பாம்பும் நடுங்கும் வெள்ளெருக்கு

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee



       வெள்ளெருக்கு
CALATROPIS GIGANTEA

                 1984-ஆம் ஆண்டு இறுதியில் மலாயாவின் வடமேற்கு மூலையில்
இருக்கும் பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகர் கங்கார் என்னும் ஊரிலிருக்கும் மாநில மருத்துவமனயின் இயக்குனராக மாற்றலாகிப் போனேன். எங்கிருந்து? மலாயாவின் தென் கிழக்குக்கோடியில் உள்ள கோத்தாதிங்கி என்னும் ஊரிலிருந்து. அங்கு எங்கிருந்து போனேன்? மலாயாவின் வடகிழக்குக் கோடியிலிருந்த கோத்தா பாரு என்னும் ஊரிலிருந்து.

                    பெர்லிஸ் என்னும் இடம் பாம்புகளுக்குப் பேர் போனது. நான் இருந்த குவார்ட்டர்ஸைச் சுற்றிலும் பாம்புப்புற்றுகள்தாம். புல்தரையில் சில துவாரங்கள் இருக்கும். அவற்றிலும் பாம்புகள் இருக்கும்.
                    குவார்ட்டஸ¤க்குள் பாம்புகள் வந்துவிடுவதுண்டு.
                    பாம்புகள் நிறைய இருந்ததால் அங்கு பாம்புப் பண்ணை ஒன்றை அரசு வைத்திருந்தது. அங்கு பாம்பு விஷத்தை எடுப்பார்கள்.பாம்பு விஷத்தை வெகு சிறிய அளவில் குதிரைகளுக்குச் செலுத்தி, அவற்றின் ரத்தத்தை முறிய வைத்து பெறப்படும் ஸீரம் என்னும் நிணத்திலிருந்து 'அண்ட்டி வீனம்' என்னும் நஞ்சு முறிவு மருந்தைத் தயாரிப்பார்கள்.
                    பல மாதிரி பாம்புகள். நல்ல பாம்பு, கரும்பாம்பு, விரியன் என்று நச்சுப்பாம்புகள் விதம் விதமாக இருந்தன.



கரும்பாம்பு
King Cobra


                    ஒருமுறை மாலையில் சமையலறையில் என் மனைவி வேலையாக இருந்தபோது, திடீரென்று என் மகளின் அலறல் சப்தம் கேட்டது. பார்த்தால் என் மனைவியின் குதிகாலுக்கு மிக அருகில் ஒரு கரும்பாம்பு படமெடுத்துக் கொண்டு இருந்தது. அது என் மனைவியைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அப்போது மனைவி நிற்கவும் அதுவும் நின்றுவிட்டது.. நின்றவாக்கில் படமெடுத்துக்கொண்டிருந்தது.

                    நான் அந்தப் பாம்பை அடிக்க முயன்றேன். ஆனால் அது சமையலறை குட்டி அலமாரிகளுக்கு அடியில் போய் நின்றுகொண்டது.
                    பயங்கரமாகச் சீறியது. இங்கும் அங்குமாகப் பாய்ந்தது.

                    அப்போதுதான் திடீரென்று ஞாபகம் வந்தது.

                    என்னிடம் வெள்ளெருக்கு வேரால் செய்யப்பட்ட விநாயகர் சிலையன்று இருக்கிறது. அது எனக்கு மேதை டாக்டர் ஜெயச்சந்திரனால் பூஜைக்காகக் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் அவர் பல ஆண்டுகளாக அதற்குப் பூஜை செய்துகொண்டிருந்தார்.
                    வெள்ளெருக்கு வேர் பாம்புக்கு ஆகாது என்று சொல்லி யிருக்கிறார்கள்.
                    ஆகவே ஓடிப்போய் பூஜையறையிலிருந்து வெள்ளெருக்கு விநாயகரை எடுத்துவந்து பாம்புக்கும் எங்களுக்கும் இடையே வெகு வேகமாக வைத்துவிட்டு ஒதுங்கினேன்.

                    ஒரு பயங்கர சீறலுடன் பாம்பு துள்ளிப் பாய்ந்து மறைந்தது. அங்கேயிருந்த சாக்கடைக் குழாய்க்குள் நுழைந்துகொண்டது.

                    நான் உடனேயே பாம்புப் பண்ணைக்கு டெலி·போன் செய்தேன்.
                    அங்கிருந்து இரண்டு பேர் வந்தார்கள்.

                    கொதிக்கும் தண்ணீரை சாக்கடைத் துவாரத்திற்குள் ஊற்றச் சொன்னார்கள். அவ்வாறே ஊற்றினேன். பாம்பு அலறியடித்துக்கொண்டு வெளிச் சாக்கடைக்கு வந்துவிட்டது. அவ்வளவுதான். நீண்ட கைப்பிடியுள்ள
வளைந்த ஸ்ட்டீல் கம்பியால் பாம்பின் கழுத்தை அழுத்தி அமுக்கிக் கொண்டு தலையை ஒட்டிய கழுத்துப் பகுதியைக் கையால் அழுத்திப் பிடித்துத் தூக்கினார்கள்.

                    "Come Doctor. Catch." என்றவாறு என் கையில் கொடுத்தார்கள்.
                    பிடித்ததும் உடனேயே கையைச்சுற்றிக்கொண்டது. ரொம்பவும் இறுக்கமான சுற்றுகள். முறுக்கிக ்கொண்டுவிட்டது.

                    பாம்பை அப்போதுதான் உற்றுப்பார்த்தேன். பளபளப்பான கருப்பு நிறம். வழுவழுப்பாக இருந்தது. ஆனால் ஒன்று. மீன் கவுச்சி அடித்தது.

                    பாவமாக இருந்தது. கொதிக்கும் தண்ணீரையல்லவா ஊற்றி விட்டேன். நம்மால் பிடிபட்டுவிட்டது. இனிமேல் அது கண்ணாடிக் கூண்டுக்குள் அல்லவா இருக்கவேண்டும். அதன் சுதந்திரமும் பறி போய்விட்டதே.
                    ஆகவே தமிழில் மெதுவாக அதனிடம் பேசி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

                    "டொக்டோர் சக்காப் ஆப்ப கெப்பாட ஊலார்னீ?" - "இந்தப் பாம்பிடம் டாக்டர் என்ன பேசினீர்கள்?" என்று பாம்பாளர்கள் கேட்டனர்.
                    "சும மிந்தா மா·ப் ஆஜ" - "சும்மா மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அவ்வளவுதான்."
                    சிரித்துக்கொண்டார்கள்.

                    மிகவும் பிரயாசைப்பட்டு அந்த முறுக்கைப் பிரித்துக்கொண்டு, பாம்பைத் திருப்பிக்கொடுத்தேன்.
                    பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டுக்கொண்டு திரும்பிச்சென்றார்கள்.

                    கரும்பாம்பு என்பதை King Cobra என்று சொல்வார்கள். பாம்புகளில் மிகக்கடுமையான விஷம் வாய்ந்தது அது.

                    அது வெள்ளெருக்கு வேர் பிள்ளையாருக்குப் பயந்து ஒதுங்கி ஓடி மறைந்ததைக் நேருக்கு நேர் கண்ணால் கண்டு அறிந்துகொண்டோம்.

                    ஒருவர் வெள்ளெருக்கு வேர் பற்றி விபரங்கள் கேட்டுக்கொண்டிருந்தார்.

                    எருக்கு என்பதை Calatropis Indica என்று சொல்வார்கள்.
                    இது கடுமையான விஷத்தன்மை கொண்டது.இதுதான் மிகச் சாதாரணமாக எங்கும் காணப்படுவது. இது forensic முக்கியத்துவம் பெற்றது. இது புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கொல்வதற்குப் பயன்படுகிறது.  சில தமிழ்க் குடியினரிடம் பெண்குழந்தைகளைக் கொல்லும் வழக்கம் உண்டு. எருக்கம்பாலில் நெல்லைப் போட்டு சங்கில் வைத்து புகட்டுவார்கள். ("கருத்தம்மா" படத்தில் பார்த்திருப்பீர்களே?)    
                    எருக்கம்பாலில் ஒருவகைப் பிசின் இருக்கிறது. அது கெட்டி படக்கூடியது. அந்தப் பாலிலும் நச்சுத்தன்மை இருக்கிறது. குழந்தையின் வாயில் இறங்கியதும் உள்ளே உணவுக்குழாய், மூச்சுக் குழாய் ஆகியவற்றில் கெட்டிப்பட்டுவிடும். மேலும் அதில் உள்ள நெல்மணி தொண்டைக்குழிக்குள் உறுத்தும். ஆகவே குழந்தை திக்குமுக்காடிச் செத்துவிடும்.
                    எருக்கம்பாலிலிருந்து பிசினைப் பிரித்துவிட்டால் தெளிவான திரவம் ஒன்று எஞ்சியிருக்கும் . இதில் Calatropin என்னும் நச்சுப்பொருள் இருக்கிறது.
                    இது நல்லபாம்பின் விஷத்தை ஒத்திருக்கும்.
                    அந்தப் பிசினை கருக்கலைப்பு மருந்தாகப் பயன்படுத்துவார்கள். சிறிய மூங்கில் சிம்புகளைச் செதுக்கி, அவற்றின் ஒரு முனையில், பஞ்சில் இந்தப் பிசினைக்கலந்து, அதனை கர்ப்பிணியின் ஜனன உறுப்பிற்குள் திணித்துவிடுவார்கள். கரு கலைந்துவிடும். மூன்றுமாதங்கள் வரைக்கும் இதனைப் பயன்படுத்துவார்கள்.
                விஷமான எருக்கு பலவகையான மருந்துகளிலும் இடம் பெறுகிறது. காய்ச்சல், வாதம், அஜீரணம், இருமல், தடுமன், எக்ஸீமா, ஆஸ்த்துமா, யானைக்கால், வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் முதலியவற்றிற்குப் பயன்படும். ஆயுர்வேதத்தில் செடியை ஒரு டானிக் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள். காயவைத்த வேர் ஒரு நல்ல இருமல் மருந்து. இலைகள் வாதக்கடுப்பு, பக்கவாதம், வீக்கம், காய்ச்சல் முதலியவற்றிற்குப் பயன்[அடுகிறது.
                    எருக்கின் பூ கொஞ்சம் கத்திரிப்பூ வண்ணத்தில் இருக்கும்.
                    சிவபெருமான் சூடியிருக்கும் மலர்களில் எருக்கம்பூவும் உண்டு.  சிலவ¨கையான விநாயகர் பூஜைகளிலும் பயன்படுத்துவார்கள்.
                    வெள்ளெருக்குச் செடி பெரிதாக இருக்கும். பெயருக்கு ஏற்றாற்போல வெள்ளையான பூக்கள் பூக்கும்.
                    இந்தச் செடி இருக்கும் இடத்திற்கு பாம்பு வராது.
                    தேவதைகளின் நடமாட்டம் அங்கு இருக்கும் என்றும் சொல்வார்கள்.
                    வெள்ளெருக்கு மாந்திரீக ஆற்றல் உள்ளதாகக் கருதப் படுகிறது.
                    வெள்ளெருக்கின் பட்டையை அடித்து நாராக்கி, அதிலிலிருந்து திரி செய்வார்கள். சில சிறப்பு வழிபாடுகளில் அந்த திரியைப் பயன்படுத்துவார்கள்.
                    அந்த நாரிலிருந்து நூல், மெல்லிய கயிறு ஆகியவை திரிப்பார்கள். இந்த நூலில் ரசமணி என்னும் மணியைக் கோர்த்துக் கொள்ளப் பயன் படுத்துவார்கள்.
                    ரசமணி? பாதரசம் சாதாரணமாக திரவ உருவில் அல்லவா
இருக்கும்? அதனை சில முறைகளைக் கொண்டு கெட்டியாக்கமுடியும். இதை "ரசம் கட்டுதல்" என்று சொல்வார்கள்.
                    இவ்வாறு கட்டப்பட்ட பாதரசத்தை உருட்டி மணியாக்கவேண்டும்.     அதாவது அதனை உருண்டு கொள்ளச் செய்யவேண்டும்.
                    இதுதான் ரசமணி.
                    இது சில குறிப்பிட்டஆற்றல்களைப் பெற்றது.
                    வெள்ளெருக்கு கயி றை அரைநாணாகவும் கட்டுவார்கள்.
                    அந்த வேருக்கு மாந்திரீக ஆற்றல் உண்டு. அந்த வேரை சாதாரணமாகவே பூஜையில் வைத்திருக்கலாம்.
                    வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிலைசெய்து வழிபாட்டுக்கு பயன்படுத்துவார்கள்.

                    இப்போது தெய்வச்சிலைகள் விற்கும் கடைகள் நிறைய இருக்கின்றன. அங்கேல்லாம் வெள்ளெருக்குவேர் பிள்ளையார் சிலைகள் ஏராளமாக விற்கிறார்களே? வெள்ளெருக்கு வேர் கிடைப்பது அரிது என்பார்களே?

                    உண்மைதான்.
                    எருக்கஞ்செடி எங்கும் இருக்கும். ஆனால் வெள்ளெருக்குக் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கும். எல்லா இடத்திலும் இருக்கவும் மாட்டாது.
                    அது ஐந்தடி அல்லது ஆறடி உயரமாவது இருந்து அதே அளவு அகலமுள்ள பரப்பும் இருந்தால்தான், அதன் வேர் போதுமான அளவுக்குத் தடிமனாக இருக்கமுடியும். சிறிய செடிகளின் வேர் சிறிய குறுக்களவே பெற்றதாக இருக்கும்.
                    மேலும் பிள்ளையார் சிலை செய்வதற்குரிய வெள்ளெருக்கு வேர் சில விசேஷமான சடங்குகளுடன் எடுக்கப்படும்.
                    சும்மா போய் கண்ட கண்ட இடத்தில் இருக்கும் வெள்ளெருக்கு வேரைப் பிடுங்கிக்கொண்டுவந்து செய்துவிட முடியாது.
                    இன்னின்ன திதிகள், கிழமைகள், நட்சத்திரங்கள் ஆகியவற்றில்தான் வேரை எடுக்கலாம். அதற்கு முன்னர் செடிக்குச் சில பூஜைகள் போட்டு அந்தச் செடிக்குக் காப்புக் கட்டவேண்டும். குறிப்பிட்ட சிறப்பு லக்னத்தில் எடுக்கவேண்டும். அதுவும் எல்லா வேரையும் படக்கென்று எடுத்துக்கொண்டு வந்து விடமுடியாது. குறிப்பிட்ட திக்கை நோக்கி ஓடிய வேர்தான் காரியத்துக்கு ஆகும். அந்த வேரை எடுக்கு முன்னர் 'சாபோத்தாரணம்' என்ற மந்திரத்தைப் பயன்படுத்தி அதனைச்செய்யவேண்டும். விசேஷ மூலிகைகள் எடுக்கும்போது சாபோத்தாரணம் செய்தாக வேண்டும். உரிய மற்ற பூஜையெல்லாம் செய்துதான் வேரை எடுக்கவேண்டும்.
                    அந்த மூலிகை, ஆற்றல் பெற்று வேலை செய்வதற்குரிய மந்திரங்கள் இருக்கின்றன.
                    கடைகளில் வெள்ளெருக்கு வேரில் செய்யப்பட்டவை என்று  விற்கப்படும் பொருள்கள் பெரும்பாலும் Balsom என்னும் லேசான கட்டையில் செய்யப்பட்டவை. போலியானவி.
                    தற்சமயம் கடைகளில் வெள்ளெருக்கு வேர் என்ற பெயரில் விற்கப்படும் பொருள்களுக்குத் தேவையான அளவுக்கு வெள்ளெருக்கு  வேர்கள் வேண்டுமானால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் வெள்ளெளெருக்கைப் பயிர் செய்தால்தான் முடியும்.
                    அப்புறம் அது ஒரு Cash Corp அந்தஸ்த்து பெற்றுவிளங்கும்.

JayBee

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU