1981-இலிருந்து 1984-ஆம் ஆண்டு நவம்பர்வரை மலாயாவின் தென்கோடியில் இருக்கும் கோத்தாதிங்கி என்னும் மாவட்டத்து மருத்துவமனைக்குத் தலைமை அதிகாரியாக இருந்தேன்.
'கோத்தா' என்பது கோட்டையைக் குறிக்கும் சொல்.
'கோத்தாத் திங்கி' என்பது 'உயர்ந்த கோட்டை' என்று பொருள்படும். அந்த ஊரின் இன்னொரு பகுதிக்குப் பெயர் 'கோத்தா கெச்சில்' என்றும் மற்றொரு பகுதிக்குக் 'கோத்தா பெஸார்' என்றும் பெயர். 'கெச்சில்' என்பது 'சிறிய' என்றும் 'பெஸார்' என்பது பெரிய என்றும் பொருள்படும்.
தரை மட்டத்திலிருந்து நாற்பது ஐம்பது அடி உயரத்தில் ஒரு பெரிய சதுக்க வடிவில் சமதளமாக ஓரிடம் இருக்கிறது. அந்த இடத்திலும் ஏராளமாக வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. அந்த இடத்தின் பரப்பளவை இப்போது கண்டறியமுடியவில்லை.
இதுதான் அந்த உயர்ந்த கோட்டை இருந்த இடமாக இருக்கலாம்.
ஆனால் உயர்ந்த கோட்டையோ, சிறிய கோட்டையோ, பெரிய கோட்டையோ, இப்போது எந்த இடத்திலும் எந்த கோட்டையும் கிடையாது.
மலாயாவின் தனிப்பெரும் நாடாக விளங்கிய மலாக்கா சுல்த்தானேட்டின் கடைசி சுல்த்தானின் ராஜதானியாகக் கோத்தாத்திங்கி இருந்தது.
இந்த மாவட்டம் பெரியது. ஆசிய-ஐரோப்பா பெருநிலத்தின் தென்கோடி இங்குதான் இருக்கிறது. ஜோஹோர் ஆற்றின் முகத்துவாரம் இங்குதான் உள்ளது.
ரோமர்கள் காலத்துப் பொருள்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. சில புராதனமான ஊர்களும் பட்டினங்களும் இங்கு இருந்திருக்கின்றன.![]()
மலேசியா
ஆனால் சதுப்பு நிலங்களும் காடுகளும் மலைகளும் நிறைந்த இடம். நமக்கு நேராகப் பத்து மைல் தூரத்தில் உள்ள இடத்துக்குப் போவதென்றாலும் எண்பது மைல் சுற்றிப்போகவேண்டிய கட்டாயம் இருக்கும்.
அங்கு காட்டுக்குள் ஒரு கருங்கோட்டை இருப்பதாக ஐதீகம்.
![]()
கோட்டைச்சுவரின் தடயம்
ராஜேந்திர சோழர், கடாரம், மலையூர், பண்ணை, ஸ்ரீவிஜயம் ஆகியவற்றை வென்ற
பின்னர் மாதமாலிங்கம், இலங்காசோகம் ஆகியவற்றைத் தாக்குவதற்குச் சென்றபோது நிச்சயம் கோத்தாத்திங்கி முனையைக் கடந்துதான் சென்றிருப்பார். ஒருவேளை அவர் வந்து சென்ற இடங்களில் ஒன்றேனும் இங்கு இருந்திருக்கக்கூடுமோ என்ற ஐயப்பாடு எனக்கு இருந்தது.
காட்டுக்குள் ஒரு பெரிய நகரமோ அல்லது கோட்டையோ இருந்திருக்கிறது என்பது தெரிந்தது. அப்போது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சில புராதன இடங்கள் அல்லது இது வேறு இடம்......
பல காலமாக இந்த வட்டாரத்தில் இன்னும் கண்டுபிடிக்காத சில நகரங்கள் காட்டுக்குள் இருப்பதாகவும் அங்கெல்லாம் மனிதர்கள் போகமுடியாது என்றும் செய்திகள் உண்டு.
மலாயாவில் சில ஆதிவாசி ஜாதிகள் இருக்கின்றன. நெக்ரிட்டோ, சேமாங், செனோய், சாக்காய், ஜாக்குன் என்ற பெயர்களில் அவர்கள் இருக்கிறார்கள்.
இந்த ஜாதியினரிலும் சில உட்பிரிவுகள் உண்டு.
சில ஜாதியினர் அந்தமான் நிக்காபாரிலும் வசிக்கிறார்கள்.
சில கிளையினர் மத்தியப்பிரதேஷ், ஒரிஸ்ஸா, தெலிங்கானா ஆகிய இடங்களில் வசிக்கின்றனர். இளநீரில் இருக்கும் 'நீர்' இவர்களின் மொழியிலிருந்து வந்தது என்று மானிடவியல் அறிஞர்கள் நிச்சயமாகக் கூறுகின்றனர். வெற்றிலையையும் இவர்களே தென்கிழக்காசியாவிலிருந்து கொண்டுவந்தார்கள் என்றும் சொல்வார்கள்.
ஜோஹோரில் உள்ள ஆதிவாசியரில் ஜாக்குன் ஜாதியினர் முக்கியக் குடியினர்.
ஜாக்குன்கள் எப்படியிருப்பார்கள் என்று பார்க்கவேண்டுமானால் இந்த இலக்கில் பார்க்கலாம்.
அவர்களிடம் உள்ள கதைகளில் முற்றிலும் கருங்கற்களால் ஆன நகரம் ஒன்று காட்டில் மறைந்திருப்பதாகச் சொல்வார்கள்.
சிலர் அங்கு சென்றிருப்பதாகவும் சிலர் அந்த இடத்திலிருந்து கிடைத்த சில பொருட்களைப் பார்த்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
Jade என்னும் பச்சைக்கல்லால் ஆன பெரிய தண்டு ஒன்றை ஒருவர் பார்த்திருக்கிறார். பல பொருட்கள் சீனர்கள் சம்பந்தப்பட்டவை.
இசைக் கருவிகூட ஒன்று கிடைத்ததாகச் சொல்வார்கள். அதைக் கண்டெடுத்த ஆள், அன்றிரவு ஒரு கனவு கண்டார். அதில் ஒரு குரல் - குரல் மட்டுமே - அசரீரி என்பார்கள் அல்லவா - அதுபோன்ற
குரல், அமானுஷ்யமான குரல் கேட்டிருக்கிறது.
அதை எங்கிருந்து எடுத்தாரோ அங்கேயே வைத்துவிடுமாறும், அப்படியில்லையென்றால் அவருடைய உயிரையே கைமாறாகக் கொடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது.
அடுத்த நாள் காலையில் அந்த ஆள் உயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு இசைக்கருவியை இன்னொரு ¨காயில் பிடித்துக்கொண்டு பழைய இடத்திலேயே அந்த இசைக்கருவியைப் போட்டுவிட்டு
வந்தார்.
இப்போது காடாக இருக்கும் இடத்தில் அந்த கருங்கல் நகரம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி மாயாஜாலக்கதை போன்ற சில நிகழ்ச்சிகளையும் சொல்கிறார்கள்.
சுள்ளிகள் பொறுக்கச்சென்ற ஒரு கிராமவாசி, அந்த நகரத்துக்குள் பிரவேசித்தாராம். அங்கு அவர் அந்த நகரவாசிகளைப் பார்த்தாராம். அவரை அவர்கள் தம்முடைய விருந்தினராக வைத்திருந்தார்களாம். மூன்றுநாட்கள் கழித்து அவரை அனுப்பிவைத்தார்களாம்.
திரும்பும்போது அங்குள்ள தூண்களில் அவர் சில அடையாளக் குறியீடுகளை வரைந்துவிட்டு வந்தாராம். மற்ற ஆட்களைக் கூட்டிக்கொண்டு அந்த இடத்துக்குச் சிலநாட்களில் திரும்பிச்சென்றபோது
அவர் இட்ட அடையாளக்குறியீடுகள் அனைத்தும் காட்டுமரங்களின் மீது இருப்பதைக் கண்டாராம்.....
அந்த நகரத்தைக் கடைசியாகப் பார்த்தவர் ஒருவர் இருந்தார். அவருக்கு இப்போது வயது 85. அவர் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் பார்த்ததாகச் சொல்வார். நான் கோத்தாதிங்கியில் இருக்கும்போதே
அவர் மிகவும் வயதானவராகத்தான் காணப்பட்டார். அப்போதே அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும்.
மலாய்காரர்களிடம் ஒருவகைக் கத்தி உண்டு. அதை Kris க்ரிஸ் என்று அழைப்பார்கள். க்ரிஸ் கத்தியைப் பற்றி இரண்டுமுறை அகத்தியத்தில் ஏற்கனவே பேசப்பட்டிருக்கிறது.
