பொன்மழை

சாக்தஸ்ரீ

டாக்டர் எஸ்.ஜெயபாரதி



ஸ்ரீதனலக்ஷ்மி
    அஷ்டலட்சுமிகளில் ஒருத்தி. எட்டுக்கரங்கள் உடையவள். மேல் இருகைகளில்
தாமரை மலர்கள்; அடுத்த இரு கைகளில் அம்பும் வில்லும்; அடுத்த இரு கைகளில்
சக்கரமும் வலம்புரிச் சங்கும்; கீழ் வலக்கையில் பொன் நாணயங்கள் அடங்கிய பை.
கீழ் இடக்கையால் வரத முத்திரை காட்டிக்கொண்டிருக்கிறாள்.


                முந்திய மடலொன்றில் இவ்வாறு எழுதியிருந்தேன்.

                வருங்காலங்களில் குபேரனுக்குரிய நாள் நட்சத்திரம், சங்கரர் கனகதாராவைப் பாடிய நாள், வித்யாரண்யர் குருபூஜை, நிகமாந்த தேசிகர் குருபூஜை, கோடிகன்னிகாதானம் தாதாச்சாரியார் குருபூஜை என்றெல்லாம் கொண்டுவந்து அந்தந்த நாட்களிலும் தங்கம் வாங்கிப் பூஜையில் வைக்கச்சொல்வார்கள்.

                "ஏன் இந்த இடத்தில் இவர்களைக் குறிப்பாகக் குறிப்பிடவேண்டும்? இவர்களுக்குள் இருக்கும் சம்பந்தம் என்ன?" என்று.......
                "இன்னார் நேற்று கேட்டார்", என்று சொல்லப்போவதில்லை. ஏனென்றால் யாரும் கேட்கவில்லை. கேட்கவும் போவதில்லை. அதெல்லாம் மலையேறிப் போச்சு.
                ஆகவே நானே சொல்லிவிடுகிறேன்.

                சங்கரர், வித்யாரண்யர், நிகமாந்த தேசிகர், தாதாச்சாரியார் ஆகிய நால்வருக்காகவும் ஸ்ரீலட்சுமி பொன்னை மழையாகக் கொட்டச் செய்தாள்.
                இவற்றில் ஆதிசங்கரர், வித்யாரண்யர் ஆகியோருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை ஏற்கனவே கூறிவிட்டேன்.
                சுருக்கமாக....
                ஆதிசங்கரர் சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி எனப்படும் பிட்சாவிதி தர்மத்தை கடைபிடித்துவந்தார்.
                ஒருநாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று, "பவதி பிக்ஷ¡ந்தேஹி" என்று சொல்லவேண்டும். ஏதாவது பி¨க்ஷ போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும். வேறெதையும் கேட்கக்கூடாது. ஒருவேளை மட்டும்தான். அந்த ஒருவேளையிலும்கூட மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். பி¨க்ஷ போடவில்லை யென்றால் அன்று பசியுடன் இருக்கவேண்டியதுதான்.
                அவ்வாறு வீட்டின்முன்னால் சென்று குரல் கொடுத்தார்.
                அந்த வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான நெல்லிக்கனி மட்டுமே அந்த
வீட்டில் அன்று இருந்தது. நெல்லிக்கனியை உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்.
                ஆதிசங்கரர் குரல் கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பி¨க்ஷயாகப் போடுவது என்று தெரியாமல் திகைத்தாள்.
                இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது.
                மூன்றாவது குரலுடன் போய்விடுவார்.
                அப்படியாகினால் ஓர் இளம் சன்னியாசியைப் பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும்.
                ஆகவே நெல்லிக்கனியை ஆதிசங்கரருக்குப் போட்டுவிட்டாள்.
                இதனைக் கண்ட ஆதிசங்கரர், அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம் வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார்.
                அந்தப் பாடலைப் பூர்த்தி செய்தபோது அங்கு பொன்மழையாகக் கொட்டியது.
                அடுத்தது நிகமாந்த தேசிகர்.......

                நிகமாந்த தேசிகர் என்பவர் ஸ்ரீவைஷ்ணவத்தின் முக்கிய நால்வரில் ஒருவர்.
                இவர்தான் ஸ்ரீவைஷ்ணவத்தின் வடகலைப் பிரிவின் முக்கிய கர்த்தா.
                பிள்ளை லோகாச்சாரியார் என்பவர் தென்கலையின் முக்கிய கர்த்தா.
                இருவருமே சமகாலத்தினர். ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்.
                தமிழகத்தின் மிகக்கொடுமையான, சோதனையான காலகட்டத்தில் இருந்தவர்கள்.
                1313-ஆம் ஆண்டில் டில்லி சுல்த்தானாகிய அலாவுதீன் கில்ஜியின் தளபதியாகிய மாலிக் க·பூரின் தாக்குதலுக்குப் பின்னர் குஸ்ராவ் கான் என்பவனுடைய தாக்குதலும் அதன்பின்னர் 1327-ஆம் ஆண்டில் முகம்மது பின் துக்லக்கின் படையெடுப்பும் ஏற்பட்டன.
                துக்லக்கின் படையெடுப்பு ஆந்திராவின் ஓரங்கல்லிலிருந்து தெற்கு நோக்கி வந்தது.
                தமிழ்நாட்டில் நுழைந்து மிக விரைவாக தொண்டை மண்டலத்தைப் பிடித்துவிட்டார்கள்.
                காவிரியை நோக்கி முன்னணிப் படை வந்துகொண்டிருந்தது.
                கில்ஜி, துக்லக் ஆகியோரும் அவர்களுடைய முக்கிய படை அணியினரும் துருக்கர்கள். அந்தக் காலகட்டத்தில் துருக்கர், மாங்கோலியர் ஆகியோரின் படைகள்தாம் மிக விரைவாக நகரக்கூடியவை. பயங்கரமாகத் தாக்குதல் நடத்தக்கூடியவை. வெல்லப்படமுடியாதவை என்று பெயர் பெற்றவை. உலகின் நாகரிக முற்றிய பல பேரரசுகளை வீழ்ச்சியடையச் செய்தவை    
                Advance VanGuard என்னும் அணி மிகத்துரிதமாக செல்லக்கூடியது.
                அவ்வாறு ஒரு முன்னணிப் படை மிக விரைவாக வந்துகொண்டிருந்தது.
                அப்போது ஸ்ரீரங்கத்தில் ஓர் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
                துருக்கர் படை சமயபுரத்துக்கு வந்துவிட்டது என்ற செய்தி கிடைக்கும்போது எல்லாரும் ஓடிப்போவதா அல்லது உற்சவத்தை பூர்த்தி செய்வதா என்று பெருமாளின் முன்னிலையில் திருவுளம் கேட்டார்கள்.
                உற்சவத்தைப் பூர்த்தி செய்ய உத்தரவாகியது.
                அப்போது சமயபுரத்தையும் துருக்கர்கள் தாண்டிவிட்டதாகச் செய்திவந்தது. ஆகவே விரைவாக விழாவைப் பூர்த்திசெய்துவிட்டு உற்சவ மூர்த்திகளைத் தூக்கிக்கொண்டு போக முயன்றார்கள்.
                ஆனால் துருக்கர் படை வந்துவிட்டது.
                பிள்ளை லோகாச்சாரியார் பெருமாள் சிலையை ஒரு மூடுபல்லக்கில் வைத்துக் கொண்டு தெற்கு நோக்கி தப்பிச்சென்றார்.
                துருக்கர்கள் கண்டவர்களையெல்லாம் கொன்று குவித்துவிட்டார்கள்.
                பிணக்குவியலின் அடியில் தேசிகாச்சாரியார் கிடந்தார்.
                துருக்கர்கள் சென்றபிறகு தேசிகாச்சாரியர் குருமைந்தர்கள்  இருவருடன் ஸ்ரீபாஷ்யத்திற்குத் தாம் எழுதிய உரை நூலைப் பத்திரமாக எடுத்துக்கொண்டு மைசூர் எல்லையை அடைந்தார்.

                அவருடைய வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது.

                ஸ்ரீரங்கத்தில் ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்குத் திருமணம் செய்துகொள்ள ஆசை. ஆனால் முடியவில்லை. ஏனெனில் அவன் பரம ஏழை. அக்காலத்திலெல்லாம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு.
                தேசிகாச்சாரியாரைப் பிடிக்காதவர்கள் சிலர் அவருக்கு ஏதாவது மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி அவமானப்படுத்தவேண்டும் என்று எண்ணியிருந்தார்கள்.
                அவர்கள் அந்த இளைஞணைத் தூண்டிவிட்டு தேசிகாச்சாரியாரிடம் பொருள் கேட்கச்சொன்னார்கள்.
                அவனும் தேசிகாச்சாரியாரிடம் போய்க்கேட்டான்.
                தேசிகாச்சாரியாரிடம் கையில் ஒன்றுமில்லை.
                ஆகவே அந்த இளைஞனுக்காக அவர் ஸ்ரீலட்சுமியைத் தோத்திரம் செய்தார்.
               'ஸ்ரீஸ்துதி' என்னும் அந்த தோத்திரத்தைப் பாடியவுடன் பொன்மழை பெய்தது....    

                அடுத்தாற்போல......
                வித்யாரண்யர்.
                துங்கபத்ரை ஆற்றங்கரையில் ஏதோ ஓர் ஊர்.
                அங்கு ஓர் இளைஞன்.
                பரம ஏழை.
                அந்த ஏழ்மையிலும் அவனுக்குள் ஏதோ ஓர் உத்வேகம் இருந்து  அவனை எவ்வாறேனும் உலகில் முன்னேறி எதையாவதைப் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்று இயக்கிக ்கொண்டேயிருந்தது.
                வேதம், தந்திரம், ஆகமம் முதலிய பல சாஸ்திரங்களைக் கற்றவன்.
                தன்னுடைய வறுமையைப் போக்கிக்கொண்டு மிகப் பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை எவ்வாறோ அவனுக்குள் வந்துவிட்டது.
                ஆகவே முறைப்படி ஸ்ரீலட்சுமியை உபாசனை செய்தான்.
                அவனுடைய தவத்தின் இறுதியில் ஸ்ரீலட்சுமி தோன்றினாள்.
                அவளிடம் அவன் செல்வம் கேட்டான்.
                இந்தப் பிறவியில் அவனுக்கு அந்தப் பேறு கிடையாது என்று அவளும் சொல்லிவிட்டாள்.
                "இன்னொரு பிறவியில்தான் கிடைக்குமா?"
                "நிச்சயம் கிடைக்கும்".
                உடனே அவனுக்குள் ஒரு மின்னலடித்தது.
                சன்னியாசத்திலேயே பலமுறைகள் இருக்கின்றன.
                ஆதிசங்கர்ர் எடுத்துக்கொண்டது ஆபத்சன்னியாசம்.
                இந்த இளைஞன் மானச சன்னியாசத்தைத் தனக்குள் சங்கல்பித்துக்கொண்டான்.
                "தாயே! இப்போது நான் சன்னியாசம் மேற்கொண்டுவிட்டேன். சன்னியாசம் என்பது புதியதொரு பிறவிதான் என்று சாஸ்திரப்பிரமாணம் இருக்கிறது. ஆகவே இப்போது நான் இன்னொரு பிறவி எடுத்து விட்டேன். இப்போது நீ எனக்கு செல்வத்தைக் கொடுக்கவேண்டும்."
                உடனே ஸ்ரீலட்சுமியின் அருளால் அந்த இடத்தில் பொன்மழை பெய்தது.
                அந்தப் பொன்னை அள்ளிக்கொண்டுபோக முயற்சித்த அந்த இளைஞனைப் பார்த்து ஸ்ரீலட்சுமி கேலியாகச் சிரித்தாள்.
                "ஏனப்பா சன்னியாசிக்கு எதற்கு இந்தப் பொன்னெல்லாம்?"
                அந்த இளைஞனிடம் இன்னொரு மின்னற்பொறி தோன்றியது.
                அத்தனை செல்வத்தையும் துருக்கர் ஆக்கிரமிப்பால் சிதைந்து போய் சீரழிந்திருந்த இந்து தர்மத்தையும் இந்து சமுதாயத்தையும் நிலைநிறுத்த உறுதி எடுத்துக்கொண்டான்.
                அதைச் செய்வதற்கு இந்துக்களின் சாம்ராஜ்யம் மீண்டும் தோன்றவேண்டும். அரச வம்சங்கள் வேண்டும்.
                புராண கால விஸ்வாமித்திரன் தன்னுடைய தபோவலிமையால் திரிசங்குவுக்காக சொர்க ்கலோகத்தையே சிருஷ்டி செய்ததுபோல இந்துக்களுக்காக பேரரசு, சமுதாய வாழ்வியல், அரச பரம்பரை எல்லாவற்றையும் சிருஷ்டி செய்துவிட்டார்.
                இந்து சாஸ்திரங்கள் அழிந்துபோகாமல் இருக்கும் வண்ணம் அதம்முடைய தம்பியுடன் எல்லாவற்றுக்கும் எழுத்துப் படிவம் கொடுத்து அவற்றுக்கு உரைகள் எழுதினார்.
                காட்டில் த்¢ரிந்துகொண்டிருந்த ஐந்து சகோதரர்களைக் கூடிவந்து அவர்களை வைத்துப் புதியதொரு அரசபரம்பரையைத்  தோற்றுவித்தார்.
                ஒரு விஜயதசமியன்று அஸ்திவாரம்போட்டு அடுத்த விஜயதசமியன்று உலகிலேயே மிக அழகான, மிகப்பெரியதான, மிகப்பாதுகாப்பான தலைநகரம் ஒன்றையும் தோற்றுவித்தார்.
                அதிலிருந்து தென்னிந்திய முழுவதையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர திட்டத்தை வித்திட்டார்.
                இவ்வாறுதான் விஜயநகரப் பேரரசை வித்யாரண்யர் தோற்றுவித்தார்.
                அதற்கு அஸ்திவாரமாக இருந்தது.....
                பொன்மழை.

                விட்ட இடத்திலிருந்தே தொடர்கிறேன்.

                காட்டில் திரிந்துகொண்டிருந்த ஐந்து சகோதரர்கள் சங்கமர் என்பவருடைய மைந்தர்கள்.
                அவர்களில் மூத்தவர் ஹரிஹரர்; அடுத்தவர் புக்கர். துருக்கர்கள் தென்னாட்ட்டைக் கைப்பற்றுமுன்னர் அவர்கள் கர்நாடகத்தின் அரசாகியாகிய ஹொய்சள அரசில் அதிகாரிகளாக இருந்தனர்.

                ஹொய்சளத்துடன் தென்னகத்தில் பாண்டியம், காகதீயம், யாதவம் ஆகிய நாடுகள் இருந்தன. இவை அனைத்தையுமே டில்லி சுல்த்தான் அலாவுத்தீன் கில்ஜி தன்னுடைய தளபதியாகிய மாலிக் க·பூர் என்பவனுடைய தலைமையில் சென்ற படைகளால் பிடித்துக்கொண்டான்.

                அவனுக்குப் பின்னர் வந்த குஸ்ராவ் கானுக்கும் பின்னர் வந்த துக்லக் அந்த நாடுகளைப் பிடித்துக்கொண்டதுடன் அவற்றைத் தன்னுடைய டில்லி பேரரசின் மாநிலங்களாகச் சேர்த்துக்கொண்டான். தென்னகத்தில் ஹசன் ஷாவும் தக்கணத்தில் பாஹ்மன் ஷா என்பவனும் அரசப்பிரதிநிதிகள்; ஆனால் விரைவில் சுதந்திர அரசுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
                வடக்கே பாமனிகள், தெற்கே மதுரையில் ஹசன்ஷாஹிக்கள் .
                இவற்றின் நடுவில் ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்துதான் விஜயநகரை வித்யாரண்யர் தோற்றுவித்தார்.
                ஹரிஹரர் விஜயநகரத்தின் முதல் அரசரானார். சங்கமரின் புதல்வர்கள் ஆதலால் இந்த அரச வம்சத்தை 'சங்கம வம்சம்' என்று குறிப்பிடுவார்கள்.
                அவருடைய காலத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரைய்¢லிருந்து தொடங்கி மிக விரைவாகக் கர்நாடகாவைப் பிடித்துவிட்டார்கள்.
                ஹரிஹரரின் பின் புக்கர் ஆட்சிக்கு வந்தார்.
                அவருடைய மகன்களில் ஒருவராகிய குமாரகம்பண்ண உடையார் ஒரு படையைக் கொண்டு சென்று மதுரையின் கடைசி மூன்று சுல்த்தான்களையும் வென்றார்.

                அதன் பின்னர் தமிழ்நாடு, சேரநாடு, இலங்கையின் பகுதிகள் ஆகியவற்றை விஜயநகரத்தின் ராயர் பேரரசர்கள் கைப்பற்றி தங்களின் ஆட்சிக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
                பாமினி அரசுடன் ஓயாத போர்கள்.
                அடிக்கடி பாமினிகளிடம் தோற்றுப்போய் நிறையப் பொருள்களைக் கொடுத்து சமாதானம் செய்துகொள்ளவேண்டியிருந்தது.
                ஒரு நூற்றாண்டுக்குப் ப்¢றகு வந்த இரண்டாம் தேவராயர் சற்று ஆராய்ந்தார்.
            Situational Analysis and Problem Solving.
                தம்முடைய குதிரைப் படையில் துருக்கர்கள், ஆ·ப்கானியர் மற்ற முஸ்லிம்களைச் சேர்த்துக்கொண்டார். பாமினிக்களின் யுத்த மரபுகள், உத்திகளைத் தாமும் கடைப்பிடித்தார்.

                அதிலிருந்து வரலாறு மாறியது.

                ஆனால் விஜயநகரிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
                சங்கமர்களை விரட்டிவிட்டு சாளுவர்களும், அவர்களை விரட்டிவிட்டு துளுவர்களும் ஆட்சிக்கு வந்தார்கள்.
                இதன் நடுவே பாமினி அரசும் ஐந்தாக உடைந்து ஐந்து சுல்த்தானியர்கள் ஆட்சி புரியலானார்க்ள்.
                துளுவ வம்சத்தின் இரண்டாம் பேரரசர் கிருஷ்ணதேவராயர். விஜயநகரப் பேரரசர்களிலேயே மிகச் சிறந்தவராக அவரைச் சொல்வார்கள்.
                அவர் போர்த்துகீசியரைத் தம் படையில் சேர்த்துக்கொண்டு நாட்டை இன்னும் விரிவாக்கினார்.

                தொடர்ந்து......
                தாதாச்சாரியார்.

                கிருஷ்ணதேவராயர் - அவர்தான் விஜயநகரப் பேரரசர்களிலேயே மிகவும் பேர்பெற்றவர். மிகச்சிறப்பு வாய்ந்தவர். அவருடைய ஆஸ்தானத்தில்தான் 'அஷ்டதிக் கஜங்கள்' என்னும் பெயர் பெற்ற பேரறிஞர்கள் குழு இருந்தது. கிருஷ்ணதேவரராயரும்கூட ஒரு கலாரசிகர்; இசைக் கலைஞர், பெரும் வீரர், பெரும்புலவர், பயில்வான், போராளி, ஓவியர், சிற்பி, கவிஞர். சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் விற்பன்னர். 'ஆமுக்தமாய்லதா' என்னும் பெருநூலை அவர் இயற்றியுள்ளார்.

                அவருடைய சபையில் பெரும்புகழ் பெற்ற தெனாலிராமன் இருந்தார். ராமகிருஷ்ணையா என்னும் பெயரையுடைய அவர் பெரும்புலவர். தெனாலி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

                 கிருஷ்ணதேவராயருடைய காலத்தில்தான் விஜயநகரம் கீர்த்திமிக்கதாகவும், அதிக வி¡¢வுடையதாகவும், தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற வண்ணமும் விளங்கியது. மாற்றார் அனைவருமே அஞ்சி ஒடுங்கியிருந்தனர்.

                விஜயநகரை ஆரம்பத்தில் ஆண்ட சங்கம அரச வம்சம் ஒரு கன்னடிய வம்சம். அதில் தோன்றிய ராயர் மன்னர்கள் மகான் வித்யாரண்யா¢ன் அத்வைத மரபையும் சைவசமயத்தையும் கடைப்பிடித்தவர்கள். ஆனால் பின்னால் வந்தவர்கள் தெலுங்கர்கள். விஷ்ணுவை விரும்பி வணங்கக்கூடியவர்கள்.

                கிருஷ்ணதேவராயா¢ன் ராஜகுருவாக இருந்தவர், 'கோடி கன்யாதானம் தாதாச்சா¡¢யார்'. இவர் வைஷ்ணவர். இஷ்டதெய்வமாக திருமகளை வழிபட்டவர். அவளுடைய உபாசனையால் தினந்தோறும் ஸ்ரீலட்சுமியால் அவருக்குப் பொற்காசு கொடுக்கப் பட்டுவந்தது. அதைக்கொண்டு அவர் பல்லாயிரக்கணக்கான ஏழைக் கன்னிப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆகவேதான் அவரைக் 'கோடி கன்யாதானம் தாதாச்சா¡¢யார்', என்று அழைத்தார்கள்.

                 அவருடைய செல்வாக்கால்தான் கிருஷ்ணதேவராயரும் திருவேங்கடநாதனின் தீவிர பக்தனாக விளங்கினார். திருமலைக் கோயிலுக்கு ராயர்தான் மிக அதிகமான திருப்பணிகளையும்
செய்திருக்கிறார்.

                   தென்னாட்டில் குறிப்பாக ஆந்திராவில் பெருமாள் வழிபாடு மிகுதியாக இருப்பதற்கு முக்கிய காரணஸ்தர் தாதாசாரியர்தான்.

                    மஹாராஷ்ட்டிரர்கள் ஆஞ்சனேய வழிபாட்டைப் பரப்புமுன்னரே அவர் அதனைச் செய்து விட்டார். பல இடங்களில் அவர் அனுமார் கோயில்களைக் கட்டினார்.

                    தண்ணீர் பற்றாகுறை தீரும்வண்ணம் பல ஊர்களில் அவர் குடிதண்ணீர்க் குளங்களை அவருடைய செலவில் வெட்டுவித்திருக்கிறார்.
                    அவற்றில் பல, இன்றும் இருக்கின்றன.
                    அவற்றை தாதாச்சாரியாரின் பெயராலேயே 'தாதன் குளம்' என்று அழைப்பார்கள்.
    இன்னும் பல அறங்களை அவர் செய்திருக்கிறார்.
    
                    ஆனால், பாவம். அவர் வாங்கிவந்த வரம்!
        
                    தெனாலிராமன் கதையில் வரும் வில்லன் ராஜகுருவாகவே அவர் சித்தா¢க்கப் பட்டுவிட்டார். போதாக்குறைக்கு to add insult to injury , "தெனாலி ராமன்" படத்தில் அவர் பாத்திரத்தில் வில்லன்
நம்பியார்  நடித்து அவரை இன்னும் unpopular ஆக்கிவிட்டார்!

                அப்பைய தீட்சிதர் காலத்தில் வேலூர் அரசரான சின்னபொம்மனின் அரசவையிலும் ஒரு தாதாச்சாரியார் இருந்தார். அவருக்கு அப்பைய தீட்சிதரின்மேல் பொறாமை. சின்னபொம்மனைவிட்டு அவ்ரை அவமானப்படுத்தச்செய்தார். ஆனால் சின்னபொம்மனோ தாதாச்சாரியாரை ஒதுக்கிவிட்டு அப்பைய தீட்சிதரை அழைத்துவந்து தம்முடைய அமைச்சராக ஆக்கிக்கொண்டார். இதனால் தாதாச்சாரியார் இன்னும் அதிகமாக இடையூறுகள் செய்தார்.

                அப்பைய தீட்சிதர் வரலாற்றில் வரும் தாதாச்சாரியாரும் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டவர்தான்.
                இந்த பிரதிநாயகத்துவத்தன்மை கோடிகன்யாதானம் தாதாச்சாரியார் மேல் ஏற்றப்பட்டு கடைசியில் அவரைப் பற்றிய எதிர்மறையான உருவகம் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.
                கடைசியில் அவரை 'மொட்டைத்தாதன்' என்றுதான் அழைத்தார்கள்.    
                எப்படியிருப்பினும் அவர் கோடிகன்யாதானமும் பல அறச்செயல்களும் செய்திருக்கிறார்.
                அதற்கு உதவியது.....    
                பொன்மழை.

அன்புடன்

ஜெயபாரதி

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


RETURN TO MAIN MENU