பட்டை கொட்டை கட்டை

டாக்டர் எஸ்.ஜெயபாரதி

JayBee


                காஞ்சிரம்பழம் விஷச்சத்து வாய்ந்தது. அதைவிட அதன் கொட்டை இன்னும் அதிக
விஷத்தன்மை உடையது. ஆனாலும் அதற்கும் ஓர் உபயோகம் இருக்கிறது.

               சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஒரு மல்ட்டி
மில்லியன் ரூபாய் காட்டேஜ் இண்டஸ்ட்ரியாக இருந்தது.

                கள்ளச்சாராயத்தில் கிக் அதிகம் இருந்தால்தான் அதற்கு டிமாண்ட் இருக்கும்.
                ரொம்பவும் நொந்துபோன வாழைப்பழம், மூன்றாந்தர சர்க்கரை, கொஞம் திராட்சை
முதலியவற்றை ஒரு பானையில் போடுவார்கள்.

                திராட்சையின் தோலில் வெண்மையான படிவங்கள் இருப்பதைக் காணலாம். இந்தப்
படிவங்கள் சர்க்கரையை நொதிக்கச்செய்யும் யீஸ்ட் உயிரணுக்களின் காலனிகள்.

                இந்த நொழநொழாக் கரைசலிலுள்ள சர்க்கரையை நொதிக்கச் செய்வதற்கு யீஸ்ட் கலவை
வேண்டும். தேவையான யீஸ்ட்டை திராட்சையின் தோலிலிருந்து பெறுகிறார்கள்.


                தறுக் புறுக் சதக் புதக் கஜக் புஜக் என்று பிசைவார்கள். அது கொழ கொழ நொழு நொழு
சொள சொள என்று ஆகும்போது அதில் காஞ்சிரம்கொட்டையைத் தட்டிப்போடுவார்கள்.
அத்துடன் பழைய  பாட்டரிக கட்டையை நொறுக்கிப் போடுவார்கள்.

                பாட்டரிக்கட்டையில் அமோனியம் க்லோரைட் கலவை இருக்கிறது. யீஸ்ட்டுக்கு
அமோனியம் க்லோரைட் ஒரு ·பெர்ட்டிலைஸர் மாதிரி.

                இந்தக் கலவையுடன் கருவேலம்பட்டையையும் நசுக்கிப்போட்டுச் சேர்ப்பார்கள்.
                இதனால்தான் அதற்குப் 'பட்டைச் சாராயம்' என்று பெயர் ஏற்பட்டது.
                இந்தக் கலவையைக் 'கலக்கல்' என்று முன்பெல்லாம் சொன்னார்கள். இப்போது 'கலக்கல்'
என்றால் என்னெத்தையோ குறிக்கிறது.

                பானையில் வேடு கட்டி பதினோரு நாட்கள் கொஞ்சம் சூடான இடத்தில் வைத்திருப்பார்கள்.
                அதன் பின்னர் அதை வாலை கட்டி வடித்தெடுப்பார்கள்.
               ('வால்' என்றதும் அதற்கு ஏது வால் என்றோ, வாலை ஏன் கட்டவேண்டும்; ஆட்டவா
போகிறது என்றோ எல்லாம் நினைத்துவிடக்கூடாது. இது வாலை. Pot-still. குமரிக்கும்
இதற்கும் சம்பந்தமில்லை.)

                Pot Still என்பது மிக எளிமையான வாலை யந்திரம்.
                 மூன்று பெரிய பானைகள். சிறிய கலசம் ஒன்று.



எளிமையான அடிப்படை வாலை வடி யந்திரம்

              
                இவைதான். Fractional Distillation முறையில் நொதித்த கரைசலில் உள்ள அல்க்கஹாலைப்
பிரித்தெடுக்கச் செய்யும்.

                இந்தப் பானைகள் ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும்.  கட்டுப்படுத்தி எரிக்க
முடியக்கூடிய விசேஷ அடுப்பு பயன்படுத்தப்பட்டது.

                இதன்மேல் அடிப்பானையை வைப்பார்கள். இதில்தான் கலக்கல் இருக்கும்.
                இதற்கு மேலாக இன்னொரு பானை. அதுவும் அதே சைஸ்.
                ஆனால் இந்தப் பானையின் அடிப்பாகத்தில் ஓர் ஓட்டை இருக்கும்.
                இந்த ஓட்டையைச ்சுற்றி சிறிய சப்பட்டையான கூழாங்கற்களை வைத்திருப்பார்கள்.
மூன்று கூழாங்கற்கள்.

                இந்த மூன்று கற்களின்மீது கலசத்தை வைப்பார்கள்.
                நடுப்பானையின் உட்புற அடிப்பாகத்துக்கும் கலசத்தின் அடிப்பாகத்துக்கும் நடுவில்
இடைவெளி இருக்கும்.

                நடுப்பானைக்கும் மேலாக இன்னொரு பனை. அதுவும் அதே அளவிலானது.
                அந்தப் பானையில் குளிர்ந்த தண்ணீர் வைத்திருப்பார்கள். அடிக்கடி தண்ணீரை  மாற்றிக்
கொண்டேயிருப்பார்கள்.

                பானைகளின் வாய்ப்பாட்டைக் களிமண் வைத்து சீல் செய்துவிடுவார்கள்.
                நீராவியோ அல்லது சாராய ஆவியோ வெளியில் சென்றுவிடக்கூடாது.
                அடுப்பைப் பக்குவமாக எரிப்பார்கள். தண்ணீரின் Boiling Point 100 டிகிரி ஸெல்ஸியஸ்.
ஆனால் கலக்கலில் உள்ள அல்க்காஹாலின் Boiling Point-டோ 70 சொச்சம் டிகிரிதான்.

                ஆகவே சீக்கிரமே கொதித்து அதனுடைய ஆவி மேலே வரும்.
                அது அடிப்பானைக்கும் நடுப்பானைக்கும் நடுவே இருக்கும் இடைவெளிவழியாக
மேலே ஏறி, மேற்பானையின் அடிப்பாகத்தில் படும். அதில் இருக்கும் குளிர்ந்த தண்ணீரால்
ஆவியாக உள்ள அல்க்கஹால் அப்படியே குளிர்ந்து மேற்பானையின் அடிப்பாகத்தில் படியும்.

                அந்தப் பானையின் அடிப்பாகம் ரவுண்டாக இருப்பதால் படியும் அல்க்கஹால் முழுவதும்
கீழேயுள்ள கலசத்தில் சொட்டுச் சொட்டாக வடியும்.
                வாலை வடித்து முடியும்போது கலசத்தை எடுத்துவிடுவார்கள்.
                அதன் உள்ளே சாராயம்.
                நேரம் ரொம்ப முக்கியம்.
                கொஞ்சம் கூடிப்போய்விட்டாலோ, வெப்பம் கூடக்குறைய இருந்தாலோ சுத்தமான
சாராயம் கிடைக்காது.   

               ரொம்ப நல்ல தரமான பட்டைச் சாராயத்தை பரிசோதனை செய்து பார்ப்பார்கள்.  
அதற்கெல்லாம்  மீட்டர் கீட்டர் ஒன்றும் கிடையாது.

                விரலை விட்டு நனைத்து எடுத்து நெருப்புக்குச்சியைப் பற்றவைத்து காட்டுவார்கள்.
                'பசக்' என்று நீலநிறமான ஜுவாலையுடன் எரியும்.

                அதுதான் கிரேட் ஏ என்று இதையெல்லாம் என்னிடம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்
சொன்னவர் விளக்கினார்.

                நாற்பதாண்டுகளுக்கு முன்னர்   தமிழ்நாட்டில் மது விலக்கு இருந்தது.
                அவ்வப்போது இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் பட்டைச்சாராயம் காய்ச்சுவார்கள்.
                 எத்தனையோ பேருக்கு மருத்துவ உதவியைச் செய்திருக்கிறேன்.
                அவர்களில் இப்படிப்பட்ட தொழில் செய்பவர்களும் இருந்தார்கள்.
                அவர்களில் ஒருவர் விலாவாரியாகச் சொன்ன விபரங்கள்.
                அவற்றைத்தான் இங்கு எழுதியிருக்கிறேன்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
   
RETURN TO MAIN MENU