சிகளிலும் தகவல்துறையியல் சம்பந்தங்களிலும் காணலாம்.
பத்துப ்பேரைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள்.
கூட்டத்தினர் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையில் ஒரு பாராகிராஃப் சமாச்சாரம் எழுதிக ்கொடுத்திருப்பார்கள்.
அறைக்கு வெளியில் பத்துப்பேரையும் தனித்தனியாக நிற்க வைத்து விடுவார்கள்.
முதல் ஆளிடம் அட்டையில் உள்ள சமாச்சாரத்தைப் படித்துக் காட்டுவார்கள். மற்றவர்களுக்கு இது தெரியாது.
முதல் ஆள் இரண்டாம் ஆளிடம் தம்மிடம் படிக்கப்பட்டதை ரகசியமாகச் சொல்லவேண்டும்.
இரண்டாம் ஆசாமி தாம் முதல் ஆசாமியிடம் கேள்விப்பட்டதை மூன்றாம் ஆசாமியிடம் கிசுகிசுப்பாகச் சொல்லவேண்டும்.
பிறகு, இரண்டாம் ஆசாமி அறைக்குள் வந்து தாம் கேள்விப் பட்டதைச் சொல்வார்.
மூன்றாம் ஆசாமி நான்காம் ஆசாமியிடம் தாம் இரண்டாம் ஆசாமியிடம் கேட்டத்தைச் ரகசியமாகச் சொல்வார். பிறகு அறைக்குள் வந்து ஒப்பிப்பார்.
நான்காம் ஆசாமி ஐந்தாம் ஆசாமியிடம் ரகசியமாகத் தாம் மூன்றாம் ஆசாமியிடம் கேட்டதைக் கிசுகிசுப்பாகச் சொல்வார். பிறகு அறைக்குள் வந்து சொல்வார்.
இப்படியே பத்தாவது ஆசாமிவரைக்கும் நடக்கும்.
ஒரு செய்தி எப்படியெல்லாம் உரு மாறுகிறது என்பதை நாம் பிரத்யட்சமாகப் பார்க்கலாம்.
வதந்தி எப்படி செவிவழிச் செய்தியாக உருமாறி வழங்கமுடியும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
Gossip என்னும் பொரணி, அரட்டை முதலியவற்றின் மூலம் தகவல்கள் உருமாறுவதும் Chinese Whisper தன்மையில்தான் பல சமயங்களில் நடைபெறும்.
செட்டிநாட்டுப் பக்கத்தில் 'பொரணி சொல்வது' என்பது ஒரு பொழுதுபோக்கு. இது அரட்டை, கோள், புனைசுருட்டு, வத்திவைத்தல் போன்ற விஷயங்களின் கலவை.
யாராவது யாரையாவது பற்றிப் பொரணி சொல்வார்கள்.
"இன்ன இவ இப்பிடியெல்லாம் செய்தாளாக்கும்", என்பது முதல் கூற்று.
இந்த விஷயத்தை யாராவது மிகவும் கடமையுணர்வு, விசுவாசம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட 'இன்ன இவளிடம்' போய் சொல்லிவைப்பார்கள்.
அந்த சம்பந்தப்பட்ட 'இன்ன இவ', தன்னுடைய ஆட்பெரும் படையோடு ஆயுத சன்னத்துக்களோடு ஆஜராகி, "எவடி அந்த *&$ச் சிறுக்கி சொன்னவ?" என்று கேட்கும்படி ஆகும்.
'ஆயுத சன்னத்து' என்பது 'வெளக்குமாறு, சீக்கிலிக்கட்டை' என்று குறிப்பிடப்படும் ஆயுதங்களாக இருக்கும்.
"அட, நா எங்க சொன்னேன்? அவுஹ அவுஹ அப்பிடி அப்பிடி பேசுவாவஹளோன்னு பேச்சு அடிபட்டுச்சூன்னுட்டு... அப்டீன்னுட்டுல்ல சொன்னேன்?"
இதுதான் உத்தி.
இந்த உத்தி மிகவும் பழமையானதாகத் தென்படுகிறது.
பஃறுளியாற்றங்கரைலேயே இது வழக்கில் இருந்திருக்கும்போல.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$