"நானும் அறியேன்;
அவளும் பொய் சொல்லாள்"

கதை 2

வித்யாலங்கார
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



    அந்த இன்னொரு கதை உங்களுக்கு நன்கு தெரிந்ததுதான்.

    திருக்கடவூர் சிவசுப்பிரமணிய பட்டரை பற்றியது.

    அவர் ஒரு சாக்தர். எப்போதும் அம்பிகையின் தியானத்தில் மூழ்கியவர்.  அந்தத் தியானத்தால் ஏற்பட்ட பேரின்பபெருக்கின் போதையுடன் எப்போதும் இருப்பவர். எது ஜட உலகத்தின் யதார்த்தம், எது தன்னுடைய ரமிப்பால் ஏற்பட்ட தோற்றம், அனுபவம் என்பதையெல்லாம் வரையறுக்கும் எல்லைகள் மறைந்து நாட்கள் பலவாகிவிட்டன்.

    அவர் கண்களுக்குப் பெண்கள் அனைவருமே சக்தியின் சொரூபங்கள்.    
   
    தேவீ மாஹாத்மியத்தில் வருகிறதே,


    'யா தேவீ சர்வ பூதேஷ¤ சக்தி ரூபேன சம்ஸ்திதா
    நமஸ்தைஸ்யை நமஸ்தஸ்யை நமோஸ்தஸ்யை நமோ நம:'

என்ற அந்த வாக்கியமும் அதனைத் தொடர்ந்து முன்னும் பின்னும் இருக்கும் அத்தனை வாக்கியங்களும் அவருக்கு நிதர்சனமான உண்மைகள்.

    அவருடைய போக்குகள் அவரை ஒரு பித்தனைப்போல மற்றவர் கண்களுக்குத் தோற்றுவித்தன.
    அவர் பெண்களைக் கண்டால் அவர்களின்மீது மலர்களைத் தூவி கால்களில் விழுந்து
கும்பிடுவார்.    

    ஆகவே அவரைப் பற்றி தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னனிடம் பிராது சொன்னார்கள்.
Eve-teasing, Public Nuisance ஆகிய புகார்கள்.


    சிவசுப்பிரமணிய பட்டர் ஒரு பெரும் சாக்தர் என்பதும் மன்னனுக்குத் தெரியும். சடாரென்று குறிப்பிட்ட சிலர் மட்டும் சொன்னதை அப்படி அப்படியே நம்பிவிட அவன் என்ன இணையத்துப் பிரஜையா?

    ஆகவே நேரில் சென்று பரிசோதித்துப் பார்க்கச் சென்றான்.

    அன்று அமாவாசை. பட்டர்குடியினர் தர்ப்பணம் கொடுக்கும் நாள். அந்தக் காலத்தில்
அமாவாசை
யிலிருந்துதான் சாந்திரமான மாதம் பிறக்கும். ஆகம, வைதிக சம்பந்தப்பட்ட கிரியைகளுக்கு சாந்திரமான மாதம் முக்கியம்.  
    பள்ளிக்கூடங்களில்கூட அமாவாசையன்றுதான் மாதாந்தர லீவு விடுவார்கள்.

    சிறந்த சாக்தரும் கல்விமானுமாகிய சிவசுப்பிரமணிய பட்டருக்கு அமாவாசை முக்கிய
மல்லவா?


    அரசன் வந்த சமயத்தில் திருக்கடவூர் அபிராமியம்மனின் சன்னிதியில் நேராக அமர்ந்து
கொண்டு அம்பிகையின் தியானத்தில் பட்டர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.


    சாக்த வழிபாட்டில் ஆழ்நிலை செல்லும்போது புருவமத்தியில் ஓர் ஒளிப்பிழம்பு தோன்றும். பூரணச் சந்திரமண்டலமாக இது தோன்றும்.

    மேலும் சாக்தர்களுக்குப் பௌர்ணமி வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்று இரவு,
வானத்தில் தோன்றியிருக்கும் சந்திரபிம்பத்தில் அம்பிகையை மானசீகமாக ஆவாஹனம்
செய்து மானசபூஜையை நிகழ்த்துவது மரபு. 'சந்த்ரமண்டலமத்யஸ்தா, சாருரூபா,
சாருஹாஸா, சாருசந்த்ரகலாதரா,
சராசரஜகந்நாதா' என்ற லலிதா சகஸ்ரநாம மந்திரங்களுக்கு ஏற்றவாறு வழிபாடு செய்வதுண்டு.

    ஆகவே அம்பிகையின் தியானத்தில் அந்த சந்திரமண்டல சமாச்சாரம் ஆட்டோமேட்டிக்காக நிகழ்ந்துவிடும்.

    தியானத்தின் ஆழ்ந்து மூழ்கித் திளைத்திருந்த சிவசுப்பிரமணிய  பட்டரிடம் பெரிய பெரிய தத்துவார்த்த விளக்கங்களைக்கொண்ட கேள்விகளைக் கேட்க மன்னன் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாக,
'பட்டர் இந்த லௌகீக பிரக்ஞையில்தான் இருக்கிறாரா', என்று அறிந்து
கொள்ள ஓர் எளிய கேள்வியைக் கேட்க நினைத்தான்.


    அருகில் அமர்ந்துகொண்டு மன்னன்,

    'பட்டரையா, பட்டரையா! இன்றைக்கு என்னய்யா திதி?"

    <...........>

    பட்டரையா, பட்டரையா! இன்றைக்கு என்ன திதி?

    <..............>

    பட்டரையா, பட்டரையா! இன்றைக்கு என்ன திதி?

    <..............>

    பட்டரையா, பட்டரையா! இன்றைக்கு என்ன திதி?

    "பௌர்ணமி"

    பட்டரையா அதைத்தானே புருவமத்தியில் பார்த்துக்கொண்டிருந்தார். அதுதானே சாஸ்வதம்; உண்மை? மற்றவையெல்லாமே  
'மாயா...... மாயா மாயா மாயா...... மாயா மாயா.......
சாயா...... சாயா சாயா சாயா.... சாயா சாயா'  
அல்லவா?

    மன்னனுக்கு அதிர்ச்சி.

    மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

    'சொடக் சொடக்' விரலைச் சுண்டி, "இதோ..இதோ பாரும் சிவசுப்பிரமணியம்,  ஒழுங்காகக்
கேளும்... இன்றைக்கு என்ன திதி?"


    அழுத்தம் திருத்தமாக மீண்டும்..

    "பௌர்ணமீ..."

    மன்னன் குழப்பத்துடன் மீண்டும்,

    "பட்டரே, சரியாகச்சொல்லும்...இன்று என்ன திதி.?"

    "பௌர்ணமிதாண்டா....போடா அப்பாலே...சும்மா சும்மா டிஸ்டர்ப்  பண்ணிண்டு.."

    சேவகர்களுக்கு ஒரு சைகை. அப்படியே பட்டரைக் குண்டுக ்கட்டாகக்  கட்டித் தூக்கிக்
கொண்டு சென்றனர்.

    அவருக்கு மீண்டும் இவ்வுலகப் பிரக்ஞை ஏற்பட்டதும், அவரை  அழைத்துவரச் செயதான்் மன்னன்,
    "நீர் பௌர்ணமி என்று சொன்னீரே. பூரண சந்திரனை இன்று இரவு நீர் காட்டவேண்டும். இல்லையெனில் உம்மை வெட்டி நெருப்புக்குழியில் போட்டுவிடுவோம்", என்று ஆணை
யிட்டான்.

    அவ்வாறே பட்டரை அப்படியே ஒரு உரியில் வைத்துத் தூக்கி, அவரின் கீழே பெரிய
பள்ளத்தைத் தோண்டி, அதில் நெருப்பை மூட்டிவிட்டார்கள்.


    அப்போது அபிராமி பட்டர்,
    "நாம் நாமாக ஏதும் சொல்லவில்லை. ஆக்ஞா சக்கரத்தில் அம்பிகை எழுந்தருளியிருக்கும
்போது வந்த சொற்கள் அவை".

    "நானும் அறியேன்; அவளும் பொய் சொல்லாள்".,

என்று மனதிற்குள் சங்கற்பித்துக்கொண்டு, அந்தாதியன்றை அபிராமியின் மீது உரியில் இருந்தவண்ணம் பாடினார்.    

    விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதம் சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
    பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே செய்து, பாழ்நரகக்
    குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடு என்ன கூட்டு இனியே?

என்ற 79-ஆம் பாடலைப் பாடும்போது அம்பிகைத் தன்னுடைய காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய 'தாடங்கம்' என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீசினாள்.
    அது பூரண சந்திரனாக மாறிப் பிரகாசித்துத் தோற்றம் தந்தது.

    'அவரும் அறியார்; அவளும் பொய் சொல்லவில்லை'.

அன்புடன்
ஜெயபாரதி


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

   
RETURN TO MAIN MENU