நானும் சும்மாவும்
சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

 
                    ' சும்மா' என்னும் தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
                    அது விஸ்வாக்காம்ப்லெக்ஸில் இருக்கிறது.
                     நான் இந்தக் கட்டுரையை மடல்களாகத்தான் எழுதினேன். அவை நான்கைந்து சேர்ந்துதான் இந்தக் கட்டுரை உருவாகியது.
                     தமிழ் இணையம் என்னும் தமிழ் டாட் நெட் மடற்குழுவில்தான்் சில அன்பர்கள் ஆரம்பித்துவைத்த வேறு ஒரு கருத்துப் பரிமாற்றத்தின்போதுதான் இந்தக் கட்டுரை தோன்றியது.
                    'சும்மா' என்னும் இந்தச் சொல்லுடன், தத்துவத்துடன், அனுபவத்துடன் அனுபூதியுடன் எப்படி எனக்குப் பரிசயம், அறிமுகம் ஏற்பட்டது?
                    சொல்கிறேன்.
                    நான் தமிழ்நாட்டில் இருக்கும்போது ராஜயோகம், திருமந்திரம்,
பாதஞ்சலீயம், விநாயகர் அகவல், பத்திரகிரியார், தாயுமானவர், பட்டினத்தார் முதலியவர்களின் பாடல்களில் நன்கு பரிச்சயம் உள்ளவர்கள் சிலருடைய நட்பும் வழிகாட்டலும் ஏற்பட்டது.

                    இவர்களுக்கெல்லாம் முன்னர், மதுரையில் ஒரு தையற்காரர்.
                    இந்தச் சொல்லை என் மனதில் தூவிவிட்ட அவர் ஒரு தத்துவஞானி.
மூர்த்தி என்பது அவருடைய பெயர். மதுரையில் மேலச்சித்திரை வீதியிலிருந்த எங்களுடைய கட்டடத்தில் அவர் 'மூர்த்தி டெய்லரிங் பேலஸ்' என்னும் ultra-modern தையற்கடை யன்றை வைத்திருந்தார். 1950-ஆம் ஆண்டிலிருந்து அவர் அங்கு இருந்தார்.

                    தையல் தொழிலுக்கே ஒரு தனி கௌரவத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியதில் அவரே முதல் ஆள்.
                    நான் சொல்வது ஐம்பதாண்டுகளுக்கு முன்னர்.
                    தன்னுடைய இருக்கைக்குமேலே ஒரு எண்ணெய் வண்ண ஓவியம்.
                    அதில் உலகக்கோளம். அதன் முன்னணியில் ஒரு கத்தரிக்கோல். அந்தக்  கத்தரிக்கோல் வாய் திறந்திருக்கும். அதன் நடுவே நூல் கோர்த்த ஓர் ஊசி. மேலே தலைப்பு.
                    'வாழ்க உலகெலாம் கத்தரிக்கோல்'.
                    உலகத்தின் கீழே, ஒரு நீண்ட வாசகம், "என் வாழ்வின் பிழைப்பூட்டும் தலைவனாகவும்....." என்று ஆரம்பிக்கும். கடைசியில் "என் அருமைக் கத்தரிக்கோலே" என்று முடித்திருப்பார். அடியில் கையெழுத்து. 'ந. க. ஆ. மூர்த்தி' என்று போட்டிருப்பார்.
                    அந்தப் படத்தின் பக்கவாட்டில் இன்னொரு பெரிய படம். என்னுடைய அப்பா. அந்தப் படத்தின் கீழே ஒரு சிறிய ஷெல்·ப். அதன்மீது படுத்திருக்கும் ஒரு நாய். பளிங்குச் சிலை. அல்சேஷன். இன்னொரு வாசகம். "என் வாழ்க்கையில் ...." என்று ஏதோ வந்து, என் தந்தையாரின் பெயரைச் சொல்லி, "அவருக்கு நன்றி மறவா நான் ஒரு நாய். இப்படிக்கு ந. க. ஆ. மூர்த்தி" என்று முடித்திருப்பார்.
                    ஒரு சிறிய அறையின் சுற்றுச்சுவற்றிலும் எண்ணெய்வண்ண சீனரிகளைத் தீட்டி, ஏதோ ஒரு உத்தியான மண்டபத்தில் இருந்துகொண்டு சுற்றிலும் இருக்கும் இயற்கைக்காட்சிகளை ரசிப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பார். அருமையான சோ·பா செட். நீலவண்ண ·ப்லாரசண்ட் விளக்கொளி.
                    மைசூர் அரசவம்சத்தினரிடமிருந்து ஒருபெரிய அலங்கார நிலைக் கண்ணாடியையும் இரண்டு ஒரிஜினல் ரவிவர்மா ஓவியங்களையும் வாங்கி அவர் வைத்திருந்தார்.
                    அவர் ஒரு பெரிய நோட்புஸ்தகத்தில் பல தத்துவஞான சிந்தனைகளையும் யதார்த்தங்களையும் எழுதிவந்தார்.
                    தனித்தனி எண்ணக்கோர்வைகளாகவும் சிந்தனைகளாகவும் இருக்கும்.  ' மனமே கேள்' என்று ஒவ்வொரு நாளும் தலைப்பிட்டு அன்றைய எண்ணக்குவியல்களை எழுதுவார். மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட்ட விஷயங்களாக இருக்கும். அடியில் ந. க. ஆ. மூர்த்தி என்று கையெழுத்திட்டு தேதியைப் போட்டிருப்பார்.

                    நான் மதுரையில் மருத்துவம் பயின்ற சமயத்தில் தார்மீக ஆதரவை மிகவும் தந்து அன்பு செலுத்தியவர். அவருடைய டெய்லரிங்க் பேலஸ¤க்கு அடிக்கடி செல்வேன். என்னை அவர் 'கொழந்தேஎ', என்றுதான் அழைப்பார்.

                    அங்கு பல மாதிரியான ஆட்கள் வருவார்கள். ஒருமுறை, ஒரு பெரிய செட்டு சமையற்காரர் வந்திருந்தார். அவர்தான் ஜாங்கிரிக்குள் ஜீராவை ஏற்றச் செய்யும் நகாசு வித்தையைக் கற்றுக்கொடுத்தார்.

                    சில சித்தர்களும் அங்கு வருவதுண்டு.

                    ஒருமுறை மூர்த்தியின் அருகில் அமர்ந்துகொண்டிருந்தேன். மூர்த்தி பேசாமல் துணியை வெட்டிக்கொண்டிருந்தார். நான்காவது கடையாகிய நாகப்பட்டனம் நெய்மிட்டாய்க் கடையின் காராச்சேவையும் மேலக்கோபுரத் தெருவின் முக்கிலிருந்த காப்பிக்கடை காப்பியையும் தனியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.

                    அவர் ஏதும் பேசாமலேயே இருந்தார். நான் கேட்டவற்றிற்கும் பதிலில்லை.

                    "என்ன, சும்மாவே இருக்கீங்களே?" என்று கேட்டேன்.

                    அதற்கு அவர், "கொழந்தேஎ....சும்மா இருக்குறதா? எவ்வளவு சுலபமாச் சொல்லிட்டீங்க... ரொம்ப ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்மனாலயெல்லாம் ஆகுற காரியமா? சும்மா இருக்க முடியுமா? சும்மா இருக்குறதுங்கறது சாதாரணமான விஷயமா? எவ்வளவு பெரிய விஷயத்தக் கேட்டுட்டீங்க?" என்றார்.
                    குனிந்த தலையை மேலே நிமிர்த்திப் பார்க்காமலேயே, துணியைக் கத்தரித்துக் கொண்டே இதைச் சொன்னார்.
                    ஏன் அப்படி சொல்கிறார் என்று புரியவில்லை. விளக்கம் கேட்டேன்.
                    "கொழந்தேஎ...அதெல்லாம் எப்பிடி சொல்லிக் குடுக்குறது? சொல்லிக் குடுத்து வராது".
                    "சொல்லிக் குடுக்காம எப்பிடி கத்துக்குறது?"
                    "ஒரு காலத்துல நீங்களே தெரிஞ்சுக்குவீங்க".
                    இது நடந்து நாற்பது ஆண்டுகள் இருக்கும்.
                    அப்போதுதான் 'சும்மா' என்பது 'சும்மா இல்லை' என்பது லேசாகப் பொறி தட்டியது.

                    பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒரு தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. அதற்கு சில வெள்ளைக்காரர்கள் வந்திருந்தனர். அதில் ஒருவர் சற்று வேடிக்கையாகப் பேசக்கூடியவர். அவர் ஒரு ஸ்வீடிஷ்காரர். Ingvor Frickholm என்ற பெயருடையவர். எழுதும்போது அப்படியேதான் பெயரை எழுதுவார். யாரோ இது சம்பந்தமாகக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் கொஞ்சம் நையாண்டியாக, "என்னுடைய பெயரை தமிழ்ப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு யாராவது 'இங்கேவா பெரியகுளம்' என்று எதையாவது எழுதிவிடுவார்கள்", என்று சொன்னார்.
                அப்போது ஒரு வெள்ளைக்காரச் சாமியார் வந்திருந்தார். அவருடைய பெயர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் கையில், முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட சதைப்பிடிப்பான பகுதியில் 'சும்மா இரு' என்று எழுதியிருந்தார். யாரும் பேட்டி அது இது என்று போய்க்கேட்பவர்களுக்கு தன்னுடைய மேல்துண்டை ஏற்றி, கையைக் காட்டுவார்.

                'சும்மா'வைப்பற்றி 'Philosophy of Summaa', என்றோ 'சும்மா இருக்க சூத்திரம்' என்றோ ஏதோ தலைப்பில் ஆராய்ச்சியன்றைச் செய்வதாகச் சொன்னார். தலைப்பு சரியாக நினைவில்லை.

                     சில ஆண்டுகள் கழித்து தமிழ்வாணனைப் பார்க்கச்சென்றபோது 'சும்மா'வைப் பற்றி கூறி விளக்கினார்.
                     தமிழகம் இருபதாம் நூற்றாண்டில் கண்ட மாபெரும் தமிழ் மேதைகளில் தமிழ்வாணன் ஒருவர்.
                     அவர் எழுதிய கட்டுரையன்றில் எண்ணங்களின் பிறப்பைப் பற்றி கூறியிருந்தார். அந்தக் கட்டுரையில்தான் அவர் ஆலவிதை, மயில்முட்டை போன்ற உதாரணங்களைச் சொல்லியிருந்தார்.
                     பின்னர் டாக்டர் ஏ.வீ ஜெயச்சந்திரன் 'சும்மா'வைப் பற்றி அவ்வப்போது சொல்லக்கேட்டிருக்கிறேன்.
                கந்தர் அனுபூதியின் பன்னிரண்டாம் பாட்டாகிய 'செம்மான் மகளி'ல் வரும் 'சும்மா இரு சொல்லற' என்பதைப் பற்றி அரிய விளக்கங்களை அவர் சொல்வார்.

                    அதற்கப்புறம் திருப்புத்தூரில் யாகோப் என்னும் ஸ¥·பி பெரியவர். அவரிடம் கற்றுக்கொண்டவை மிகவும் அரிய விஷயங்கள். அவர்தான் இதுபற்றி நிறையச் சொல்லலானார். அவர் மூலமே மஸ்தான் சாஹேபுடன் அறிமுகம் ஏற்பட்டது.
   
