பிராணிகளின் மொழி
பாகம் 1
கடாரத் தமிழ்ப்பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
ஒன்பதாண்டுகளுக்கு முன்னர் ஒரு கேள்வி
எழுப்பப்பட்டது:
"மொழிக்குத்தான் சுட்டுணர்வு தேவையே தவிர சுட்டுணர்வுக்கு மொழி தேவையில்லை
என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு மனிதன், குருடு, செவிடு, ஊமையாக
இருந்தாலும் (அதாவது, பார்வை, கேள்வி, பேச்சு அற்றுப் போயிருந்தாலும்
அந்த மனிதனுக்கும் சுட்டுணர்வு என்று இருக்கலாம் அல்லவா? இது அனேகமாக எல்லோரும்
ஒத்துக் கொள்ளக ்கூடியது என்று நம்புகிறேன்.
ஆனால் சுட்டுணர்வு இல்லாத ஒரு பிறவிக்கு மொழி என்று ஒன்று இருக்குமா? இருக்கக்
கூடியதா? இருக்கக் கூடலாம். ஆனால் இருக்குமா? மொழியியல் வல்லுனர்கள் (linguists
ands speech therapists and neurologists) என்ன கூறுகிறார்கள்?"
அந்தக் கேள்விக்குரிய மேல்விளக்கமாக சில தகவல்களையும் தரவிரும்புகிறேன். அறிஞர்களும்
சிந்தையாளர்களும் ஆர்வமுடைய இளைஞர்களும் இதே பாதையில் இன்னும் அதிகமாகவும்
ஆழமாகவும் சிந்தித்து புதிய கருத்துக்களையும் தோற்றுவிக்கலாம்.
ஆகவே சிக்கலான நெருடலான இந்த விஷயத்தை இயன்ற அளவு விளக்கப்பார்க்கிறேன்.
Disclaimer: நான் மொழியியல் வல்லவனோ (linguists
ands speech therapists and neurologists) அல்லது முன்னுள்ளவை
எவையிலும் உள்ளவனோ அல்லன்:-)
விளக்கங்கள் கொடுக்குமுன்னர் அவற்றிற்கு அடிப்படையாக ஏற்கனவே "சும்மா" என்ற
தலைப்பில் நான் எழுதிய அஞ்சல் தொடரின் இரண்டு பகுதிகளை முதலில் முன் வைக்கிறேன்.
---------------------------------------------------
இந்த "சும்மா" என்ற சொல்லில் அப்படி என்னதான் விசேஷம் இருக்கிறது?
ஓரு பெரிய விசேஷம் உண்டு.
உண்மையிலேயே அதனுடைய அர்த்தம் சொல்லிலோ அல்லது வாக்கியத்திலோ அடங்கிவிடமாட்டாது.
இதை விளக்க வேண்டுமானால் உள்ளத்தின் அமைப்பையும், எண்ணங்களின் பிறப்பையும்
சிறிதாவது உங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்த இடத்தில் ஒரு சிறிய confession ஒன்றையும்
நான் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. சில விஷயங்களை over-simplification
and generalisation செய்யவேண்டியுள்ளது. இல்லையெனில் இதெல்லாம்
ஒரு jargon-infested gibberish ஆகத் தோன்றிவிடும்.
சொல்லில் அடங்காப் பொருளை விளக்கமுனையும்போது ஏற்படும் விபரீதங்களில் இதுவும்
ஒன்று. என்னைவிட வாக்கு வன்மைபடைத்தவர்கள் இன்னும் நன்றாகச் செய்யக் கூடும்.
நோக்கம் கெட்டுவிடக்கூடாதல்லவா?
முதலில் உள்ளத்தின் அமைப்பை நோக்குவோம்.
பண்டைய இந்திய வல்லுனர்கள், உள்ளத்தில் நான்கு கூறுகள் இருப்பதாகக்
கண்டனர்.
மனசு, சித்தம், புத்தி, அஹம்காரம் என்பவையே அவை.
"மனசு" - புலன்களின் வாயிலாக வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் தகவல்களையும்
இது வாங்கி, உடலின் இயக்கங்களோடு தொடர்பு படுத்தும்.அதனிடம் வந்து சேரும் உணர்வுகள்,
எண்ணங்கள் ஆகியவற்றுக்கு ஏற்றவகையில் அது மாறிக்கொண்டே இருக்கும்.பல நூற்றுக்கணக்கான
தாக்கங்கள் அதற்கு ஏற்பட்டுக்கொண்டேயிருப்பதால் அது
சதா சலனத்திலேயே இருக்கும்.
நினைவுகள் மனசுக்கு வந்து சேர்ந்து, மனசில்தான் பரவி, விரவி, மின்னி, மறையும்.
அதனிடம் வந்து சேரும் தாக்கங்களையும் தகவல்களையும் ஆழமாகவும்,அழுத்தமாகவும்
பகுத்து ஆயும் ஆற்றல் அதனிடம் இல்லை. முடிவுகளை எடுக்கும் தன்மையும் கிடையாது.
மனசில் வரும் உணர்வுகளையும் தாக்கங்களையும் ஒருவித primitive நிலையில்தான்
மனசு எடுத்துக்கொள்ளும்.
ஏதோ ஒரு நல்லது, கெட்டது, இன்பமானது, ஆபத்தானது, துன்பமானது என்ற அளவில
்தான் எடுத்துக்கொள்ளும். மூளையின் Reptilian Brain
பகுதியும் ஓரளவிற்கு இந்தமாதிரிதான்.
மனசு என்பது நம்முடைய எண்ணங்களின் வெளிப்படையான நிலைக்களன்.
அங்குத்தான் எண்ணங்களின் ஆக்கம் முழுமையாக வெளியில் தெரியும்.நாம் முழு உணர்வுடன்
விளங்கும் full-conscious stateஐ மனசு manifest
செய்கிறது.
மனசு, உணர்ச்சிகளாலும் பாவங்களாலும்(EMOTIONS and
not sins) எளிதாக இழுத்தடிக்கப்படவும், உந்தப்படவும், உதைக்கப்படவும்
கூடியது.
"சித்தம்" என்பது சற்று சிக்கலானது.உணர்வுகள்,நினைவுகள், ஞாபகம், போன்றவற்றின்
அடித்தளம்.
இங்கிருந்துதான் எண்ண அலைகள் மேலே எழும்பி மனசுக்கு வரும்.ஆற்றின்
அடிமட்டத்தில் அமைந்துள்ள ஆற்றுப்படுகைதான் சித்தம் என்று கொண்டோமானால், அதன்மேல்
ஓடும் ஆற்று நீரோட்டம், அதில் உள்ள சுளிப்புகள்,சுழற்சிகள்,அலைகள், குமிழிகள்
போன்றவை மற்ற அம்சங்களாகிய மனசு, அஹம்காரம் போன்றவை.
This is a huge pool of sensory impressions and data.
உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் எண்ணஎழுச்சிகளும் இங்கிருந்துதான் மனசுக்கு
வரும்.
அதே சமயத்தில் எந்தவித தூண்டுதலும் இல்லாத போது, தன்பாட்டுக்குக் குமிழிகளைப்போல்
நினைவுகளையும் ஞாபகங்களையும் fantasy எனப்படும் பகற
கனவுகளையும் மேலே அனுப்பும். அவை மனசின் மேற்பரப்பில் குமி ¢களாகத்
தோன்றி வெடித்துச் சிதறி மறையும்.
சில சமயங்களில்,
"அந்த நாள் ஞாபகம் இந்த நாள் வந்ததே!
நண்பனே!
நண்பனே!
நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே?
அது ஏன்? ஏன்? ஏன்?
நண்பனே!"
என்று சிம்மக்குரலெடுத்துப் பாட வைக்கும்.
"அஹம்காரம்"-
சாதாரணமாக இதை வேறு பொருளில் கொள்வார்கள்.
ஏதோ திமிர் சம்பந்தப்பட்டது போலத் தோன்றும். அவ்வாறல்ல.
"நான்" என்னும் தன்மைதான் அஹம்காரம். நம்முடைய ஆன்மா பல
பிறவிகளை எடுக்கிறது அல்லவா? ஒவ்வொரு பிறவியிலும் அது தான் சார்ந்திருக்கும்
சுற்றுச்சூழல், தொடர்புகள், உறவுகள், விருப்புகள், வெறுப்புகள், அடையாளங்கள்
முதலியவற்றை வைத்துத் தன்னையே "தான்", "நான்","எனது" என்று தன்னிலைப்படுத்திக்கொள்ளும்.
அந்தப் பிறவியில்
அந்தக் குறிப்பிட்ட தன்மைகளே சாஸ்வதமானவையாகவும் நிச்சயமானவையாகவும்
தோன்றும். ஆனால் அதன் முற்பிறவியில் முற்றிலும் வேறு தன்மைகளையும் அடையாளங்களியும்
கொண்டதாக விளங்கி யிருக்கும். மனிதனாகவே பிறந்தாலும் கூட ஊர்,
பேர், உறவு, சொந்தபந்தம், விருப்பு வெறுப்பு, ஆற்றல், படிப்பு, இனம், மொழி,
என்றவாறு முற்றிலும் மாறுபட்ட கூறுகளைக் கொண்டதாக அந்தப் பிறவி விளங்கக்கூடுமல்லவா?
அடுத்த பிறவியிலோ இன்னும் வேறு நிலைமைகள் விளங்கலாம். ஆனால், ஒரே
ஆன்மாதான் இத்தனை பிறவிகளில் வேறு வேறு அடையாளங்களுடன் விளங்குவதை அந்த
ஆன்மா உணரமாட்டாது. அதையெல்லாம் அஹம்காரம் மறைத்துவிடும்.இந்த
அஹம்காரமே ஒட்டுமொத்தத்தில் பிறவியெடுத்துள்ள ஆன்மாவை இறைவனிடத்திலிருந்து
தனிமைப ்படுத்திவிடும்.
"அதாண்டா, இதாண்டா, அருணாசலம் நான்தாண்டா"
என்று தன்னையே எல்லாமாக அறிந்து, எல்லாவற்றிலும் தன்னையும்,
தன்னில் எல்லாவற்றையும் கண்டு, தானே அந்த அருணாசல பரசிவமான பிரம்மம்
என்ற பிரம்மஞானமெல்லாம் ரஜினியைப் போன்ற SUPERMANனுக்கே தோன்றக்கூடும்.
"புத்தி" என்பது பகுத்து அறிவது, உணர்வுகளை
அலசுவது, நல்லது/கெட்டது, நியாய அநியாயங்கள் போன்றவை, மனசாட்சி, சித்தாந்தங்கள்,தீர்மானங்கள்,
தர்க்கங்கள்,நிச்சயங்கள் போன்றவற்றை நடத்தும். நாம் அறிவுபூர்வமாகச் செய்யவேண்டிய
நடவடிக்கைகளை ஆணைகளாக்கி மனசுக்கு அனுப்பும்.மனசின் ஓட்டங்களை அனுமானிப்பது,
அளவெடுப்பது, கவனிப்பது, கட்டுப்படுத்துவது எல்லாம் செய்யும்.நம்முடைய
சுற்றுச் சூழல்களுக்கு ஏற்ற விதங்களில் நம்முடைய நடவடிக்கைகளை அமைத்துக் கொடுக்கும்.
அழகுணர்வு, இசை ரசனை,போன்றவற்றின் இருப்பிடம்.
சில சமயங்களில் உணர்ச்சிபூர்வமான தாக்கங்களுக்கு
புத்தி அடங்கிவிடும். சில சமயங்களில் பழக்கவழக்கங்களாலும், ஆழமாக விதைக்கப்பட்ட
நம்பிக்கைகளாலும் முடக்கப்பட்டு விடும். ஆனால் புத்தியால் இவற்றைக் கட்டுப்படுத்தவும்
முடியும்.
இதையெல்லாம் யோக சாத்திரத்தில் காணலாம். ஆனால், பதஞ்சலி முனிவர்,
தன்னுடைய அஷ்டாங்க யோக சம்பந்தத்தில் இந்த நான்கினையும் கூறவில்லை.
அவர் ஒட்டுமொத்தத்தில் "சித்தம்" என்ற ஒரே சொல்லை மட்டுமே
பயன்படுத்துகிறார்.
"யோகாஸ் சித்த வ்ருத்தி நிரோதஹ",
என்று மாத்திரம் ரத்தினச்சுருக்கமாகக் கூறிவிட்டார்.
பல்வேறு காலங்களில் எழுதியுள்ள பல்வேறு அறிஞர்கள், "சித்தம்,
"மனது" என்பன வற்றுக்குப் பலவகையான பொருள்வேறுபாடுகள் ஏற்படச் செய்திருக்கிறார்கள்.)
ஆகமொத்தத்தில் உள்ளத்தில் இவ்வளவும் இருக்கிறது.
எண்ணங்களின் தோற்றம் ஏற்படுவதைக் கவனிப்போம்.
எண்ணங்களின் பிறப்பை இப்போது பார்ப்போம்.
உள்ளத்தில் எப்போதும் இரண்டு செயல்கள் மாறி மாறி நடந்துகொண்டே
இருக்கின்றன.
ஒன்று, நினைப்பு.
இன்னொன்று, மறப்பு.
மனத்திரையில் ஓர் எண்ணம் தோன்றுகிறது. நம்மை அறியாமலேயே அது போய் விடுகிறது.
ஆனால், வேறொன்றுவந்து விடுகிறது. இருந்தாலும், மனது வெற்றிடமாக இருப்பதேயில்லை.
மனதில் எந்தவொரு நினைப்புமே இல்லாமலோ, மறப்பும் இல்லாமலோ இருப்பது கடினமாக
இருக்கிறது.
நினைப்பு" என்பது எப்படி ஒரு active process ஸோ அதுபோலவே
மறப்பு என்பதுவும் ஒரு active processதான். ஒன்றை
நாம் உணருகிறோம்.
இன்னொன்றை நாம் உணருவதில்லை.
மறப்பு என்பது நமக்கு இறைவன் கொடுத்தவரப்பிரசாதம்தான்.
"நினைக்கத் தெரிந்த மனமே!
உனக்கு மறக்கத் தெரியாதா?"
நினைவெல்லாம் மறக்கமுடியாமல் போனால் பைத்தியம் அல்லவா
பிடித்துவிடும்!
பழங்காலத்து யோக நூல்களில் எண்ணத்தை "வாக்" என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த வாக்குகளில் நான்கு உண்டு. பரா,பஸ்யந்தி, மத்யமா, வைகரி
ஆகியவை.
வைகரியும் இரண்டாக இருக்கிறது.
சொல் வடிவத்திலும் வாக்கிய அமைப்பிலும் எண்ணம் விளங்குவதைத்தான்
"வைகரி" என்கிறோம். அது பேச்சாகவெளியில் பரிணமிக்கும்போது அதை "தூல வைகரி" என்றும்,
வெறுமனே அதே வடிவில் மனதில் மட்டுமே வெளிப்பாடு கொண்டு விளங்கும்போது அதனை
"சூட்சும வைகரி" என்றும் கூறுகிறோம்.
இதெல்லாம் ஏதாவது ஒரு மொழியில் அமைந்திருக்கும் - தமிழ் , இந்தி, ஆங்கிலம்
என்று.
வைகரி வாக்குக்கு அடிப்படையான இன்னொரு நிலையில் அதற்கு முன்னதாக
விளங்கும்.
இதனை "மத்யமா" வாக் நிலை என்போம்.
Instinct என்பது சொல் வடிவம் பெறாத ஓர் எண்ணக்கூறு.
இதைப் போன்ற நிலையில்தான் மத்யமா விளங்கும். இதை யோக நூல்கள்
மயில் முட்டையுடன் ஒப்பிடும். மயில் முட்டையில் வெளியே ஓடு இருக்கிறது.
அதனுள்ளே வெண் கரு, மஞ்சள் கரு எல்லாம்இருக்கின்றன. அதற்குள்
மயிலின் அனைத்துக் கூறுகளும் விளங்குகின்றன. இதுவேதான் முழு மயிலாகப் பரிணமிக்கிறது.
மயிலை வைகரி என்றால் முட்டைதான் மத்யமா.
மத்யமா நிலையில் இருக்கும் எண்ணத்தை நாம் சாதாரணமாக முழுமையாக அறிந்து கொள்ள
முடியாது. ஆனால், வைகரி நிலையில் உணரலாம். யோகிகள் மத்யமா நிலையை உணருவார்கள்.
இதற்கும் அடிப்படையான இன்னொரு புராதன நிலை உண்டு. அதை "பஸ்யந்தி"
என்று கூறுவார்கள்.
மத்யமா நிலையில் பரிணமிக்கும் முன்னதாக எண்ணம் பஸ்யந்தி நிலையில்
விளங்கும்.
இந்த நிலை இன்னும் சூட்சுமமானதொன்று.
விதையிலிருந்து வெளிவந்த முளையைப்போன்ற நிலை.
இதற்கும் அடிப்படையான ஆதார நிலையை "பரா" வாக் என்பார்கள்.
முளைக்கும் முன்னால் உள்ள விதையின் நிலையைப் போன்றது அது. யோக நூல்கள்
பராவை ஆலவிதைக்கு ஒப்பிடும். ஆலவிதையிலிருந்து முளை தோன்றி, அது செடியாகி,
அதன் பின்னர் தண்டு, கிளை, கொப்பு, காம்பு, இலை, விழுது, என்ற முழு ஆலமரமாகப்
பரிணமிக்கின்றது அல்லவா?
ஆலவிதை - பரா
முளை - பஸ்யந்தி
செடி - மத்யமா
ஆலமரம் - வைகரி
இப்படியாகத்தான் எண்ணம், பேச்சு, எழுத்து எல்லாம் தோன்றுகிறது.
மாபெரும் யோகியரே பஸ்யந்தி, பராவரைக்கும் சென்று வாக், எண்ணங்களை
உணரமுடியும். அப்படிப்பட்டவர்கள் பராநிலையிலேயே எண்ணத்தின் பிறப்பை நிறுத்தி
விடுவார்கள்.
இந்த நிலைதான் "சும்மா" இருக்கும் நிலை.
"சொல் அற; சும்மா இரு!" என்பது அருணகிரியாருக்கு முருகன்
கூறிய உபதேசம். அந்த மாபெரும் பொருள்அறியமுடியவில்லை என்று அருணகிரியார்
கூறுகிறார்.
எண்ணங்களை அற்றுப் போகச் செய்ய வேண்டுமானால், முதலில் வைகரியை அடக்கி,
மத்யமாவை அடக்கி, பஸ்யந்தியையும் அடக்கி, முடிவில் பரா நிலையில் ஒன்றுமே எழும்பாமல்
நிறுத்தவேண்டும்.
இவ்வாறு செய்யும் அதே நேரத்தில் "மனஸ்" எனப்படும் உள்ளப்பகுதி
ஒடுங்கி விடும். ஏனெனில் அங்கு எண்ணங்கள் ஏதும்நிலவ மாட்டா. புத்தி, சித்தம்,
அஹம்காரம்,ஆகிய மற்றவையும்கூட இல்லாமல் போய்விடும்.
மனசு அழிந்த நிலை இதுதான். இந்த நிலையில்தான் உணர்வுகள்கூட
இருக்கமாட்டாதே? ஆகவே எதுவும் உணரப்படவும் மாட்டாது, பதிப்பிக்கப்படவும் மாட்டாது.
இதுதான் நினைவும் மறப்பும் அற்ற நிலை.
நினைப்பு இருந்தால்தானே மறதி ஏற்படுவதற்கு?
இதைத்தான் "சும்மா" இருத்தல் என்பார்கள்.
"திரிபுடி ஞானம்" என்று ஒரு விஷயம்இருக்கிறது. காண்பான்,
காணும் செயல், காட்சிப்பொருள், இவற்றின் ஒருங்கிணைந்த விளைவுகள்; இதைத்தான் திரிபுடி
என்பது.
சும்மா இருக்கும்போது திரிபுடி ஞானம்அற்றுப் போய்விடும்.
மனசு இயங்கும்போது உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும். உணர்வு
இருந்தால்தான் ஓர் அனுபவம் எப்படியிருக்கும் என்பதைஉணரமுடியும்.
ஆனால், உணர்வு, மனசு எல்லாம் இருக்கும்போது சும்மா இருக்கும்
நிலை ஏற்படமாட்டாது. சும்மா இருக்கும்போதோ மனசு, உணர்வுகள் இரா.
ஆகவேதான் சும்மா இருக்கும் தன்மைஎப்படியிருக்கும் என்பதனைச்
சொல்ல முடியாது.
"கண்டவர் விண்டதில்லை;
விண்டவர் கண்டதில்லை"
நினைப்பும் இல்லை, மறதியும் இல்லை;
வாக்கும் இல்லை, மனமும் இல்லை;
இரவும் இல்லை, பகலும் இல்லை.
அது ஒரு Twilight Zone.
RETURN TO MAIN MENU