மலாயாவின் ரப்பர் கரன்ஸி

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி





                அமெரிக்க வரலாற்றைப் படித்தவர்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும்.
                பதினாறாம் நூற்றண்டின் பிற்பகுதி - பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த அமெரிக்க மாநிலங்களில் அதிகாரபூர்வமான நாணயங்களின் பற்றாக்குறை ஏற்பட்டது.
                அப்போது வர்ஜீனியா மாநிலத்தின் முக்கிய விளச்சல் உற்பத்திப் பொருளாக விளங்கியது புகையிலை.
    வர்ஜீனியா புகையிலைதான் புகையிலையிலேயே தரத்தில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டது. ஐரோப்பாவில் மிகவும் கிராக்கியாகக் கருதப்பட்டது.
                நாணயத்துக்குப் பதில் புகையிலையைப் பண்டமாற்றுக்குப் பயன்படுத்தலானார்கள். ஒரு பொருளுக்கு இவ்வளவு பவுண்டு அல்லது அவுன்ஸ் அளவுள்ள புகையிலை என்பது கணக்கு. செல்லுமிடத்துக்
கெல்லாம் புகையிலையை எடுத்துக்கொண்டு செல்வதில் சிரமங்கள் இருந்ததால் அதற்குப் பதில் வேறொரு முறையைக் கண்டுபிடித்தார்கள்.
                புகையிலையைக் குறிப்பிட்ட இடங்களில் கொடுத்துவிடவேண்டும்.  Public Warehouse என்ற இடங்கள் இதற்கென்று இருந்தன. புகையிலையின் தரம், அளவு முதலியவற்றை வைத்து அவற்றிற்குரிய
மதிப்பை நிர்ணயிப்பார்கள்.
                அதை வைத்து இத்தனை காசு மதிப்புள்ள புகையிலை என்று கணக்கிட்டு அதற்குரிய சர்ட்டி·பிக்கேட்டைக் கொடுப்பார்கள்.
                இந்தச் சீட்டுகளை வைத்து அவற்றின் மதிப்பிற்கு ஈடான பொருள்களை வாங்குவார்கள்.
           Tobacco Currency என்பது இந்த முறை.

                இதே போல ஒரு முறை மலாயாவில் இருந்தது.

                மலாயாவில் ப்ரேஸில் நாட்டு ரப்பர் நன்கு விளைகின்றது என்பதைக் கண்டுபிடித்ததால், மலாயாவின் பல இடங்களில் காடுகளை அழித்து அங்கெல்லாம் பெரிய பெரிய ரப்பர் எஸ்ட்டேட்டுக்களை ஏற்படுத்தினார்கள்.

                அந்தக் காடுகளை அழிப்பதற்கும், ரோடு, ரயில்பாதை போடுவதற்கும், எஸ்ட்டேட்டுகளை ஏற்படுத்துவதற்கும் இன்னும் பல கடின உழைப்புகளுக்கெல்லாம் நம் தமிழர்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த எஸ்ட்டேட்டுகளிலும் தமிழர்கள் நிலையாகக் குடியேற்றப்பட்டார்கள். அவர்கள் ரப்பர் மரத்தின் பாலை வடித்து எடுத்துவருவதிலும் ரப்பர் மரங்களைப் பராமரிப்பது போன்ற தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.
                அவ்வாறே சில தலைமுறைகளாக வாழ்ந்து வந்தார்கள் நம் தமிழர்கள்.
    பல ஆண்டுகளுக்கு முன்னர், சில பெரிய ரப்பர் எஸ்ட்டேட்டுகளில் நாணயங்களுக்குப் பதில் ஒரு முறையைக் கடைபிடித்தார்கள்.
                ரப்பர் மரத்திலிருந்து வடியும் லேட்டெக்ஸ் என்னும் பாலைச் சேகரித்து, அந்தப் பால் உலர்ந்து கடினமாகி பெரிய பந்துபோல்  உருட்டப்பட்டு ரப்பர் சேமிப்பு நிலையத்தில் சேர்ப்பிக்கப்படும்போது, அதன் எடைக்கு ஏற்ற மதிப்புள்ள கூப்பனைக் கொடுப்பார்கள்.
                ரப்பர் விலையின் பருவத்தை அனுசரித்து அந்தக் கூப்பனின் மதிப்பு ஏறியும் இறங்கியும் இருக்கும்.
                அந்தக் கூப்பனை வைத்து அந்த எஸ்ட்டேட்டிலிருந்த கடைகளில்
அந்தக் கூப்பனின் மதிப்பளவுக்கு உரிய தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

                மேலேயுள்ள படத்தில் உள்ள அந்த ரப்பர் கரென்ஸிக் கூப்பன் பத்துக் கட்டி எடையுள்ள காய்ந்த ரப்பரின் மதிப்புக்குரியது.காணலாம்.
                ஒரு கட்டி என்பது அறுநூறு கிராம் எடைக்குச் சமம்.
                மேற்படி கூப்பன் ஆறு கீலோ ரப்பரின் விலைக்குச் சமமான பொருள்களை வாங்கப் பயன்படும்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU