சாலிவாகனனின் தீர்ப்பு
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக இந்தக் கதை கூறப்படுகிறது.
உஜ்ஜயினி என்னும் நகரம் மத்திய பாரதத்தில் இருக்கிறது. இது மிகவும் புராதனமான
நகரம். விக்கிரமாதித்தனின் தலைநகரம் என்று இதனைச் சொல்வார்கள். பின்னர் சாலீவாகனன்
என்பவன் இதனைக் கைப்பற்றிக்கொண்டதாகவும் சொல்வார்கள். அதன்பின்னர்
போஜ
மன்னனும் காளிதாசன் முதலிய பல புலவர்களுடன் அங்கிருந்ததாகச் சொல்வார்கள்.
வரலாற்றில் அது மகதப்பேரரசு, சாதவாகனப் பேரரசு,
குப்தப ்பேரரசு ஆகியவற்றின்
முக்கிய நகரமாகவும் மாளவம் என்னும் நாட்டின் தலைநகரமாகவும் இருந்தது. பாரதத்தின்
ஐம்பத்தாறு தேசங்களில் மாளவமும் ஒன்று. Ujjain
என்ற பெயரில் மத்தியப்பிரதேசத்தில் இந்த நகரம் இன்றும் இருக்கிறது.
உஜ்ஜயினிக்கு இன்னும் சில சிறப்புகளும் உண்டு.
அது காளிமாதாவின் இருப்பிடங்களில் ஒன்று. அங்குள்ள காளியை உச்சினி மாகாளி
என்று தமிழில் சொல்லுவார்கள். மாந்திரீகத்தில் வழுத்தப்படும்/அழைக்கப்படும்
முக்கிய
தேவியாக உச்சினி மாகாளி விளங்குகிறாள். உச்சினி மாகாளியின் அருளைப் பெற்றவர்களை
வெல்லமுடியாது என்பது ஐதீகம்.
விக்கிரமாதித்தனுக்குப் பல ஆற்றல்களைக் கொடுத்தவள் இவள்தான்.
பாரதத்தின் பல நாடுகள் நகரங்கள் முதலியவற்றின் பிரதிபலிப்பாகப் பண்டைத்
தமிழகத்திலும் இடங்கள் பெயரிடப்பட்டிருந்தன. அரச பரம்பரையினரும் அதே போல குடிப்பெயர்களைத்
தாங்கியிருந்தனர்.
மாளவச் சக்கரவர்த்தி, மாளுவராயன், காலிங்கராயன், காங்கேயன், நிஷதராசன்,
பாணராஷ்டிரம ்(பண்டுருட்டி), தென்காசி போன்றவை உதாரணங்கள்.
உஜ்ஜயினியின் தமிழக alter ego 'உஞ்சேனை மாகாளம்' எனப்பட்டது. இது தேவாரப்படல்
பெற்ற தலம். இது சாக்தம், பைரவம், பாசுபதம் போன்ற சைவ சமய உட்பிரிவுகளின்
கேந்திரமாக இருந்திருக்கிறது.
இன்னொரு சிறப்பு என்ன?
இந்திய வானநூலார்களால் பாரத கண்டத்தின் நடுச்செண்டர் எனப்படும் நட்டநடு
மையப்புள்ளியாக அதனைக் கருதுவார்கள். பாரதத்தின் பஞ்சாங்கங்களில் உஜ்ஜயினியின்
அட்சாம்ச ரேகைகளை வைத்தே கணிப்புகள் விளங்குகின்றன. பழைய காலத்தில்
இந்தியன் ஸ்டேண்டர்ட் டைம் என்பது உஜ்ஜயினியின் நேரம்தான்.
விண்ணியலில் கிரக சஞ்சாரங்களைக் கணிப்பதற்கும் Standard Point-ஆக
உஜ்ஜயினியின் ஸ்தானத்தையே பயன்படுத்தினார்கள். ஆங்கிலேயர் காலத்தில் அது கல்கத்தாவாக
மாறியது. கல்கத்தாவிலும் கல்கத்தா காளி இருக்கிறாள். 'காளி கட்டம்' என்ற இடமும்
அங்கிருந்தது.
உஜ்ஜயினியில் விக்கிரமாதித்தான் ஆண்டு வந்தபோது, ஒரு விநோதமான
வழக்கொன்று அவனிடம் வந்தது.
உஜ்ஜயினியின் பெருஞ்செல்வந்தன் ஒருவன் இறந்துவிட்டான். அவனுக்கு நான்கு
மகன்கள். அவனுக்குப் பலவகையான சொத்துக்கள் - பொன்மணிகள், நிலபுலன், கால்நடைகள்,
நவ தானியங்கள் என்று பெருமளவில் இருந்தன.
அவன் இறந்தபிறகு அவற்றையெல்லாம் அந்த நான்குபேரும் பிரித்துக்கொள்ள
வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் இப்படித்தான் பிரிக்கவேண்டும் என்பதற்கு
ஒரு
குறிப்பு விட்டுச்சென்றிருந்தான்.
அவனுடைய தனியறையில் ஒரு மேஜையின்மீது மண், உமி, கரி, எலும்பு ஆகிய நான்கு
பொருள்களும் இருந்தன. அவற்றை வைத்துப் பிரித்துக்கொள்ளுமாறு ஒரு நறுக்கு
ஓலையும் இருந்தது.
அவர்களுக்குப் புரியவில்லை.
விக்கிரமாதித்தனிடம் அந்த வழக்குச் சென்றது.
மன்னனாலும் அந்த வழக்கைத் தீர்க்கமுடியவில்லை.
தண்டோரா போடப்பட்டது.
உஜ்ஜயினின் குயவர் குடியிருப்பில் ஒரு சிறுவன் அதனைக் கேட்டு, தானே அந்தப் பிரச்னைக்கு
விடுப்புச்சொல்வதாகக்கூறினான்.
அரசனின் முன்னிலையில் அவனுடைய தீர்ப்பைச்சொன்னான்:
முதல் மகன் நிலபுலன்களை எடுத்துக்கொள்ளவேண்டும் - மண்.
இரண்டாமவன் தானியங்கள் - உமி.
மூன்றாமவன் பொன்மணிகள் - கரி
நான்காமவன் கால்நடைகள் - எலும்பு
அடிப்படையில் அவை அவை மண்ணும் உமியும் கரியும் எலும்பும்தான்.
காஞ்சித்திணையின்
படி செல்வத்தின் நிலையில்லாத தன்மையையும் சூசகமாக மகன்களுக்கு உணர்த்திவிட்டான்.
அவ்வாறே பாகப்பிரிவினை நடந்தது.
வழக்கும் தீர்ந்தது.
அந்த குயவச்சிறுவன் இவ்வாறு தீர்ப்பு வழங்கியதைப் பார்த்த விக்கிரமாதித்தன்
மிகவும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
அன்புடன்
ஜெயபாரதி
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
RETURN TO MAIN MENU