அடிக்கடி கடாரம் என்னும் புராதனமானதொரு நாட்டைப் பற்றிச் சொல்லிவந்திருக்கிறேன்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அந்த நாடு தற்சமயம் மலேசியநாட்டின் தீபகற்பத்தில் கெடா, பெர்லிஸ், பினாங்கு என்னும் மாநிலங்களும் தாய்லந்தின் தென்பகுதியும் அடங்கிய பிரதேசத்தில் இருந்தது.
![]()
கடார நாடு
தற்கால கெடா, பெர்லிஸ், பினாங்கு மாநிலங்கள்
மலேசியா
மிக்க வளம் மிகுந்ததாக இருந்தது. மண்ணிலேயே பொன் விளைந்தது. அதில் ஓடிய ஆறுகளில் பொன் மணல் கலந்து வந்தது. மிகவும் எளிதாக அந்தப் பொன்னைப் பிரித்தெடுக்கமுடிந்தது.
உணவுப் பொருள்கள் மிகுதியாகக் கிடத்தன. மலைவளர் பொருள்களாகிய சந்தனம்,
அகில் போன்றவையும் மணிக்கற்களும் மிளகு, பட்டை, ஏலக்காய் போன்ற சம்பாரப்பொருட்களும் மிகுதியாகக் கிடைத்தன. நல்ல பாதுகாப்பான துறைமுகங்கள் இருந்ததால் வர்த்தகமும் தழைத்தது. இந்தியர்கள், இந்தோனீசியர், கம்போஜர், சீனர், அராபியர், ரோமர் போன்ற பல பண்டைய காலத்து நாட்டு வணிகர்களும் வந்தனர்.
பௌத்தமும் இந்து சமயத்தின் உட்சமயங்களில் சிலவும் பரவியிருந்தன.
தென் கிழக்காசியாவிலேயே தனித்தன்மை வாய்ந்த கல்வெட்டு ஒன்று இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்காசியாவில் காணப்படும் பெரும்பான்மையான கல்வெட்டுக்கள் பல்லவ கிரந்தம் என்னும் எழுத்தில் வரையப்பட்டிருக்கின்றன. மூன்று தமிழ்க் கல்வெட்டுக்களும் உண்டு.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் தொன்மையான எழுத்துக்களாகிய பிராமிக்கும் கிரந்தத்துக்கும் இடைப்பட்ட கால கட்டத்தைச் சேர்ந்தவை. 5-6ஆம் நூற்றாண்டுகள் போல இருக்கலாம்.
இந்தக் கல்வெட்டு காணப்படும் இடமும் வித்தியாசமானதுதான்.
ஒரு பாறையின்மீது செதுக்கப்பட்டிருக்கிறது.
அதில் உள்ள வாசகத்தின் மொழி சமஸ்கிருதம்.
"இவ்வாறுதான் மன்னன் ராம உன்னிபனின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்",
என்று அந்தக் கல்வெட்டு கூறுகிறது.
![]()
பாறையில் கல்வெட்டு
இப்போது அந்தப் பாறை தரையிலிருந்து எட்டடி உயரத்துக்கு இருக்கிறது.
பாறையைச் சுற்றிலும் வரிவரியாகக் கோடுகள் விழுந்திருக்கின்றன. அவை அந்தப் பாறை அமிழ்ந்திருந்த மண்ணின் மட்டங்களைக் குறிப்பன. நாளடைவில் மண்ணரிப்பு ஏற்பட்டு பாறையின் உயரம் அதிகரித்து விட்டது.
அந்தக் கல்வெட்டு எழுதப்படும்போது தரையிலிருந்து மூன்று அடிகள் உயரத்துக்கே இருந்ததுபோல் வரிகள் காட்டிக்கொடுக்கின்றன.
ஏதோ ஒரு பெரும்போர் ஏற்பட்டிருக்கவேண்டும்.![]()
செரோக் தோக்குன் பாறை
இந்த இடத்தில் ராம உன்னிப மன்னர் தன்னுடைய எதிரிகளுடன் போரிட்டிருக்கவேண்டும்.
'எதிரிகள்' என்று பன்மையில் குறிப்பிடப்பட்டிருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட எதிரிகள்கொண்ட கூட்டணியுடன் சண்டையிட்டிருக்கவேண்டும். அதில் ராம உன்னிபர் வெற்றி பெற்று அனைத்து எதிரிகளையும் அழித்திருக்கிறார்.
அந்த வெற்றியைப் போர்க்களத்தில் இருந்த பாறையில் கல்வெட்டாக எழுதி காலங்காலத்துக்கும் உலகத்திற்கு அறிவித்திருக்கிறார்.
இந்தக் கல்வெட்டு இருக்கும் இடம் தற்சமயம் பினாங்கு மாநிலத்தின் புக்கிட் மெர்த்தாஜாம் என்னும் ஊரில் உள்ள செரோக் தோக்குன் என்னும் இடத்தில் இருக்கிறது. அந்தப் பாறையின் அருகே புனித சந்தனமாதா ஆலயம் தற்சமயம் இருக்கிறது.
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$