இந்திய தர்க்கசாஸ்திரத்தில் வாதமுறைகளைப் பலவகையாக வகுத்துள்ளார்கள்.
அவற்றிற்கு உரிய இலக்கணங்களையும் வகுத்துள்ளார்கள். ஒவ்வொரு
வாதமுறைக்கும், ஒவ்வொரு கண்ணோட்டத்துக்கும் பெயர்கள் கொடுத்துள்ளார்கள்.
உதாரணத்துக்கு ஒன்று:
வெளிப்படையாகத் தெரியக்கூடிய விஷயம் இருக்கிறது. அதற்கு உபமானம்,
உபமேயம், அனுமானம், அனுபலப்தி என்றெல்லாம் அலையவேண்டியதேயில்லை.
அப்படிப்பட்ட நேரடியான விஷயத்தை 'உள்ளங்கை நெல்லிக்கனி' என்று
தமிழிலும், "ஹஸ்தாமலக வாதம்' என்று சங்கதமொழியிலும் சொல்வார்கள்.
(சங்கதம் - சம்ஸ்கிருதத்தைத்தான் திருஞானசம்பந்தர் அவ்வாறு அழைக்கிறார்.
'ஆகமத்தொடு மந்திரங்களமைந்த சங்கதம் பங்கமா, பாகதத்தொடிரைத்துரைத்த
சனங்கள் வெட்குறு பக்கமா').
தர்க்கசாஸ்திரத்தில் விவாத வழுக்கள் கூறப்பட்டிருக்கின்றன. அதாவது
தவறான வாதமுறைகள். அவற்றைப் பற்றி ஒரு பெரியபட்டியலே இருக்கிறது.
குறுக்குவாதம், அழிவழக்கு, விதண்டை, என்று நிறையவே இருக்கின்றன.
அவற்றில் ஒரு வழு கூறப்படுகிறது. வாதத்திறமையாலும் சொல்சிலம்பாட்டத்தாலும் ஒரு விஷயத்தை இன்னொரு விஷயமாகக் காட்டுவது; அல்லது பொய்யை உண்மைபோல் தெரியச்செய்வது; போலியை அசல் போலத் தோன்றச் செய்வது.
சாதாரண அன்றாடச் சொல்வழக்கில், 'கழுதையைக் குதிரையாகவும்
குதிரையைக் கழுதையாகவும் காட்டுவது,' என்று சொல்கிறார்கள் அல்லவா?
இந்த மாதிரி சொல்சித்துகளைக் குறிப்பிட ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
'பித்தலாடக வாதம்' என்பது அது.
செம்புடன் வெள்ளீயத்தைச் சேர்த்து பித்தளை செய்வார்கள்.இ த்துடன்
அர்ஸனிக், zinc போன்றவற்றைச் சரியான விகிதத்தில் கலந்துவிட்டால், பித்தளை
மிகவும் பளபளப்பாகத் தோன்றும். சரியான மெருகு ஏற்றினால் தங்கத்தை ஒத்துத்
தோன்றும். வெளிச்சக் குறைவான சமயத்திலோ, சாளேசரம் போன்ற
பார்வைக்குறைவு இருந்தாலோ, அந்தப் பித்தளையைத் தங்கம் என்றே
நினைத்துவிடமுடியும்.
என்னிடம் சில நாணயங்கள் இருக்கின்றன. அத்தனையும் பிரிட்டிஷ்
இந்திய நாணயங்கள். அவற்றில் சில, பித்தளையால் செய்யப்பட்டவை. பாலிஷ்
போட்டால் பளபளப்பாகத் தோன்றும். கள்ளநாணயங்கள்.
இவ்வாறு பித்தளையைத் தங்கம் என்று காட்டுவதற்குத்தான் 'பித்தலாடகம்'
என்று சொல்வது. 'பித்தலா -பித்தளை; ஆடகம் - பொன்'.
இச்சொல்லே பிற்காலத்தில், தர்க்கசாஸ்திரத்தில் தான் பெற்றிருந்த
அந்த கௌரவமான இடத்திலிருந்து நழுவி, மருவி, 'பித்தலாட்டம்' என்று
வந்துவிட்டது.
தற்சமயம் பித்தலாட்டம் என்ற சொல் ஏமாற்றுவேலையைக்குறிக்கிறது.
செம்பை உண்மையிலேயே பொன்னாக்குவது எப்படி?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$