                     மலேசியாவுக்கு வந்து சர்வீஸில் சேர்ந்தபின்னர் தொடர்ச்சியாகக் காடுமலைகளுக்கு நடுவிலுள்ள ஒதுக்குப்புறமான பிரதேசங்களில் வேலைசெய்தேன். அங்கெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மந்திர சாஸ்திரத்தைப் பயிற்சி செய்துகொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அத்துடன் ஜபயோகமும் கைவந்தது. மந்திர ஜபம், தியானம் என்று ஆரம்பித்தது. அப்படியே சில ஆண்டுகள் சென்றன.
                     மனதின் ஆற்றல்கள், ராஜயோகம், தியானம், பிரமிட்கள் முதலியவற்றைப் பற்றிய நூல்களைப் படிக்க ஆரம்பித்ததும் அப்போதுதான்.
                     பேசுவதற்குக்கூட ஆள் கிடைக்காத அந்த இடங்களில் தனக்குள் தானே ரமிக்கும் - ஸ்வாத்மாராமா' என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் சொல்லியிருப்பதுபோல் - சந்தர்ப்பங்கள் அனேகம் ஏற்பட்டன.
                     கந்தர் ஷஷ்டி கவசத்தை தீவிரமாகப் படித்து அதன் பிரயோகங்கள் கைவரப்பெற்றதும் அப்போதுதான்.
                     அதிலிருந்து கந்தர் அனுபூதிக்குச் சென்றேன். என்னுடைய முக்கியமான தத்துவ நூலாக அது ஆகியது. எப்போதும் அதை எனக்குள் Internalise செய்துகொண்டேயிருந்தேன்.
                     அன்றிலிருந்து இன்றுவரைக்கும் நான் எந்த சொற்பொழிவைத் தொடங்குவதாக இருந்தாலும் 'நெஞ்சக் கனகல்லு', 'ஆடும் பரி வேல் அணிசேவல்', என்ற பாடல்களைச் சொல்லி 'குருவாய் வருவாய் அருள்வாய் குஹனே' என்றுதான் ஆரம்பிப்பேன்.
                     முருகனே என்னுடைய குருநாதன். அவனுடைய தன்மையையும் பெயரையும ்கொண்டவர்களே எனக்குக் குருநாதர்களா¡க வாய்த்திருக்கிறார்கள் - ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டி குரு.... இப்படி அத்தனை பேரும்.
                    கந்தர் அனுபூதியில் மிகவும் ஆழ்ந்துபோனேன்.
                     எந்நேரமும் அதன் சிந்தனைதான்.
                     அதிலுள்ள பன்னிரண்டாம் பாடல் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்தியது
                     கந்தர் அனுபூதியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு பிரயோகம் இருக்கிறது என்பது உங்களில் பெரும்பான்மையினருக்குத் தெரிந்திராது. "அது அனுபூதியைப் பற்றியது. ஞானமார்க்கத்தின் உச்சகட்டத்தைத் தொடும் நூல். அது எப்படி லௌகீகத்தன்மை படைத்ததொரு மந்திர மாந்திரீக நூலாகவும் விளங்கலாயிற்று?" இந்தக் கேள்வியை உங்களுக்கே கேட்டுக்கொண்டு யோசித்துக்கொண்டிருங்கள்.
                    கோத்தாபாரு என்னும் ஊரில்தான் 'நிஷ்டையும் கைகூடி, நிமரருள்' ஏற்பட்டது.
                     கோத்தாபாருவில் இருக்கும்போது தியானமும் ஜபமும் தீவிரமாகின. அங்குதான் மந்திர ஆற்றல்கள், அவற்றின் ·ப்ரீக்வென்ஸீக்கள், விளைவுகள் போன்றவற்றைப் பிரத்யட்சமாகக் கண்டறிந்தேன். மற்றவர்களுக்கும் காட்டமுடிந்தது. மந்திரத்தால் வளர்ந்த இருபதடி வெண்டைச்செடியும் அங்குதான்.

                     கோத்தாபாருவில் ஒரு நண்பர். டாக்டர் சிங்கம் என்று பெயர்.
                    அவருடைய நண்பர் ஒருவர் சி.ஐ.டி.பிரிவில் இன்ஸ்பெக்டராக இருந்தார். என்னமோ ஒரு சிங். கோத்தாபாருவின் அருகில்தான் தாய்லந்து எல்லை இருக்கிறது. அப்போது - அதாவது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லந்தில் அச்சடிக்கப்பட ஐம்பது ரீங்கிட் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தன. அவற்றில் ஒன்றைக் கைப்பற்றி அதை அந்த சர்தார்ஜி ஒரு பெரிய கவர்கூட்டிற்குள் போட்டு வைத்திருந்தார். முக்கியமான எவிடென்ஸ். காணாமற் போய்விட்டது.
                     ரொம்பவும் ஸீரியஸான விஷயம்.
                     அவரும் சிங்கமும் என்னிடம் வந்தார்கள்.
                     ப்ரஸ்ன தந்த்ரத்தின்மூலம் அதன் பாஸிபிலிட்டீஸை அறிந்து கொண்டோம்.

 கந்தர் அனுபூதியின் பன்னிரண்டாம் பாடல்:

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மாபொருளன்றும் அறிந்திலனே

                     இந்தப் பாடலுக்கு ஒரு மந்திரப்பிரயோகம் உண்டு. திருட்டுப்போன பொருட்கள் கிடைப்பதற்கு இந்தப் பாடலை உரிய முறைகளுடன் உருப் போடவேண்டும்.
                     அந்த சிங்கு எங்கே போய் உருப்போடப் போகிறார்? உருப்படப் போகிறார்?
                     ஆகவே அவருக்காக நானே உருவேற்றினேன்.
                     அந்த வாரக் கடைசி. லீவுநாள். ஹாலில் அமர்ந்திருந்தவன்
திடீரென்று நிமிர்ந்து பார்த்தேன். அந்த சிங்கு நின்றிருந்தார். நிழல்கூட வரும்போது தெரியும். இந்த சீ ஐ டீ ஆத்மாக்கள் எப்படித்தான் வருவார்களோ?
                     "அந்தக் கவர் கிடைத்துவிட்டது. ஒரு ஷெல்·புக்கு அடியில் செருகப்பட்டிருந்தது".
                     "கவனக்குறைவாக நீங்கள் போட்டிருப்பீர்கள்" என்றேன்.
                     "போடவில்லை. என்னுடைய மேஜை டிராவரில்தான் வைத்தேன்".
                    "அந்த ஷெல்·ப் அடியில் நீங்கள் தேடாமல் விட்டிருப்பீர்கள்."
                     "அந்த ஷெல்·ப் என்னுடைய முதுகுக்குப் பின்னால்தான் இருக்கிறது. மிஸ் பண்ணும் சாத்தியமே இல்லை. யாரோ செருகிவைத்துவிட்டிருக்கின்றனர்", என்றார்.
                     பொருள் கிடைத்துவிட்டது.

                     அந்தப் பாடலில்தான் அந்த 'சும்மா இரு' வருகிறது.

                     கோத்தாபாருவிலிருந்து கோத்தாத்திங்கி என்னும் ஊருக்குச் சென்றபிறகு மேலும் சில புதிய தியானப் பயிற்சிகளை மேற்கொண்டேன். அவற்றுடன் ட்ரான்ஸெண்டெண்ட்டல் தியான முறை, ஹெர்பர்ட் பென்ஸனின் ரிலெக்ஸேஷன் ரெஸ்பான்ஸ் தியானமுறை, தேரவாத பௌத்தர்களின் விபாசனா தியானம், ஸென் பௌத்தர்களின் தியானம், குங் ·பூவில் பயிலப்படும் தியானம், துருக்கியில் டெர்விஷ் என்னும் சன்னியாசிகள் பயிலும் தியானம், ஸ¥·பிக்களின் யாஹை தியானம், ஹம்ஸ தியானம் போன்ற பல முறைகளின் நுட்பங்களை ஆராய்ந்தேன். என்னுடைய மாணவர்களில் சிலருக்கு தியானப்பயிற்சியும் ஜபப்பயிற்சியும் கொடுத்திருந்தேன்.

                     அப்போது இந்தத் துறைகளைப் பற்றிய பல நூல்களைப் படிக்கவும் செய்தேன்.
                    மகரிஷி மகேஷ் யோகி பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தை மட்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அத்துடன் உரையும் எழுதியிருக்கிறார். மிக அற்புதமான நூல்.
                    வலம்புரி ஜான் அடிக்கடி எழுதுவார்...."அழுதும் தொழுதும் படிக்க வேண்டிய புத்தகம்" என்று சொல்வார்.
                     அந்த மாதிரியான நூல் அது. அந்த நூலை நான் மீண்டும் மீண்டும் மீண்டும் படித்தேன். தியானம் பற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை சிங்கப்பூரிலும் கோலாலும்ப்பூரிலும் வாங்கினேன்.

                    தியானத்தின் விளைவுகளையும் சில பாராமீட்டர்களை வைத்துக்கொண்டு ஆராய்ந்தேன். என்னுடைய மாணவர்களில் சிலரும் நண்பர்களும் இதில் ஒத்துழைப்பு நல்கினர்.
                     அந்தச் சமயத்தில் மட்டும் BioFeedback கருவிகள் என்னிடம் இருந்திருந்தால் எத்தனையோ விதங்களில் பலன் ஏற்பட்டிருக்கும். அப்போது அந்த எக்விப்மெண்ட்டின் விலை இருபதினாயிரம் ரீங்கிட். அதுதான் ஆக மலிவான சங்கதி.

                     அவற்றைப் படித்தது ஒரு பக்கம்

                     ஆனால் முக்கியமான நூல்களாக நான் பயின்றவை விநாயகர் அகவல், திருமந்திரம், ஞான வாசிட்டம், தாயுமானவர் பாடல்கள், சித்தர் பாடல்கள், ஔவை குறள், கைவல்ய நவநீதம், ஒழிவில் ஒடுக்கம், குணங்குடி மஸ்தான் சாஹேப் பாடல்கள் ஆகியவை.
                     மஸ்தான் சாஹேப் பாடல்கள் புரிந்துகொள்வதற்குக் கடினமானவை.
                     பத்திரகிரியார் புலம்பல் என்றொரு தொகுப்பு இருக்கிறது. இரண்டே சிற்றடிகள்.
     அவற்றில் அவ்வளவு ஆழமிருக்கும்.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவதெக்காலம்?

                     இதில் 'ஆங்காரம்' என்ற சொல்லே பலரை இடறிவிட்டு விடும். ஏனெனில் 'ஆங்காரம்' என்பதற்கு அவர்கள் கொடுக்கும் பொருள் மிகவும் குறுகியது. ஏதோ திமிர்த்தனமும் சுயநலவேட்கையும் வேகமும் ஆவேசமும் கலந்த மாதிரியாகச் சொல்லிவிடுவார்கள்.
                     ஆனால் அதுதான் 'நானெனும்தன்மை' என்பதை அறியமாட்டார்கள்.
                     முருகனிடம் நாம் கேட்கிறோமே.....

நானெனும் தன்மை நண்ணிடாதென்னைக்
காண நீ வந்து காப்பதுன் கடனே


                    ரொம்ப ரொம்ப ஆழமான பொருள். The very essence of the very being and existence.

                     இப்படித்தான் ரொம்ப நேரம் படிப்பு; ரொம்ப நேரம் பயிற்சி என்று வேலை நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் கழிந்தது. ஆட்கள்வேறு தினசரி வருவார்கள்.
                     காலையில் 4-30க்கெல்லாம் எழுந்துவிடுவேன்.
                     தூக்கம் என்பது அப்போதும் சரி, இப்போதும் சரி, மிக மிகக் குறைவு.
                     நான்கு மணி நேரம் தூங்கினாலேயே அதிகம்.
                     சிந்தனையும் தியானமும் ஜபமும் அதிகமாகும்போது தூக்கம் தானாகவே குறைந்துவிடும்.
                      பகவத்கீதையில் சொல்லப்பட்டிருப்பதுபோல் மற்றவர்கள் தூங்கும்போது ஞானி விழித்திருப்பான். இந்த வரிக்கு ஏராளமான பொருள்கள் உண்டு. மேலெழுந்தவாறு பொருள் கொண்டு சொல்லியிருக்கிறேன்.
 
                     இந்த மாதிரியான தீவிர சாதகம் 1978-இலிருந்து 1986 வரைக்கும் இருந்தது. அதன் பிறகும் இருந்தது.
                     இப்போதும் உண்டு. ஆனால் இப்போது யதா சக்தி:
                     இருப்பினும் ஆற்றலும் விளைவும் அதிகமாக இருக்கும். ஏனெனில் முடியாத நிலையிலும் வைராக்கியத்தோடு முனைப்போடு ஒரு சாதகத்தைச் செய்யும்போது அது ஒரு கடும் தவமாகவே மாறிவிடுகிறது. சாதாரண நிலையில் நல்ல ஆரோக்கியத்தோடு வசதிகளுடன் செய்வதால் ஏற்படும்
ஆற்றலைவிட இந்த மாதிரியான நிலைமைகளில் செய்யப்படும் சாதகத்தில்தான் வேகமும் வீரியமும் தீட்சண்யமும் உக்கிரமும் மிக அதிகமாக இருக்கும்.
                    இருக்கிறது
 
                    இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசப் பேச, நினைக்க நினைக்க, சிந்திக்க சிந்திக்க இன்னும் ஆழமாகச் சொல்லமுடிந்தது. சில கட்டுரைகளில் எழுதியுமிருக்கிறேன்.
                     1997-ஆம் ஆண்டில் நான் தமிழ் டாட் நெட்டில் சேர்ந்த சமயத்தில் 'சும்மா'வைப் பற்றி எழுதினேன்.
                     நான்கைந்து மடல்களில் அது வந்தது.
                    பின்னர் இன்னும் கொஞ்சம் சேர்த்து, நீக்க நீக்க வேண்டியவற்றை நீக்கி, இணைமதி எழுத்துருவில் ஜியோஸிட்டீஸ் வலைத்தளமொன்றில் போட்டோம்.
                     அதன்பின்னர் 'கடாரம்வெப்' என்னும் வலைத்தளத்தை உருவாக்கி அதில் போட்டோம்.
                     நான் இணையத்தில் தமிழ் டாட் நெட்டிலும் அகத்தியத்திலும் 2001வரை எழுதியிருந்தவற்றிலிருந்து 27 இழைகளை எடுத்துத் தொகுத்து அச்சில் போட்டோம்.
                     'இணையத்தில் ஜேய்பி #1' என்னும் பெயரில் நூல் வெளியாகி இரண்டே நாட்களில் எழுநூறு பிரதிகள் விற்று சாதனை கண்டது. 2002-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக சந்தையிலும் இடம் பெற்றது.

                     அந்த நூலில் 'சும்மா' இருந்தது.

                     பின்னர் கவியோகியார் அதனைக் கலைமகள் தீபாவளி மலரில் வெளியிடச் செய்தார்.
                     இணைமதியில் இருந்த அந்தக் கட்டுரையைத் திஸ்க்கிக்கு மாற்றி, அதிலிருந்து யூனிக்கோடுக்கு மாற்றி இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்து படங்களுடன் விஸ்வாக்காம்ப்லெக்ஸில் போட்டிருக்கிறோம்.

                     அதான் அந்தக் கட்டுரையின் அடியில் எழுதியிருக்கிறேன் அல்லவா......சொந்த அனுபூதி.
                     பாரதியார் எழுதிய கட்டுரையையோ அல்லது வேறு யாரும் எழுதிய கட்டுரையையோ நான் படித்ததில்லை.
                     அப்படிப் படிக்கப்பட்டது தமிழ்வாணனுடையது மட்டும்தான். அதுவும்கூட அவர் நியூமராலஜியைப் பற்றி எழுதியதிலிருந்துதான். சில விபரங்கள் மட்டுமே.
                     மற்றதெல்லாம் ஸ்வாத்யாயம்; ஸ்வயம்ப்ரகாசம்.

                    நான் 'சும்மா' என்ற தலைப்பில் எழுதிய அந்தக் கட்டுரையிலோ, இப்போது நீங்கள் படித்தீர்களே... இந்தக் கட்டுரையிலோ, நான் கண்டவற்றில் ஆயிரத்தில்... இல்லையில்லை...லட்சத்தில்...ஊஹ¥ம்... ஓர் அணுவளவாவது சொல்லியிருப்பேனா?

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU