நான்கு சிங்கங்கள்


டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                    சஹாராவை ஒட்டிய இன்னொரு பாலைவனம். வெய்யில் கொல்லென்று அடித்துக ்கொண்டிருந்தது. தமிழ்நாட்டிலெல்லாம் வெய்யில் சுள்ளென்று அடிக்கும். அது சஹாரா அல்லவா? கொல்லென்றுதான் அடிக்கும்.
                    அங்கு ஒரு மாபெரும் சிலை. படுத்திருக்கும் சிங்கத்தின் சிலை.
                    ஆனால் அதற்கு இருப்பதோ மனிதத்தலை......
                    அடுத்தாற்போல rhyming-ஆக ஏதும் தோன்றவில்லை. உங்களுக்குத் தோன்றினால் இட்டுக் கட்டிக் கொள்ளுங்கள்.
                   அந்தத் தலையில் மூக்கு மட்டும் இல்லை. ('காதலிக்க நேரமில்லை' படத்தில் நாகேஷ், பாலையாவுக்கு திகில் சினிமாக்கதை சொன்ன தொனியில் சொல்லவேண்டும். அப்போதுதான் சூழலுக்குத் தக்க Ooomph ஏற்படும்.
                    அந்த வெய்யிலில் ஓர் உருவம் ஜீப்பில் வந்தது. ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்திவிட்டு நடந்து வந்தது.
                    ஒரு மனிதன்.
                    சிங்கச்சிலையின் இரு பாதங்களுக்கும் நடுவில் நின்று பார்த்தான்.
                    கைக்கெடிகாரத்தைப் பார்த்தான். தேதி, மாதம், மணி எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டான். நிமிடங்களையும் வினாடிகளையும் நகரவிட்டுக்கொண்டு காத்திருந்தான்.
                    சிங்கத்தின் தலையின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக நீண்டுகொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த நிழல் ஓரிடத்தில் பட்டது.
                    உடனேயே பளிச், பளீர், பளார், flash என்று ஒளிப்பிரளயம் தோன்றித் தோன்றி மறைந்தது. அந்தப் பளிச் பளார் முடிந்ததும் ஓரிடத்தில்மட்டும் ஒளிப்படலம் நிலை நின்றது. Raider's of the Lost rk, Mckenna's Gold ஆகிய படங்களைப்பார்த்திருப்பீர்களே. அதேபோல.
                    அந்த இடத்திற்குச்சென்று அந்த இடத்திற்கு அடையாளமிட்டுவிட்டு ஜீப்புக்குச் சென்றான். ஜீப்பிலிருந்து சில கருவிகளை இறக்கிக் கொண்டுவந்தான். அந்த இடத்திலிருந்த மணலையெலாம் அப்புறப்படுத்தினான். அங்கு ஒரு பெரிய கற்பலகை. அக்கற்பலகையில் வரிவரியாக ஹையெரோகிலி·பிக்ஸ் போன்ற கண்ணெழுத்துக்கள் தெரிந்தன. பையிலிருந்து ஒரு காம்ப்பியூட்டர் ப்ரிண்ட் அவுட்டை எடுத்தான். அதன் உதவியோடு அந்த கற்பலகையின் எழுத்துக்களைப் படித்தான்.
                    பின்னர் அந்த கற்பலகைக்கு முன்னால் நின்று கொண்டு, அடித்தொண்டையில் பி.எஸ்.வீரப்பா குரலில்,

                    "அண்டா காகசம்
                    அபூ காஹ¥க்கும்
                    திறந்திடு ஆலிவ்"

என்றான். அங்கெல்லாம் 'சீசேம்' எனப்படும் எள் கிடையாது. ஆலிவ்தான். இல்லாத பொருளுக்கு, சொல்லாத பெயரை யார்தான் மெனக்கெட்டு உருவாக்கிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
                    உடனடியாக அவனுடைய தலையில் ஏதோ ஒன்று 'டப்' என்று விழுந்தது.
                    "ஹ்ஹ்ர்ர்ம்ம்ப்ப்·" என்ற செருமல்.
                    சிங்கம்தான் செருமியது. பேசியது.
                    "அடே, புதையல் தேடி வந்த அற்ப மனிதனே! நீ தேடி வந்த புதையல் 48*48'48"கிழக்கு, 22*22'22"வடக்கு ஆகிய co-ordinates-ஸில் இருக்கிறது. அங்கு மூலைக்கு ஒன்றாய், நான்கு சிங்கங்கள் அமர்ந்துகொண்டு அதனைக் காத்துக்கொண்டிருக்கும். ஒவ்வொரு சிங்கத்தின் முன்னால் சென்று, நின்றுகொண்டு,  அந்த சிங்கத்துக்கு ஏற்றதொரு இராகத்தை இந்தப் புல்லாங்குழலினால் வசிக்க வேண்டும். அந்த சிங்கங்கள் மயங்கி விழும். அவ்வாறு நான்கு சிங்கங்களும் மயங்கி விழுந்தபின்னர், நீ அந்தப் புதையலை எடுத்துக்கொள்ளலாம். ஏற்காத இராகத்தையோ தப்புத்தாளங்களையோ வாசித்தால்..........அவ்வளவுதான் சிங்கம் உன்னைக் கொன்றுவிடும்.

                   அந்த மனிதன் புல்லாங்குழலை எடுத்துக்கொண்டு உடனடியாக  அந்த குறிப்பிட்ட இடத்தைக் கணினியின் உதவியோடு கண்டுபிடித்துக்கொண்டு சென்றான்.
                    நான்கு சிங்கங்கள்.
                    டிஸ்க்கவரி சேனலில் காட்டும் க்ரூகர் நேஷனல் பார்க்கில், உண்ட மயக்கம் தீர, ஏதாவது அக்கேசியா மரத்தடியில் சோம்பலாக, நின்றும் இருந்தும் கிடந்தும் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருக்கும்
சிங்கங்களைப் போலவே அவையும் இருந்தன.
                    ஓர் அலட்சியப்பார்வை. "எப்படி நாலு சிங்கம்; ஆனா ஒரே ஒரு லுக்கு வுடறதுகள்?"
என்று பெங்களூரில் நாகசுப்பிரமணியம் கேட்பது தெரிகிறது.

                    முதற்சிங்கத்தின் முன்னால் நின்றான்......'சீதம்ம மாயம்மா..' என்று வசந்தா ராகத்தை வாசித்தான். "ஏண்டா, மவனே! புத்திகித்தி இருக்கா ஒனக்கு? 'மாலையில் பாடும் ராகம் இது'
என்று சிதம்பரம் ஜெயராமன்
'சம்பூர்ண ராமாயண'த்தில் பாடியிருக்காரே? இப்பப் போயி இத
நீ வாசிக்கிறியே, கூறுகெட்ட பயலே!" என்று அந்தச் சிங்கம்.....கேட்கவில்லை.

                    மயங்கி விழுந்தது.
                    அடுத்த சிங்கம். அங்கு சென்று நீலாம்பரியில் 'உய்யாலலோகவய்யா' என்று வாசித்தான். அந்தச் சிங்கம் சொக்கி விழுந்து உறங்கியது.
                    மூன்றாவது சிங்கத்திடம் சென்று 'கானடா'வில் 'அலை பாயுதே, கண்ணா' என்று வாசித்தான். அப்படியே மல்லாக்க விழுந்த சிங்கம், நான்கு கால்களையும் மேலே தூக்கியவாறு ஆனந்தமாகக் குறட்டையிட ஆரம்பித்தது.
                   கடைசிச் சிங்கம்.
                    முன்னாற் சென்று, 'யமுன்கல்யாணி'யில் 'கிருஷ்ணா நீ பேகனே பாரோ' என்று மிக மிக உருக்கமாக இசைக்க ஆரம்பித்தான்.
                    அந்தச் சிங்கம் முறைத்தது.
                    அடுத்த வினாடி......
                    "ஹ்ஹ்ஹ்ர்ர்ர்ராஆஆஆங்ங்ங்....", என்று கர்ச்சித்தவாறு அவன்மேல் பாய்ந்து, கழுத்தைக் கடித்து....
                    அந்த புதையல்தேடி மனிதனை அந்த நான்காவது சிங்கம் கொன்றே கொன்றுவிட்டது.
ஏன்?

GO TO பதில்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
    


RETURN TO MAIN MENU