"லெட் இட் கோ இண்டி....!"
பாகம் 1
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
சிலநாட்களுக்கு முன்னர் ஷான் கானரியைப் பற்றியும் ஜேம்ஸ்
பாண்ட் பற்றியும் எழுதியிருந்தேன்.
ஷான் கானரி சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை. மிக அண்மையில் அவருக்கு
'ஸர்' பட்டம் கிடைத்துள்ளது. கெவின் கோஸ்னர் எடுத்த ராபின் ஹ¥ட் படத்தில்
ரிச்சர்ட் மன்னனராக ஒன்றைரை நிமிடம் மட்டுமே தோன்றுவார். அதற்காக அவர் பதினைந்து
மில்லியன் டாலர் வாங்கியதாகச்சொல்வார்கள்.
ஸ்டார் வார்ஸ் படத்தில் ஹான் ஸோலோவாக மூன்று படங்களில் தோன்றி இண்டியானா ஜோன்ஸாக
மூன்று படங்களில் புகழின் உச்ச கட்டத்துக்குச் சென்ற ஹேரிசன் ·போர்ட்,
ஷான் கானரியுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
இண்டியானா ஜோன்ஸ் வரிசையின் கடைசி படமாகிய 'The Last Crusade'-இல்
தந்தையாக கானரியும் மகனாக ·போர்டும் வருகிறார்கள்.
இருவரின் பெயருமே வில்லியம் ஹென்ரி ஜோன்ஸ். ஆகவே ·போர்ட் அதில்
வில்லியம் ஹென்ரி ஜோன்ஸ் ஜூனியர் ஆக வருகிறார். கானரி அவரை 'ஜூனியர்' என்று
மட்டுமே அழைப்பார். அது அவருக்குப் பிடிக்காது; மிகுந்த ஆத்திரத்தை
மூட்டும்.
சிறிய வயதில் தாயை இழந்த இண்டியானாவை மிகவும் அடக்கி வளர்ப்பார் பெரியவர்.
அதனால் ஒருவகையான Deprevation and Lack of Appreciation-னுடனேயே
அவர் வளர்ந்திருப்பார். அது ஒரு குறைபாடாகவே இருக்கும்.
இருவருமே வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். பழம்பொருட்களைப் பற்றி ஆராய்ந்து அவற்றைத்
தேடிக்கண்டுபிடிப்பது இருவரின் வேலை.
ஏசு பெருமானாரின் ஜட உடல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அவருடைய பன்னிரண்டு
சீடர்களுடன் Passover என்னும் உண்டியை அருந்துவார். அச்சமயத்தில்
அவருடைய இரத்தமாக உருவகப்படுத்தப்பட்ட திராட்சை ரசத்தை அவர்
அனைவருக்கும் கொடுப்பார். அவர் கடைசியாக அருந்திய அந்த கோப்பையை Chalice
என்பார்கள். அதனை The Holy Grail என்றும் குறிப்பிடுவார்கள்.
அது மறைந்துபோய்விட்டது.
அதை வைத்திருப்பவர்கள் அதில் சாதாரண நீரை ஊற்றி உட்கொண்டால் சிரஞ்சீவித் தன்மையை
ஏற்படுத்தும் என்று நம்பப்பட்டது.
அதைத் துருக்கியரிடமிருந்து காப்பாற்றுவதற்காக கடைசியாக மூன்று சகோதரர்கள் எடுத்துச்
சென்றதாக ஐதீகம். அவர்கள் Knights Templers என்னும் சன்னியாசி
போர்வீரர்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களின் Crusade க்ரூசேட்
என்னும் சிலுவைப் போரின்போது கிரேய்லைக் காப்பாற்றுவதாக பிரதிக்ஞை எடுத்துக்கொண்டவர்கள்.
புனித கிரேய்ல் எங்கிருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடிப்பதைத் தம் வாழ்நாளின்
லட்சியமாகப் பெரியவர் கொண்டிருந்தார்.
தம்முடைய கண்டுபிடிப்பையெல்லாம் ஒரு நோட்டுப்புத்தகத்தின் கறுப்பு மையினால்
எழுதி வைத்திருந்தார். பல படங்களையும்கூட அழகிய வண்ணங்களால் வரைந்துவைத்திருந்தார்.
திடீரென்று ஒருநாள், தபாலில் அந்தப் புத்தகம் இண்டீக்கு வந்துசேர்கிறது.
வால்ட்டர் டோனோவன் என்பவர் மிகப்பெரிய கோடீசுவரர். அவர் அந்த க்ரேய்லைத் தேடிக்கொண்டிருந்தார்.
அதற்காகவே பெரிய ஜோன்ஸை அதில் ஈடுபடுத்தியிருந்தார்.
அவரிடமிருந்து இண்டீக்கு அழைப்புவந்தது. சென்று சந்தித்தபோது, பெரிய ஜோன்ஸ்
காணாமற் போய்விட்டதாகத் தெரிந்தது.
இண்டீயிடம் அந்தப் புத்தகம் இருக்கிறதா என்றும் தூண்டித் துருவிப் பார்த்தார்கள்.
முடிவில் பெரிய ஜோன்ஸ், புத்தகம் அத்துடன் கிரேய்ல் எல்லாவற்றையும் தேட இண்டீயை
ஏற்பாடு செய்தார், டோனோவன்.
முதற் கட்டமாக வெனிஸ் நகரத்திற்குச் சென்று டாக்டர் ஷ்னைடர் என்னும் ஆராய்ச்சியாளரைச்
சந்திக்குமாறு கூறினார் டொனோவன்.
வெனிஸ் நகரத்தில் ஒரு நூலகத்தில் முதல் புதிருக்கு விடையை இண்டீ கண்டுபிடித்து,
தரைக்கு அடியில் உள்ள கேட்டக்கோம் என்னும்
கல்லறைப் பெட்டிகளில் ஒரு முக்கிய கல்வெட்டின் உடைந்துபோன பகுதியைப் பதிவு செய்துகொண்டு
வந்துவிடுவார்.
அப்போது கிரேய்ல் பற்றிய ரகசியத்தைக் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகப் பாதுகாத்துவரும்
ஒரு ரகசியக் குழுவினருடன் மோதி, முடிவில் தம் தந்தை ஆஸ்ட்ரியாவிலுள்ள இன்ஸ்ப்ரக்
என்னும் கோட்டையில் இருப்பதாகத் தகவல் அறிந்து ஷ்னைடருடன் செல்வார்.
அங்கு நாட்ஸிக்களின் பிணையாளியாக பெரிய ஜோன்ஸ் இருப்பார்.
அங்குதான் பல சூதுகளும் சதிகளும் புலப்படும்.
கிரேய்லைக் கைப்பற்ற ஜெர்மன் சர்வாதிகாரி அடால்·ப் ஹிட்லர் ஒரு பெரிய
திட்டத்தை உருவாக்கி அதனைக் கர்னல் ·பீகல் என்னும் கெஸ்ட்டாப்போ தளபதியிடம்
ஒப்படைத்திருப்பார். டோனோவன் ஒரு ஜெர்மன் ஏஜெண்ட்.
ஷ்னைடர் டோனோவனின் கையாள் என்பதும் அப்போது தெரியவருகிறது.
இருவரும் பிடிபட்டு விடுவார்கள்.
குறிப்புப்புத்தகமும் அவர்கள் கைக்குப் போய்விடுகிறது.
RETURN TO MAIN MENU