தற்கால விளையாட்டுப் போட்டிகளில் நீள்நடைப் போட்டி ஒன்று
உண்டு. அதன் பெயர் மாரதான்(Marathon). சாதாரணமாக 26.2 மைல்கள்
நிற்காமல் ஓடும் போட்டி அது. அதற்கென்று சில விதிகள் இருக்கின்றன.
அது சரி. ஏனிந்த 26.2 மைல்? சும்மா 25 மைல் என்று ரவுண்டப் செய்யாமல்?
ஏன் மாரதான் என்ற பெயர்?
சுருக்கமாக......
ஆசியர்களுக்கு வரலாற்றின் முன்னோடிகள் எப்படி சீனர்கள்,
சுமேரியர்கள், திராவிடர்களோ, அதுபோலவே மேற்கத்தியார்களுக்குக்
க்ரெட்டர்களும்(Cretan) அவர்களின் வழிவந்த கிரேக்கர்களும்.
கிரேக்கர்களின் மக்கள்தொகை பெருகப்பெருக, அவர்கள் கிரீஸ்,
இன்றைய துருக்கி, இன்னும் பல தீவுகள் ஆகிய இடங்களுக்கெல்லாம்
பரவினார்கள். அவர்களின் பூர்வீகம், குடியேற்றம் ஆகியவற்றைக் கொண்டு
அவர்களை அயோனிய கிரேக்கர் என்றும் அக்கெயன் கிரேக்கர் என்றும்
காண்ட்டினெண்டல் கிரேக்கர் என்றும் வகைப்படுத்தியிருந்தனர்.
இவர்களெல்லாம் ஒரே இனத்தைச் சார்ந்திருந்தாலும்கூட
அவர்களுக்குள் எப்போதும் போட்டாபோட்டிகள் இருந்தன. அயோனிய
கிரேக்கர் பல தீவுகளிலும் துருக்கியாகிய அனட்டோலியாவிலும் இருந்தனர்.
அக்கெயன் கிரேக்கர்கள் தற்கால கிரீஸ்நாட்டில் வசித்தனர்.
அவர்கள் சங்க காலத் தமிழர்களைப் போன்ற நாகரிகச்சாயல்
உள்ளவர்கள். அவர்களும் நம்மைப்போல பல City States வைத்திருந்தார்கள்.
முப்பத்திரண்டு இருந்தன. அவற்றிற்குத் தலைமையாக ஸ்பார்ட்டா,
காரிந்த், அதென்ஸ் ஆகியவை இருந்தன. சில சமயங்களில் இவன்
அவனை அடித்து எல்லாருக்கும் தலைமையாவான்; இன்னொரு சமயம்
அவன் இவனை அடித்துத் தலைமையாவான். அந்த மாதிரி தலைமையை
அவர்கள் Hegemony என்றார்கள். எல்லாருக்கும் தலைமையாக உள்ளவனை
Hegemon என்பார்கள்.
நம்ம ஆட்கள் இல்லையா - பதினென் வேளிர், அதியமான், தொண்டைமான், மலையமான், பல கிழார்கள் இப்படி. இவர்களுக்கெல்லாம் தலைமையாக
முடியுடை வேந்தர் மூவர். அவர்களில் யாராவது ஒருவர் மற்ற
வேந்தர்களையும் வேளிர்களையும் அடித்துப்போட்டுவிட்டு எல்லாருக்கும் மேலாளராக விளங்கினார்கள், இல்லையா? அந்த ஆசாமி ஹெகமன்தானே?
இல்லையா பின்னே?
Trojan War உங்களுக்குப் பரிச்சயமோ என்னவோ, நிச்சயம்
Trojan Virus உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
இந்த ட்ராஜன் யுத்தம் ஒரு மகாப் பெரிய பயங்கர யுத்தம். அக்கெயன் கி¢ரேக்கர்களுக்கும் அயோனிய கிரேக்கர்களுக்கும் இடையே ஏற்பட்டது.
சொல்ல மறந்துபோனது: அயோனியா என்னும் சொல்லிலிருந்துதான்
யவன, ஜோனகா, சோனகர் என்னும் சொற்களெல்லாம் தோன்றின.
கிரேக்க ரோமர்களை நாம் 'யவனர்' என்றுதானே தமிழில் அழைக்கிறோம்?
கவனித்தீர்களா? 'ரோம கிரேக்கர்' என்று நான் குறிப்பிடவில்லை.
இரண்டு காரணங்கள்.
முதற் காரணம்: வரலாற்றில் ரோமர்களுக்கும் முன்னவர்கள் கிரேக்கர்கள்.
இரண்டாவது காரணம்: 'ரோம கிரேக்கர்' என்றால் மயிரடர்ந்த கிரேக்கர்,
ஜடாமுடி கிரேக்கரெல்லாம் நினைவுக்கு வருவார்கள். அதை வைத்து
எல்லேய் சார் ஏதாவது ஜோக் அடிப்பார்.
மாரதான் -#2
இன்றைய மத்திய கிழக்கில் சுமேரியர், பாபிலோனியர், அஸீரியர்
என்று ஒருவர் மாற்றி ஒருவர் அழித்துக்கொண்டு ஓய்ந்தபின்னர் இன்றைய
ஈரான் பிரதேசத்தில் வசித்த பாரசீகர் என்னும் இந்தோ ஆரியர்கள்
தலையெடுத்தனர். அவர்களில் ஸைரஸ் என்னும் பேரரசர் மேற்கிலும்
கிழக்கிலும் பாரசீகத்தை விரிவடையச் செய்தார்.
அயோனிய கிரேக்கர்களின் பல நாடுகள் பாரசீகத்துக்குள் வந்தன.
டார்யூஸ் என்னும் பேரரசரின் காலத்தில் ஒருமுறை அயோனியர்கள்
புரட்சி செய்தனர். அவர்களைத் தூண்டிவிட்டு உதவியும் செய்தவர்கள்
அதென்ஸ் நகரவாசிகள்.
இதை டார்யூஸ் மறக்கவேயில்லை.
ஒவ்வொரு நாளும் இரவு உணவின் முதற்கவளத்தை எடுத்து
வாயில் வைக்கப்போகும்போது ஒரு வேலையாளைத் தம்மிடம்,
"மன்னாதிமன்னா, அதென்ஸை மறந்துவிடாதீர்கள்", என்று சொல்லச்
செய்தார்.
அதென்ஸ் முதலிய நாடுகள் இருந்தால் அவை எப்போதும் தம்முடைய
சர்வ சக்கராதிபத்தியத்துக்கு கறையாகத் திகழும் என்று நினைத்தார்.
அவருடைய விருதுகள் ரொம்பவும் நீளமானவை:
"A Great God is AhuraMazda, Who created this earth,
Who created yonder sky, Who created man, Who created happiness
for man, Who made Darius king, one king of many, one lord of many.
I am Darius, King, The Great King, King of Kings,
King of countries containing all kinds of men, King in this
great earth far and wide, Son of Hytaspes, an Achemenian,
a Persian, an Aryan, having Aryan lineage."
ஆனால் அவர் போட்டுக்கலாம். இதுவும் போட்டுக்கலாம்.
இன்னமும் போட்டுக்கலாம்.
சும்மா வெறும் சோட்டா சோட்டா துக்டா ராஜாவெல்லாம்,
"ராஜாதிராஜ, ராஜமார்த்தாண்ட, ராஜகம்பீர, ராஜகுலதிலக,
வேட்டையன் மகாராஜா பராக், பராக், பராக்" என்று சொல்லவைத்துக்
கொள்ளும்போது துருக்கியிலிருந்து சீன பார்டர், மத்திய ஆசியா,
சீரியா, பாலஸ்தீனம், ஈராக், ஈரான், ஆ·ப்கனிஸ்தான், இந்தியாவின்
எல்லை ஆகியவையெல்லாம் அடங்கிய மாபெரும் சாம்ராஜ்யத்தை
ஏகசக்ராதிபதியாக ஆண்டுகொண்டிருந்த ஆள்.
போட்டுக்கப்படாதா, என்ன?
அதென்ஸ் முதலிய நாடுகளை ஒழித்துக்கட்டவேண்டும் என்று
சங்கல்ப்பம் பண்ணிக்கொண்டு பெரும்படையெடுத்து வந்தார்.
கடல்வழியாக ஒரு படையும் தரைவழியாக ஒரு படையும் வந்து
அதென்ஸ் அருகே இருந்த மாரதான்(Marathon) என்னும் பெருவெளியில்
பாடியிறங்கியது.
பன்மடங்கு அதிக எண்ணிக்கையிலிருந்த பாரசீகரை வெல்வது
முடியாத காரியம் என்றெண்ணி அதென்ஸ் உதவிகேட்டு தன்னுடைய
ஜன்ம விரோதியான ஸ்பார்ட்டா நாட்டுக்கு தூது அனுப்பியது.
தூதாகச் சென்றவர் ·பில்லிப்பிடெஸ்(Philippides) என்னும் இளைஞர்.
மலைகள் சார்ந்த கரடுமுரடான பிரதேசதில் நூற்று நாற்பது மைல்
தூரத்தை முப்பத்தாறு மணி நேரத்தில் ஓடி, கடந்து ஸ்பார்ட்டாவை
அடைந்தார். ஸ்பார்ட்டர்கள் வளர்பிறையின்போது பௌர்ணமியை
ஒட்டியே வரமுடியும் என்று சொல்லிவிட்டார்கள்.
இந்தச் செய்தியை உடனடியாக அதெனியர்களிடம் சொல்ல
வேண்டியிருந்தது. ஆகவே இன்னொரு நூற்றுநாற்பதுமைல் தூரம்
விரைந்து ஓடி வந்து அதெனியர்களிடம் சொன்னார்.
ஆகவே அதென்ஸ் தனியாகவே போரிடவேண்டி வந்தது.
மாரதான் போர்க்களத்தில் பல்லாயிரம் பேர் கொண்ட பாரசீகப் படையை
ஒரு திடீர்த் தாக்குதல் நடத்தி வென்று கடலுக்குள் தள்ளிவிட்டார்கள்.
இந்தப் போரில் ·பிலிப்பிடெஸ் கவசம் தரித்து ஆவேசமாகப் போர்
புரிந்தார்.
பாரசீகர்கள் தங்களுடைய கப்பல்களில் ஏறி அதென்ஸைக் கடல்வழியாகத்
தாக்கச ்சென்றார்கள்.
அதென்ஸ் நகரத்துக்குப்போய் மாரதான் வெற்றியையும் அறிவித்து
பரசீகரின் கடல்வழித் தாக்குதலைப் பற்றியும் எச்சரிக்கவேண்டியதாயிற்று.
ஆகவே ·பிலிப்பிடெஸே இருபத்தாறு மைல் தூரத்தில் இருந்த
அதென்ஸ் நகரத்துக்கு மிக விரைவாக ஓடிப்போய் தகவலைச்
சொல்லிவிட்டார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் அவர் அதென்ஸைச்
சென்றடைந்தார்.
ஆனால் முன்னூறு மைல்கள் கடினமான பாதையில் ஓடி,
கவசம் தரித்துக் கடுமையாகப் போர்புரிந்த களப்பில் ·பிலிப்பிடெஸ்
இறந்துபோனார்.
அவரைக் கௌரவிக்கும்பொருட்டு 1896-ஆம் ஆண்டு நடந்த
ஒலிம்ப்பிக் போட்டியில் முதன்முறையாக மாரதானிலிருந்து அதென்ஸ்
நகரத்துக்கு விரைவு நடைப் போட்டி ஒன்றை நடத்தினர். மொத்ததூரம்
24.85 மைல் தூரம். அதனை ஒரு தபால்காரர் 2மணி 58 நிமிடம்
50 வினாடிகளில் கடந்து போட்டியில் வென்றார்.
1908-ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்ப்பிக்கில் மாரதான் போட்டி
நடந்தது. இதன் பார்வையாளராக பிரிட்டிஷ் சக்கரவர்த்தி ஏழாம் எட்வர்ட்
இருந்தார்.
அவருடைய விண்ஸர் அரண்மனையிலிருந்து போட்டி முடியும்
இடம் வரைக்கும் 26 மைல் தூரத்தைத் தேர்வு செய்திருந்தனர்.
ஆனால் எட்வர்ட் மன்னர் இருக்கும் ராயல் பார்வையாளர்கள் மாடத்துக்கு
வந்து போட்டியை முடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி மேலும்
385 கஜதூரத்தையும் சேர்க்கச்செய்தனர்.
உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக பிரிட்டிஷ் அரசு விளங்கிய
காலமல்லவா?
அன்றிலிருந்து 26.2 மைலே மாரதான் போட்டிக்கு உரிய தூரம் என்று
ஏற்பட்டுவிட்டது.
மாரதான் -#3
மாரதான் ஓடுபவர்களுக்குச் சில பயிற்சிகள் இருக்கும் என்று சொன்னேன்.
மூன்று மணி நேரத்துக்கு மூச்சை ஒரே சீராக இழுத்துவிட்டுக்கொண்டு
கால்தடம் பதித்து, தான் அந்த மூன்று மணி நேரத்துக்குள் எடுத்துவைக்கும்
42000 காலடிகளை ஒழுங்காக எடுத்துவைப்பதிலும் முழுக்கவனத்தையும் செலுத்திக்கொண்டு நடக்கவேண்டும். விரைவாகவும் நடக்கவேண்டும்.
மூச்சைக் கணக்காக இழுத்துவிடவில்லையென்றால் நடை சுணங்கிவிடும். நேரக்கணக்கும் விட்டுவிடும். தசைகளில் லேக்டிக் அமிலம் அதிகரித்தால்
தசைகள் இழுத்துக்கொண்டுவிடும்.
இருபது மைல்கள் எப்படியோ கடந்துவிடலாம். ஆனால் அந்தக் கடைசி
ஐந்து மைல் நரகவேதனையாக இருக்கும்.
இருபத்தைந்தரை மைல் கடந்தாயிற்று என்னும்போது எப்படியாவது
இன்னும் கொஞ்சதூரம்தான்; வேகமாக நடந்து எப்படியாவது பந்தயத்தை முடித்துவிடவேண்டும் என்பதை மனதில் உறுதியாகக் கொண்டு நடப்பது
வழக்கம்.
அப்போது எடுக்கும் அந்த முயற்சியை 'The Second Wind' என்று
குறிப்பிடுவோம்.
Long Distance Running-இல் 'Second Wind in the Last Lap' என்று
சொல்வோம்.
அதுபோலத்தான்......
நாம் சில சமயங்களில் செய்ய நினைத்த காரியங்கள் மிகவும்
பிரம்மாண்டமானவையாக விளங்கும். இமாயலப் பிரயத்தனம் அல்லது
பகீரதப் பிரயத்தனம் என்று சொல்லப்படுவது போல் தோற்றமளிக்கும்.
இருப்பினும் மாரதான் ஓட்டத்தைப் போன்று ஊக்கமுடன், விடா
முயற்சியுடன், மனத்திட்பமுடன் "இன்னும் கொஞ்சம்....இன்னும்
கொஞ்சமே கொஞ்சம்....", என்றவாறு தன்னையே தானே ஊக்குவித்துக
்கொண்டு, "இன்னும் ஓர் அடி...அதற்கும் அடுத்தாற்போல இன்னுமோர்
அடி......இன்னும் கொஞ்ச தூரம்தான்....இதோ வந்துவிட்டாயிற்று......
இவ்வளவு தூரம் வந்து விட்டோம்....இப்போது விழுந்து படுத்துவிடக்
கூடாது. தொடர்ந்து ஒவ்வொரு அடியாக ஓடவேண்டும்....ஓடிவிட
வேண்டும்....ஓடி முடிக்கவேண்டும்....இதோ வந்தாயிற்று....இன்னும்
பத்து அடிகள்தாம்....ஐந்து...மூன்று...... இதோ ஒரே எட்டில்.....பந்தயம் முடிந்துபோயிற்று...."
அந்த Second Wind....அதுதான் முக்கியம். தேவையான சமயத்தில் நமக்கு ஊக்கமிருந்தால் அந்த Second Wind எப்படியும் தோன்றிவிடும்.
அது மாரதான் போட்டியாக இருப்பினும் சரி...அல்லது இணையத்தில்
ஒன்பதினாயிரம் மடல்கள் எழுதுவதாக இருப்பினும் சரி.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$