ராஜா ரவிவர்மா
பாகம் 1

 
JAYBEE'S BIOGRAPHICAL SKETCH
OF THE GREAT ARTIST'

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee




                    இந்தியாவின் ஓவியக்கலை ஒரு காலத்தில் மிக உன்னதமாக விளங்கியது. ஆனால் பிற்காலத்தில் ஒரு மாதிரியான உயிரற்ற தன்மையும் கற்பனைகளுக்கே இடமில்லாமல் தத்ரூபத்தன்மையும் இழந்து ஏதோ மாதிரியாக விளங்கியது.
                       Perspective Drawing எனப்படும் முக்கிய அம்சமும் இல்லாமற் போய்விட்டது.
                      நவீன காலத்துக்கு ஏற்றமுறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்திய பாணி ஓவியக்கலைக்குள் புகுத்துவத்ற்கென்றே அவதார புருஷர் போல ஒருவர் தோன்றினார்.
                      இந்தியாவின் மற்ற பகுதிகள் போல கெரளா இல்லை. அங்குள்ள அரசவம்சங்களில் பல, சங்ககால அரச்மரபின் வழித்தோன்றல்களாக வந்தவை.   
                      கேரளாவின் முக்கிய அரசவம்சத்தின் கிளைவழியாக ஒரு மரபு இருந்தது.
                    அதில் அந்த அவதார புருஷர் தோன்றினார்.
                    ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயதிலேயே தம்முடைய அரண்மனையின் சுவற்றில் பலவகையான மிருகங்களின் படங்களை வரைவார்.  வீட்டிலேயே சம்ஸ்கிருதம் மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.

                    ரவிவர்மாவின் பதின்மூன்றாம் வயதினிலே திருவாங்கூர் அரண்மனையில் நடைபெற்ற சுயம்வரத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டார். அக்கால அரசவம்ச வழக்கப்படி, அந்த சுயம்வரத்தில் மணமகள், மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுயம்வரத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞனைப் பற்றியும் அறிமுகம் செய்வார்கள். அப்போது ரவிவர்மாவும் அறிமுகம் செய்யப்பட்டார். சம்ஸ்கிருதம் மலையாளம் ஆகிய மொழிகளில் காவியங்கள், கதகளி ஆட்டம், சங்கிதப்பயிற்சி முதலிவற்றில் தேர்ச்சி மட்டுமல்லாது எல்லாவற்றையும் விட சிறப்பாக ஓவியக்கலையிலும் வல்லவர் என்று ராஜா ரவிவர்மா சுட்டிக்காட்டப்பட்டார்.
                    ஆனால் திருவாங்கூர் மகாராஜாவோ, ரவிவர்மா சற்றுக் கறுப்பாக இருப்பதாகச் சொல்லி அவரைத் தட்டிக் கழித்துவிட்டார்.

                    பிற்காலத்தில் ரவி வர்மா இதனைப் பற்றிக் குறிப்பிடும்போது, சொன்னார்:"நான் அரண்மனை, அந்தப்புரங்களின் வாசியாக மாறி, அரசவம்சத்தின் மாப்பிள்ளை என்ற அந்த சொகுசான வாழ்க்கையில் அடைபட்டிருந்தால் என்னை இந்த உலகம் அறிந்திருக்குமா, என்ன?"

                    ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தார்.

                    திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவிடம் ஒருநாள் ரவிவர்மாவை அழைத்துச்சென்று அவருடன் ஓவியக்கலையில் ரவிவர்மாவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதுபற்றி ஆலோசித்தார்.
                    1862-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனைக்கு இட்டுச் செல்லப்பட்டு அங்கு எண்ணெய் வண்ண ஓவியக்கலையைப் பயில ஏற்பாட்டாக்கியது.

                    மகாராஜாவே சொந்த அக்கறையெடுத்து இத்தாலிய நாட்டின் மிகச்சிறந்த ஓவியர்களின் ஓவியங்களையெல்லாம் பரிச்சயப்படுத்தி வைத்தார்.
                    இப்படியே ஒன்பதாண்டுகள் இவ்வகையிலான பயிற்சியில் கழிந்தன. ஆனால் திறமையான ஓவியர்களிடமிருந்து அந்த ஒன்பதாண்டுகள் ஏதும் கற்கவில்லை.
                    அவராகவே தாம் பார்த்த ஓவியங்களை வைத்துக் கற்றுக்கொண்டார்.
                    கண் பார்ப்பதைக் கை வரைந்துவிடும்.
                    பின்னர் மனம் பார்ப்பதையும் கை வரைந்துவிடக்கூடிய அளவுக்குத் தம்மை வளப்படுத்திக் கொண்டுவந்துவிட்டார்.
                    அவ்வமயத்தில் இன்னொரு அரசகுடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார்.

                    சென்னையில் ஓரிடத்தில் பல எண்ணெய் வண்ண ஓவியங்கள் விலைக்கு வந்தன.
                    எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினர்.
                    மேல்நாட்டின் ஓவியக்கலையில் மிகவும் மவுசும் கௌரவமும் அதிகமாகப் பெற்றவை எண்ணெய் வண்ண ஓவியங்களே.
                    இந்தியாவில் எண்ணெய் வண்ண ஓவியக்கலை இன்னும் போதுமான முறையில் அறிமுகப்படுத்தப்படவில்லை. அவற்றில் ஏதோ ஒரு மேல்நாட்டுத்தனம் ஒட்டிக்கொண்டு இருந்தது.
                    அக்காலத்தில் திருவாங்கூரில் அந்த வித்தையை நன்கு அறிந்த ஆள், மதுரை ராமசாமி நாயக்கர்தான்.
                    அவரை ரவிவர்மா அணுகினார்.
                    ஆனால் தமக்கு ஒரு போட்டியாளன் உருவாகுவதை நாயக்கர் விரும்பவில்லை. ஆகவே உதவ மறுத்துவிட்டார்.
                    இவ்வாறு தாம் ஒதுக்கப்பட்டது ரவிவர்மாவின் மனதைப் பெரிதும் பாதித்துவிட்டது.  தாம் ஒரு பெரிய எண்ணெய் வண்ண ஓவிய மேதையாக வேண்டும் என்ற வேட்கையை அது தூண்டியது.

                    திருவனந்தபுரத்தில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அறிந்த இன்னொருவரும் இருந்தார். நாயக்கரின் மாணவர்; ஆறுமுகம் பிள்ளை. ரவிவர்மாவுக்கு உதவவேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது. ஆனால் தம்முடைய குருவின் அனுமதியின்றி எப்படிச் செய்வது என்ற தயக்கமும் மிகவும் இருந்தது. இரவு நேரங்களில் யாருமறியாமல் ரவி வர்மா இருந்த அரண்மணைக்கு வந்து ரகசியமாக ரவிவர்மாவுடன் தன்னுடைய வித்தையைப் பகிர்ந்துகொண்டார்.
 
                    1868-ஆம் ஆண்டுதான் ரவிவர்மாவுக்கு ஒரு break-through என்று சொல்லப்படும் அதிர்ஷ்டம் கிட்டியது.

GO TO PART 2

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

RETURN TO MAIN MENU