TAMILIAN SAGAS


சில நவீனகால அற்புதங்கள்

கடாரத்துப் போரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி


மதுராந்தகம் பெரிய ஏரியைப் பார்வையிடுவதற்காக ஓர் ஆங்கிலேய அதிகாரி வந்திருந்தார். அவருக்கு இந்தியர்கள், இந்துக்கள் என்றாலேயே மிகவும்
இளக்காரம்.


ஒருநாள் பெரிய மழை பெய்தது. மதுராந்தகம் பேரேரியின் கரைகள் உடையக்கூடிய
அபாய நிலையில் இருந்தது. அந்தப் பெரும் மழையிலும் அந்த ஆங்கிலேய அதிகாரி
ஏரியைக் கவலையுடன் பார்வையிட்டார்.

அப்போது அங்கு இருந்தவர்களிடம் மிகவும் இளக்காரமாக, "நீங்கள் கோயில் கட்டி
வணங்குகிறீர்களே. அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க
வேண்டியதுதானே?" என்று சொன்னாராம்.

அதற்கு அங்கிருந்த இன்னொருவர், "நம்பிக்கையுடன் வணங்கி எங்கள் ராமரைக்
கேட்டுக்
கொண்டால் அவர் வந்து ஏரியைக் காப்பார்", என்றாராம்.

வெள்ளம் மேலும் மேலும் அதிகமாகி, கரை உடையும் கட்டம் வந்துவிட்டது.

ஆனால் கரை உடையவில்லை. தண்ணீரோ மகிர்ந்து, அலையடித்துக்கொண்டு இருந்தது.

தண்ணீர் ஏன் பெருகி ஏரியைவிட்டு வெளியேறவில்லை? ஏன் ஏரியின் கரை உடையவில்லை என்பது பெரிய மர்மமாக இருந்தது.

அப்போது கண்ணைப் பறிக்கும் அளவுக்குத் திடீரென்று மின்னல் வெட்டியது.

அந்த வெளிச்சம் அடங்கும்போது அந்த ஆங்கிலேயர் ஒரு காட்சியைக்கண்டார்.

ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும்
வில்லேந்தியிருந்தார்கள். ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி
கண்டார். அடுத்தாற்போல் அக்காட்சியைக் கண்ட அந்த ஆங்கிலேய அதிகாரி,
தரையில் மண்டியிட்டு விழுந்து ஏதேதோ சொல்லிச் சொல்லி அரற்றினாராம்.

அதன்பின்னர் அங்கிருந்த ராமர் கோயிலுக்குத் திருப்பணிகள் பலவற்றை அவர் செய்தாராம்.

அந்த ராமர் கோயிலின் பெயர் 'ஏரி காத்த பெருமாள்'.

அன்புடன்

ஜெயபாரதி

========

#2 சம்பவத்துக்கு மதுரைக்குச் செல்லவேண்டும்.

கடைசி பாளையக்காரர்கள் புரட்சி 1801-ஆம் ஆண்டில்
சிவகங்கைச்சீமையின் மருது சகோதரர்களின் தோல்விக்குப் பிறகு
முடிந்துபோனபிறகு, தமிழ்நாடு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின்
நேரடி ஆட்சிக்கு வந்துவிட்டது.

அதுவரை ஆர்க்காட்டு நவாபின் கீழ் இருந்து வந்ததாகக்
கருதப்பட்ட தமிழ்நாடு கைமாறியது. ஆர்க்காட்டு நவாப் முகம்மதலி
வலமும் இடமுமாக வாங்கிய கடன்களைக் காரணம் காட்டி, நவாபுக்குக்
கம்பெனி அல்வா கொடுத்துவிட்டது.

பாவம், நவாப் முகமதலி செய்த அழும்புகள் அவருடைய
மகனாகிய நல்ல தமிழறிஞராகிய உம்தத் உல் உமராவின் தலையில்
விடிந்தது. அவர்தான் ஆர்க்காட்டு நவாப்களின் வாலாஜா வம்சத்தின்
கடைசி முழு நவாப். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் விஷம்
வைத்துக்கொல்லப்பட்டபின், தமிழ்நாடு உம்தத்துல் உமாராவின்
தம்பியின் வாரிசுகளுக்குச் சென்றுவிட்டது. அவர்கள் பென்ஷன்,
அலவன்ஸ் போன்றவற்றை வாங்கிக்கொண்ட்டு பெயரளவில் நவாபாக
வம்பத்தபாடாக வாழ்ந்துவந்தனர்.

கம்பெனியின் நிர்வாகம் சென்னையில் இருக்கும் போர்ட்,
கௌன்ஸில், கவர்னர் ஆகியோரின் கீழிருந்தது. தமிழகம் முழுமையும்
ஜில்லாக்கள்(Zilla) எனப்படும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

அவற்றுள் மதுரை ஜில்லாவும் ஒன்று. அது அந்தக்காலத்தில்
தற்போதைய மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை
ஆகியவை அடங்கிய பெரும் நிலப்பரப்பு.
அதன் நிர்வாகத் தலைமை நகரம் மதுரை.

ஒவ்வொரு ஜில்லாவும் ஒரு கலெக்டர் ஆட்சியில் இருந்தது.
புதுக்கோட்டை, தஞ்சை போன்ற சமஸ்தானங்கள் அந்தந்த மன்னர்களால்
ஆளப்பட்டன. ஆனால் அங்கெல்லாம் மேற்பார்வையாளராக Resident
என்னும் அதிகாரி இருப்பார்.

மதுரையைப் பல கலெக்டர்கள் ஆண்டிருக்கின்றனர்.

ஆனாலும் அவர்களில் மிகவும் பிரபலமாக ஆண்டவர்
ரௌஸ் பீட்டர் Rous Peter எனப்படும் ஆங்கிலேயர். அவர் 1812 -இலிருந்து
1828 வரைக்கும் மதுரையின் ஆட்சியில் இருந்தார்.

அந்தக் காலத்துக் கலெக்டருக்கு பெருமளவுக்கு அதிகாரம்இருந்தது. கிட்டத்தட்ட அரசர்களைப்போலவே அவர்களும் இருந்தனர்.
'அரசர்களைவிட' என்றும் கூறலாம். ஏனெனில் மகாராஜாக்கள்கூட
அவர்களைச் சந்திக்கும்போது காத்திருந்து, வரச்சொல்லும்போது சென்று,
மரியாதையாகத்தான் சந்திக்கவேண்டும். "நீதான் ஜேக்ஸன் துரை என்பவனோ?" என்பதெல்லாம் சினிமாக்கதையில்தான் வரும். உள்ளபடிக்கு நாம்தான் அவர்களின் தொரசாணிகளுக்கு 'மஞ்ஞ்ஞ்ச்ச்சளறைத்து'க் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

ரௌஸ் பீட்டர் பல நல்ல சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை
நிறைவேற்றினார். அதுவரைக்கும் மக்கள் நீண்டகாலமாக அனுபவித்திராத
நீதி, பாதுகாப்பு, நிறைவு ஆகியவற்றை ஏற்படச்செய்தார். அடிக்கடி அவர்
மதுரையின் வீதிகளில் தனியாகச் சென்றுவருவார்.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அநீதி, நிச்சயமற்ற தன்மை, அச்சம், கொள்ளை, நோய், வறுமை, படையெடுப்பு, பாதுகாப்பற்ற தன்மை போன்ற நிலமைகளில் ஓர் இருண்ட காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாக இருந்தது.
பழம்பெரும்பாண்டிய மன்னர்களின் வழியில் மதுரையின் சிறப்புமிக்க காலங்களை மீண்டும் கொண்டுவருகிறார் என்றே மக்கள் பூரணமாக நம்பினர்.
ஆகவே ரௌஸ் பீட்டரை 'பீட்டர் பாண்டியன்' என்று சிறப்புப்படுத்தி அழைத்தனர்.
அவரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து அம்மானைகள்இயற்றப்பட்டன.

ஒருநாள் இடி மின்னலுடன் பேய் மழை பெய்துகொண்டிருந்தது.
இரவு நேரம்.
அப்போது ஓர் அழகிய சிறுமி, பீட்டரின் பங்கலாவுக்குள் நுழைந்தாள். நுழைந்தவள் பீட்டரின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டுவெகுவேகமாக பங்கலாவை விட்டு வெளியில் கூட்டிவந்தாள்.
பங்கலாவிலிருந்து சற்றுத்தொலைவுக்குச் சென்றதும். மிகப் பெரிய
மின்னலடித்து, அந்த பங்கலாவின்மீது இடிவிழுந்தது.
அந்த பங்கலா தீப்பிடித்தவாறு இடிந்து விழுந்தது.
திகிலும் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த பீட்டர், அந்தக் காட்சியைத்
தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
சற்று பிரக்ஞை வந்தபோது அச்சிறுமியைத் தேடினார். அவளோ
வெகுவேகமாகப் போய்க்கொண்டிருந்தாள்.
அவளைப் பின்பற்றிச் சென்றார். எவ்வளவு விரைவாக அவர் நடந்தாலும்
அந்தச் சிறுமி ஒரு குறிப்பிட்ட தொலைவில் முன்னால் சென்றுகொண்டே
யிருந்தாள்.
கடைசியில் அவள் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சென்று மறைந்து
விட்டாள்.
மீனாட்சியம்மன்தான் சிறுமியாக வந்து தன்னைக் காப்பாற்றினாள்
என்று நம்பிய ரௌஸ் பீட்டர், நன்றியறிதலுடன் மீனாட்சியம்மனுக்காகப்
பல நகைகள், ஆபரணங்கள் போன்றவற்றை நன்கொடையாகக் கொடுத்தார்.
அவற்றில் ஒன்றைத்தான் நீங்கள் கீழ்க்கண்ட படத்தில் பார்க்கிறீர்கள்.



அன்புடன்

ஜெயபாரதி

==================

RETURN TO MAIN MENU