க்ரிஸ் கத்தி மூன்று, ஐந்து ஏழு, ஒன்பது பதினொன்று, அல்லது பதின்மூன்று வளைவுகளைக் கொண்டதாக இருக்கும். அது குண்டலினி சக்தியுடன் சம்பந்தப்பட்டது. பாம்புபோல் வளைந்து நெளிந்துதான்
இருக்கும். சாதாரணமாக மூன்று, ஐந்து, ஏழு வளைவுகள் உள்ளவற்றைத்தான் காணமுடியும். ஐந்து, ஏழு ஆகியவற்றுக்கே அவ்வப்போது பூஜைகள் செய்யவேண்டியிருப்பதுண்டு. பெரும்பாலும் அதிக வளைவுகள் கொண்ட க்ரிஸை உரையிலிருந்து உருவமாட்டார்கள். அவற்றின் கைப்பிடியால் மோதினாலேயேசேதமேற்படும். அல்லது உரையிலிருந்து உருவாமலேயே சுட்டிக்காட்டினாலும் போதும். பூஜையில் வைத்த க்ரிஸை உருவினால் ரத்தம் காட்டவேண்டியிருக்கும் என்று நம்புவார்கள். பெரும்பாலும் க்ரிஸின் சொந்தக்காரர் தம்முடைய உள்ளங்கையைக் க்ரிஸால் கிழித்துவிட்டுக்கொள்வார். பல சந்தர்ப்பங்களில் க்ரிஸ் அதுவாகவே எங்காவது ஏடாகூடமாகக் கிழித்துவிட்டுவிடும். எத்தனை ஜாக்கிரதையாகக் கையாண்டாலும் அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அது கிழித்துவிடத்தான் செய்யும்.
அந்த நகரம் இருந்த வட்டாரத்திலிருந்து சில க்ரிஸ் கத்திகளைக் கண்டதாக அந்த வயசாளி சொன்னார்.
இன்னொன்றும் சொன்னார். அதுதான் ஆச்சரியமாக இருந்தது. சுவற்றில் ஜன்னல் மாதிரி அமைப்புடன் துவாரங்களும் துளைகளும் இருந்தன என்றார்.
இதில் என்ன ஆச்சரியம்?
ஆச்சரியமில்லாமல் வேறென்ன.
அவர் பார்த்தது 'பலகணி' என்னும் அமைப்பை.
பழங்காலக் கட்டடங்களில் ஜன்னலுக்குப் பதில் இது இருந்தது. மிக அலங்காரமாகக் கல்லிலேயே பல வேலைப்பாடுகளுடன்கூடிய பல துளைகளைச் செதுக்கியிருப்பார்கள். இதன் வழியாகக் காற்று அருமையாக வரும். ஆனால் மழை எத்தனை வலுவாகப் பெய்தாலும்கூட சாரலடிக்காது. இதனில் இன்னொரு வகையைச் சாரளம் என்றும் சொல்வதுண்டு.
இது தமிழர்களுடைய கட்டடக் கலாச்சார பாணி
பலகணி - அதுவும் கருங்கல் பலகணி என்பது இப்போது மலாய்க்காரர்களிடையே வழக்கில் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாகக்கூட அவர்கள் அறியமாட்டார்கள்.
அந்த வட்டாரத்தில் நூற்றுக்கணக்கில் வாழை மரங்கள் இருந்ததாகவும் சொன்னார். வாழி செந்நிறமாக இருந்ததாகச் சொன்னார். செவ்வாழையைத்தான் அவர் பார்த்திருக்கிறார். அந்த வட்டாரத்தில் இப்போது செவ்வாழை கிடையாது.
மழைக்காக அந்த இடத்தில் ஒதுங்கியதுண்டு என்றும் அவ்வாறு ஒதுங்கிய சமயங்களில் ஏதோ சந்தைக்கூட்டம் போலவும் பலருடைய குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்ததுபோலவும் அவருக்கும் அவருடன் சென்ற சிலருக்கும் கேட்டிருக்கிறது. ஆனால் மனிதர்களின் சுவடே அங்கு கிடையாது. புலிகளின் காலடிகளை அங்கு ஏராளமாகப் பார்த்திருக்கிறார்கள்.
இன்னொரு கிழவனார் அந்த இடத்தில் பழமரங்கள் கொண்ட தோப்பு இருந்ததாகச் சொன்னார். ஒவ்வொருமுறை அங்கு செல்லும்போதும் அங்கிருந்த கற்கள் நகர்ந்திருப்பதை அவர் கவனித்திருப்பதாகச்சொன்னார். அங்கு ஒருமுறை களைப்பினால் அயர்ந்து தூங்கியபோது "பாவமான காரியங்களில் ஈடுபடக்கூடாது; கர்வமுடன் நடக்கக்கூடாது", என்றெல்லாம் யாரோ சொல்வதுபோல இருந்ததாம்.
அங்கிருந்த ஆதிவாசிகளை பிரிட்டிஷ்காரர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்து செல்லவைத்துவிட்டனர்.
இன்றளவும் அந்தக் கருங்கல் நகரம் மிகவும் மர்மமானதாகவே இருக்கிறது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$