கண்டசுத்தி #1
கொங்கு தேர் வாழ்க்கை
பாகம் 3
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
அந்தக் கணமே ஆலவாய் இறையனார் ஒரு புலவராக அங்கு தோன்றினார்.
மகர கண்டிகை, பதக்கம் மோதிரம், முதலிய ஆபரணங்களை அணிந்து விளங்கினார். விபூதிப்பூச்சு திருமேனியில் துலங்கியது. தான் ஒரு முத்தமிழ் வல்லோன் என்பதைக் காட்டும் வண்ணமாக அவருடைய திருகோலம் அமைந்திருந்தது. திருவடிகளிலே வேதமே பாதுகையாக அமைந்திருந்தது. முத்துக்குடை நிழல்தர, வெண்சாமரை வீச, இளைஞர்கள் அடப்பை, காளாஞ்சி, பூத்தட்டு ஏந்திவர, கற்றுச்சொல்லிகள் பின்வரச் சங்க மண்டபத்துக்குச்சென்றார்.
கண்டிகை மதாணி யாழி கதிர்முடி வயிரம் வேய்ந்த
குண்டலம் குடிகொண்டு ஆகத்து அழகெலாம் கொள்ளைகொள்ளத்
தண்டமிழ் மூன்றும் வல்லோன் தானெனக் குறியிட்டு ஆங்கே
புண்டர நுதலில் பூத்துப் பொய்யிருள் கிழித்துத் தள்ள
விரிகதிர்ப் படாத்திற் போர்த்த மெய்ப்பையுள் அடங்கிப் பக்கத்
தெரிமணிக் கடகத் திண்தோள் இளையவர் அடைப்பையோடும்
குருமணிக் களாஞ்சியம் பொற்கோடிகந் தாங்க முத்தாற்
புரிமதிக் குடைக்கீழ்ப் பொற்காற் கவரிபால் புரண்டு துள்ள
சொல்வரம்பிகந்த பாதம் என்பது தோன்ற வேதம்
நல்ல பாதுகையாய்ச் சூட நவின்றன கற்றுப்பாட
வல்லவர் மறையினாறு மநுமுதற் கலைபோற் பின்பு
செல்ல நூலாய்ந்தோர் வைகும் திருந்தவைக் களத்தைச் சேர்ந்தான்.
ஆரவை குறுகி நேர்நின்று அங்கிருந்தவரை நோக்கி
"யாரை நம் கவிக்குக் குற்றம் இயம்பினார்?" என்னா முன்னம்
கீரன் அஞ்சாது "நானே கிளத்தினேன்", என்றான் நின்ற
சீரணிப் புலவன் குற்றம் யாது?" எனத் தேராக் கீரன்
"சொற்குற்றம் இன்று; வேறு பொருட்குற்றம்", என்றான்; தூய
பொற்குற்ற வேணியண்ணல், "பொருட்குற்றம் என்னை?" என்றான்;
தற்குற்றம் வருவது ஓரான், "புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே", என்றான்; ஐயன்,
"பங்கய முகமென் கொங்கைப் பதுமினி குழலோ?" என்ன,
"அங்கு அதும் அனைத்தே", என்றான்; ஆலவாயுடையான், "தெய்வ
மங்கையர் குழலோ?' என்ன, "அன்னது மந்தாரத்தின்
கொங்கலர் அளைந்து நாறும் கொள்கையால் செய்கைத்து", என்றான்.
"பரவி நீ வழிபட்டேத்தும் பரஞ்சுடர் திருக்காளத்தி
அரவுநீர்ச் சடையார் பாகத்தமர்ந்த ஞானப் பூங்கோதை
இரவினீர்ங் குழலுமற்றோ?" என "அ·துமற்றே" யென்னா
வெருவிலான் சலமே முற்றச் சாதித்தான் விளைவு நோக்கான்
சென்றவுடனேயே சொக்கேசர் அங்கிருந்த புலவர்களைப் பார்த்து, "எமது கவிக்குக் குற்றம் சொன்னவர் யார்?" என்று வினவினார்.
உடனே நக்கீரன் அஞ்சாமல் முன்வந்து "குற்றம் சொன்னது நானே", என்றார்.
"என்ன குற்றமோ?"
"சொற்குற்றமில்லை; பொருட்குற்றம்."
"அந்தப் பொருட்குற்றம்தான் என்ன?"
"பூக்கள் வைத்துக்கொள்வதால் கூந்தலுக்கு மணம் ஏற்படுகிறதேயல்லாமல், கூந்தலுக்கு இயற்கையான மணம் கிடையாது"
"பத்மினி சாதிப் பெண்களின் கூந்தலோ?"
"அதுவும் அத்தன்மையுடையதுதான்?"
"தேவமாதரின் கூந்தலோ?"
"மந்தார மலர் சூடுவதால் அதுவும் அத்தன்மையுடையதுவே".
"நீ துதித்து வழிபடும் காளத்திநாதரிடைய சக்தியாகிய ஞானப் பூங்கோதையம்மையாரின் கூந்தலும் அப்படிப்பட்டதுதானோ?" என்று இறுதியாக கேட்டார் இறையனார்.
"அதுவும் அத்தன்மையதே", என்று உறுதியாகக் கூறினார் கீரன்.
கோபமடைந்த பெருமான் தம்முடைய நெற்றிக்கண்ணைச் சிறிது காட்டினார்.
நக்கீரன் அதற்கும் அஞ்சவில்லை.
கற்றைவார் சடையான் நெற்றிக்கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவான் இன்னும் அஞ்சான், "உம்பரார் பதிபோல் ஆகம்
முற்று நீர் கண் ஆனாலும் மொழிந்த நும் பாடல் குற்றம்
குற்றமே", என்றான் தன்பால் ஆகிய குற்றம் தேரான்
"இந்திரனைப் போல உடம்பு முழுவதும் கண்களை நீர் உடையவரானாலும் உமது
பாடலிலுள்ள குற்றம் குற்றமே", என்றார் கீரன்.
இறையனார் உக்கிரமூர்த்தியாகி நெற்றிக்கண்ணில் செந்தழல் லேசாகக் கோடிகாட்டி ஓடியது.
ஆனால் அந்த வெப்பத்தைப் பொறுக்காமல் கீரன் பொற்றாமரைக்குளத்தில் வீழ்ந்து மூழ்கினார்.
புலவர் வடிவத்தில் வந்த இறையனார் மறைந்தருளினார்.
கபிலபரணர் முதலாய தமிழ்ச் சங்கப்புலவர்கள்அனைவரும் கீரனில்லாத தமிழ்ச்சங்கம் எப்படி சோபிக்கமுடியும் என்று பலவாறாக ஆற்றமையால் வருந்தினர்.
ஒருகாலத்தில் ராவணன் சிவபெருமானும் உமையம்மையும் இருந்த கையிலை மலையைப் பெயர்த்தெடுத்ததால் ராவணனை மலையின் அடியில் வைத்து இறைவன் நசுக்கினார். ஆனால்
அவனோ தன்னுடைய கையையும் தலையையும் பிய்த்தெடுத்துச் சேர்த்துக் கோத்து ராவணஹஸ்தம் என்னும் வீணையாக்கி அதில் சாமகானத்தால் இறைவனைத் துதித்துப்
பாடியதால் சிவபெருமான் மகிழ்ந்து அவனுக்கு முக்கோடி வாழ்நாளும் யாராலும் வெல்ல
முடியாத வாளும் தந்து அனுக்கிரகம் புரிந்தார். அதுப்போலவே கீரனும் இறைவனிடம் இரைஞ்சினால் இறைவன் நிச்சயம் அருள் புரிவார் என்று பேசிக்கொண்டனர்.
எய்தி வெள்ளிமலை பெயர்த்தானும் இறுத்ததன்
கையில் வீணை தொட்டு இன்னிசை பாடக் கனிந்தவன்
செய்த தீங்கு பொறுத்தது மன்றித் திண் தேரொடும்
மொய்கொள் வாளும் கொடுத்தனன்புண்ணியமூர்த்தியே
உடனே அனைவரும் சொக்கேச பேருமானின் திருவடிகளில் விழுந்து கீரனுக்காக மிகவும் வேண்டிக்கொண்டனர்.
திருத்தனே சரணம் சரணம் மறைச்சென்னிமேல்
நிருத்தனே சரணம் சரணம் நிறைவேத நூல்
அருத்தனே சரணம் சரணம் திருவாலவாய்
ஒருத்தனே சரணம் சரணங்கள் உனக்கு நாம்
அறனிலான் இழைத்த வேள்வி அழித்த பேராண்மை போற்றி
மறனிலாச் சண்டிக்கு ஈந்த மாண்பெருங் கருணை போற்றி
கறுவி வீழ் கூற்றைக் காய்ந்த கனைகழற் கமலம் போற்றி
சிறுவனுக்கு அழியா வாழ்நாள் அளித்தருள் செய்தி போற்றி
புலவர்களின் கூட்டுப் பிரார்த்தனைக்கு இறைவனும் இரங்கினார்.
தம்முடைய தேவியாராகிய அங்கயற்கண்ணியம்மையுடன் தோன்றினார். பொற்றாமரைத் தடாகத்துக்கு அருகில் சென்று புலவர் குழுவுடன் சேர்ந்துகொண்டார்.
அவ்வமயம் குளிர்ச்சியான அருட் பார்வையைச் செலுத்தினார். கீரனும் அந்தப் பார்வையில் சிவமயப் பேரானந்தத்தைப் பெற்றார்.
'சிவபெருமானைத்தவிர வேறுயார் தன்னுடைய அபசாரத்தைப் பொறுத்துக்கொள்வார்கள்?' என்று எண்ணினார் கீரன்.
உடனே 'கையிலை பாதி காளத்தி பாதி' என்னும் பாமாலை பாடி சூட்டினார்.
அந்தப் பாடலால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தடாகத்திலிருந்த கீரனின் கையைப்
பிடித்துக் கரையேற்றியருளினார்.
தமக்குக் கைகொடுத்துக் கரைசேர்த்த வள்ளலுக்குக் 'கோபப்பிரசாத மாலை' என்னும்
இன்னொரு பாமாலையைப் பாடினார். அபசாரம் செய்தவர்க்குக் கோபத்தையும் வந்தனை செய்தாருக்கு அருளையும் பிரசாதமாக வழங்கும் வள்ளலாக விளங்கும் இறைவனைப்
பெருமைப் படுத்திப் பாடினார்.
பிறகு சிவபரம்பொருளைப் புகழ்ந்து 'பெருந்தேவபாணி' 'திருவெழுகூற்றிருக்கை' ஆகிய பாடல்களைப் பாடி இறைவனைப் பரவினார்.
கீரனுக்கு மீண்டும் தமிழ்ச்சங்கத்தில் முன்புபோலவே புலவராக வீற்றிருக்கும் பெருமையை அருளி திருக்கோயிலுக்குள் அன்னையுடன் அப்பன் எழுந்தருளினார்.
நக்கீரனாரும் மற்ற புலவர்களும்சங்க மண்டபத்துக்குச் சென்று அங்கு தொங்கிக்கொண்டிருந்த பொற்கிழியை அறுத்தெடுத்து தருமிக்குக் கொடுத்தனர். பாண்டிய மன்னரைக் கொண்டு இன்னும் பல பரிசில்களும் தந்து வரிசைகளும் செய்யச்செய்தனர்.
சண்பகமாறன் தன் மனைவியுடன் மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு மலர்த்தொண்டு செய்து சிவபரம்பொருளை உணர்ந்து பல திருப்பணிகளைச் செய்துவந்தார்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$