POSITIVISM
பெருமாளே காப்பார்
பெத்தபெருமாள் ஒரு விவசாயி. பெரிய பெருமாள் பக்தன்.
எப்போதும் எதையுமே 'பெருமாளே பார்த்துக்கொள்வார்; பெருமாளே காப்பாற்றுவார்' என்ற
நம்பிக்கை அவனுக்கு உண்டு. அதையே அவன் மிக ஆழமாக நம்பினான்.
ஒவ்வொரு ஆண்டும் நல்ல விவசாயமாக இருந்தது. அது அவனுடைய நம்பிக்கையை மேலும்
மேலும் அதிகரித்தது.
ஒருநாள்......
பயங்கர மழை பெய்தது. அதனால் பெருவெள்ளம் ஏற்பட்டது.
தண்ணீர் ஏறிக்கொண்டேயிருந்தது.
நேரம் ஆக ஆக தண்ணீரின் ஓட்டமும் அதிகமாகியது.
மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக வெளியேறி உயரமான இடங்களுக்குச் சென்றனர்.
பெத்தபெருமாள் மட்டும் போகவில்லை. மற்றவர்கள் கூப்பிட்டதற்கும் 'எல்லாம் பெருமாளே
பார்த்துக்கொள்வார்; பெருமாளே காப்பாற்றுவர்' என்று சொல்லிவிட்டான்.
தண்ணீரின் மட்டம் ஏறியது.
வீட்டிலிருந்த பரண்மேல் ஏறிக்கொண்டான்.
அவனைத் தேடி சிலர் படகில் வந்தனர். அவர்கள் அவனை வீட்டிலிருந்து வந்து படகில்
ஏறிக் கொள்ளுமாறு கூவி அழைத்தனர்.
பெத்தபெருமாள் மறுத்துவிட்டான். 'எல்லாம் பெருமாளே பார்த்துக்கொள்வார்; பெருமாளே
காப்பாற்றுவர்' என்று சொல்லிவிட்டான்.
அவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள்.
தண்ணீர் இன்னும் அதிகமாக ஏறியது.
வீட்டின் கூரையைப் பிரித்துக்கொண்டு வெளியில் தலையை நீட்டிக்கொண்டு நின்றான்.
அப்போது இன்னொரு படகு வந்தது.
அவர்களும் அவனை அழைத்தனர்.
மீண்டும் மறுத்துவிட்டான். மீண்டும் சொன்னான்: "எல்லாம் பெருமாளே பார்த்துக்
கொள்வார்; பெருமாளே காப்பாற்றுவார்".
அவர்களும் சென்றுவிட்டனர்.
இன்னும் தண்ணீர் ஏறிவிட்டது.
பெத்தபெருமாள் கூரையின் மீது ஏறி அமர்ந்துகொண்டான்.
அப்போது ஒரு படகு அவனைத் தேடி வந்தது.
அவர்கள் அழைத்ததற்கும் அவன் வரவில்லை. 'எல்லாம் பெருமாளே பார்த்துக்கொள்வார்;
பெருமாளே காப்பாற்றுவர்' என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டான்.
தண்ணீர் இன்னும் அதிகமாக ஏறி பெருக்கெடுத்து ஓடியது.
பெத்த பெருமாளைத் தண்ணீர் இழுத்துசெல்ல ஆரம்பித்தது.
அப்போது ஒரு ஹெலிகாப்டர் அங்கு வந்தது. அதில் இருந்தவர்கள் அவனுக்காக ஒரு லைனை
இறக்கிவிட்டு அதில் தொத்திக்கொள்ளும்படி லௌட் ஸ்ப்பீக்கர் மூலமாகச் சொன்னார்கள்.
எப்படியும் தண்ணீர் வடிந்துவிடும். தப்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவன் மறுத்துவிட்டான்.
'எல்லாம் பெருமாளே பார்த்துக்கொள்வார்; பெருமாளே காப்பாற்றுவர்' என்று சொல்லிவிட்டான்.
ஹெலிகாப்டர் மூன்று நான்கு தடவை வட்டமடித்துவிட்டு, இருட்ட ஆரம்பிக்கவும் திரும்பிப்
போய்விட்டது.
இரண்டு நாட்கள் கழித்து, தண்ணீர் வடிந்த பின்னர் நெடுந்தூரத்தில் சகதியில் பாதி
புதைந்துகிடந்த பெத்தபெருமாளின் உடலைக் கண்டெடுத்தனர்.
பெத்தபெருமாளின் நம்பிக்கையாலும் பக்தியோகத்தாலும் கர்மயோகத்தாலும் சரணாகதித்துவத்தாலும்
வைகுந்தத்துக்குச் சென்றான்.
அங்கு அவன் கருடாழ்வாரிடம் கேட்டான், "நான் 'எல்லாம் பெருமாளே பார்த்துக்கொள்வார்;
பெருமாளே காப்பாற்றுவர்' என்று பரிபூரணமாக நம்பினேனே? ஏன் பெருமாள் என்னைக் காப்பாற்றவில்லை?"
என்று
கோபமாகக் கேட்டான்.
கருடாழ்வார் அவனை ஒரு தினுசாகப் பார்த்தார்.
பிறகு சொன்னார்:
"பெருமாள் மூன்று படகுகளை அனுப்பிவைத்தார். ஒரு ஹெலிகாப்டரையும் அனுப்பிவைத்தார்.
நீதானே ஏறிக்கொள்ள மறுத்தாய்?"
அன்புடன்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU