பட்டி விக்கிரமாதித்யன்
பிரச்னை தீர்வு #3
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
பட்டி, உச்சினி மாகாளி கோயிலுக்கு நள்ளிரவில்
சென்று அங்கு சன்னிதிக்குக் குறுக்கே இருந்து காளியை தியானித்தான். காளி
தோன்றி விபரம் கேட்டாள். விக்கிரமன் ஆயிரம் ஆண்டுகள் ஆள்வதால் தன்னை
ஆயிரம் ஆண்டுகள் விக்கிரமனின் மந்திரியாக இருக்க தனக்கு வரம் தருமாறு
கோரினான்.
இரண்டாயிரம் ஆண்டுகள் தான் தருவதாகவும் அதற்கு 'சார்வபௌம'னாக
விளங்கும் ஒரு சக்கரவர்த்தியின் தலையை அறுத்து கொண்டுவரவேண்டும் என்றும்
காளி சொன்னாள்.
'சார்வபௌமன்' என்றால் சர்வ பூமிக்கும் உரிமையாளன்.
'எம்மண்டலமும் கொண்டருளிய' என்று பாண்டியர்கள் குறிப்பிட்டுக்கொள்வார்கள்.
"அப்படி ரெடிமேடாக ஒரு சார்வபௌமன் இருக்கிறான்", என்று
சொல்லிவிட்டுத் திரும்பினான், பட்டி.
விக்கிரமனிடம் விபரத்தைச் சொல்லவும் விக்கிரமன் தன் கழுத்தைக்
காட்டினான். விக்கிரமனுடைய தலையை அறுத்துக்கொண்டு பட்டி காளி கோயிலுக்குச்
சென்றான்.
தலையைப் பார்த்த காளி பட்டி இரண்டாயிரம் ஆண்டுகள் அமைச்சனாக
இருப்பதற்கு உடனேயே வரம் தந்தாள்.
வரத்தை வாங்கிக்கொண்ட பட்டி ஒருமாதிரியாகச் சிரித்தான்.
என்.எஸ்.கிருஷ்ணன் பாட்டில் இல்லாத ஒரு வகையான சிரிப்பு.
"என்ன சிரிப்பு?" காளி குழப்பத்துடன் கேட்டாள்.
"ஒன்றுமில்லை தாயே. உன்னுடைய வரத்தில் கொஞ்சம் சந்தேகம்".
காளி தன்னுடைய பதினெட்டுக் கைகளையும் சுற்றிமுற்றிலும்
பார்த்துக்கொண்டாள். அத்தனை கரங்களிலும் தாங்கியிருக்கும் ஆயுதங்களில் எந்த
ஆயுதத்தால் தன் வரத்தின்மீது சந்தேகப்பட்ட இந்த அற்ப மனுசப்பதரைப் போட்டுத்தள்ளலாம்
என்று பார்த்தாள்.
அதற்குள்ளாக பட்டி சொன்னான்:
"எனக்கு ஒரு உம்மெ
தெரிஞ்சாகணுந் தாயி. அதுல பாரு தாயி........ ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ஆயிரம்
வருசம் சிம்மாசனத்துல இருந்து ஆளலாம்னுட்டு தேவேந்திரனும் மத்த தேவாளும் வரம்
குடுத்தாஹ. குடுத்து நாப்பத்தெட்டு மணித்தியாழம்கூட ஆகல்ல. அதுக்குள்ளாற.....
தோ பாரு........தலெ. 'அத்துன பேரு சேந்து, அவுஹ
எல்லாருமா சேந்து குடுத்த வரமே அப்படீன்னாக்க, நீங்குடுத்த வரமும்
அப்புடித்தானோ?'ன்னுட்டு நெனச்சேன் தாயி, அம்பூட்டுத்தான்."
காளி இதைக் கேட்டு களிப்புடன் சிரித்தாள்.
உடனேயே விக்கிரமனை உயிருடன் மீட்டு எழுப்பினாள்.
பட்டியிடமிருந்து விக்கிரமாதித்யன் நடந்ததையெல்லாம் அறிந்துகொண்டான்.
"அது சரி...நான் ஆயிரம் வருடமும் நீ ஈராயிரம் வருடமும்......
பொருந்தவில்லையே?" என்று கேட்டான் விக்கிரமன்.
"அதற்கும் வழி இருக்கிறது மஹாராஜா. அந்த சிம்மாசனத்தில்
வீற்றிருந்துகொண்டுதானே ஆயிரம் ஆண்டுகள் ஆளவேண்டும்? நீங்கள் ஆறுமாதம்
அந்த சிம்மாசனத்திலிருந்து நாட்டை ஆளுங்கள். இன்னொரு ஆறுமாதம்
காட்டிலிருந்துகொண்டு காட்டை ஆளுங்கள். இப்படி நாடாறு மாதம் காடாறு மாதம்
ஆண்டால் கணக்குக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிடும். யாருடைய வரமும்
வாக்கும் பொய்க்காது. நாம் இருவரும் சேர்ந்தே காட்டிலும் நாட்டிலும்
இருப்போம். After all...'காவிறையே கூவிறையே' என்று கன்னாப்பின்னா என்று
பிற்காலத்தில் பாடப்போகிறார்களே. காட்டுக்கும் நாட்டுக்கும் அதிபதி என்றுதான்
கம்பனும் பொருள் சொல்லப்போகிறான்", என்றான் பட்டி.
இப்படியாகத்தானே பட்டியும் விக்கிரமாதித்யனும் காடாறு மாதம்
நாடாறு மாதம் சீரும் சிறப்புமாக ஈராயிரம் ஆட்சி புரிந்தனர்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU