லோரோ ஜோங்க்ராங் -#1

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                லோரோ ஜோங்க்ராங்.
                யார் அவள்?
                அது ஒரு கதை.
                அந்தக் கதையில் நிலக்களன் மத்திய ஜாவா.
                மத்திய ஜாவாவில் ஓரிடத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அவற்றை லோரோ ஜோங்க்ராங் கோயில் கூட்டம் என்று குறிப்பிடுவார்கள்.
                ஏனெனில் அந்தக் கோயில்களின் நாயகியாக விளங்குபவள் லோரோ ஜோங்க்ராங்.
                 அவளுடைய கதைதான் இது..........




ஆயிரம் கோயில்களின் அமைப்பு











                  இந்தோனீசிய மொழியில் இருக்கும் அந்தக் கதையைச் சுருக்கித் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.

                 லோரோ ஜோங்ராங் என்பவள் ஜாவா சுமாத்ரா ஆகியவற்றை ஒரு காலத்தில் ஆண்டுவந்த சைலேந்திர அரச வம்சத்தைச் சேர்ந்த இளவரசி. பேரழகி.
                அவளுடைய தந்தையாகிய பாலப்புத்ர தேவன் மிகவும் பெரிய வீரன். பலவிதமான போர்முறைகளுடன் மாயா யுத்தமும் புரிய வல்லவன். அவன் 'பாக்கோ' என்னும் நாட்டை ஆண்டுவந்தான்.
               ஜாவாவில் உள்ள இன்னொரு நாடு பெங்கிரிம் என்பது. அதன் அரசியாகிய சந்திரவதியும் ஒரு பேரழகி. அவளை இளவயதில் பாலப்புத்ர தேவன் காதலித்தான். ஆனால் ஒருதலைக் காதலான அது வெற்றி பெறவில்லை. சந்திரவதி பெங்கிரிம் நாட்டின் அரசனை மணந்துகொண்டுவிட்டாள்.

                ஆனால் பாலபுத்ரதேவனால் அவளை மறக்கமுடியவில்லை. அவனுடைய பட்ட மகிஷியும் இறந்துபோனதால் தாயற்ற லோரோ ஜோங்க்ராங்கை மிகவும் செல்லமாக வளர்த்தான்.
                சந்திரவதிக்கு ஒரு மகன் பிறந்தான். புவனவோஸோ என்னும் அவனை, அவனுடைய ஒன்றரை வயதில் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்கள்.

                தக்க வீரனொருவனிடம் பாண்டுங் பொண்டோவோஸோ என்னும் பெயரில் அந்த இளவரசன் வளர்ந்தான். தான் யார் என்பது அவனுக்குத் தெரியாது. அவனுக்கு ஆரம்பத்தில் போடப்பட்ட பெங்கிரிம் அரசமுத்திரை மோதிரத்தை மட்டும் ஒரு சங்கிலியில் கோர்த்துக் கழுத்தில் அணிந்திருந்தான். இளமையிலிருந்து போர்க்கலைகள் அனைத்தையும் தெளிவாகக் கற்றுவிட்டான். குண்டலினி சக்தியை ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம் ஆகிய ஆதாரச் சக்கரங்களில் நிறுத்தி, அதனைப் போர் முதலிய பல வகைகளிலும் பிரயோகம் செய்வதிலும் ஆற்றல்மிக்கவனாக விளங்கினான்.

                அவன் நல்ல வாலிபப் பருவம் அடைந்தபோது, ஒரு சமயம் பாக்கோ நாட்டில் அரசனுடைய சேனாபதிப் பதவிக்குப் போட்டி நடந்துகொண்டிருந்தது. அப்போதெல்லாம் அங்கே இந்த மாதிரி வேலைக்குப் பேட்டியெல்லாம் கிடையாது. போட்டிதான்.

                வைக்கப்பட்ட பல சோதனைகளிலும் வென்று, மற்ற போட்டியாளர்களையெல்லாம் வில், வாள், வேல், மல் ஆகிய போர்களில் வெற்றிபெற்ற பாண்டுங், பாக்கோவின் சேனாபதியானான்.

                அவன் பதவியேற்றதும் முதல் வேலையாக பாலபுத்ரதேவன் அவனை பெங்கிரிம் நாட்டுக்குப் படையெடுத்துப்போகுமாறு கட்டளை யிட்டான். நாட்டைக் கைப்பற்றி, சந்திரவதிமேல் ஒரு கீறல்கூட இல்லாமல் தூக்கிவருமாறும் ஆணையிட்டான். 

                படையெடுத்துச்சென்ற பாண்டுங், பெங்கிரிம் நாட்டை எளிதில் பிடித்துவிட்டான். அதன் அரசனும் கைப்பற்றப்பட்டான். அரசனை அம்பெய்து கொல்லுமாறு ஆணையிட்டுவிட்டு, சந்திரவதி இருந்த அந்தப்புரத்துக்குச் சென்றான்.

                பாண்டுங்கைப் பார்த்த சந்திரவதி அவனை நோக்கித் தன்னுடைய வாளை ஒரே வீச்சாக வீசினாள். அந்த வீச்சில் பாண்டுங்கின் கவசம் பிளந்து விழுந்தது. அவனுடைய சங்கிலி வெளியில் தெரிந்தது. சங்கிலியில் தொங்கிய முத்திரை மோதிரமும் வெளியில் தெரிந்தது.

                வாள்வீச்சின் வேகத்தில் சந்திரவதியின் மார்புக்கச்சை அவிழ்ந்தது. அதே சமயத்தில் அவளுடைய கோபாவேசம் மறைந்து ஏதோ ஒரு விவரிக்க இயலாத உணர்வு ஏற்பட்டு அவளுடைய மார்பகங்கள் விம்மி நெகிழ்ந்தன.

                மாபெரும் வீராங்கனையாகிய தன்னுடைய வாள்வீச்சிலிருந்து தப்பி நின்றவனையும் அவனுடைய மோதிரத்தையும் கண்டாள், சந்திரவதி. அந்த மோதிரம், சிறுவயதில் கடத்தப்பட்ட தன்னுடைய மகனுடைய முத்திரை மோதிரம் என்று சொல்லி, அங்கிருந்த அரசமுத்திரைகளையும் சான்றாகக் காட்டினாள்.

                தான் யார் என்பதை அதன் மூலம் பாண்டுங் அறிந்துகொண்டான்.

                உடனே அங்கிருந்து விரைந்து சென்ற பாண்டுங், தன் தந்தையாகிய  அரசனை அம்பு வீச்சிலிருந்து காப்பாற்றிவிட்டுப் பணிந்தான்.

                அரசன், அனவரையும் அருகில் அழைத்து வைத்துக்கொண்டு, "இவனுடைய இடுப்பின் இடப்பாகத்தில் பெங்கிரிம் அரசவம்சத்தின் கருடச்சின்னம் பச்சை குத்தப்பட்டிருக்கும்", என்று கூறினான். ஆடையை விலக்கிப் பார்த்த பாண்டுங், தான் உண்மையிலேயே பெங்கிரிம் நாட்டின் அரசகுமாரன்தான் என்பதை சந்தேகமறத் தெரிந்துகொண்டான்.

    பாக்கோ நாட்டின் படையினரில் தன்னுடன் சேர விரும்பினவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை பாக்கோவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டான்.
   
                மேலும் பலவிஷயங்களைக் கற்றுவருமாறும் நாட்டைச் சுற்றிப் பார்த்துவருமாறும் புதிய அனுபவங்களைப் பெற்றுவருமாறும் பெங்கிரிம் மன்னன் கட்டளையிட்டதன் பேரில் பாண்டுங் பயணப்பட்டான்.

                ஒரு நாளிரவில் ஒரு காட்டின் நடுவே செல்லும்போது ஒரு பெரிய ராட்சசனைக் கண்டான்.   
                ஆயிரக்கணக்கான ராட்சசர்கள் அடங்கிய பெருங்கூட்டத்துக்கு அவன் அதிபதி. அவனுக்கு ஒரு வால் இருந்தது. அந்த வாலிலேயே அவனுடைய பலமும் வலிமையும் உயிர்நிலையும் இருந்தன. போருக்கு வந்த ராட்சசனை பாண்டுங் வென்றான். ராட்சசன் உணரும் முன்னம் மிக வேகமாக அவனுடைய பின்புறமாகச் சென்று அவனுடைய வாலைப் பிடித்துவிட்டான். அப்படியே ராட்சசனுடைய இருகால்களுக்கும் இடையே பாய்ந்து நுழைந்து முன்புறமாக வந்து வாலைப் பிடித்து சொடுக்கி இழுத்தான். மர்மஸ்தானத்தை அழுத்திக்கொண்டு அதனை வால் இறுக்கியது.
                அத்துடன் வாலிலிருந்த உயிர்நிலையும் பாண்டுங்கின் கையால் அழுத்தப் பட்டது. ராட்சசன் செயலிழந்தான். ஆனால் ராட்சசனை பாண்டுங் கொல்லவில்லை. அவனுக்கு உயிர்ப்பிச்சையளித்தான். நன்றி செலுத்திய அந்த ராட்சச அரசனைத் தன்னுடைய அடிமையாக்கிக்கொண்டான், பாண்டுங். தன்னை நினைத்து அழைக்கும்போதெல்லாம் வருவதாக ராட்சசன் உறுதிகூறி, பாண்டுங்கை அவனுடைய தலைநகருக்கு எடுத்துச்சென்று அங்கே அவனை விட்டுச்சென்றான்.

                பாண்டுங் கட்சி மாறியதை அறிந்த பாலப்புத்ர தேவன் கோபவெறிக்கு ஆளாகினான். தானே பெங்கிரிம்மீது படையெடுத்துப் போவதாகவும் சந்திரவதியைக் கொண்டுவந்து தன்னுடைய பட்டமகிஷியாக்கி அவளுடைய தாயின் இடத்தை நிரப்புவதாகவும் லோரோ ஜோங்க்ராங்கிடம் சூளுரைத்துச் சென்றான்.

                உக்கிரமான போர் நடந்தது. அதில் பாக்கோவின் படைகள் தோற்றுக்கொண்டிருந்தன.

                ஆகவே போரை நிறுத்திவிட்டு பாலப்புத்ர தேவன், பாண்டுங்கை துவந்த யுத்தத்துக்கு அழைத்தான்.
                பாண்டுங்கும் அவனுடன் போரிட்டான். ஆனால் மாய யுத்தம் புரிந்த பாலப்புத்ர தேவனிடம் அடிவாங்கி இறக்கும் நிலையில் மயக்கமுற்றிருந்தான்.

                அவனுடைய உடலை பாலபுத்ரதேவன் பந்தாடி காலால் எற்றிவிட்டான். காட்டுக்குள் விழுந்த அந்த உடலைப் பாசறைக்கு எடுத்துச்சென்று அவனுடைய தளபதிகள் வைத்தியம் செய்தனர்.

                விஷயமறிந்து அங்கு வந்த சந்திரவதி, தன்னுடைய தவ வலிமையாலும், தன்னுடைய தெய்வங்களின் அருளாலும் அவனை எழுப்பி, அவனுக்கு பாலபுத்ரதேவனை வெல்லும் சக்தியையும் வாங்கிக்கொடுத்தாள்.

                பாலபுத்ர தேவனின் உயிர் நிலை அவனுடைய உடலில் இல்லை என்றும், அது அவனுடைய நிழலில் இருக்கிறது என்றும் சொன்னாள். அவனுடைய உடல் தரையில் படாமல் இருக்கும்போது அவனுடைய நிழலில் மந்திர க்ரிஸ் கத்தியால் குத்தினால்தான் இறப்பான் என்ற ரகசியத்தையும் சொல்லிக்கொடுத்தாள்.

               மீண்டும் துவந்த யுத்தம். அதில் பாண்டுங் அடிபட்டு விழுந்தான்.
               அப்போது குதிரையின்மீது சந்திரமதி வந்து பாலபுத்ரதேவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள். அதைக் கண்டு சலனம் அடைந்த பாலப்புத்ரதேவன் பாண்டுங்கை ஒரேயடியாகத் தீர்த்துக்கட்ட நினைத்து மிக வேகமாக அந்தரத்தில் பாய்ந்தான். சில அடிகள் உயரத்தில் பாலபுத்ரதேவன்  இருக்கும் போது, அவனுடைய நிழலின் கழுத்துப் பாகத்தில் க்ரிஸ் கத்தியால் பாண்டுங் குத்தவும் அவன் இறந்தான்.

                போருக்கு வந்த லோரோவும் பாண்டுங்கிடம் துவந்த யுத்தம் செய்து தோற்றாள்.

                அவளைத் திருமணம் செய்துகொள்ள பாண்டுங் முயற்சித்தான்.

                அப்போது அவள் அவனிடம் ஒரு சவால் விட்டாள்.

                ஒரே இரவில் ஆயிரம் கோயில்களைக் கட்டிவிட்டால் அவனை மணந்துகொள்வதாகக் கூறினாள்.

                ஒத்துக்கொண்ட பாண்டுங், குறிப்பிட்ட நாளிரவில், ராட்சச அரசனை நினைக்கவும் அவன் தோன்றினான். அவனிடம் ஆயிரம் கோயில்களைக் கட்டச்சொன்னான்.

                அவ்வாறே அவன் தன்னுடைய கூட்டத்தின் உதவியோடு மிக விரைவில் கட்டினான்.

                இந்த விஷயத்தை அறிந்த லோரோ ஜோங்ராங் மிகவும் கலங்கிப் போனாள். ஆகவே அவளுடைய செவிலித்தாய் ஒரு தந்திரம் செய்தாள்.  விடிவதற்கு இன்னும் சற்று நேரம் இருக்கும்போது, கோயில்கள் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் இடத்துக்குக் கிழக்கே, வான விளிம்புக்கு  அப்பால், நிறைய வைக்கோல் போர்களை வரிசையாக அடுக்கி வைத்து,  நெருப்பு மூட்டச்செய்தாள். அதே நேரம் அங்கிருந்த நூற்றுக்கணக்கான பெண்களை விட்டு உரல்களில் நெல் குற்றச் செய்தாள்.
                இந்த ஆரவாரம், கூச்சல், நெருப்பு ஆகியவற்றைக் கண்ட சேவல்கள் அனைத்தும் ஆங்காங்கு கூவின.
                கிழக்கே வெளிச்சமாகச் சிவந்து தோன்றுவதையும், சேவல்கள் கூவுவதையும், பெண்கள் நெல் குத்தும் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்ட ராட்சசக்கூட்டம் 'விடிந்துவிட்டது' என்று எண்ணிக்கொண்டு மறைந்துபோயிற்று.

                பார்த்தான் பாண்டுங். தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது கோயில்கள்.
                ஒரே ஒரு கோயில்தான் பாக்கி.

                அப்போது உண்மையான சூரியன் உதித்தது.

                லோரோ ஜோங்க்ராங்கும் தோன்றினாள்.

                அவளுடைய உதடுகளில் நெளிந்த ஏளனப் புன்னகையைக் கண்ட பாண்டுங், தான் மிக மோசமாக ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வெம்பிச் சாபமிட்டான்.
                "ஏ லோரோ ஜோங்க்ராங்! உனக்கு ஆயிரம் கோயில்கள்தானே வேண்டும்? தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது கோயில்கள் ஏற்கனவே இருக்கின்றன. இதோ ஆயிரமாவது கோயில். அதில் நீயே மூர்த்தியாக நிற்பாயாக!" என்று தன் தவ வலிமை எல்லாவற்றையும் சேர்த்துப் பிரயோகம் செய்தான்.

                 ஆயிரமாவது கோயிலும் தோன்றியது. இளவரசன் பாண்டுங்கின் சக்தியாலும் சாபத்தாலும் கற்சிலையாக மாறிய லோரோ ஜொங்ராங் அதில் நின்றாள்.



ஆம்.
அந்தக் கோயிலில் லோரோ ஜோங்ராங்காக நின்றிருப்பவள் வேறு யாருமில்லை. சண்டி என்று தென்கிழக்காசியாவில் பெயர் பெற்று விளங்கும் ஸ்ரீதுர்க்கைதான்.
அவளைச் சுற்றியே அந்த அழகிய கதை புனையப்பட்டு விட்டது.
அல்லது......
உண்மையிலேயே நடந்த வரலாறு ஏதோ ஒன்று இருந்து......
யார் கண்டார்கள்?

அன்புடன்
ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU