கூனி விற்கும் மீனி
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
ஏற்கனவே திருக்காட்டுப்பள்ளியில் உப்பு
விற்ற இளநங்கையைப் பார்த்து சிவப்பிரகாச சுவாமிகள் என்ற நல்ல புலவர் - சிறுவயதிலேயே
கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தவர் - பாடிய சம்பவத்தை எழுதியிருக்கிறேன்.
ஒருநாள், அவர்கள் இருந்த வீதியில் ஒரு பெண் உப்பு விற்றுக்கொண்டு
போனாள்.
சுவாமிகளின் தாயார் அப்போது கைவேலையாக
இருந்தார்.
ஆகவே உப்புக்காரியை அழைக்குமாறு சுவாமிகளை ஏவிவிட்டார்.
அவர் சும்மா போய் அழைக்காமல், வெண்பாவாக அமைத்து அவளை அழைத்தார்
-
நிறைய உளதோ வெளிதோ கொளுவோம்
பிறையை முடிக்கணியும் பெம்மான் - உறையும்
திருக்காட்டுப்பள்ளி திரிபாவாய் நீயுங்
கிருக்காட்டுப்பள்ளி யெமக்கு
பிறையணிந்த சீமானாகிய இறைவன் இருக்கும் இடமாகிய
திருக்காட்டுப்பள்ளியில் உப்பு விற்பதற்காக வீதி தோறும் திரியும்
பெண்ணே!
உன்னிடம் உப்பு நிறைய உள்ளதோ? நல்ல தரமான
வெண்மையான உப்பாக இருக்கிறதோ? அப்படியானால் நாங்கள்
வாங்கிக் கொள்கிறோம். ஆகவே நீ இங்கு இரு! எங்களுக்கு உப்பு
அள்ளிக் காட்டு.
நீயிங் கிருக்காட்டுப்பள்ளியெமக்கு =
நீ + இங்கு + இரு + காட்டு + உப்பு + அள்ளி + எமக்கு
அந்த உப்புக்கூடைக்காரியைப் பார்க்கவும் சிவப்பிரகாசருக்கு
அவளைப் பார்த்துக் கவி பாடவேண்டும் என்று தோன்றியிருக்கிறது.
அவளுடைய தோற்றம், அவளுடைய நடை உடை பாவனைகள், அவள் உப்பைக்
கூவிய விதம், விலை பேசிய விதம் முதலியவையும், பெரும்பாலும் அத்தகைய பெண்களிடம்
காணப்பட்ட கள்ளங்கபடற்ற தன்மையும் அவரைப் பாடத் தூண்டியிருக்கும்.
அதே போலவே - ஆனால் சற்று வித்தியாசமான கதை ஒன்றையும் சொல்கிறேன்.
வில்லியம் ஹோகார்த் என்னும் ஓவியர் ஒருவர் இருந்தார். அவர்
லண்டன் மாநகரைச் சேர்ந்தவர். அவர் வாழ்ந்தது பதினெட்டாம் நூற்றாண்டில். இங்கிலாந்தின்
வாழ்வியலை அவர் பல கோணங்களிலிருந்து பார்த்து, அவற்றை வரைந்திருக்கிறார். அந்தக்
காலத்தில் கடனைக் கட்டாதவர்களுக்கென்று கடனாளிகள் சிறை இருந்தது. அந்த சிறையில்
உள்ளவர்களைக்கூட அவர் வரைந்திருக்கிறார். ஓர் ஆடம்பரக்காரன் - டம்பாச்சாரி என்று
பழைய காலத்தில் குறிப்பிடுவார்கள்- அந்த ஆசாமி எப்படி சூதாடி, குடித்துச் சீரழிந்து,
கடனாளியாகி, கடைசியில் பைத்தியக்காரர்களுக்கான சிறையில் அடைபட்டு அழிகிறான் என்பதை
அவர் Rakes Progress என்னும் தலைப்பில் காமிக்ஸ்
பாணியில் ஓவியங்களாக வரைந்திருக்கிறார். சமுதாயத்தின் கீழ்த்தட்டுகளில் இருந்தவர்களையும்
அவர் வரைந்திருக்கிறார்.
இராலில் பலவகைகள் உண்டு. நீங்கள் பொன்னுசாமி ஹோட்டல்
எரா வறுவலையோ மதுரை வெங்கலக்கடைத் தெரு பாண்டியன் ஹோட்டல் எரா வறுவலையோதான் பார்த்திருப்பீர்கள்.
இரால் என்பது Prawns எனப்படும்.
இதிலேயே இன்னும் சிறிய சைஸ் உண்டு.
அதனை Shrimp என்று குறிப்பிடுவார்கள்.
தமிழில் அழகாக அதனைக் 'கூனி' என்று சொல்வோம்.
இதை மதுரையில் இருந்த சில ஹோட்டல்களில் மிக அருமையாக பிரியாணி
போடுவார்கள்.
'கூனி பிரியாணி' சாப்பிடுவதற்கென்றே மதுரை மருத்துவக் கல்லூரியிலிருந்து
§க்ஷத்திராடனம் புறப்பட்டுப் போவதுபோல பாய்ஸ¤ஹளெல்லாம் போவதுண்டு.
கூனியை எண்ணெய் நிறைய விட்டு மசாலையுடன் சுக்காவாக வறுக்கலாம்;
அல்லது பிரட்டலாம்.
மலேசியாவில் கூனியை ப்லாச்சான் என்று சொல்வார்கள்.
நிறைய வரமிளகாய் அல்லது பழுத்த பச்சைமிளகாய் அல்லது ஊசிமிளகாய்
போட்டு அதனை உரலில் 'தோம் தோம் தோம்' என்று சந்திரமுகி பாணியில் இடித்து, அதனைக்
காலையில் 'நாஸி லெமாக்' என்னும் சோற்றுடன் சாப்பிடுவது மலேசியத் தமிழர்களில்
மிகப்பலருக்கு மிகப்பிடித்த சமாச்சாரம்.
ஒருநாள் கூனியை விற்றுக்கொண்டு ஓர் இளம்பெண் சென்றாள்.
அவளைப் பார்த்த ஹோகார்த் அவளுடைய முகத்திலிருந்த பிரகாசம்,
மகிழ்ச்சி, கள்ளங்கபடற்ற தன்மை, குறுகுறுப்பு, பல்தெரியச் சிரிக்கும் இளஞ்சிரிப்பு,
வாளிப்பான உடற்கட்டு ஆகியவற்றால் மிகவும் கவரப்பட்டுவிட்டார்.
அவளை அப்படியே பார்வையால் விழுங்கி, கேன்வஸ் திரையில் கைகளால்
உமிழ்ந்து அப்படியே வரைந்துவிட்டார்.
அவசரமாக வரைந்திருக்கிறார்.
அந்த கூனி விக்க வந்த மீனியைக் மேலே படத்தில் காணலாம்.
படத்தின் தலைப்பு Shrimp Girl.
கூனியைத் தட்டில்வைத்து தலையில் தாங்கி நின்றவள் கூனிவிடவில்லை.
அவளைக் கூனச் செய்யக்கூடியது வேறு சங்கதி. ஆனாலும் நிமிர்ந்துதான்
நிற்கிறாள் - காயாத கானகத்தே நின்றுலாவும் அன்னக் காரிகையைபோல.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU