பெயரிலி
அநாமிகா
பாகம் 2

    கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
    டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee

                மனிதனின் கையில் உள்ள ஐந்து விரல்களில் நான்குக்கு ஏதோ ஒருவகையில் சொந்தப் பெயர் இருக்கிறது.
                கட்டைவிரல், ஆள்காட்டிவிரல்/சுட்டுவிரல், நடுவிரல்/பாம்புவிரல், சுண்டுவிரல். ஆனால் அந்த நான்காவது விரலுக்கு மட்டும் மோதிரவிரல்  என்று பெயர். மோதிரத்தை அணிந்தால்தானே அந்தப் பெயர் பொருந்தும்? மேலும் அந்த விரல் மட்டுமா மோதிரத்தை அணிகிறது?
                'பத்துவிரல் நிறைய மோதிரம்' என்று தொடங்கும் பாட்டு ஒன்று மீனாட்சியம்மனைப்பற்றி இருக்கிறது.
                ஆகவே அந்தப் பெயர் ஏதோ தோதுக்காக வைக்கப்பட்ட பெயர்போல் தோன்றுகிறது.
                உண்மையிலேயே அந்த நான்காவது விரலுக்குப் பெயர் என்ன?
                தெரியவில்லை.
                அச்சச்சோ!
                'தெரியவில்லை' என்று சொல்வதேகூட பெயராகிவிடப் போகிறதாக்கும்!
                ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற முதல் வெள்ளைக்காரர் ஒருவர், அங்கு குதித்துக் குதித்துச் சென்றுகொண்டிருந்த விசித்திரமான மிருகத்தைப் பார்த்தார். அருகே நின்ற ஆதிவாசியைக் கேட்டார். அவருக்கு அந்த இங்கிலீஷ்காரர் கேட்டது என்னவென்று புரியவில்லை. ஆகவே ஒன்றும் தெரியவில்லையே என்று விழித்தவாறு கைகளை விரித்துக்கொண்டு, 'தெரியாது' என்று அவருடைய மொழியில்  'கங்காரூ' என்றார்.
                அதுவே அந்த மிருகத்துக்குப் பெயராகிவிட்டது.
                'கங்காரூ - தெரியாது'.
                மோதிர விரலுக்கு என்று ஏதும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது.
                மேற்கத்திய கலாசாரத்தில்கூட அதனை 'Ring Finger' என்றுதானே அழைக்கிறார்கள்?
                வடமொழிக்காரர்கள் 'பெயரில்லாதது' என்று மிக அழகாகப் பெயரிட்டு 'அநாமிகா' என்று வைத்துக ்கொண்டுவிட்டார்கள்.
                இதுபோலவே ஒரு பெருந்தமனியன்று(ரத்தக்குழாய்) இருக்கிறது.அதற்கு 'Vena Innominata' - 'Innominate Vein' என்று பெயரிட்டுள்ளார்கள். 'பெயரில்லாப்பூச்சி', 'அநாமிகா' போன்றதுதான் இதுவும்.
                'Innominata' என்றால் லத்தீன் மொழியில் பெயரில்லாதது என்றுதான் அர்த்தம்.
                ஒத்த பொருளுடைய சொற்களை 'Synonym' என்றும், எதிர்மறைப் பொருளுடையவற்றை 'Antonym' 'Anonym' என்று சொல்வார்கள். அதுபோலவே பெயரே இல்லாததைஎன்று சொல்வார்கள். Anonymous என்பது அநாமதேயத்தைக் குறிக்கிறது.

            'பெயரிலி'.     

            பெயரிலி என்பதனை மாணிக்கவாசகர்மிக அழகாக,

ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு,ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டோமோ!


என்று சொல்கிறார்.
                சிவனை 'உருவிலி, பிறப்பிலி, இறப்பிலி, பெயரிலி', என்றெல்லாம் வர்ணிப்பார்கள். 'தாயிலி' என்ற பெயரும் உண்டு.

                சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர் சிங்கம்புணரி. அதுதான் எங்கள் ஊர். அதன் அருகிலுள்ள சிவபுரியில் திருத்தான்தோன்றீஸ்வரர் - அறம் வளர்த்த நாயகியின் திருக்கோயில் இருக்கிறது. ஸ்வயம்பிரகாஷர் - தர்மஸம்வர்த்தினி என்ற வடமொழிப்பெயர்களும் உண்டு. சிவனுக்குப் பெயர் 'தான்தோன்றீசர்'. 'பொரியாக்குஞ்சு', 'சுயம்பிரகாசர்' என்றும் சொல்வார்கள்.
                 அதன் அருகில் "தாயிலிக் கண்மாய்" என்றொரு சிறு ஏரி இருக்கிறது. "இதென்ன வேடிக்கையான பெயர். கெட்டவார்த்தை போலத் தோன்றுகிறதே?" என்றுஆரம்பத்தில் நினைத்தேன்.
                தாயிலிருந்து பிறக்காத, தாயற்றவன் - தாயிலி
                ஊர்க்காரர்களில் ஒருவருக்கு "சேம்ராஸ்" என்ற பெயர் இருந்தது. இன்னொரு ஆளுக்குப் பெயர் "பொரியாக்குஞ்சு அம்பலக்காரன்".
                கல்வெட்டு ஆராய்ச்சிதான் முடிச்சை அவிழ்த்தது.
                எங்கள் ஊரின் சிவபெருமானின் பெயர் "தான்தோன்றீசர்". (தான் தோன்றி ஈசர்). சிவன் கோயிலுக்குப் பெயர் திருத்தான்தோன்றீ£ஸ்வரம்". அங்கிருப்பது இயற்கையில் அமைந்துள்ள லிங்கம். சுயம்பு லிங்கம்.
                வடமொழியில் "ஸ்வயம் ப்ரகாஷ நாதர்". சுருக்கமாக சுயம்பிரகாஷ்.
                இதைத்தான் சேம்ராஸ், சோம்ராஸ் என்றெல்லாம் உச்சரித்திருக்கிறார்கள்.
                பாவம். அந்த மனிதர். அவர் ஒரு பழைய தி.மு.க. ஆள். பெயரின் மூலம் தெரிந்திருந்தால் பெயரையே மாற்றியிருப்பார்.
                முட்டை தோன்றி, அதிலிருந்து பொரிந்து வருவது சாதாரணக் குஞ்சு. தாய்ப் பறவைதான் அந்த முட்டையை இடும்.
                தாய் இட்ட முட்டை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தானாகவே  தோன்றியது "பொரியாக் குஞ்சு".
                ஆகவே இதுவும் "தான்தோன்றியீசரை"க் குறிப்பதுதான்.
                மனையில்லாதவன் மனை இலி;
                தாயே இல்லாதவன் "தாய் இலி".
                இதுவும் "தான்தோன்றி நாதரு"க்கு உரியசொல்தான்.
                அப்பர் ஒரு பாடலில் சிவனைத் 'தாயிலி' என்று வர்ணித்திருக்கிறார்.

14 அப்பர் (கலித்துறை)

தாயிலி யாகுஞ் சிவபெரு மான்தனைத் தானெனுமோர்
கோயிலி னாரறி வாகிய நாமமுன் கொண்டிருந்த
வாயிலின் ஆணவ மாகுங் கபாடமு மன்திறந்து
நோயிலி ஆகிய சொல்லிறை காட்டுவன் நோக்குதற்கே.


                சிவனின் சிறப்புத் தன்மைகளில் ஒன்று, அவர் 'பிறப்பிறப்பிலி'யாக விளங்குவது. (பிறப்பு + இறப்பு + இலி).

                 சிவத்திருமேனிகளில் முக்கியமானது'சுயம்பு' எனப்படும் தானாகத் தோன்றிய இயற்கையான லிங்க வடிவங்கள்.
                'ஸ்வயம்பு' என்பது தானாகப் பிறந்தது, தோன்றியது என்றே பொருள்.    
                தமிழிலே 'தான்தோன்றி' என்று அழைப்பார்கள்.

                'தாயிலி' என்று சொல்லப்பட்டாலும்கூட அம்பிகையே சிவனுக்குத் தாயாகவும் விளங்குவதாக அபிராமி பட்டரும் திருமூலரும் பாடி யிருக்கிறார்கள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


PREVIOUS NEXT

RETURN TO MAIN MENU