பாக்கு

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee



பாக்கு மரமும் பாகங்களும

                    ஒருகாலத்தில் வெற்றிலை போடும் வழக்கம் நிறைய இருந்தது. விருந்துகளின்போது கட்டாயமாக வெற்றிலை பாக்கு உண்டு. அப்போது வெற்றிலை போட்டுக்கொள்வது ஒரு மரியாதை. அவர்களின் hospitality-யை நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். திருமணத்துக்கு அழைக்கும்போதுகூட பணம் பாக்கு வைத்தே அழைப்பது வழக்கம். நல்லது கெட்டது எல்லாவற்றிலும் வெற்றிலை பாக்கு இருக்கும்.பல சம்பிரதாயங்களில் வெற்றிலை பாக்கு உண்டு.
                    மங்கலகரமான எட்டுப் பொருள்களில் வெற்றிலையும் ஒன்று.
                    இப்போதெல்லாம் வெற்றிலை போடும் வழக்கம் அருகிவிட்டது.
                    சிலர் சிலவேளைகளில் பீடா போடுவார்கள்.
                    பீடாவைப் பற்றிய பழைய மடல் அகத்தியத்தில் உண்டு.
                    வெற்றிலையை வெறும் வெற்றிலையாகப் போடுவதில்லை.பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்துத்தான் போடவேண்டும்.
                    பாக்கைப் பழங்காலத்தில் அடைக்காய் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
                    ஆங்கில மொழியில் பாக்கை Betel Nut, Areca Nut என்று சொல்கிறோம்.
                    அரெக்கா என்பது அடைக்காயின் மருவல். பெட்டல் என்பது வெற்றிலையின் மருவல். ஆக, இரண்டுமே தமிழ்ச்சொற்கள்.
                  கடாரத்தின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்களில் பாக்கும் ஒன்று. இப்போதும்கூட ஆயிரக்கணக்கில் கடாரத்தில் பாக்கு மரங்களைக் காணலாம்.

                    பினாங்குத்தீவின் பெயரில் உள்ள பினாங் என்பது பாக்கைக் குறிக்கும் சொல்தான்.                
                    அங்கு பாக்கு மரங்களும் அதிகம். பாக்கு ஏற்றுமதி மையமாகவும் இருந்தது.
               பினாங்கு மாநிலத்தின் சின்னமே பாக்கு மரம்தான்.



பினாங்கு மாநிலத்தின் கொடி

                    ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் நானே பார்த்திருக்கிறேன்.
                    இரண்டாம் உலகயுத்தத்தின்போது குண்டுவிழுந்து தரைமட்டமாகிய வீடுகளின் இடிபாடுகளை அப்புறப்படுத்தியபின் அந்த இடங்களில் பெரும்பாலும் பழைய சிமெண்டுத்தரை அப்படியே இருக்கும்.
                    நான்கைந்துவீடுகளின் இடுபாடுகளையெல்லாம் சுத்தமாக்கிவிட்டு அந்த இடத்தில் பாக்கைப் பரப்பிக் காயவைத்து, மலைபோலக் குவித்து வைத்திருப்பார்கள். அங்கேயே சாக்குகளில் நிரப்பி கைவண்டிகளில் ஏற்றி அருகிலிருக்கும் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

                    ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்தவர்களிடம் பினாங்குத்தீவில் பாக்குக் காயவைக்கும்போது அங்கு வரும் காக்கைகளை விரட்டுவதற்கு ஆள்தேவைப்படுகிறது என்று சொல்லியே கூலிவேலைக்கு ஆள்பிடித்துக் கூட்டிவந்ததாகச் சொல்வார்கள்.
                    அப்போது அப்படி கூட்டிவரப்பட்டவர்களின் கதை சோகக்கதை. அது வேறு கதை.



உரிக்காத பாக்கு

                    பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர் இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள்.
                    அதன்பின்னரே காயவைப்பது.
                    இவ்வாறு காயவைக்கப்பட்டது கொட்டைப்பாக்கு.......

                    பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள்.
                    அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர்இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள்.
                    அதன்பின்னரே காயவைப்பது.
                    இவ்வாறு காயவைப்பது கொட்டைப்பாக்கு.......

                    பாக்கை அவித்து, அதை ஆறவைத்து, அதை ஸ்லைஸ் ஸ்லைஸாக வெட்டி, அதன்பின் காய வைப்பார்கள்.
                    இதைக் 'களிப்பாக்கு' என்று குறிப்பிடுவார்கள்.
                    இது 'மொறுகுமொறுகு'வென்று இருக்கும். இதன் சுவையும்வித்தியாசமானதுதான்.
                    கொட்டைப் பாக்கை அப்படியே கடிப்பது என்பது பலருக்கு இயலாத காரியம்.
                    ஒருசிலரால் அவ்வாறு கடிக்கமுடியும்.
                    பற்களுக்கு இடையில் வைத்து 'நறுக்'கென்று கடித்துவிடுவார்கள்.'டக்'கென்று பாக்குப் பிளக்கும்.

                    நொடிப்பொழுதை ஒரு காலத்தில் 'பாக்குக் கடிக்கும் நேரம்' என்று குறிப்பிடும் சொல்வழக்கு ஒன்று இருந்தது.

                    இவ்வளவு சிரமப்படவேண்டாம் என்று பலர் ஒரு கருவியை வைத்திருப்பார்கள்.
                    அதனைப் 'பாக்குவெட்டி' என்று அழைப்பார்கள்.
                    இரண்டு கைப்பிடிகள். இடுக்கி போல் இருக்கும். ஒரு பிடியில் பதமான கத்தி இருக்கும். பாக்கைவைத்து கைப்பிடிகளை இறுக்கினால் பாக்குப் பிளந்துவிடும்.
                    பாக்குகளை மெல்லிய இழைகளாகச் சீவிவைப்பதும் உண்டு.இதைச் சீவல் பாக்கு என்பார்கள்.
                    சீவலை நெய்யில் முந்திரிப்பருப்பு, பிஸ்தாப் பருப்பு, தேங்காய்ப்பூ, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றுடன் நெய்யில் வறுத்து வைப்பதும் உண்டு.
                    சிறிய துணுக்குகளாகப் பாக்கைவெட்டி அந்தத் துணுக்குகளையும் பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்து நெய்யில் வறுத்துவைப்பதும் ஒருவகை. வாசனைப் பாக்குத்தூள் என்பது இது.
                    'அசோகா' வாசனைப்பாக்கு, மதுரை சாமுண்டி வாசனைப் பாக்கு ஆகியவை மிகவும் புகழ ்பெற்றவையாக இருந்தன.
                    மதுரை மேலக்கோபுரத்தெரு முழுவதுமே சாமுண்டி பாக்குத் தூளும் டெல்லிவாலா நெய் ஸ்வீட்டுகளும் நரசு'ஸ் காப்பித்தூளும் சேர்ந்துமணக்கும். அது ஒரு தனி அலாதிதான்.
                    மதுரையில் மல்லிகை மட்டுமே மணக்கும் என்பதில்லை. 'ரெட்' படத்தின் மூலம் அந்தக் கருத்து பரவிவிட்டது. மதுரையில் பலவகையான மணங்கள் உண்டு.
                கொட்டைப் பாக்கு களிப்பாக்கு ஆகியவை காளமேகப் புலவரின் பாடல் ஒன்றில் வரும்.
                     கவி காளமேகம் திருமலைராயன்பட்டினத்துக்குச்சென்று  திருமலைராயனைப் பாடி, பரிசில் பெற்றுவரச்சென்றார்.
                    அங்கு அவருக்கும் அங்கிருந்த அறுபத்துநான்கு தண்டிகைப் புலவர்களின் தலைமைப் புலவன் அதிமதுரகவிக்கும் தகராறு ஆகிவிட்டது. ஆகவே காளமேகப்புலவரை அரிகண்டம் என்னும் போட்டியில் கலந்துகொண்டு அறுபத்துநான்கு தண்டிகைப் புலவர்களும் கொடுக்கும் குறிப்புகளின்படிக்கு உடனேயே கொஞ்சமும் தயங்கமலும் யோசிக்காமலும் ஆசுகவியாகப் பாடும்படி சவால்விட்டனர். அரிகண்டத்தைவிட அதிபயங்கர எமகண்டம் பாடுவதாகக் காளமேகம் சவாலை எடுத்துக்கொண்டு பாடினார்.
                    (காளமேகம்/அதிமதுரகவி தகராறு, அரிகண்டம், எமகண்டம் போன்ற விஷயங்கள் பற்றி விஸ்வாக்காம்ப்லெக்ஸின் இன்னொரு கட்டுரையில் காணலாம்.)
                    அந்த வகையில் அவர் பாடிய சிலேடை முதலிய கவிதைகள் அறுபத்துநான்கில் ஒன்று -
                    'கொட்டைப்பாக்கு என்று ஆரம்பித்து 'களிப்பாக்கு' என்று முடியுமாறு பாடச்சொன்னார்கள்.
                    இந்த இரண்டும் அமையுமாறு ஒரு கவிதையை உடனேயே பாடிவிட்டார் -

கொட்டைப் பாக்கும்மொருகண் கூடையைப்பாக்கும் மடியில்
பிட்டைப் பாக்கும் பாகம்பெண்பாக்கும் - முட்டநெஞ்சே
ஆரணனு நாரணனும் ஆதிமறையுந் தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு

                    மதுரை சொக்கேசர் அறுபத்துநான்கு திருவிளையாடல்களை பாண்டியநாட்டில் நிகழ்த்தினார்.
                    மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் அமைச்சர். குதிரை வாங்கிவரச்சொல்லி பாண்டியர் அனுப்பினார். அவரோ குதிரை வாங்கவேண்டிய பணத்தில் ஒரு கோயிலுக்குத் திருப்பணி செய்துவிட்டார். கோபம் கொண்ட பாண்டியர் கேட்டபோது சொக்கேசர் சொல்லிக் கொடுத்ததுமாதிரி ஆவணி மூலத்தின்போது குதிரைகள் வரும் என்று சொன்னார். காட்டுநரிகளையெல்லாம் குதிரைகளாக்கி சொக்கேசர் கொண்டுவந்து சேர்த்தார்.
                    இரவில் அவை மீண்டும் நரிகளாகி அங்கிருந்த பழைய குதிரைகளைக் கொன்றுவிட்டன.
                    இதையறிந்த பாண்டியமன்னர் உடனேயே மாணிக்கவாசகரைத் துன்புறுத்தினார்.
                    சொக்கேசர் வைகையில் வெள்ளம் பெருகிவரச்செய்தார்.
                    வீட்டுக்கு ஓர் ஆள் சென்று வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் கரையைக் கட்டவேண்டும் என்று பாண்டியர் உத்தவிட்டார்.
                    அனைவரும் சென்றனர்.
                    ஆனால் வந்தி என்னும் பிட்டு விற்கும் கிழவிக்கு மட்டும் கூலிக்கு ஆள் கிடைக்கவில்லை. வீட்டிலும் வேறு யாருமில்லை. வந்தி ஓர் அனாதை. அப்போது வந்தியிடன் சொக்கேசர் ஒரு கூலியாளாக வந்தார். சொக்கேசருக்குக் கொடுப்பதற்கோ வந்தியிடம் காசில்லை. ஆகவே அன்று உதிர்ந்துபோகும் பிட்டைமட்டும் கூலியாகக் கொடுப்பதாக் வந்தி ஒப்பந்தம் பேசினாள்.
                    அன்று என்று என்றுமில்லாத வழக்கமாகப் பிட்டு எல்லாமே உதிர்ந்துபோய்விட்டது.
                    அவ்வளவையும் சொக்கேசர் கூலியாக வாங்கிக்கொண்டார். கரைகட்டும் இடத்தில் வேலையே செய்யவில்லை.
                    மண்ணெடுக்கும் கூடையில் மண்வெட்டும் கொட்டு சும்மா இருந்தது.

                    அதைத்தான் படுகிறார்...........

கொட்டைப் பாக்கும்மொருகண் கூடையைப்பாக்கும்மடியில்
பிட்டைப்பாக்கும் பாகம்பெண்பாக்கும் - முட்டநெஞ்சே
ஆரணனும் நாரணனும் ஆதிமறையுந் தேடும்
காரணனைக் கண்டுகளிப் பாக்கு

    "மண்வெட்டும் கருவியான கொட்டை ஒருகண் பார்க்கும்;
வெற்றுக்கூடையையும் பார்க்கும். மடியில் கூலியாக வாங்கிய
பிட்டைப் பார்க்கும். பெண்ணை ஒருபாகத்தில் வைத்துப்பார்த்தவர்
சொக்கேசர்;  பிரமனும் விஷ்ணுவும் ஆதிவேதங்களும் தேடியும்
காணமுடியாத பரம்பொருள். அப்பேற்பட்டவனைக் கண்டு மனமே,
நீ களிப்பை ஏற்படுத்திக்கொள்".

                    இதில் கொட்டைப்பாக்கு என்று ஆரம்பித்து களிப்பாக்கு என்று முடித்திருக்கிறார்.

                    மலேசியாவில் மலாய்க்காரர்களின் கலாச்சாரத்தில் வெற்றிலை பாக்கு முக்கிய இடம் வகிக்கும். அதைப் போடுபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
                 Perjanjian Sireh Pinang என்பது ஒரு முக்கியமான உறுதிமொழி/   ஒப்பந்தம்/ சத்தியப்பிரமாணம்.
                    ஒரு சக்திவாய்ந்த ஆவியுடன் மேற்கூறிய உறுதிமொழி ஒப்பந்தம் செய்துகொள்ளுமாறு ஒரு மலாய்க்கார மாந்திரீகர் சொன்னது ஒரு தனிப் பெரும் கதை.

                     (அதை வேறு இடத்தில் சொல்லியிருக்கிறேன்).
                    'ஸீரே பீனாங்' என்பது வெற்றிலை பாக்கைக் குறிக்கும்.
                    கீழ்க்கண்ட படத்தில்
் மலேசியாவின் இருபது காசு நாணயத்தைக் காணலாம்.



மலேசிய இருபது காசு நாணயம்
மலாய்க்காரர்களுடைய வெற்றிலைச்செல்வம்
பாக்குவெட்டியும் அருகில் இருக்கிறது


                    அந்த நாணயத்தின் ஒருபுறத்தில் மலாய்க்காரர்கள் பயன்படுத்தும் வெற்றிலைப் பெட்டி, வெற்றிலை, சுண்ணாம்பு டப்பி, ஏலக்காய் டப்பி, வெட்டப்பட்ட பாக்குத்தூள் டப்பி ஆகியவற்றுடன் முழுப்பாக்கு ஒன்றுடன் பாக்குவெட்டியையும் வெற்றிலைப் பெட்டியின் அருகில் காணலாம்.
                    வயதானவர்கள் பயன்படுத்தும் பாக்கு உரலும்கூட அவர்களிடம் உண்டு.    

                    நாணயத்தின் கீழேயுள்ள படத்தில் பாக்குவெட்டி,  பாக்குவெட்டியால் பாக்கைவெட்டும் விதம் ஆகியவற்றின் ஸ்கெட்ச் படத்தைக் காணலாம்.



பாக்குவெட்டி
பாக்கை வெட்டும் விதம்

                    பாக்குவெட்டியால் பாக்கைமட்டும்தான் வெட்டலாம் என்று நினைக்கிறீர்களா?
                    அதுதான் கிடையாது.
    
                    ரொம்பநாளைக்கு முன்னாலே ராமசந்திர கவிராயர் என்றொருவர் இருந்தார்.
                    எல்லீசு துரை என்பவருடைய பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள். அவர் ஒரு வெள்ளைக்காரர். தமிழில் பாண்டித்தியம் பெற்றவர். அவர் ராமச்சந்திரக் கவிராயர் என்பவரிடம் தமிழை முறைப்படி கற்றார்.
                    ராமச்சந்திரக் கவிராயர் புகழ்வாய்ந்தவரோ என்னவோ அவர் பாடிய சில பாடல்கள் புகழ்வாய்ந்தவை. கெட்டதெல்லாம் ஒரேயடியாக வந்து தொலைக்கும் என்று பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. அவரை சரியாக ஆதரிப்போரில்லை. அவலமாக சில பாடல்களைப் பாடியுள்ளார். விரக்தியும், தன்னிரக்கமும் நிறைந்த கையறுநிலைப் பாடல்கள் அவை.
                    அந்த நிலையிலும் அவர் நகைச்சுவை உணர்வு குறையாமல் இருந்தார்.
                    பாக்குவெட்டியைப் பாடியுள்ள ஒரே ஆள் அவராகத்தானிருப்பார். பொடிடப்பியை மாம்பலக்கவிச்சிங்க நாவலர் பாடியிருக்கிறார்.
                    (அந்தச்சம்பவத்தை விஸ்வாக்காம்ப்லெக்ஸின் இன்னொரு வலைப்பக்கத்தில் காணலாம்).

                    ராமச்சந்திர கவிராயருடைய பாக்குவெட்டியை யாரோ ஒளித்து வைத்துவிட்டார்கள்.
                    அதைத் தேடித்தேடியும் காணமுடியாத கவிராயர் அந்தப் பாக்குவெட்டியின் பெருமைகளையும் பயனையும் சிலாகித்துப் பிரலாபித்துப் பாடி, அத்தகைய பாக்குவெட்டியை யாராவது எடுத்தால் கொடுத்துவிடும்படி கெஞ்சியிருக்கிறார்.

விறகுதறிக்கக் கறிநறுக்க வெண்சோற்றுப்புக் கடகுவைக்கப்
பிறகு பிளவுகிடைத்ததென்றா னாலாறாகப் பிளந்துகொள்ளப்
பறகுபறகென்றே சொறியப் பதமாயிருந்த பாக்குவெட்டி
இறகுமுளைத்துப் போவதுண்டோ வெடுத்தீராயிற் கொடுப்பீரே!

பாக்குவெட்டி எதற்கெல்லாம் பயன்பட்டிருக்கிறது?

விறகைச் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள;
காய்கறி நறுக்க;
சோற்றுக்கு ஊற்றிக்கொள்ள குழம்பு ரசம் மோர் போன்றவைகூட இல்லாத நிலை; தண்ணீரை ஊற்றிக்கொண்டோ வெறும் சோறாகவோ சாப்பிடும் நிலை. ஆனால் அதற்கும் போட்டுக்கொள்ள உப்பு இல்லை. ஆகவே பெட்டிக்கடையிலோ பலசரக்குக்கடையிலோ உப்புக்கு அடைமானமாக பாக்குவெட்டியை வைத்து உப்பு வாங்கிவரப் பயன்பட்டிருக்கிறது;
பாக்கு கிடைத்தால் அதனை நான்காகவோ ஆறாகவோ துண்டாக்கிப்
பிளந்துகொள்லலாம்;
முதுகு அரித்தால் முதுகை, 'பறகு பறகு' என்று பாக்குவெட்டியின்
காம்புகளால் சொறிந்துகொள்ளலாம்; அதற்கு ஏற்றவகையில் அது கூர்மையாக இருந்தது.
"இப்படிப் பயனுள்ளதாக இருந்த பாக்குவெட்டிக்கு இறகு முளைத்துப்
பறந்தாபோய்விட்டது?
யாராவது எடுத்திருந்தால் அதனைத் திருப்பிக் கொடுங்கள்".

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU