முகராசி
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
அக்பர்
அக்பரின் அரண்மனையில் ஒரு அடிமை வேலையாள்
இருந்தான். அவன் விகாரமான உருப்படைத்தவன்; மேலும் அவனை மற்றவர்கள்
ராசியற்றவன் என்றும் சொல்லிவந்தார்கள்.
ஒரு நாள்,அக்பரின் அந்தரங்க அறையைச்
சுத்தம் செய்யும் ஆட்கள் வரவில்லை.
ஆகவே அவனையே வேறு வழியில்லாமல் சுத்தம் செய்ய அனுப்பினார்கள். ஆனால்
ஒரு நிபந்தனை.; விடியுமுன்னதாக, அக்பர் இன்னும் தூங்கிக்
கொண்டிருக்கும்போதே, அவன் சந்தடியில்லாமல் சுத்தம் செய்துவிட்டு
வந்துவிடவேண்டும்.
ஆனால் அன்று அவன் அறையை சுத்தம் செய்யும்போது,
அக்பர் வழக்கத்திற்கு மாறாக விழித்துவிட்டார். அப்போது அவன்
அவருடைய கால் மாட்டுப் பக்கமாக நின்றுகொண்டிருந்தான்.
கண்களைத் திறந்ததும் அவனைத்தான்
அக்பர் முதலில் பார்த்தார்.
"என்னடாயிது! இவன்வந்து இங்கு நிற்கிறானே?
என்னவெல்லாம் ஆகுமோ, தெரியவில்லையே!" என்ற குழப்பத்துடன் அக்பர் எழுந்தார்.
படுக்கையறையிலிருந்து வரும்போதே, வேகமாக
ஒரு அரண்மனை அதிகாரி வந்து, பஞ்சாபிலிருந்து தூதுவர் வந்திருப்பதாகச்
சொன்னர்.
அவசரமான செய்தி. நேரே ஆலோசனை மண்டபத்துக்கே
சென்றுவிட்டார்.
பாரசீக மாநிலத்தின் பிரபு ஒருவன் தன்னுடைய
படைகளுடன் பஞ்சாபுக்கு அருகில் நெருங்கி விட்டதாகவும், தடுத்துநிறுத்த
வேண்டிய படை காந்தாரத்தில் வேறு போர்நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும்
சொன்னான். அங்கு மற்றவர்க¨ளையும் அழைத்துவரச்செய்து,
முல்த்தானியப் படைகொண்டு எதிரிகளைத் தேக்கி நிறுத்தி, ரஜபுத்திரப்
படைகளைவிட்டு தாக்க ஏற்பாடு செய்தார்.
இதில் மூன்றுமணிநேரம் ஆகிவிட்டது. அதற்குள்
வங்கத்திலிருந்து செய்தி; சில படைத்தலைவர்கள் புரட்சி செய்கிறார்கள்.
மிதுனபுரியைப் பிடித்துவிட்டார்கள். பாட்னாவின் ஆளுனருக்குத் தகவல் அனுப்பி
அதனை மீட்க ஏற்பாடு செய்தார். ஆயிற்று இன்னும் இரண்டு மணிநேரம்.
அடுத்து, அகமத்நகரின் படைத்தலைவன் வந்தான்.
அந்நாட்டின் அரசி சாந்த் பீப,£ கோட்டைக்குள் இருந்துகொண்டு, முற்றுகையிட்டிருந்த
மொகலாயப் படைக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறாள். இன்னும் ஒன்றரையாண்டுக்கு
அந்தக் கோட்டை தாக்குப்பிடிக்கும். மொகலாயப் படை இன்னும் ஒரே வாரந்தான்
அங்கு இருக்கமுடியும். கோடைக்காலம்; தண்ணீர் கிடைப்பது அரிதாகயிருந்தது.
ஆகவே அக்பர் மந்திராலோசனை செய்து ஒரு
சதித்திட்டத்தை உருவாக்கினார்.
மதியம் கழிந்து விட்டது . இன்னும் சாப்பிடவுமில்லை.
காலைக்கடன்கள்கூட ஏதும் நிறைவேற்றவில்லை.
திடீரென்று அந்தப்புரத்திலிருந்து செய்தி.
"ஆலம்பனா! பாத்ஷா அவர்களின் பேரர் காய்ச்சலாக
இருக்கிறார். காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. உங்களை அழைத்தார். ஷாஹென்ஷா
உடனடியாக அந்தப்புரத்திற்குச் செல்லவேண்டும்".
ஆகவே உடனடியாக சென்று, பேரன் அக்பரின்
அருகில் அவனுடைய கையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார்.
அதன்பின்னர், இரவு நெருங்கும்வேளையில்
வெளியில் வந்தார். அறைக்குச் சென்று கொண்டிருக்கும்போது, வயிற்றில் நெருப்பு
எரிவது போன்ற உணர்ச்சி£ ஏற்பட்டது. ஏதும் உண்ணாமல் இருப்பது அப்போதுதான்
நினைவுக்கு வந்தது.
படுக்கையில் படுத்துக்கொண்டு, வைத்தியர்
வந்து சென்றபின்னர், யோசிக்கலானார்.
"காலையில் அந்த விடியாமூஞ்சிப்பயலின்
முகத்தில் அல்லவா முழித்தோம்! அதனால்தானே இன்று அத்தனை கோளாறுகள் ஏற்பட்டன!".
என்று எண்ணினார்.
"அந்த மாதிரியான துரதிருஷ்டப்பிறவியை
உலகில் விட்டுவைத்தலாகாது. அவனால் இன்னும் பலருக்கு துன்பங்கள் ஏற்படும்.
ஆகவே அவனை ஒழித்துவிடுவதே நல்லது", என்று அடுத்து முடிவு செய்து, வீரர்களை
அழைத்து, அவனைப் பிடித்து, தலையை வெட்டிவிடுமாறு ஆணையிட்டார்.
அவனை அவ்வாறே பிடித்து கொலைக்களத்திற்கு
இட்டுச்செல்லும்போது, அக்பரைப் பார்க்க அமைச்சர் பீர்பால் அந்தப் பக்கமாக
வந்துகொண்டிருந்தார்.
அவர் வந்து விஷயத்தை அறிந்தார்.
திருப்பி அவனை அழைத்துக்கொண்டு
அக்பரின் முன் சென்றார்.
"ஷாஹென்ஷா! தன் தலையையே இழக்கும் அளவுக்கு
இவன் செய்த குற்றமென்ன?"
"அவன் மிகவும் துரதிருஷ்டப்பிறவி;
அவனால் உலகமக்களுக்குத் துன்பம். அவன் முகத்தில் முழித்தாலேயே அசம்பாவிதங்கள்
நிறைய ஏற்படுகின்றன!" என்று சொல்லி தன்னுடைய அன்றைய அனுபவங்களை எல்லாம்
எடுத்துரைத்தார்.
பீர்பால் தலையை ஆட்டிக்கொண்டு, ஒரு தினுசாகச்சிரித்தார்.
"இவ்வளவும் நடந்திருக்கிறது. என்னைய்யா
இளக்காரமாக இளிக்கின்றீர்?"
"ஆலம்பனாவின் மேன்மையான அனுமதியுடன்
இந்த அடிமையை ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கவிரும்புகிறேன். அதன்பின்னர், ஷாஹென்ஷாவின்
நோக்கப்படி செய்துகொள்ளலாம். பெரிய மனது செய்து பாத்ஷா அவர்கள் அனுமதிக்கவேண்டும்".
"சரி. சரி. கேளும். கேளும். என்னத்தைக்
கேட்டு,என்னத்தைக் கிழிக்கப் போகிறீர்?" என்று 'என்னத்த கண்ணையா'
பாணியில் பீர்பாலைப்பார்த்து அக்பர் சொன்னார்.
பீர்பால் அடிமையைப் பார்த்து,
"இன்று காலையில் கண்விழித்தவுடன் யார் முகத்தில்
முழித்தாய்?"
"பிரபுவே! இன்று விடியுமுன்னரே, ஆலம்பனாவின் அறையைச்
சுத்தம் செய்யச்சொல்லி உத்தரவாகியிருந்தது. ஆகவே பாதுஷாவின் அறைக்கு
அருகிலேயே சிறிது நேரம் தூங்கிவிட்டு, கண் விழித்ததும் நேராக ஆலம்பனாவின்
அறைக்குச் சென்று சுத்தம் செய்துகொண்டிருந்தேன். ஷாஷென்ஷாவின்
கால்மாட்டுப் பக்கம் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அவர் எழுந்திருக்கும்
சத்தம் கேட்டது.
திடுக்கிட்டு பயந்து போய் அந்தப் பக்கமாகப் பார்த்தேன்.
ஆலம்பனா அவர்கள் முறைத்துப ்பார்த்துக் கொண்டிருப்பதைக்கண்டேன்."
"ஷாஹென்ஷா! பார்த்தீர்களா? இந்த அடிமையின் முகத்தில்
விழித்ததில் உங்களுக்கு இந்த ஒரு நாள்மட்டுமே ஏதோ சில கோளாறுகள்
ஏற்பட்டன. ஆனால் இந்த பரம ஏழை அடிமையோ, உங்கள் முகத்தில் விழித்த முகூர்த்தம்,
தன் தலையையே இழக்கப்போகிறான்!"
அக்பரின் முகம் வெளுத்தது.
"ஷாஹென்ஷா! இந்த பூலோகத்தில் ஒரு மனிதனால்
இன்னொரு மனிதனின் உயிரைப் பறிக்கமுடியும். ஆனால் உயிரைக் காப்பது
என்பது மன்னனால்தான் முடியும். அதுவும்கூட அரசதர்மமாகும்.
கடமை.
ஆலம்கீரான தங்களைப் படைத்த அதே இறைவன்தான்
ஏழைக் குரூபி அடிமையாகிய இவனையும் படைத்துள்ளான்.
இறைவனுடைய படைப்புகளுக்கு உரிய நோக்கத்தை அவன் ஒருவனே அறிவான். அவனுடைய
படைப்பில் ஏதும் குறை கண்டுபிடிப்பது, கேவலம் பல்கோடி நூறாயிரம் உயிர்களில்
ஒன்றாக விளங்கும் நம்மால் இயலுமா?"
அந்த அடிமைக்கு நல்ல பரிசில்களும் வசதியான
வீடும் வழங்கி, பாத்ஷா அக்பர் அவனைத் தன்னுடைய அந்தரங்க அறையின்
வேலையாட்களில் ஒருவனாக ஆக்கிக்கொண்டார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU