வேதத்தைத் தமிழ் செய்த யதீந்திரர்
கடாரத்தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee

 
  
திருவான்மியூர் உ.வெ.சாமிநாதய்யர் நூகத்தில்
உள்ள
யஜுர்வேதத் தமிழ்ப் பிரதி

                     தஞ்சை மாவட்டத்தில் ஆயக்காரன்புலம்  என்றொரு சிற்றூர்.
                    அது திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யத்துக்கு அருகில் உள்ளது.
                    அது நான்கு வேதங்களும் மறைக்காட்டுநாதரான சிவனைப் பூஜித்த இடம். அவை கோயிலுக்குள் நுழைந்த திருவாயிலை அவை சாற்றி திருக்காப்பிட்டுவிட்டன.
                    ஆகவே யாரும் அந்த வழியில் வருவதில்லை. பக்கத்தில் திறக்கப்பட்ட வாசலின் வழியாகத்தான் உள்ளே செல்லமுடியும்.

                    அப்பரும் ஞானசம்பந்தரும் ஒன்றாக இருந்த சில இடங்களில் திருமறைக்காடும்
ஒன்று.

    
                   அந்த இடங்களின் அருகே இருக்கும் ஊர் 'ஆயக்காரன்புலம்'.

                   அங்கு சாமித்தேவர் மதுரம்மாள் தம்பதியினருக்கு 1880-ஆம் ஆண்டில் பிறந்தவர் கலியபெருமாள்.
                    அவர் முக்குலத்தோரில் அகம்படியர் என்று குறிப்பிடப்படும் அகமுடையார்
சமூகத்தைச் சேர்ந்தவர்.


                    'ஜாதியைக் குறிப்பிடுகிறானே!' என வியத்தல் வேண்டாம்.

                    இந்த இடத்தில் அதைக் குறிப்பிடுவது மிக மிக அவசியமாகிறது.

                    ஐந்து வயதாகும்போது அவர் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
                    அந்தக் காலத்திலெல்லாம் கணக்காயர் என்று பழம் நூல்களில் குறிப்பிடப்படும்
ஓராசிரியர், தாம் ஒருவராகவே சிறிய நூல்களிலிருந்து பெரிய நூல்கள் வரைக்கும் சொல்லிக் கொடுப்பார். பிங்கல நிகண்டு
முதல் சில நிகண்டுகளும் புராணங்களும் படிக்கும் நிலையே பள்ளியின் இறுதிவகுப்புப் போன்றது.

                    கலியபெருமாள் எல்லாவற்றையும் பன்னிரண்டு வயது ஆவதற்கு முன்னால்
கற்றுக ்கொண்டு விட்டார்.


                    கலியபெருமாள் பள்ளியில் இருந்த காலத்தில் படித்த இரண்டு பாடல்களின் வரிகள்
அவர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.


'எல்லார்க்கும் காலன் துறவீவன்;
    ஈயாமுன் நல்லோர் துறப்பர்'

'நரைவரும் என்றெண்ணி நல்லறிவாளர்
குழவியிடத்தே துறந்தார்'

'இறப்பு வரும்போது எல்லாவற்றையும் எல்லாருமே துறந்து
செல்லவேண்டியதுதான். காலன்தான் அந்த துறவைக் கொடுப்பான்.
அவன் அதைக் கொடுக்குமுன்பாக நல்லோர் அவர்களாகவே
துறப்பார்கள்.'

'தலை நரைத்தபின்னர் உடல் தளர்ந்துவிடும். அப்போது
எடுக்கப்படும் துறவற நோன்பால் பெரிதும் பயனில்லை.
கர்மாவெல்லாம் அதற்குள் நிறையச் சேர்ந்துவிடும். ஆகவே
அதுவரைக்கும் காத்திராமல் குழந்தைப் பருவத்திலேயே நல்லறவு
படைத்தவர்கள் துறவை மேற்கொள்வர்'

                    மடங்களுக்குச் சென்று அங்குள்ள சான்றோரைப் பார்த்துப் போற்றுவதும் கோயில்களுக்குச் சென்று வழிபடுதல் போன்றவையும் கலியபெருமாளுடைய பழக்கங்கள்.
                    ஒருநாள் அருகிலிருந்த மடமொன்றிலிருந்த ராமையா அடிகள் என்பவரைக் கண்டுவணங்கினார்.
                    அவருக்குக் கலியபெருமாளைக் கண்டமாத்திரத்தில் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. அவரிடம் இத்தனை இளவயதிலேயே இருந்த பணிவு ஒழுக்கம் ஆகியவை அடிகளுக்கு வியப்பைத் தந்தன.

                    கலியபெருமாளைத் தம்முடனேயே இருக்கச்செய்துகொண்டார்.

                    அவரும் சம்மதித்து அங்கேயே இருந்து அவரிடம் சோணசைல மாலை, பட்டினத்தார் பாடல்கள், கீதாச்சாரத் திரட்டு, மகாராசா துறவு போன்ற நூல்களைத் தெளிவாகக் கற்று, பொருள்களை மிக ஆழமாகச் சிந்தித்தார். மேலும் பல நூல்களையும் கற்றார்.

                    இன்னும் அதிகமாகப் படிப்பதற்காகப் பாண்டிநாட்டுக்கு வந்தார்.

                    செட்டிநாட்டில் கோவிலூர் என்னும் ஊர் இருக்கிறது. அது காரைக்குடிக்கு அருகிலுள்ள ஊர். அங்கு ஒரு வேதாந்த மடம் உண்டு. இன்றும் இருக்கிரது.
                    அந்த மடத்தில் அக்காலத்தில் வீரசேகர ஞானதேசிகர் என்னும் ஞானி ஒருவர் மடாலயத் தலைவராகவும் மகாகுருவாகவும் விளங்கினார்.
                    அவருடைய ஆதரவில் கலியபெருமாள் சில ஆண்டுகள் தங்கியிருந்து கைவல்ய
நவநீதம், ஞானவாசிட்டம் ஆகிய கடுமையான நூல்களைக் கற்றுணர்ந்தார்.

                    ஞானதேசிகர் கலியபெருமாள் அடைந்த பக்குவநிலையை மனதிற்கொண்டு அவருக்குக் காவியளித்து 'சிவாநந்தர்' என்னும் தீட்சாநாமத்தையும் தந்தார்.

                   அங்கு ராமசாமிப் பிள்ளையென்னும் பெரும் செல்வர் ஒருவர் இருந்தார். சென்னை
யிலிருந்த முக்தானந்த அடிகள் என்பவர் சிவாநந்தரை அவரிடம் அழைத்துச்சென்று அவரைப்
பற்றி விரிவாகச் சொன்னார். அவர் வடமொழியிலேயே இலக்கண இலக்கியங்கள், சாஸ்திரங்கள் போன்றவற்றில் பாடம் சொல்லிக் கொடுத்தவர் என்றறிந்ததும் அவரிடம் ஒரு யோசனையை முன்வைத்தார்.


                "பிராம்மணர்கள் வேதங்களின் ஒலிகூட நம்முடைய காதுகளில் விழக்கூடாது என்கிறார்கள். வேத்தைத் தமிழில் மொழிபெயர்க்கமுடியுமா? அடிகள் மறையைத் தமிழில் மொழி பெயர்த்தருள்வீரா?" என்று கேட்டார்.

                "அவ்வாறே மொழி பெயர்த்து எல்லாரும் படிக்குமாறு வெளியிடலாம். அதனால் தவறு ஏதுமில்லை", என்றார் சிவாநந்தர்.

                உடனேயே வேதங்களின் மொழிபெயர்ப்பு வேலை ஆரம்பமாகியது.

                ராமசாமிப்பிள்ளை சிவாநந்த அடிகளாருக்கு தக்க இருக்கை வசதிகள், உணவு முதலியவற்றை ஏற்படுத்தித் தந்தார்.

                அத்துடன் அவருக்குத் தேவையான புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிக்கொடுத்தார். பலவகையான நிகண்டுகள், அகராதிகள், நிருக்தம், வடமொழி வேதங்கள், வேதங்கங்கள், வேதாந்தநூல்கள் முதலியவற்றை எங்கெங்கிருந்தோ ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து வாங்கிக்கொடுத்தார்.

                சிவாநந்த அடிகள் மூன்றாண்டுகளுக்குள் சாமவேதம் முழுவதையும் தமிழில் இனிய நடையில் மொழிபெயர்த்தார்.  பதவுரை, கருத்துரை, குறிப்புரை ஆகியவற்றையெல்லாம் கொடுத்திருந்தார்.

                அதன் பிறகு யஜுர்வேதத்தையும் மொழிபெயர்த்து முடித்தார்.

                அவற்றை எழுத எழுத ராமசாமிப்பிள்ளை உடனுக்குடன் அச்சேற்றி வெளியிட்டுவிட்டார்.
                அத்துடன் பல தமிழ் நூல்களையும் அவர் எழுதினார்.
                அவரால் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்:

வச்சிரசூசிகை உபநிஷத மொழிபெயர்ப்பு
சாமவேத மொழிபெயர்ப்பு
யஜுர்வேத மொழிபெயர்ப்பு
இருக்குவேத ருத்திரி
சாமவேத ருத்திரி
சங்கர திக்விஜயம்
கிருஷ்ணோபநிஷதம்

                    இவை தவிர இந்துசமயத்தின் பலவித சித்தாந்தங்களின் விளக்க நூல்களையும்
எழுதினார்.


தாயுமானவர் தன்னிலைத் தீர்ப்பு
அதவைதத் தீர்ப்பு
சைவத் தெளிவு
சிவஞானபோத சாரம்
ராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
    
                    இவற்றைச் சற்று கவனித்துப்பார்த்தால் இவை வெவ்வேறு தத்துவ சித்தாந்தங்களை அடக்கிய நூல்கள் என்பது புலப்படும்.
                    இன்னும் சில வரலாறுகளையும் புராணங்களையும் இயற்றியுள்ளார்.
                    பிறருக்கும் தமிழுக்கும் வடமொழிக்கும் தொண்டு செய்த நல்வாழ்வு வாழ்ந்துவிட்டு 1944-ஆம் ஆண்டில் சமாதியடைந்தார்.
    
                     சிவாநந்த யதீந்த்ர சுவாமிகளால் மொழிபெயர்க்கப்பட்டு, ராமசாமிப் பிள்ளையால் சொந்தப் பொருட் செலவில் அச்சிடப்பட்டு 1941-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கிருஷ்ண யஜுர்வேதத்தின் பாகங்களில் ஒன்றை மேலே காணலாம். அந்த நூல் திருவான்மியூரில் இருந்த உ.வெ.சாமிநாதய்யர் நூலகத்தில் இருந்தது.
அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU