புத்தக வித்தகர்
ரோஜா முத்தையா


பாகம் 1
கடாரததமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி



கோட்டையூர ரோஜா முத்தையா செட்டியார்
                    ரோஜா முத்தையா செட்டியார் என்பவர் லட்சக்கணக்கான புத்தகங்களையும் அரிய பழம்பொருள்களையும் பல ஆண்டுகளாகச் சேகரித்து வைத்திருந்தவர்.
                    இப்போது அவருடைய நூல்கள் சென்னையிலுள்ள ரோஜா முத்தையா நூலகம் என்னும் நூலகத்தில் இருக்கின்ன.
                    ரோஜா முத்தையாவை நான் சந்தித்ததற்குப் பின்னணியாக சில காரணங்கள் உண்டு........

                    சிவகங்கைச் சீமையில் சிங்கம்புணரி என்னும் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் 18-19-ஆம் நூற்றாண்டுகளில் முத்துவடுகநாதர் என்னும் சித்தரொருவர் வாழ்ந்தார். அவர் தம்முடைய 97-ஆவது வயதில் 1833-ஆம் ஆண்டில் அங்கேயே சமாதியடைந்துவிட்டார். அவருடைய சமாதிக்குமேல் கோயில் ஒன்றைக் கட்டியுள்ளனர். வாத்தியார் ஐயா கோயில் என்றும்
'ஐயா கோயில்' என்றும் பிரபலமாகவிளங்கிக்கொண்டிருக்கிறது.    

                    அவர் பிறப்பால் ஓர் இளவரசர். இளவயதில் சிற்றரசராக விளங்கிய அவருடைய
தந்தையார் கொல்லப்பட்டுவிட்டதாலும் அவரையும் கொல்வதற்கு அவருடைய தாயாதிகள் முயன்றதாலும் அவருடைய தாயார் அவரை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
இளவயதிலேயே பாலா, வராகி ஆகிய தெய்வங்களின் பாதுகாப்பும் அருளும் அவருக்கு உண்டு. படிக்காமலேயே கவிதை இயற்றினார். அருள்வாக்கும் இருந்தது. சிங்கம்புணரி மக்களின் அழைப்புக்கு இணங்கி அங்கு அப்போது நிலவிய பிரச்னைகளையும் ஆபத்துக்களையும் போக்கி அவ்வூரார் கேட்டுக்கொண்டதற்கிணங்க அங்கேயே தங்கிவிட்டார்.

                    அவருடைய வரலாற்றை விஸ்வாக்காம்ப்லெக்ஸில் இன்னொரு கட்டுரையில்
காணலாம்.

                    அவர் ஒரு சித்தராகவும் மந்திர நூல் வல்லுனராகவும் புலவராகவும் இருந்தார். ஊர் மக்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துவந்ததால் அவர்களால் 'வாத்தியாரையா' என்றும் அழைக்கப்பட்டார்.
                    அவர் வராகி என்னும் தேவியை உபாசித்துவந்தவர்.
                    அவர் கையாலேயே எழுதிய 'வராகி மாலை' என்னும் நூலின் ஏட்டுப் பிரதியை
அவருடைய வம்சத்தைச் சேர்ந்தவர் அவர்களின் பூஜை அறையில் ஒரு வெள்ளிக்கிழமை
இரவு பாராயணம் செய்வதை அருகிலிருந்து கேட்டேன். அது ஒரு மந்திரநூல். மிகவும்
ஆற்றல் வாய்ந்தது.

                    அப்போதிருந்து வராகி மாலைத் தேடலானேன்.
                    1973-இல் ஆரம்பித்த அந்த தேடல் 1986 வரை நீடித்தது. 1982, 1984-இல் நான் தமிழகம் சென்றபோதெல்லாம் அந்த நூல் கிடைக்கவில்லை.
   
                    கோயம்புத்தூரில் விஜயா வேலாயுதம் என்னும் பதிப்பாளர் புத்தகக்  கடை வைத்திருக்கிறார். தமிழகத்திலிருந்து வரும் பல பத்திரிக்கைகளில் இவரைப் பற்றிச் சிறப்பாகச் செய்திகள் வந்து கொண்டேயிருந்தன. புத்தக வெளியீட்டிலும் புத்தக விற்பனையிலும் பல புதுமைகளைச் செய்திருக்கிறார் என்ற புகழ் அவருக்கு இருந்தது. வேலாயுதத்துடன் கடிதமூலம் தொடர்பு கொண்டேன்.
                1986-ஆம் ஆண்டு நான் தமிழகம் சென்றபோது என்னைப் பார்க்க வந்திருந்தார்.
                    அவரிடம் நான் வராகி மாலை நூல் தேடலைப் பற்றிச்சொன்னேன்.
                    அப்போதுதான் அவரிடமிருந்து காரைக்குடிக்கருகில் கோட்டையூர் என்னும் ஊரில்
இருந்த ரோஜா முத்தையாச் செட்டியார்பற்றி தெரிந்து கொண்டேன்.


                    கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் சொன்ன தகவல்களை வைத்துக்கொண்டு காரைக்குடிக்குப் பக்கத்திலுள்ள கோட்டையூரில் இருந்த ரோஜா முத்தையாச் செட்டியாரைச் சந்திக்கச் சென்றேன்.

                    அவர் பல ஆண்டுகளாகப் புத்தகங்கள் சேகரித்தவர்.

                    அவருக்கு மூன்று வீடுகள் சொந்தமாக இருந்தன. அவற்றில் ஒரு வீடு பெரியது. அதன் முகப்பே பெரியதாக இருந்தது. அதில் உள்ள திண்ணைகளும் பெரியவை. எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். அடுக்கியும் சிதறியும் கிடந்தன. அந்த வீட்டில் மூன்று கட்டுகள். அத்தனை கட்டுகளிலும் சீலிங் உயரத்துக்கு அலமாரிகள். அத்தனை அலமாரிகளிலும் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள். தரையிலும் கிடந்தன. சில இடங்களில் புத்தகங்கள் குவிந்து கிடந்தன.

                    என்னுடைய புத்தகக் கலெக்ஷனைப் பற்றி அவரிடம் கூறினேன். எந்த எந்த மாதிரியான புத்தகங்களை சேகரிப்பேன். அவையெல்லாம் எந்தத் துறைகளைச் சேர்ந்தவை என்பனவற்றைச் சொன்னேன்.
                    நான் வேலை செய்த இடங்களைப் பற்றியும் சொன்னேன்.
                    நூலகங்களோ புத்தகக்கடைகளோ இல்லாத ஊர்கள். அத்தனையும் மலாய்க்காரர்கள் அதிகம் உள்ள ஊர்கள். அப்படிப்பட்ட ஊர்களில் அத்தனை வேலைகளுக்கும் இடையில் பெரும் செலவு செலவிட்டு கிடைத்த நேரத்திலெல்லாம் அலைந்து திரிந்து குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த தமிழ் ஆங்கிலப் புத்தகங்களை நான் சேகரித்திருந்தது அவருக்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தது.
                    அவரை அறிந்த, உலகில் உள்ள தமிழர்களும் வெள்ளைக்காரர்களும் ரோஜா முத்தையாவின் புத்தகக் கலெக்ஷனைப் பற்றி வியப்படைவார்கள். நானும்கூட அவருடைய நூல்களைப் பார்த்து அயர்ந்துபோனேன். ஆனால் ரோஜா முத்தையாவோ என்னுடைய நூல்களை நான் சேகரித்திருப்பது குறித்து பெரும் வியப்பை அடைந்தார்.
                    அதைச் சொல்லியும் காட்டினார்.
                    "மற்றவர்கள் தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ்நூல்கள் சேகரிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் வசித்த இடங்களில் இருந்துகொண்டு அத்தனைப் புத்தகங்களைச் சேர்த்ததுதான் மிகவும் விசேஷமானது. அதுவும் அந்தந்தத் துறைகளில் சேர்த்திருக்கிறீர்களே!", என்றார்.

                    தம்முடைய புத்தகங்களை மூன்று வீடுகளில் வைத்திருக்கவேண்டிய கட்டாயத்தைப் பற்றிச் சொன்னார்.
                    கொஞ்சகாலத்துக்கு முன்னர் பத்தாயிரம் புத்தகங்களுக்குமேல் கரையான் அரித்துவிட்டதைப் பற்றியும் சொன்னார்.
                    அவரிடம் உள்ள புத்தகங்களையெல்லாம் பெரிய பேரேட்டுப் புத்தகங்களில் எழுதிப் பட்டியலிட்டு வைத்திருந்தார்.
                    புத்தகங்களைச் சேகரித்த விதத்தையும் கூறினார். நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பழைய பேப்பர்க்காரர்களிடமிருந்து எடை போட்டு நிறுத்து வீசைக் கணக்கிலும் மணங்குக் கணக்கிலும் வாங்கியதாகச் சொன்னார். ஒரு வீசை என்பது 1 கீலோ 400 கிராம் இருக்கும். மெட்ராஸ் மணங்கு என்பது 11 கீலோ இருக்கும்.

                    ரோஜா முத்தையாவைப் பேட்டி எடுத்துக்கொண்டேன்.......

GO TO PART 2

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU