பராக்கிரம பாண்டியரின் பணிவு

பாகம் 2

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee



 
                    அந்தக் கோயிலுக்காக ஒன்பது நிலைக் கோபுரம் ஒன்றை எழுப்பினார். கிட்டத்தட்ட
நூற்று எண்பது அடிகள் உயரம் கொண்ட அந்தக் கோபுரம் எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஏனெனில் அவர் அந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்கவில்லை.
                    இக்கோயிலுக்காக விஸ்வநாதப்பேரேரி என்னும் பெரிய ஏரியையும் அவர் வெட்டுவித்திருக்கிறார்.
                     தொடங்கப்பட்ட அந்த ஒன்பது நிலை ராஜகோபுரத்தை மட்டும் அவரால் நிறைவு
செய்ய முடியவில்லை.
                     ஏதோ நிகழ்ந்திருக்கிறது. மாற்றார் படையெடுப்புகள்; நாட்டின் வளம் குன்றல்; அரசின் வருமானக் குறைவு; மாற்றாருக்குக் கப்பம் என்று ஏதாவது பெருங்காரணமிருக்கலாம்.
                     பல காலமாக அந்த கோபுரம் அப்படியே இருந்திருக்கிறது.

                     தான் கட்டிய கோயிலைக் கவனமாகப் பாதுகாக்குமாறு தன்னுடைய வழித்தோன்றல்களையும் சிவனடியார்களையும் பராக்கிரமர் வேண்டிக்கொள்ளும் பாடல்கள் அந்தக் கோயிலில் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப் பட்டிருக்கின்றன.
                     இப்பாடல்களை பராக்கிரமரே இயற்றியுள்ளார். அவரும் நல்ல கவிஞர். புலவர்களை
நன்கு ஆதரித்தவர்.

    மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன்னின்று
    எனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசியை என்றுமண்மேல்
    நினைத்து, ஆதரஞ்செய்து, தன்காவல் பூண்ட நிருபர் பதம்
    தனைத் தாழ்ந்து, இரைஞ்சித் தலைமீது யானும் தரித்தனனே!

முதற்பாடலில், இறைவன் ஆணையிட்ட வண்னம் தென்காசியையும்
அதன்கண் 'மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயிலை' அமைத்த செய்தியைச்
சொல்லி, பிற்காலத்தில் அங்கு ஆளப்போகும் மன்னர்கள் அதனை ஆதரித்துக் காக்கவேண்டி, 'அவர்களுக்குத் தாழ்ந்து, அவர்களின் பாதத்தைத் தன் தலைமேல் இப்போதே தரிப்பேன்',
என்று பராக்கிரமர் சொல்கிறார்.

    ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன்னாயலத்து
    வாராததோர் குற்றம் வந்தால், அப்போது அங்கு வந்து, அதனை
    நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்,
    பாரார் அறியப் பணிந்தேன் பாராக்ரமபாண்டியனே!

                    "எப்போதாவது இந்த தென்காசியிலிருக்கும் பொன் ஆலயத்திற்கு
வரக்கூடாத குற்றம் வந்துவிட்டால், அப்போதே அங்கு வந்து அந்தக் குற்றத்தை ஒழித்து
நீதியை நிலைநாட்டிக் காப்பாற்றுவார்களை, இப்போதே உலகத்தோர் அறியப் பணிகிறேன்,
பராக்ரம பாண்டியனாகிய நான்".

    சேல் ஏறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச்செய-
    லாலே சமைந்தது; இங்கென் செயலல்ல; அதனை இன்னம்
    மேலே விரிவு செய்தே புரப்பார் அடி வீழ்ந்து, அவர்தம்
    பால் ஏவல் செய்து பணிவன் பராக்ரமபாண்டியனே!

                    "நீர்வளம் கொண்ட வயல்களில் மீன்கள் நிறைந்துள்ள தென்காசி
ஆலயம் தெய்வச்செயலால் ஏற்பட்டது. இங்கு என் செயல் ஒன்றுமில்லை.
அக்கோயிலை இன்னும் மேலே விரிவு செய்து காப்பாற்றுவார்களின்
பாதங்களில் விழுந்து, அவர்களின் ஏவலை ஏற்றுப் பணி இப்போதே
புரிகிறேன், பராக்ரம பாண்டியனாகிய நானே".

                    சாத்திரம் பர்த்து இங்கு யான்கண்ட பூசைகள் தாம் நடத்தி,
    ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற்கோயில் என்றும் புரக்க,
    பார்த்திபன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடன்நம்
    கோத்திரம் தன்னிலுள்ளார்க்கும் அடைக்கலம் கூறினனே!

                    "வேதாகமநூல்களின்படி இங்கு நான் ஏற்படுத்திவைத்த பூசைகள் அனைத்தையும்
தாமே ஏற்று நடத்தி, அவற்றை மதித்துப் போற்றி, இந்த விசுவநாதர் ஆலயம் எப்போதும் ஆதரவுடன் காக்கப்படுமாறு, மன்னர் மன்னன், கொற்கையின் மாறன், பராக்ரமனாகிய நான், இப்போதே என் வழி வரப்போகும் வழித்தோன்றல்களிடம் கோயிலை அடைக்கலமாக்குகிறேன்".


    அரிகேசரிமன் பராக்கிரம மாறன் அரனருளால்
    வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம்
    புரிசேர் கடற்புவி போற்றவைத்தேன்; அன்பு பூண்டு இதனைச்
    திரிசேர் விளக்கெனக் காப்பார் பொற்பாதமென் சென்னியதே!

                    அரிகேசரி, சடையன், மாறன், வழுதி, பனையன், கடலன், கௌரியன், மலையன், செழியன், தென்னவன், மீனவன், கைதவன், என்பன பாண்டியரின் பட்டப்பெயர்கள். 

                    "சிவனருளால் அரிகேசரி மன்னன் பராக்ரம மாறனாகிய நான், 'வரிசேர் பொழிலணி' தென்காசிக்கோயிலை அமைத்து, பூமி மட்டுமல்லாது வலம்புரி சங்கு சேரும் கடலும்
போற்றச் செய்தேன். என்றும் அணையாத தூண்டாமணி விளக்காக இதனை போற்றிப் பாதுகாப்பவர்களின் பொற்பாதம் என் சிரத்தின்மீது இருப்பதாக!"
   
   
    பூந்தண் பொழில்புடை சூழுந்தென்காசியைப் பூதலத்தில்
    தாம்தம் கிளையுடனே புரப்பார்கள், செந்தாமரையாள்
    காந்தன் பராக்ரமக் கைதவன் மானகவசன்கொற்கை
    வேந்தன் பணிபவராகி, எந்நாளும் விளங்குவரே!

                    மலர்கள் நிரம்பிய குளிர்ந்த பொய்கைகளால் புடைசூழப் பெற்றிருக்கும் தென்காசியை, தாமும் தம் உறவும் வழியினரும்கூடி, ஆதரித்துக் காப்பவர்கள், ராஜலெட்சுமியின் மணாளனாகிய மகாவிஷ்ணுவுக்கு நிகரான மானகவசனும் (மானமே கவசமாகக் கொண்டவன்) கொற்கை வேந்தனும் ஆகிய பராக்ரம பாண்டியனால் பணியப்படுபவராக எந்நாளும் விளங்குவார்கள்.

    மேற்கண்ட பாடல்கள் பராக்கிரம பாண்டியர் பாடியதாக விளங்குகின்றன.

    கீழேயுள்ள பாடல்களை வேறு யாரோ பாடியிருக்கிறார்கள்.

    மென்காசை மாமலரன்ன மெய்யோற்கும் விரிஞ்சனுக்கும்
    வன்காசு தீர்த்திடும் விச்சுவநாதன் மகிழ்ந்திருக்கப்
    பொன்காசை மெய்யென்று தேடிப்புதைக்கும் இப்பூதலத்துத்
    தென்காசி கண்ட பெருமாள் பராக்ரமத் தென்னனே!

                    மகாவிஷ்ணுவைக் 'காயாம்பூவண்ணன்' என்று புகழ்வார்கள். 'காயாம்பூ' என்பது ஒரு மாதிரியான கரும் purple நிறமானது. காயாமரம் என்பதை ironwood tree என்று சொல்வார்கள். சகர யகரப்போலியின் காரணமாகக் 'காயா', 'காசா' வாக மாறி,     இந்த இடத்தில் காசையாக மருவி நிற்கிறது.
                    பொன்காசே 'சதம்' என்று நம்பி அதனைத் தாமும் செலவிடாமல் பிறருக்கும் கொடுக்காமல் பத்திரமாகப் புதைத்து வைக்கும் இந்த உலகத்தில், பெருமாளான பராக்கிரம பாண்டியன் என்ன செய்திருக்கிறான் தெரியுமா!
                    மென்காசை மாமலர் அன்ன மெய்யன் = மென்மையான காயாம்பூ போன்ற மேனியை
யுடைய மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஏற்பட்ட குறைபாட்டைத் தீர்த்து வைத்த விசுவநாதன் மகிழ்ந்து உறையும் வண்ணம் தென்காசியை ஏற்படுத்தினான். (அடிமுடி காணாத படலத்தைக் குறிக்கிறது).
       
    அணிகொண்ட விந்த வணங்குமொன்றேயடியேற்குனக்கு
    மணிகொண்ட வாசன் மணியுமொன்றே பகை மன்னரையும்
    பிணிகொண்ட காரையும் முந்நீரையும் பெரும்பூதத்தையும்
    பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே.

                    மேற்கண்ட பாடல் பொதுவாகப் பராக்கிரம பாண்டியனைப் புகழ்ந்து பாடப்பட்டது. இதில் பாண்டிய வம்சத்தினர் சம்பந்தப்பட்ட சில பழங்கதைகள் legends குறிப்பிடப்பட்டுள்ள.
   
    ஓங்கு நிலை ஒன்பதுற்ற திருக்கோபுரமும்
    பாங்குபதினொன்று பயில்தூணும் - தேங்குபுகழ்
    மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி
    தன்னிலன்றி உண்டோ தலத்து!   

                    இந்தப் பாடலில் ஒன்பது நிலைக் கோபுரத்தையும் அங்கு நிறுவப்பட்டிருக்கும் அற்புதமான பதினோரு தூண்களையும் ஒரு புலவர் பாடியுள்ளார்.

    பராக்கிரம பாண்டியர் ஒரு தீர்க்கதரிசி.
    அதை அவர் பாடிய பாடல்களிலிருந்து அறியலாம்.

கீழ்க்கண்ட பாடலில்:

    சேல் ஏறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச்செய-
    லாலே சமைந்தது; இங்கென் செயலல்ல; அதனை இன்னம்
    மேலே விரிவு செய்தே புரப்பார் அடி வீழ்ந்து, அவர்தம்
    பால் ஏவல் செய்து பணிவன் பராக்ரமபாண்டியனே!

"அதனை இன்னம் மேலே விரிவு செய்தே புரப்பார் அடி வீழ்ந்து, அவர்தம்பால் ஏவல் செய்து பணிவன் பராக்ரமபாண்டியனே!"

என்று கூறியிருக்கிறார்.

    1429 முதல் 1473வரைக்கும் ஆட்சி புரிந்த அவருடைய தம்பியாகிய சடையவர்மன் குலசேகர பாண்டியர் அந்த ஒன்பது நிலைக் கோபுரத்தைத் தாமே பூர்த்தி செய்துவிட்டார்.
   
    சாத்திரம் பர்த்து இங்கு யான்கண்ட பூசைகள் தாம் நடத்தி,
    ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற்கோயில் என்றும் புரக்க,
    பார்த்திபன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடன்நம்
    கோத்திரம் தன்னிலுள்ளார்க்கும் அடைக்கலம் கூறினனே!

என்னும் பாடலில் கூறியுள்ளபடி பராக்கிரம பாண்டியருக்குப் பின்னர் ஆண்டுவந்த அவருடைய சந்ததியினர் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அந்தக் கோயிலில் முடிசூட்டிக்கொண்டு அந்தக் கோயிலையும் அதிலுள்ள திருவிழாக்களையும் அன்றாடம் நடந்த பூசைகளையும் பராமரித்துவந்தனர்.

    பராக்கிரம பாண்டியருடைய மற்றொரு பாடல்:

    ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன்னாயலத்து
    வாராததோர் குற்றம் வந்தால், அப்போது அங்கு வந்து, அதனை
    நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்,
    பாரார் அறியப் பணிந்தேன் பாராக்ரமபாண்டியனே!

                    இதில் அவர் குறிப்பிட்டுள்ள 'வாராததோர் குற்றம் வந்தால்' என்றபடிக்கு அந்த ராஜகோபுரம் நான்குமுறை இடிந்து போயிற்று. இரண்டு முறை முஸ்லிம் படை
யெடுப்புக்களால்; ஒரு முறை நெருப்புப் பிடித்துச் சேதமாகியது.
                    கடைசியாக 1825-இல் இடிவிழுந்து ராஜகோபுரம் இடிந்துவிட்டது. அது இடிந்த நிலையிலேயே 1966-ஆம் ஆண்டுவரைக்கும் அப்படியே இருந்திருக்கிறது.




                    அந்த ஆண்டு தினத்தந்தி ஆதித்தனார் தலைமையில் திருப்பணி சிறப்பாக நடைபெற்று, அந்தப் பழைய இடிந்த கோபுரம் அகற்றப்பட்டு, அந்த ஒன்பது நிலைக்கோபுரம் சீராகக் கட்டப்பட்டுவிட்டது.



பராக்கிரம பாண்டியன் பெருவாயில் இப்போது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU