:-)
எனக்கும் பலவகையான தேடல்கள் உண்டு. அதில் ஒன்றைச் சொல்கிறேன்.
2006-ஆம் ஆண்டில் ஒருநாள்.....
கோலாலும்ப்பூரில் உள்ள Amcorp Mall என்னும் இடத்துக்கு மனைவியுடன் சென்றேன். அதுதான் முகுந்தராசரின் அலுவலகம் இருக்குமிடம். அங்கு மலாக்கா உணவகம் ஒன்று உண்டு. அங்கு தோம்யாம் என்னும் ஸ¥ப் கிடைக்கும். 'கண்ணீர்விட்டோ வளர்த்தோம், சர்வேசா' என்ற மாதிரியில் கண்ணீர்விட்டுத்தான் சாப்பிடவேண்டும். அந்த posh இடத்தில் அதன் விலையை நினைத்தாலும் கண்ணீர் வரும். அத்துடன் இன்னொன்றும் உண்டு.
உரைப்பு!
அவ்வ்வ்வ்வ்வளவு உர்ர்ர்ர்ர்ரைப்ப்ப்ப்பு! நினைத்தாலேயே உரைக்கிறது.
மனைவிக்கு மிகவும் விருப்பமான அயிட்டம்.
சாப்பிட்டுவிட்டு அப்படியே புத்தகக்கடை அங்கு இங்கு என்று திரிந்துகொண்டிருந்தோம்.
சுப்பர்மார்க்கெட்டுக்கு வந்தோம். மனைவி உள்ளே சென்று வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
நான் அங்கு ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு ஜர்னல் எழுதிக் கொண்டிருந்தேன்.
அப்போது எங்கிருந்தோ இன்னொரு பாட்டுக் கேட்டது.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அனெக்கெ க்ரோன்லொஹ் Aneke Gronloh என்னும் டச்சு/ஜாவாக்காரி பாடிய பாட்டு.
'Boeroeng Kaka Tua' என்னும் பாட்டு. மிகவும் பிடித்தபாட்டு.
![]()
முப்பதாண்டுகளுக்கு முன்பிருந்து அந்தப் பாட்டைத் தேட ஆரம்பித்தேன்.
ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. பாட்டை மறந்துகூட ரேடியோவில் போட்டுவிடமாட்டார்கள்.
அப்படிப்பட்ட பாட்டு.
திடீரென்று பாட்டு முடிந்துவிட்டது.
தற்செயலாகத் திரும்பிப்பார்த்தால் ஒரு சீனர் ஒரு பழைய ரெக்கார்ட் ப்லேயரிலிருந்து இசைத்தட்டு ஒன்றை எடுத்துப் பைக்குள் வைத்துக்கொண்டிருந்தார்.
வெகுவேகமாகச் சென்று, அதை விற்பதற்காக வைத்திருக்கிறாரா என்று கெட்டேன்.
"இப்போதுதான் வாங்கினேன்", என்றார்.
"இதெல்லாம் இப்போது கிடைக்கிறதா?"
"சுற்றிப்பாரும். இங்கு ஒவ்வொரு ஞாயிறன்றும் பழைய ரெக்கார்ட், புத்தகம், காமிக்ஸ் புத்தகம், பழைய சாமான்கள் எல்லாம் கிடைக்கும். சற்றுமுன்னர்தான் இந்த ரெக்கார்டை வாங்கினேன். உம்மிடம் ப்லேயர் இருக்கிறதா?"
"இல்லை"
"பரவாயில்லை ஸீடீ வைத்திருக்கிறான். சற்றுமுன்னர்தான் கடையைக்கட்டிக்கொண்டு போய்விட்டான். அடுத்த ஞாயிறன்று வந்து பாரும்".
எத்தனையோ ஆண்டுகளாக இதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். நான் என் இளமைக் காலத்தில் கேட்ட, பாடிய பாட்டு இது. சந்தோஷமாகக் கவலையே இல்லாமல் பொறுப்பில்லாமல் காலேஜில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. இப்போது எத்தனையோ இனிய பாட்டுக்கள் வந்துவிட்டாலும் அந்தப் பாட்டுகளுடன் சம்பந்தப்பட்ட அந்த உணர்வு வரவில்லை. இது மட்டுமில்லை. Ever Green Tree, Banana Boat, Island in the Sun, Young Ones, Sukiyaki, Amor, Que Sera Sera, Bengawan Solo போன்ற பாட்டுக்களும் அப்படித்தான்.
மிகவும் ஏமாற்றத்தோடு சற்று உரக்கவே, "சே. எத்தனை வருசமாகத் தேடிய பாட்டு. கொடுத்து வைக்கவில்லை." என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
திடீரென்று அந்த சீனர் இன்னொரு சீனனைக்கூட்டிவந்தார்.
வந்தவன், "க்ரோன்லோஹ் பாட்டை நீர் தேடிக்கொண்டிருக்கிறீர் என்று கேள்விப்பட்டேன். வேண்டுமா. விலை அதிகம்".
"வேண்டும்".
"அப்படியானால் காருக்கு வா. டிக்கியில் வைத்துவிட்டேன். எடுத்துத் தருகிறேன்".
எடுத்துத் தந்தான்.
அனெக்கெ க்ரொன்லொஹ் பாடிய இந்தோனீசியப் பாட்டுக்கள் கொண்ட ஸீடீயன்றுடன்
அந்த அம்மாள் பாடிய ஜெர்மன் மொழிப் பாட்டுக்கள் அடங்கிய இன்னொரு ஸீடீயும். இரண்டும் விலை 25 + 35 = 60 ரீங்கிட்.
அப்படியே Harry Bellafonte பாட்டுக்களும் கொண்டுவருமாறு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தேன்.
அந்தப் பாட்டுக்கு என்ன அப்படியரு விசேஷம்?
இருக்கிறது.
சொல்லட்டுமா?
அந்தப் பாட்டுக்கு என்ன விசேஷம் என்பதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன்னால் போகவேண்டும்.
அப்போது மதுரை மருத்துவக்கல்லூரியில்படித்துக்கொண்டிருந்த சமயம். ·பைன் ஆர்ட்ஸ் கழகம், உரையாற்றல், நாடகம் போன்ற extracuricular acitivities-இல் அதிக ஈடுபாடு. எங்கள் கல்லூரியில் இசைக்குழு அப்போது இல்லை. தனித்தனி ஆவர்த்தனமாக ஒவ்வொருவரும் மௌத் ஆர்கன், கிட்டார், வீணை என்று வாசித்தனர்.
அவ்வமயம் ஒரு கோடை விடுமுறையில் மலேசியாவுக்கு வந்தேன்.லீவு முடிந்து தமிழகம் திரும்பும்போது எங்கள் தெருக்கோடியில் இருந்த இசைக்கருவிகள் விற்கும் கடையில் அழகிய மௌத் ஆர்கன் ஒன்றையும் இன்னொரு இசைக்கருவியையும் வாங்கினேன். மௌத் ஆர்கனின் பெயர் Hohner's Harmonica. sensitive- மிகவும் ஆன கருவி. உதட்டில் வைக்காமலேயே சற்றுத் தள்ளிப் பிடித்து ஊதினால்கூட, கீழ் ஸ்தாயி சுவரங்கள் ஒலிக்கும். காற்றில் வேகமாக விசிறினாலும்கூட ஒலிக்கும்.
![]()
ஜெர்மன் இசைக்கருவிக் கம்பெனியன்று பலகாலமாகப் புகழ்பெற்று விளங்கியது. Hohner என்று பெயர். அது ஒரு புதியவகையான இசைக்கருவியன்றை வெளியிட்டிருந்தது. அதுவும் ஒரு reed instrument-தான். ஆர்மோனியம், அக்கார்டியன் ஆகியவற்றில் ரீட் இருக்கும். காற்றைத் துருத்தி மூலம் அழுத்தி ரீட்களில் செலுத்தவேண்டும். மௌத் ஆர்கனிலோ நேரடியாகக் காற்றை ஊதி ரீட்களில் செலுத்துகிறோம். மௌத் ஆர்கனில் கீ-போர்ட் என்னும் விரல்-பலகை கிடையாது. ஆர்மோனியம், ஆர்கன், அக்கார்டியன் ஆகியவற்றில் இருக்கும்.
இந்த இசைக்கருவியில் கீ-போர்டும் உண்டு. கறுப்பும் வெளுப்புமாக இருபத்தைந்து கட்டைகள் இருக்கும். ஒரு மௌத்பீஸ் என்னும் சீவாளி உண்டு. அதனை மாற்றிக்கொள்ளலாம். ஊதி, கீபோர்டில் விரல்களால் கட்டைகளை அழுத்தி வாசிக்கவேண்டும். மௌத் ஆர்கன் மாதிரியில்லை; காற்றை உள்ளிழுக்கும்போதும் ஓசை வராது. ஊதினால்தான் உண்டு. Alto, Soprano என்னும் இரண்டு வகைகள் உண்டு.
அந்த இசைக்கருவியின் பெயர் Melodica.
தந்தையாருக்கு இசைப்பது பிடிக்காது. ஆகவே எப்படியோ வாங்கிக்கொண்டுவந்துவிட்டேன்.
கப்பல் பயணம் அப்போதெல்லாம் ஆறுநாட்கள். கப்பலில் வரும்போது கொஞ்சம் லேசாக வாசித்துப ்பார்த்துக்கொண்டேன். டார்மிட்டரி டிக்கெட்; மிகவும் நெருக்கடியான இடம்.
சென்னை வந்து சேர்ந்ததும் இமிகிரேஷன், கஸ்டம்ஸ் என்று பல தொல்லைகள். கஸ்டம்ஸில் மெலோடிக்காவை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்தார் அந்த அதிகாரி.
"இது என்ன?"
"மெலோடிக்கா; இசைக்கருவி."
"முந்நூறு பெர்ஸெண்ட் தீர்வையாகும். என்னவிலை?"
விலையைக் குறைத்துச ்சொன்னேன். சொந்த உபயோகத்துக்கு என்றேன்.
"அப்படியா? வாசித்துக் காண்பி."
எனக்கு ஒரே அதிர்ச்சி.
"இங்கேயா?"
"ஆமாம். Why not? இதிலிருந்து தெரிகிறதல்லவா - நீ இதை விற்பதற்கு எடுத்துச ்செல்கிறாய்."
இந்த ஆளுடன் போராடமுடியாது என்று தெரிந்ததும், மிகவும் பந்தாவுடன் மெலோடிக்காவை உதட்டில் பொருத்தி வாசிக்க ஆரம்பித்தேன்.
அப்போதுதான் ஒரு பயங்கர panic-ஆன பயம்.
"அதென்ன பயங்கரமான பயம்?", என்பீர்கள். அதெல்லாம் அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருந்தால்தான் தெரியும்.
என்ன பாட்டு வாசிப்பது? அதை வாங்கியே ஏழுநாட்கள்தாம் ஆகின்றன. கப்பலின் டார்மிட்டரியில் வாசிக்கத் தோதில்லை.
அப்புறம்?
அப்போதுதான் இந்தோனீசிய/டச்சுப் பாடகி அனெக்கே க்ரோன்லொஹ் Aneke Gronloh ஞாபகம் வந்தது. அவளுடைய Boeroeng Kaka Tua என்னும் பாட்டு அப்போது மிகவும் பிரபலமாக விளங்கியது. பாடத்தெரியும். அடிக்கடி பாடிகொண்டிருப்பதும் உண்டு.
அந்தப் பாட்டின் சுவரங்கள் நினைவிலிருந்தன. ஆகவே எடுத்த எடுப்பில் அதை வாசிக்க ஆரம்பித்தேன்.
கஸ்டம்ஸ் ஹால் முழுமையும் திரும்பிப்பார்த்தது.
பழக்கமில்லாத இசை. அதுவும் புரோங் காக்காத்துவாவுக்குத் தாளம் மிக மிக அவசியம். அதில்லாமல் அவ்வளவு சுரக்காது. ஏதோ அமானுஷ்ய ஓசையும் ஒலியுமாக இருக்கிறதே என்ற வியப்பு அங்கு நிலவியது.
கஸ்டம்ஸ் ஆ·பீஸருக்கு கஸ்டமாக இருந்தது. அவரையே எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
"போதும். போதும். Does it always sound like that?" என்று கேட்டார்.
ஒன்றும் பதில் சொல்லவில்லை. முந்நூறு பெர்ஸண்ட் நினைவிலிருந்தது.
பேசாமல் அதைப் பெட்டிக்குள் தூக்கிப்போட்டு பெட்டியை அவசர அவசரமாக மூடி, நிமிர்த்திக் கையில் கொடுத்தார். திரும்பியே பார்க்காமல் வந்துவிட்டேன்.
இப்படியாகத்தானே அனெக்கெ க்ரோன்லொஹ்வின் 'புருங் காக்காத் துவா' பாட்டு மெலோடிக்காவைக் காப்பாற்றித் தந்தது.
இதற்கு இன்னும் ஒரு வால் பாக்கியிருக்கிறது.
சொல்லட்டுமா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
| NEXT |