தொள்ளாயிரம் கோடிப் பெயருடையான்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
கடாரம்
மலேசியா
JayBee


                    Nine Billion Names of God என்னும் சிறுகதையைப் பற்றி அவ்வப்போது பிரஸ்தாபித்து வந்திருக்கிறேன்.
                    என்னிடம் அந்தக் கதை இருக்கிறது.
                    Arthur C. Clarke எழுதிய சிறுகதை.
                    சிறுகதையாக இருந்தாலும்கூட பெருங்கதையைவிட ஒரு காலத்தில் பெரிதும் அதிகமாகப் பேசப்பட்ட கதை அது. கூகுலில் தேடினால்கூடஅதைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

                    அதைத் தமிழில் வேறு யாரும் எழுதியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
                    நல்ல கதை.
                    ஆழ்ந்த அர்த்தபுஷ்டியுள்ள கதை.
                    சிந்திக்க வைக்கக்கூடியது.
                    அதைத் தமிழில் எழுதியிருக்கிறேன்.
                    இது மொழிபெயர்ப்பல்ல.

                    அந்தத் தமிழாக்கத்தில் நான் ஒரிஜினல் கதையை அப்படியே பின்பற்றிவிடவில்லை. ஆங்காங்கு மாற்றியிருக்கிறேன். அந்த நெடுங்கணக்கு, ஈரெழுத்து-ஒன்பதெழுத்துக் காம்பினேஷன், ரசவாதம் முதலியவற்றையெல்லாமே Modify, Add செய்திருக்கிறேன். மகாப்ரளயம் என்பதை அவர்கள் பேசும் வசனத்துடன் சேர்த்திருக்கிறேன்.

                    அந்தக் கதையின் கடைசிப் பாராவில் வருகிறதல்லவா? அந்தக் காட்சி?
                    அதுதான் இறைவனின் 'பஞ்சக்கிருத்தியம்' என்று சொல்லப்படும் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்பவனவற்றில்
                    கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ள சமாசாரம்.
                    'திரோதானம்' என்றும் சொல்வர்.
                    அதனை அவ்வளவு அற்புதமாக, சுருக்கமாக ஆர்தார் ஸீ க்லார்க்  வர்ணித்துள்ளார்.

                    அவர் எழுதிய திரோதான வர்ணிப்பையும் மாற்றியிருக்கிறேன்.     அதனை அம்பிகையின் ஐஸ்வர்யத்தன்மை(ஈஸ்வரத்துவம்)யைக் குறிப்பிடப் பயன்படுத்திக்கொண்டேன்.
                    'அநாமிகா' என்று ஆரம்பித்த இந்தக் கட்டுரையின் நாயகனாக விளங்குபவர் பெயரிலியாகவும் தாயிலியாகவும் - அதே நேரம் எண்ணாயிரம் கோடிப் பெயருடையவராகவும் விளங்கும் சிவன். அநாமிகா என்பது பெண்பால் பெயரல்லவா. அந்த அநாமிகா என்னும் அநாமதேயத்தன்மை அம்பிகைக்கும் உரித்தாக உள்ள தன்மைதானே. ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்தில் 'நாமரூபவிவர்ஜிதா' என்று ஒரு திருநாமம் விளங்குகிறது. 'பெயருக்கோ உருவத்துக்கோ அப்பாற்பட்டவள்' என்ற பொருள். பெயரிலி, உருவிலி. ஆகவேதான் சிவத்தில் ஆரம்பித்து சக்தியில் பூர்த்தி செய்திருக்கிறேன்.
   
                    இந்தக் கதையை எழுதியவர் ஆர்தர் ஸீ க்லார்க் என்னும் எழுத்தாளர்/ஆராய்ச்சியாளர்.
                    அவர் இந்தக் கதையை எழுதும்போது இப்போது இருக்கும் மகோன்னத கணினி சாதனங்கள் இருக்கவில்லை.
                    Futurelogy என்னும் வருங்காலயியல் துறையில் கற்பனையை ஓடவிட்டிருக்கிறார்.

                    கதையைப் படியுங்கள்........

                    டாக்டர் வாக்னர் தம்முடைய நிறுவனத்தில் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கணினிகளை வைத்துக்கொண்டு பல ஆய்வுகளையும் வேலைகளையும் செய்துவந்தார். அவருடைய நிறுவனம் நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியில் இருந்தது. அவர் வைத்திருந்தவற்றில் அப்போதைய காலகட்டத்தில் ஈடுஇணையற்றதாக விளங்கியது ஒரு கணினி. Mark V என்ற பெயருடைய அக்கணினி Automatic Sequence Computer எனப்படும் வகையைச் சேர்ந்தது.

                    திடீரென்று ஒருநாள் அவருடைய ஆபீஸ¤க்கு ஒரு திபேத்திய லாமா வந்தார். திபேத்திய லாமாக்கள் என்போர் பௌத்தமதத்தின் ஒரு பிரிவாகிய திபேதிய பௌத்த மதத்தின் குருமார்கள். இவர்கள் மற்ற நாடுகளில் காணப்படும் பிக்குகள் போன்றவர்கள் அல்லர். இவர்களின் சமயக் கோட்பாடுகளும் சம்பிரதாயங்களும் நடைமுறைகளும் வித்தியாசமானவை.
                    புத்தரையே பலவடிவங்களில் இறைப்பொருளாக வழிபடுவார்கள்.
                    வாக்னரைப் பார்க்க வந்த அந்த லாமா, வாக்னரிடம் கேட்ட பொருள் மிகவும் அதிர்ச்சியை உண்டு பண்ணக்கூடியதாக இருந்தது.
                    தம்முடைய மடத்துக்கு ஒரு Automatic Sequence Computer வேண்டும் என்று கேட்டிருக்கிறார். வாக்னர் அதிசயத்தோடு, "உங்களுடைய மடம் போன்ற இடத்தில் இந்த மாதிரியான கணினிக்கு என்ன பிரயோசனம் இருக்கக்கூடும்?" என்று கேட்டார். அதை விளக்கவும் சொன்னார்.

                    அந்த லாமா தம்முடைய பட்டுச் சீவர ஆடையை நீவிவிட்டுக் கொண்டு, மேஜையின்மீது எடுத்துவைத்த கரன்ஸி மாற்றும் கால்க்குலேட்டரை வருடியவாறு சொன்னார்:

"உங்களுடைய கணினி பத்து இலக்கங்கள் கொண்ட எந்த விதமான கணிதத்தையும் செய்யக்கூடியது. எனக்கு வேண்டியவை இலக்கங்கள் அல்ல. எழுத்துக்கள். ஆகவே நீங்கள் உங்கள் கணினியைச் சற்று மாற்றி
யமைக்க வேண்டியிருக்கும். அது வரிசையாக சொற்களையே பிரிண்ட் செய்யவேண்டும். எண்களை அல்ல".
                    வாக்னர் புரியாமல் பார்த்தார்.
லாமா சொன்னார்:

"இதோ பாருங்கள், வாக்னர். நாங்கள் எங்கள் மடத்தில் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக, பதினைந்து தலைமுறைகளாக, இடைவிடாமல் ஒரு திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். எங்கள் மடத்தை நிறுவிய காலம் முதற்கொண்டு ராப்பகலாக நடைபெற்று வருகிறது. இதெல்லாம் உங்களுடைய நம்பிக்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் புறம்பானவை என்பது எனக்குத் தெரியும். நீங்கள் திறந்த மனதுடன் இந்த விஷயத்தை அணுகவேண்டும்".

"நாங்கள் இறைவனின் பெயர்கள் என்னென்னவெல்லாம் இருக்கமுடியும் என்ற தேடலில் ஈடுபட்டிருக்கிறோம்".

"இதற்கென நாங்கள் ஒரு நெடுங்கணக்கைAlphabet) ஏற்படுத்தி யிருக்கிறோம். அந்த நெடுங்கணக்கில் ஒன்பது எழுத்துக்கள் இருக்கின்றன".

"இந்த ஒன்பது எழுத்துக்களை மாற்றி மாற்றிப் போடுவதன்மூலம் அந்தப் பெயர்களை நாம் எழுதிக்கொள்ளமுடியும். இதையேதான் நாங்கள் கடந்த முன்னூறு ஆண்டுகளாகச் செய்துவருகிறோம். எழுத்துக்களை மாற்றி மாற்றிப் போட்டு எழுதிக்கொண்டே வருகிறோம். இதே வேகத்தில் எழுதிக்கொண்டே போனால் இன்னும் பதினையாயிரம் ஆண்டுகளில் முடித்துவிடுவோம்".

                    "இந்தத் திட்டத்தால் பயன் என்ன?" என்று வாக்னர் கேட்டார்.

"இறைவனுடைய நாமங்கள் அந்த எழுத்துக் கோர்வைகளுக்குள் விளங்ககூடும். அல்லா, யெஹோவா, புத்தா, சிவா, விஷ்ணு என்று பல பெயர்கள் இருக்கின்றன. அவை போக நாமாவளி என்னும் பெயர் கோவைகளும் இருக்கின்றன. அவை நூறு, ஆயிரம், லட்சம் என்ற வகையில் அமைந்துள்ளன.
ஆனால் இறைவனின் பெயர்கள் இன்னும் அதிகமானவை. அவற்றையெல்லாம் கண்டறிய வேண்டித்தான் இந்தத் திட்டம்".
"Systematic Permutation and Combination முறையின் மூலமாக நாங்கள் இதைச் செய்துவருகிறோம்.

                    "அதாவது 'அஅஅஅஅஅஅஅஅ' என்னும் கூட்டிலிருந்து 'ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்' வரைக்கும் காம்பினேஷன் கொடுக்கப் போகிறீர்களாக்கும்?" என்று வாக்னர் கேட்டார்.

"அப்படியேதான். ஆனால் அந்த 'அஅஅஅஅஅஅஅஅ', 'ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்' இவற்றையெல்லாம் நீக்கி விடவேண்டும். அதுபோலவே 'ஙஞச்டப்றகஜக்' என்ற மாதிரியான காம்பினேஷன்கள் எல்லாமே
நீக்கப்பட்டுவிடவேண்டும். எந்த ஒரு எழுத்தும் மூன்று தடவை ஒன்றை அடுத்து ஒன்றாக வரக்கூடாது".
"ஒரேழுத்துப் பெயர்களுக்கு ஒன்றும் செய்யவேண்டியதில்லை. ஈரெழுத்திலிருந்து ஒன்பது எழுத்துப் பெயர்கள் வரைக்கும் இந்த Permutaion Combination-ஐப் பயன்படுத்துவோம்".

"மனிதர்களுக்குத்தான் இது கஷ்டமான வேலை. ஆனால் உங்கள் automatic sequence computer-ருக்கு இது சுலபம். அதை ஒழுங்காக நம் தேவைக்கெற்றவாறு ப்ரோகிராம் செய்து விட்டோமானால் அதுவே ஒவ்வொரு பெயரையும் எழுதிக்கொண்டு பிரிண்ட் செய்துகொடுத்துவிடும். எங்களுக்குப் பதினைந்தாயிரம் ஆண்டுகள் பிடிக்கக்கூடிய வேலையை அது ஆயிரம் நாட்களில் செய்துமுடிக்கக்கூடும்.

                    வேக்னர் தம்மையே மறந்தார். கீழே பல அடிகளுக்குக் கீழே மான்ஹாட்டனின் சாலைகளில் கேட்டும் வாகன இரைச்சல்களையும் மறந்தார்.
                    ஏதோ எங்கோ உலகின் மிக உயரத்தில் பனிமூடிய இடத்தில் சீவர ஆடை மொட்டைத்தலையர்கள், இரவு பகலாக ஆள் மாற்றி ஆள் பூர்ஜ இலைகளிலும் பட்டைகளிலும் ஓலைகளிலும் பட்டுத்துணிகளிலும் குனிந்த தலை நிமிராமல் இறைவனுடைய திருநாமங்களை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மனக்கண்களில் அந்தக் காட்சி தெரிந்தது.
                    "நாங்கள் கணினியை மாற்றி அமைத்துவிடமுடியும். ஆனால் அதை நிறுவுவதற்கும் காபந்து பண்ணுவதற்கும் ஓட்டுவதற்கும் என்ன செய்வது? அதை திபேத்திற்கு அனுப்புவதும் முடியாதே?"

"அதைப் பற்றியெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்வோம். உங்கள் கணினியின் பகுதிகள் சிறியவைதாம். அவற்றைச் சிறு விமானத்தில் ஏற்றி அனுப்பி விடலாம். அதனால்தான் நாங்கள் உங்களுடைய கணினியைத் தேர்ந்தெடுத்தோம்".

    வாக்னரின் புருவங்கள் உயர்ந்தன.

                    எந்த அளவுக்கு இவர்கள் நிகழ்கால அறிவியல்துறையையும் அறிந்து, எதிர்கால காம்ப்பியுட்டேஷன் போன்றவற்றையும் தெளிவாக சிந்தித்து வைத்திருக்கிறார்கள்!

லாமா தொடர்ந்தார்:
"நீங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவிடுங்கள். அங்கிருந்து நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்".
"மூன்று மாதங்களுக்கு உங்களுடைய இரண்டு கணினி எஞ்சினியர்களை அனுப்பிவைக்கவேண்டும். அந்தத் திட்டத்தை நல்ல முறையில் நடத்துவதற்கு அவர்கள் தேவை".

                    "அதெல்லாம் செய்துவிடுவோம். இரண்டே இரண்டு விஷயங்கள்தாம் பாக்கி.........", என்று இழுத்தார், வாக்னர்.

"நீங்கள் அமர்ந்திருக்கும் ஜன்னலின் எதிர்புறத்துள்ள பாங்கில் எங்கள் மடத்தின் அக்கவுண்ட் இருக்கிறது. அந்த அக்கவுண்டில் உள்ள தொகை கொண்ட ஸ்டேட்மெண்ட் இதோ இருக்கிறது. வேண்டுமானால் பேங்குக்கே டெலி·போன் செய்து கேட்பதானாலும் கேட்கலாம்", என்றார் லாமா.

                    செக் புத்தகத்தை எடுத்து செக் எழுதிக்கொடுத்தார்.
                    வாக்னர் செக்கை வாங்கினார்.

                    மீண்டும் அதிர்ச்சியால் வாக்னரின் புருவங்கள் உயர்ந்.....
                    இல்லை உயரவில்லை.
                    பழகிப் போய்விட்டது.

                    "இமயமலையின் உச்சியில் எங்கேயோ இருக்கும் மொட்டைத்தலை சன்னியாசிகளிடம் ஏது இவ்வளவு பணம்?", என்று வாக்னர் கேட்கவும் இல்லை.
                    "ஏதாவது ரசவாத வித்தையைச் செய்து பனிக்கட்டிகளையெல்லாம் தங்கமாக்கி பம்பாய் மார்க்கெட்டில் விற்றிருப்பார்கள்", என்று தாமாகவே நினைத்துக்கொண்டார்.

                    "இவ்வளவு பெரிய தொகையை நான் எதிர்பார்க்கவில்லை. இருக்கட்டும். இரண்டாவது கேள்வி.... மின் சப்லைக்கு என்ன செய்வீர்கள்?"

"எங்களிடம் ஜெனரேட்டர்கள் இருகின்றன. நாங்கள் கையால் சுழற்றவேண்டிய Prayer Wheels ஜபச் சக்கரங்களை மோட்டார்களுடன் இணைத்து அவற்றின்மூலம் சுழற்றிக்கொண்டிருக்கிறோம். அதற்காக அந்த ஜெனரேட்டர்கள்".

               "Wah-re-Wah! What scientific advancement!" என்று அந்த 'டெல்லீட்டூமெட்ராஸ்' சர்தார்ஜி மாதிரி வாக்னர் சொல்லவில்லை.
                    பழகிப்போய்விட்டது.

                    சக், ஜார்ஜ் ஆகிய இரண்டு எஞ்சினியர்களும் திபேத்துக்கு வந்து சேர்ந்து வேலையைத் தொடங்கினர்.
    வெகு விரவில் கணினி தயார்நிலைக்கு வந்தது.
                    Project Shangri-La என்னும் அந்தத் திட்டம் செயலாக்கம் பெற ஆரம்பித்தது.

                    பல வாரங்கள் கழிந்தன.
                    கணினி மைல் கணக்கில் பெரும்பெரும் பிரிண்ட் அவுட்களைக் கொடுத்தவாறு இருந்தது.
                    எந்தெந்த மாதிரியெல்லாம் எழுத்துக்களை வரிசையாக அமைக்கமுடியுமோ அவற்றிலெல்லாம் - ஈரெழுத்துப் பெயரிலிருந்து ஒன்பது எழுத்துப் பெயர்வரைக்கும் -சேர்மானம் கொடுத்தத.    
                    பின்னர் அவற்றில் கழிக்கவேண்டியவற்றைக் கழித்து பெயர்களின் நிரலைப் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொடுத்தது.
                    லாமாக்கள் அவற்றையெல்லாம் கணக்காக வெட்டி, அவற்றைத் தொகுத்துப் பெரிய பெரிய புத்தகங்களாக பைண்ட் செய்தார்கள். அட்டைப் பக்கத்தில் வால்யூம் விபரங்களைப் பொன்னெழுத்துக்களால் எழுதிவைத்தனர்.
                    (பொன்னெழுத்துக்களால் எழுதுவது பற்றிய கட்டுரையை விரைவில் விஸ்வாக்காம்ப்லெக்ஸில் காணலாம்).

                    வேலை முடிய இன்னும் ஒரே வாரம்தான் இருந்தது. அப்போது சக் வந்து ஜார்ஜை அவசரமாகச் சந்தித்தான்.
                    அவன் முகம் பேயறைந்த மாதிரி இருந்தது.

                    "இவர்கள் ஏன் இதைச் செய்கிறார்கள் என்பதைச் சற்று முன்னர் தலைமை லாமாவிடமிருந்து அறிந்துகொண்டேன்".
                    "இறைவனின் பெயர்களின் மொத்த எண்ணிக்கையை அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்!".
                    "தொள்ளாயிரம் கோடி (Nine Billion)! இந்தத் தொள்ளாயிரம் கோடிப் பெயர்களையும் மனித இனம் அறிந்துகொண்டதுடன் மனிதனின் தோற்றம், இறைவனின் படைப்பு இவற்றின் நோக்கம் அனைத்தும் பூர்த்தியாகிவிடுமாம். அத்துடன் எல்லாமே முடிந்து விடுமாம்."
                    "ஜார்ஜ் கேட்டான், "அதன்பின்னர் என்ன செய்வார்கள்?"
                    "அவர்கள் செய்யவேண்டுவது ஒன்றுமில்லை. இறைவன்தான் செய்யப்போகிறார்?"
                    "என்ன செய்வாராம்"
                    "அவர் அதுவரை செய்தவற்றையெல்லாம் இழுத்து வைத்து மூடிவிட்டு சும்மா இருப்பாராம்."
                    "ஓஹோ! அதாவது உலகின் முடிவு என்கிறாய்?"
                    "ஆமாம். நாம் இந்த வேலையை முடிக்கும்போது அதுதான் ஏற்படும் என்கிறார்கள். அவர்கள் பாஷையில் அதை ஏதோ 'மஹா ப்ரளயம்' என்று சொன்னார்கள்.

                    "அவர்கள் எதிர்பார்த்தது ஏதும் நடக்கவில்லையென்றால் நம்மைத்தான் கோளாறு சொல்வார்கள். அப்புறம் மீண்டும் கணிப்புகளைப் போட்டு மீண்டும் எல்லாவற்றையும் செய்ய ஆரம்பிப்பார்கள். கிபி 2060-ஆம் ஆண்டில் இந்த வேலை பூர்த்தியாகும். அதுவரைக்கும் நீங்கள் எங்கும் போகக்கூடாது என்று நம்மைப் பிடித்துவைத்துக்கொண்டால் என்ன செய்வது?"

                        "அப்படியானால் ஒன்று செய்யலாம். இன்னும் ஒரு வாரத்தில் வேலை பூர்த்தியாகிவிடும். நம்மை ஏற்றிச்செல்ல வேண்டிய சிறுவிமானம் இன்னும் பத்து நாட்களில் வரும். நாம் ஏதாவது செய்து தடங்கலைச் செய்து சில நாட்களுக்குத் தாமதத்தை ஏற்படுத்துவோம். விமானம் வந்தவுடன் நாம் சென்றுவிடுவோம். அன்றே நியூயார்க் புறப்பட்டுவிடுவோம். கணினி தன்னுடைய வேலையைப் பூர்த்திசெய்யும்போது நாம் விமானத்தில் பறந்துகொண்டிருப்போம். ஏதும் சரியாக இல்லையென்றால் நம்மை யாரும் பிடிக்கமுடியாது. அப்புறம் அவர்கள் பாடு, வாக்னர் பாடு."

                        அவ்வாறே செய்தனர்.
                        பத்தாம் நாள் அவர்கள் விமானத்தில் ஏறி சென்று கொண்டிருந்தனர்.
                        "இப்போது லாமாக்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள்? கணினியின் செயல்பாட்டில் குற்றம்குறை இருக்குமா? லாமாக்களின் கணிப்புகள் தவறாக இருந்துவிடுமா? கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இவ்வாறே எண்ணியவாறு வெளியில் ஆகாயத்தைப் பார்த்தான். இரவு நேரம். நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தன.
                        ஜார்ஜ் சொன்னான்:
                        "இந்நேரம் கணினி தன் வேலையை முடித்திருக்கும். லாமாக்களுக்கு இறைவனின் தொள்ளாயிரம் கோடியாவது பெயர் கிடைத்து விட்டிருக்கும்....."

                        திடீரென்று ஒரு நட்சத்திரம் ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்றது
                        அது மட்டுமல்ல. அத்தனை நட்சத்திரங்களுமே அந்த இடத்தை நோக்கிச்சென்றன.
                        சென்று......
                        மறைந்தன.
                        வளைந்து நெளிந்து, பூமியின் விளிம்பு மேலே அந்த மையப்புள்ளியை நோக்கி இழுபட்டு......
                        பூமியில் இருந்த மலைகள், நிலம் அனைத்துமே இழுபட்டு....
                        விமானமும் உள்ளிழுக்கப்பட்டு.......

ஸ்ருஷ்டிகர்த்ரீ
ப்ரஹ்மரூபா
கோப்த்ரீ
கோவிந்தரூபிணீ
ஸம்ஹாரிணீ
ருத்ரரூபா
திரோதானகரீஸ்வரீ.....


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


PREVIOUS

RETURN TO MAIN MENU