கண்டசுத்தி #1
கொங்கு தேர் வாழ்க்கை
பாகம் 2
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
அந்தவேளையில் ஆதிசைவரில்
வந்த மாணவன் மணஞ்செய் வேட்கையான்
முந்தையாச்சிம முயலும் பெற்றியான்
தந்தை தாயிலான் தருமி யென்றுளான்
அந்தச் சமயத்தில் மதுரையில்
ஆதிசைவ குலத்து இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
அவன் தாய் தந்தையை இழந்தவன். மாணவன். பிரம்மச்சாரி. அவனுக்குத் திருமணம் செய்து
கொள்ளவேண்டும் என்ற விருப்பம் அதிகமாக இருந்தது.
ஒருவ நான்முகத் திருவன் மார்புறை
திருவனாடருந் தேவனாலுரு
அருவ நாலகன்றானைத் தன்கலி
வெருவ நாடி முன் வீழ்ந்து வேண்டுவான்
அவன் திருக்கொயிலுக்குச்
சென்று ஆலவாய்க் கடவுளின் முன் தரையில் வீழ்ந்து வணங்கி வேண்டினான்:
'தந்தை தாயிலேன், தனியனாகிய
மைந்தனேன், புது வதுவை வேட்கையேன்
சிந்தை நோய்செயும் செல்லல் தீர்ப்பதற்கு
எந்தையே இது பதன்' என்றேத்தியே
நெடிய வேத நூல் நிறைய ஆகமம்
முடிய ஓதிய முறையில் நிற்கெனும்
வடுவில் இல்லற வாழ்க்கை யின்றி நின்
அடி அருச்சனைக்கு அருகன் ஆவனோ?'
ஐய யாவையும் அறிதியே கொலாம்
வையை நாடவன் மனக்கருத்துணர்ந்து
உய்யவோர் கவி உரைத்தெனக் கருள்
செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்
"என் தந்தையே! நான் தாயும் தகப்பனும் இலாதவன்.
அனாதையாகிய தனியன். புதுமணம் செய்யும் வேட்கையுடையவன். ஆனாலும் பொருளில்லை.
எத்தனைதான் நெடிய வேத நூல், நிறைய ஆகமம், எல்லவற்றையும் முழுமையாக ஓதியவனாக இருந்தாலும்
இல்வாழ்க்கையில்லாதவனாக இருப்பின் பெருமானை அருச்சிப்பதற்கு அருகதையுடையவனாக
இருப்பேனோ? ஆகையால் ஐயனே, எல்லாம் அறிந்தவர் நீர்; வையை நாடனாகிய பாண்டிய
மன்னனின் மனக்கருத்து உணர்ந்து அதை அடக்கி ஒரு கவிதை சொல்லி எனக்கு அருள்
செய்",
என்று கெஞ்சினான்.
தென்னவன் குலதெய்வமாகிய
மன்னர் 'கொங்குதேர் வாழ்க்கை' யின்றமிழ்
சொன்னலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்
பாண்டியர்களுக்குக் குலதெய்வமாகிய
ஆலவாய் சுந்தரனாகிய இறையனார் உடனேயே,
ஒரு பாடலை எழுதித் தந்தார்.
"கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ!
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே?"
"கொங்கு எனப்படும் தேன் கலந்த
மகரந்தத்தை தேர்ந்து எடுத்து உண்ணும் வாழ்க்கை
உடைய அழகிய சிறகுகளையுடய தும்பியே, இது கேள்!
நான் கேட்பதற்கு ஏற்றவாறு
நீ என்னுடைய விருப்புகளை மனதில் வைத்துக்கொண்டு உபசாரமாகச் சொல்லாமல் நீ கண்டதை
- உண்மையை மட்டுமே சொல்வாயா?
பிறவிகள் தோறும் நெருங்கிப்பழகும்
நட்பினையுடைய இவள், மயில் போன்ற சாயலை உடையவள்,
நெருங்கிய பல்வரிசையையுடைவளாகிய இவளுடைய கூந்தலைவிட நறுமணம் பொருந்தியதாக நீ
அறிந்த பூக்களில் எதையும் பார்த்திருக்கிறாயா?"
பொற்ற நிச்சடைப் புவன நாயகன்
சொற்ற பாடல் கைக்கொண்டு தொல்நிதி
பெற்றெடுத்தவன் போன்று பீடுறக்
கற்ற நாவலர் கழக நண்ணினான்
புதையல் கணடவனைப் போல தருமியும்
அந்தப் பாடலை எடுத்துக்கொண்டு சொக்கேசரை வணங்கிவிட்டு, கற்றுத் தேர்ந்த புலவர்
இருக்குமிடத்தை தமிழ்ச்சங்கத்து மண்டபத்தை அடைந்தான். அங்குள்ள புலவர்களிடம்
கொடுத்தான்.
அனைவரும் வாங்கிப் படித்தனர்.
செய்யுளுடைய அமைப்பையும் போக்கையும் சொல்லழகையும் பொருளாழத்தையும் வியந்து
பாராட்டினர்.
உணர்ந்த கேள்வியார் இவரொ டொல்லைபோய்ப்
புணர்ந்த ஆயிரம் பொன்னும் இன்றமிழ்
கொணர்ந்த வேதியன் கொள்க வின்றென
மணந்த தாரினான் மகிழ்ந்து நல்கினான்
சண்பகமாறனின் முன்னிலையில் அந்தப்
பாடலைக் கூறி பொருள் விளக்கம் செய்தனர்.
"இந்தப் பாடலைக் கொண்டுவந்த
வேதியன் இப்போதே புலவர்களுடன் சென்று ஆயிரம் செம்பொன்னையும் உடனே பெற்றுக்கொள்ளட்டும்",
என்று ஆணையிட்டார் பாண்டியமன்னர்.
வேந்தனேவலால் விபுதர் தம்மொடும்
போந்து மீண்டு அவைப் புறம்பு தூங்கிய
ஆய்ந்த பொற்கிழி யறுக்கு நம்பியை
நேர்ந்து கீரன் 'நில்' என விலக்கினான்
'குற்றம் இக்கவிக்கு' என்று கூறலும்
கற்றிலான் நெடுங் காலம் வெம்பசி
உற்றவன் கலத்துண்ணும் எல்லைகைப்
பற்ற வாடினான் பண்பு பற்றினான்
புலவர்களுடன் தருமியும் சங்கமண்டபத்துக்குச்
சென்று பொற்கிழியை அறுக்க முற்பட்டான்.
அங்கு விரைந்துவந்த கீரன்,
"நில்" என்று தடுத்து, " இக்கவிக்குக் குற்றம் உண்டு" என்றான்.
நெடுங்காலம் பசியுடனிருந்தவனுக்கு
உணவுப் பாத்திரத்தி¢லிருந்து எடுத்து உண்ணும்போது
கையைப் பற்றித் தடுத்த
மாதிரியில் தருமி வாடினான்.
உலர்ந்த நெஞ்சு கொண்டொதுங்கி நாயகன்
நலந்த ருங்கழல் நண்ணினான் அவன்
மலர்ந்த பாடல்கொண்டறிஞர் வைகிடத்
தலர்ந்த சிந்தைகொண்டடைந்த மைந்தனே
"செய்யுள் கொண்டுபோய்த் திருமுன் வைத்துளப்
பையுள் கொண்டவப் பனவன் என்னை நீ
மையுள் கண்ட இவ்வழுவு பாடலைக்
கையுள் நல்கினாய் கதியிலேற்கெனா
வறுமை நோய் பிணிப்பப் பன்னாள் வழிபடு மடியேனின்பால்
பெறுபொருள் இழந்தேன் என்று பேசிலேன்; யார்க்கு மேலாங்
கறைகெழு மிடற்றோய்! நின்றன் கவிக்குற்றம் சில்வாழ்நாள்சிற்
றறிவுடைப் புலவர் சொன்னால் ஆர் உனை மதிக்கவல்லார்?"
எந்தை இவ்விகழ்ச்சி நின்னது அல்லதை எனக்கு யாது என்னாச்
சிந்தை நோயுழந்து சைவச்சிறுவனின் றிரங்க யார்க்கும்
பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனுமான
சுந்தரவிடங்கன் அங்கோர் புலவனாய்த் தோற்றம் செய்தான்.
உலர்ந்த நெஞ்சோடு தருமி ஒதுங்கிச்
சென்று பாடல் எழுதப்பட்ட ஓலையுடன் இறைவனின் முன்னிலைக்குச் சென்றான்.
"எம் ஐயனே! குற்றமுள்ள பாடலை
ஏன் தந்தீர்? வறுமையால் வாடுகின்ற நான் என் பொருளை இழந்தேன் என்று கூறுவதற்காக
வரவில்லை. எல்லாருக்கும் மேலான கறைக்கண்டனே! உம்முடைய பாடலும் குற்றமுடையது
என்று சில வாழ்நாட்களையே பெற்ற சிற்றறிவுடைய புலவர் சொன்னால் யார்தான் உம்மை
மதிக்கப்போகிறார்கள்? என் தந்தையே! இந்த இகழ்ச்சி உன்னுடையது அல்லாமல் எனக்கு
ஏது?", என்று முறையிட்டான்.
RETURN TO MAIN MENU